மீண்டும் உயிர்தல்

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

இளங்கோ


ஒரு நொடிசலனம்
போதை தந்த
நிமிடக்கலகத்தின் வீரம்
எதிரே நின்றவனுடன்
விவாதித்து
கைகலப்பில் முடித்தாயிற்று

அடிவாங்கியவனுக்கும்
அந்த கணத்திலா
ஆண்மை
பொங்கியெழல் வேண்டும் ?

அவன்,
அடித்தவன்
நண்பனென
உதறிப்போயிருக்கலாம்
போதையின் திமிரிதென
நிதானம் தவறாதிருக்கலாம்

இதுவரை
காதலியை நேசிக்கவும்
அன்புத்தோழ்ர்களை அழைக்கவும்
கைகளில் தவழ்ந்த
செல்லிடப்பேசி உயிர்ப்புற
வந்தது
இன்னொரு இளைஞர் பட்டாளம்

பிறகென்ன
மேடையேறிய நிகழ்வுகள்
சிதறிப்போக
மண்டபத்தின் முன்வாயிலில்
அரங்கேறியது வீரவிழா

கத்திக் குத்து
கார் துரத்தல்
ஆங்கிலச்சினிமாக்களுக்கு
சற்றும் குறையாதவிதத்தில்
மெய்கூச்செறியும் சம்பவங்கள்

எல்லாம் முடிந்து
வாரங்கள் பலவாயிற்று
நண்பர்களின் வன்மமோ
நெடும்பனையென வளர்ந்திற்று

புகழடைந்தவர்க்கு மட்டுமா
தனிமனித வாழ்வு
சிதையும் ?

இவர்களுக்கினி
தனியே
நடனமாடல் சாத்தியமில்லை
எதிரியென
நினைத்தவனின் பிரதேசத்தில்
கால்வைத்தல்
அவ்வளவு இலகுவில்லை

குளிர்மிகுந்த வேளையில்
எங்கேனும் ஒரு கடையில்
கோப்பி அருந்தலோ
காதலியுடன் கைகோர்த்து
கலைநிகழ்வுகள் இரசித்தலோ
கூட்டமாய் நிகழுதல் வேண்டும்

என்னவாயிற்று
தோழர்களுக்கு ?
ஒரு நொடிச்சலசலப்பை
இருதேசத்து போரென
நினைத்து
சிலிர்தெழுந்தது ஏனோ ?

வாரயிறுதிகளில்
மனம் அதிரக்குடித்து
உடல்பறக்க நடனமாடி
காதலிகளைச் சுகித்த
காலங்கள் இனி எப்போ வரும் ?

Series Navigation

இளங்கோ

இளங்கோ