மீரா – அருண் கொலட்கர்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

தமிழில் இரா.முருகன்


—-
1

உச்சிமர வாழ்க்கை
வெறுத்துப் போய்
உதிர்ந்து விழுந்த தென்னை மட்டை
தளையேதும் இல்லாமல்
தாண்டிக் குதிக்குது.

மரத்துமேலே வேலைவெட்டியில்லாம
முன்னூத்துச் சொச்சம்
ஈர்க்குச்சி விரலை
நெட்டி முறிச்சிக்கிட்டு,
அப்பப்ப நிலாவைக்
கிச்சுகிச்சு மூட்டியபடிக்கு
ராவாப் பகலாச்
சும்மாக் குந்திக் கிடந்தது.

கொஞ்சம்போல சுவாரசியமா
இல்லே, உபயோகமாச்
செய்ய எதுனாச்சும்
வேலை கிடைக்குமான்னு
பார்த்துக்கிட்டு இருந்தது.

இப்ப அது நம்ம
வாடாமல்லிக்கு
உற்ற தோழி.

அதாம்பா,
எப்பவும் முகம் வாடி
இந்தத் தெருவிலே
குப்பை கூட்ட வருமே
முனிசிபல் சிப்பந்திப் பொண்ணு, அதான்.

அது சொல்லிக் கொடுத்துப்
புதுசு புதுசா
வித்தை படிச்சிக்கிட்டுப்
பொழுதெல்லாம் சந்தோசமா இருக்கு
தென்னை மட்டை.

2
கூட்டிப் பெருக்க வாகான மட்டை
உயிரோட துள்ளறதுலே
உற்சாகம் அந்தப் பொண்ணுக்கு.

வளைஞ்சு வணங்காம
நட்டமா நிக்கற
சாதாத் தொடப்பத்தைவிடத்
தென்னை மட்டையாலே
நிறைய வாரி
நீட்டிப் பெருக்கலாம்.
ஆனாலும் அந்தப் பொண்ணு கூடவே
கூட்டி அள்ளுற ஆளுக்கு என்னமோ
பூந்தொடப்பம் தான் பிடிக்கும்.

கரடி போல குட்டிக் கரணம்போட்டுக்
குதிச்சு ஆடற தென்னை மட்டையைப்
பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு.
பச்சைக் கரடி.

அவளுக்கு முன்னாடி
வழியை மறிச்சபடி
குறுக்கும் நெடுக்குமா ஓடித்
தெருவைச் சுத்தப்படுத்துது மட்டை.

அவளைச் சுத்திச் சுழலுது
இடமும் வலமுமா
இழஞ்சு ஆடுது.
அவ நின்னா இதுவும் நிக்குது.

தப்பிச்சு ஓடற காகிதத் துண்டை
தாவி மடக்கிப் பிடிக்குது.
உதிர்ந்து கிடந்து சரசரக்கும்
இலையைத் தூர விரட்டுது.

3
ராத்திரி இலவசமா
ஊத்திக் கொடுத்ததுலே
சுதி ஏத்திக்கிட்டு,
கொறிக்க எடுத்த முந்திரிப்பருப்பு
சட்டைப் பையிலே மிச்சம் இருக்க
ஓவிய விமர்சகர்கள் பலபேர்
உறங்கிட்டு இருக்கற விடிகாலை.

வழக்கம் போல
வாயைத் திறந்து வச்சுக்கிட்டு
சகாங்கீரு ஆர்ட்டு காலரியும்
மயங்கிக் கிடக்கிற நேரத்துலே
ஓவியக்கூட வாசல்லே ஒய்யாரமாப்
புதுசான காட்சி எல்லாம்
அரங்கேறிட்டு இருக்கு.

கிழிஞ்ச காகிதம், உதிர்ந்த இலை,
மீன் செதில், வெங்காயச் சருகு,
கழட்டிப் போட்ட ஆணுறை,
வாடின பூவரசம்பூ.

பத்துப் பதினஞ்சு அடி இடைவெளி விட்டு
சின்னச் சின்னதாகத் தெருவோரம் வரிசையாக்
குவிச்சு வச்சக் குப்பைக் குவியலை
அக்கறையாப் பார்க்கிற
நாலு காக்கா, பூனைக்குட்டி தவிர,
பார்க்க ஆளில்லை. பரபரப்பும் இல்லை.

இந்தக் கலைப் படைப்புக்கெல்லாம்
‘பம்பாய்க்கு அஞ்சலி – ஒண்ணு ‘,
‘பம்பாய்க்கு அஞ்சலி – ரெண்டு ‘
இதுமாதிரிப் பேர் வச்சுடலாம்.
ஏன்னு கேட்டா,
பம்பாயே இதுமாதிரி
குப்பைமேட்டு மேலேதான் நிக்குது
கொலாபா, கேர்வாடி பேட்டை போல.

4

தினமும் காலையிலே
அரைமணி நேரம்தான்
இந்தக் கண்காட்சி.

கடைசிக் குவியல் குப்பையைக்
கரிசனத்தோட காட்சிக்கு வைக்கும்போது
முதல் குவியல்
குப்பை வண்டியிலே ஏறிக்கிட்டு இருக்கும்.

அதான் விஷயம்,
எல்லாக் கலையோட நிலையாமையையும்
இப்படித்தான் கொண்டாடணும்.

5

தடதடன்னு தகரமூடி ஆட
லொடலொடத்துக்கிட்டு வர
குப்பை வண்டியை
வரைகணித மேதை யூக்ளிட்டுக்கு
ரொம்பப் பிடிச்சுப் போகும்.

பொறுக்கி எடுத்த,
நிரூபிக்கப் பட்ட தேற்றம்போல
கருப்புப் பென்சில் வச்சுக்
குழந்தை வரைஞ்ச படம்போல
நிதர்சனமான எளிமை.

சலவைத் துணிக் கூடை போல
ரெண்டு குடத்தைத்
தொட்டில் கட்டி நிறுத்தின
வார்ப்பு இரும்புப் தட்டு.

ரெண்டு பக்கமும் சமச்சீராக
ரெண்டு முக்கோணச் சட்டகம்
தரைக்கு மேலே அதைத்
தாங்கிப் பிடிச்சு நிக்குது.

நகர்ந்து போகும் இடியாக
டமடம்ன்னு முழங்கிக்கிட்டு
மேலே மூடாத ஆரம் வச்ச
சக்கரம் ரெண்டும் உருள
குப்பைவண்டி நகர்ந்து வருது.

குழந்தையை உட்கார வச்சுக்
கூட்டிப் போகிற வண்டி மாதிரித்
தள்ளி நகர்த்திப் போகும்
குப்பை வண்டிக்குத்
தன் இரைச்சல்லே தானே நடுங்கற
நாகரிகம் தெரிஞ்சிருக்கு.

குதிரைகள் சிரமமில்லாமல்
குளம்பு பதித்து நடக்கும்
நேர்த்தியான லண்டன் பட்டண
நெடு வீதிகளைக் கனாக் கண்டபடி
அங்கே ஓடியுருள உருவாக்கின
குப்பைவண்டி
நகர்ந்து போகுது.

களைப்பே அடையாத
அருதப் பழசு வண்டி.

இந்தப் பட்டணத்தைக்
குப்பை கூளமில்லாமல்
சுத்தமா வைக்கிற
நல்ல எண்ணத்தோட
நூத்தம்பது வருசம் முந்தி
கடல் கடந்து கொண்டுவந்த
முதல் வண்டிதான் இதுன்னாலும்
ஆச்சரியமே இல்லை.

அப்பவே இங்கே
குப்பை வாரறது சிரமம்.
இப்போ கேட்கவே வேண்டாம்.
ஏனா ?

குப்பைவண்டி வாரி
எடுத்துப் போறதுபோல
குப்பை செத்தையைக் கொட்டி
கொசு மொய்க்கும் சகதிக் குழி,
சதுப்புத் துவர் நிலம்,
சுத்தி வெடிச்ச விரிசல்
எல்லாம் சமன் செய்து
கடல்லேருந்து கைப்பற்றின
நிலப்பரப்பிலே தான்
புதுசு புதுசா பம்பாய்ப் பேட்டை
ஒவ்வொண்ணா முளைக்குது.

ஆக,
பம்பாயைச் சுத்தம் செய்யச் செய்ய,
சுத்தப்படுத்த வேண்டிய பம்பாய்
பரப்பு கூடிட்டே போகுது.

6

குப்பை வண்டி
முட்ட முட்ட நிரைஞ்சதும்
வாடாமல்லிப் பொண்ணு
அது மேலே குதிச்சு ஏறுது.

குறுகி வளைந்த
உருளை விட்டத்துக்குள்ளே
நாட்டியம் தொடங்குது.

கண்ணனுக்கு முன்னாலே
ஆனந்தமாக் குதிச்சாடும்
மீராபாய் போல்.
கையிலே குழல் இல்லே
தொடப்பம் எடுத்த மீரா.

உடம்பு பலத்தை
ஒரு கால்லே இருந்து
மற்றதுக்கு மாத்திக்கிட்டு மெல்லத்
தன்னையே ஒரு சுற்று சுற்றித் திரும்புது.

விட்டத்தின் முப்பத்திரெண்டு
முக்கியத் தொடுபுள்ளிக்கும்
வளைந்து மரியாதை செய்ய
கால் கட்டை விரல்களுக்கு
நேரம் கொடுத்தபடி.
பறவை பறக்கறது போல
கையை வீசி விரிச்சுக்கிட்டு.

7

குப்பைக் குவியலை முட்டி மிதிச்சு
சவட்டிக் கீழே தள்ளி இறுக்கி
இன்னும் இன்னும் குப்பை அடைச்சபடி,
திராட்சை மது வடிக்கத் தொட்டிக்குள்
பழக்குலையைக் குவித்து அளைகிறவள் போல்
இந்தப் பெண்ணோட கால்
நேர்த்தியா அசையுது.

முட்டை ஓடும், பூச் சருகும்
உலர்ந்த இலையும் பிழிஞ்சு போட்ட
எலுமிச்சம் பழத் தோலும்
ரொட்டித் துண்டும் நிரோத்தும்
கோழியெலும்பும் உருளைக்கிழங்குத் தொலியும்
ஒண்ணாக் கலந்து அழுந்தி முழுகி
அதனதன் சாரத்தைத் தர
மதிப்பின்மையின் மதுவாடை மணக்குது.
அத்தர் வாசனையா நன்றி சொல்லுது.

அதெல்லாம் அவள் காலில்
பித்த வெடிப்புகளிடையே
வெள்ளமாக வடிந்து
குதிகால் நக்கி,
காலாணி புரையோடிய பாதத்துக்குப்
புனிதக் களிம்பு தடவி
கால் கட்டைவிரல்
இடுக்கிலே தளும்புது.

அருண் கொலட்கர் – மீரா – காலாகோடா பொயம்ஸ் – தமிழில் இரா.முருகன் – நவம்பர் 11 ’04
—-
eramurukan@yahoo.com

Series Navigation