மீட்சி

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

ஷைலஜா


டிசம்பர் 2004ல் நடந்த சுனாமிக்குப்பிறகு இப்போதுதான் நாகப்பட்டிணத்துக்கு வந்திருக்கிறான், பத்ரி.

சுனாமி நடந்த அந்ததினம்,….

‘இன்று’ என்னும்தொலைக்காட்சியின்
சிறப்பு ஒளிப்பதிவாளராய் தன் குழுவோடு வந்தான், பத்ரி.

நாகப்பட்டிணத்திற்குள் அவன் வந்த கார் நுழையும்போதே காற்றில்

பிணவாடை அடிக்க ஆரம்பிப்பதை உணர்ந்தான். வயிறுசில்லிட்டது.

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வயிற்றில் அடித்துக்கொண்டு

ஜனத்திரள் கூட்டம்கூட்டமாய் அலறிக்கொண்டு நின்றனர்..ஓடினர்.

கதறி அழுதபடி புலம்பினர். அத்தனை துயரத்திலும் நின்றகாரிலிருந்து குழுவினருக்கு முன்னே பரபரப்பாய் காமிராவுடன் இறங்கிய பத்ரியை ஒரு மூதாட்டி, அவன் கையிலிருந்த நிழல்படக்கருவியைப் பார்த்தபடி எச்சரித்தாள்.

“டிவிபொட்டிக்காரத்தம்பியா? கார வுட்டு எறங்காதப்பா…அலை திரும்பவும் அடிக்குமாம்…அதனால வந்தவழிபோயிடுப்பா..” என்றாள்.

“பத்ரி…கேட்டீங்களா நாங்க சொல்லசொல்லக் கேக்காம காரைநிறுத்தவச்சி கீழ குதிச்சீங்க…எங்கபாத்தாலும் டெட் பாடீஸ் இருக்கற இடத்துல நமக்கு ஒண்ணும் வராம நல்லபடியா சென்னைக்குத் திரும்பவேணாமா? கமான்..க்விக்,கார்ல ஏறுங்க சீக்கிரம்..ஸ்பாட்டுக்குபோயி நம்ம வேலையை சட்டுபுட்டுனு ஆரம்பிக்கலாம்..வழியில ஒண்ணும் வேணாம்..” என்று பொறுமைஇழந்தவளாய் கூச்சலிட்டாள் வினயா.

“அதில்லா வினயா..அந்தப்பள்ளிக்கூடத்தில பாருங்க.. போர்த்திய துணிக்குக்கீழ ஏகப்பட்ட இறந்த உடல்கள்…அதையெல்லாம்..?”பத்ரிமுடிப்பதற்குள் வினயாவின் சாடிலைட் ஃபோன் குரல்கொடுதது.

“வினயா ஹியர்” என்றாள்

“நாந்தான் தினேஷ் டில்லி ஸ்டூடியோவிலிருந்து பேசறேன்.என்னாச்சு எல்லாரும் ஸ்பாட்டுக்கு ரீச் ஆனீங்களா இல்லயா?” என்றது எதிர்முனை.

“இதோ இன்னும் பத்துநிமிஷத்துல போயிடுவோம் தினேஷ்” என்ற வினயா பத்ரிக்குக்கண்ணால் சைகை காட்டி உள்ளே அமரச்சொன்னாள்.

கார் புறப்படும்போது,நாசியை விரல்களால் மூடியபடி,”ஸ்டிக்கிங்…ரொம்ப நாறுகிறது இங்க.

நிறைய பேர் செத்துருக்காங்க…ஊரே காலிபண்ணிட்டு திருவாரூர்பக்கம் ஓட்றாங்க… பயங்கர பாதிப்பு.”என்றுசொல்லிவிட்டு ஆஃப்செய்தவள் பத்ரியிடம்” உடனே ஒரு எஃப்டிசி அனுப்பணும்..ஹெட்லைன்ஸ் லைவ் பண்ண ஆரம்பிச்சிடாங்களாம்.. ‘லைவ் சவுண்ட் மைக்’ சரியா இருக்கா பத்ரி? இறங்கினதும் ஸ்பாட்டுலபோயி காமிராவோட நீங்க படம் எடுங்க… நான் லைவ் ல விவரமா சுனாமிதாக்குதலை சொல்றேன்..இன்னும் நிவாரணப்பணி தொடங்கியமாதிரி தெரியல..க்விக்.நம்ம ‘ இன்று’சானல்தான் முந்திக்கணும் எல்லாத்திலயும்”என்றாள். அவள் சிந்தையெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கவைப்பதில் குறியாய் இருந்தது.

பத்ரி தலையாட்டினான்.தலையோடு மனசும்கிடந்து ஆடித் தவித்தது.

விஷுவல்கம்யூனிகேஷன் படித்து பத்ரி விருப்பட்டு இந்தப்பணியில் சேர்ந்தான். இதுவரை எத்தனை எத்தனையோ அனுபவங்கள். அனால்அவனுடைய இந்த இருபத்தி ஆறு வயதில் இப்படி ஒரு கோரக்காட்சியைக் கண்டதில்லை.எங்கெங்குகாணினும் அவலக்குரல்கள். பிணக்குவியல்கள்.அனாதைச்சடலங்கள்.

‘நடந்தது பிரளயமா என்ன? அம்மா அடிக்கடி சொல்வாளே அதர்மம் அதிகமானால் இயற்கைக்கு சீற்றம்வரும்னு..

சினம் சேர்ந்தாரைக்கொல்லும் என்பது உண்மைதானோ?

ஆனல் அப்பாவிமக்கள் எத்தனைபேர் இதற்கு பலியாகிவிட்டர்கள்?.

அதற்கும் அம்மா விளக்கம் அளிப்பாள்’முன் ஜன்மத்து வினை’என்று..எனக்கென்னவோ இந்த வாழ்க்கைப்பாதையே விதிவழிதான் போகிறதென தோன்றுகிறது.அவரவர்க்கு விதிக்கப்பட்டவிதி’

“பத்ரீ என்ன யோசனை? ஒர்க்ல மட்டும் இன்வால்வ் ஆகுங்க தோழரே! ஆனால் இப்படி சீரியசா இருக்கறபோதும் யு லுக் ஹாண்ட்சம் யார்! .மாதவனா பழைய ஷாரூக்கா? என்ன சொல்ல? பொண்ணுங்களை பரவசப்படுத்தும் முகம்! .தவறிப்போய் ஆறு வருஷம் பின்னாடிபொறந்துட்டீங்க இல்லேன்னா நீங்கதான் என் கழுத்துல தாலி கட்டீ இருப்பீங்க…!”வினயா சிரித்தபடி சொன்னாள்.எல்லாரும் காரிலிருந்து அவள் பேசியதை ரசித்துசிரித்தபடிஇறங்கினர்.

பத்ரிக்கு சிரிக்கமுடியவில்லை..’அங்..அங்கே பாருங்க வினயா.. ஐயோ..தாறுமாறாய் படகுகள் உடைஞ்சிகிடக்க அலைகள் வீசிப்போட்ட மரக்கிளைகளில் ஒரு கைமட்டும் தொங்குது”என்று அலறினான்.

வேகவேகமாய் நடந்தவனை ராஜேஷ் ,

அதட்டினான்.”பத்ரி.அங்கபோகாதீங்க,,புதைமணல்மாதிரி இருக்கு…காலை இழுத்துடும்…”

அலைகளின் ஆக்ரோஷம் இன்னும் அடங்கினமாதிரிதெரியவில்லை. போலீஸ் தலையீடு அதிகம் இருந்தது. அங்குமிங்கும் சிதறி அங்கங்கள் சிதைந்துகிடந்த உடல்களைபுரட்டிஅடையாளம்கண்டு பலர் நெஞ்சிலடித்துக் கொண்ட காட்சி பரிதாபமாயிருந்தது.

வினயா படகு ஓரமாய் உட்கார்ந்து விழித்துக்கொண்டிருந்த அனாதைச் சிறுமியை பேட்டிகண்டு கொண்டிருந்தாள். அடுத்து கலெக்டரைப் பேட்டிகாணச்சொல்லி டில்லியிலிருந்து ஃபோன்வரவும் எழுந்தாள்.

பத்ரி அப்படியே அங்கேயே உட்கார்ந்துவிட்டான்.

“ப த்ரீ! என்னாச்சு?”

“தலைவலி வினயா…எனக்கு மயக்கமாய் வருது…”

“எழுந்து வாங்க காருக்கு..இங்க இருந்தா எல்லா வியாதியும் வரும்.கலெக்டரைபோய் பேட்டி எடுக்கணும் ..சீக்கிரம்…என் டி டிவி ஏற்கனவே போயாச்சாம்”

“ஸாரி வினயா..காமிரா பிடிக்கக் கூட சக்தி இல்ல…”

“ஒ காட்…!சரி..உங்க வேலையை ராஜேஷ் செய்வாரு.. ஆனா இங்க இருக்காதீங்க… நீங்க கார்ல போயி ரெஸ்ட் எடுங்க”

“இ ல்ல வினயா… இங்கயே இருக்கேன் நானே ரயிலோ பஸ்ஸோபிடிச்சி சென்னை
வ ந்துடறேன், என்ன?”

“ஹேய் என்ன பைத்தியமா உங்களுக்கு?”

“வினயா..அவரை கம்பெல் பண்ணாதீங்க லெட்ஸ்கோ நவ்” என்றான் ராஜேஷ் .
நிழல்படக்கருவியை அவன் கையிலிருந்து வாங்கிக்கொண்டு.

காரில் குழுபுறப்பட்டதும் பத்ரி சுற்றுமுற்றும் பார்த்தான், எதிரே கடல்மணல் பரவி இருந்த ஈரநிலப்பகுதியில் பல உடல்கள் கிடங்கில் குவிக்கப்பட்ட தானியமூட்டைகளாய் ஒன்றின் மேலொன்றாய் கையும் காலும் விறைத்தும்,தொங்கிக்கொண்டும் வெட்டுபட்ட பல்வேறூ பகுதிகளோடும் குவிக்கப்பட்டு இருந்தன.

குவியல் ஒன்றின் அருகே எட்டுவயது சிறுவன் ஒருவன் அழுதபடி நின்றுகொண்டிருந்தான்.அவன் கண்பார்வை கடலைநோக்கியும் கரையை நோக்கியும் சென்றுவந்தன.

பத்ரி அ வனருகில் சென்று,” தம்பீ,யாரைத் தேடறே?’ என்றுகேட்டான் ஆதரவான குரலில்.

அவன் விசும்பியபடி,” எங்கப்பா அம்மா தம்பி தங்கச்சி எல்லரையும். தங்கச்சிக்கு பத்துமாசம்தான் ,,என் மடிலதான் சாப்டும் தூங்கும்… ” என்றான் உடைந்தகுரலில்.

மெல்லப் பேச்சு கொடுத்ததில் மீனவக்குடும்பத்தைச் சேர்ந்த அவன் பெயர் கலியன் என்பதும்,படிக்கவசதி இல்லாதநிலையில் சிறிய டீக்கடைஒன்றில் டீ க்ளாசுகளைக் கழுவி வைக்கும் வேலைபார்க்கிறான் என்றும் தெரியவந்தது.

“கலியா..சுனாமிவந்தது உனக்கு தெரியாதா?”

பத்ரிகேட்டதும்”இல்லீங்க நான் கடைக்குபோயிருந்தேன்.வீட்ல என்னைத் தவிர எல்லாரும் இருந்தாங்க..தங்கச்சிக்கு வர்ரப்போ பிஸ்கட்டுவாங்கியாரேன்னு சொல்லிட்டி போனேன்…இப்போவந்துபாத்தா வீடுவாசலு அ ப்பா அம்மா தம்பீ தங்கச்சீ யாருமே இல்ல…”என்று அழ ஆரம்பித்தான்.

அவனைக்கூட்டிக்கொண்டு பிணக் குவியல்கள் அருகே போனான் பத்ரி.

ஒரு குழியில்கிடந்த சடலம்பார்த்து ‘அம்மா’ என்றான்.மரக்கிளையில் அப்பாவின் தொங்கியகையில் பச்சைகுத்தியதில் ‘காத்தான்’ என்ற பெயர் பார்த்து ‘அப்பா’ என்று வீறிட்டான்.தம்பி புதைகுழிமணலில் வாயும்மூக்கும்கண்ணும் மண் அடைக்க மரணமடைந்திருந்தான் காத்தான்.

“ராணி… என் தங்கச்சிராணீ?”

கதறி அழுதவனை கைபிடித்து அங்கும் இங்கும் சுற்றினான் பத்ரி.

எங்கும் குழந்தையின் சடலம் இல்லை…

கலியனுக்கு அவன் மறுக்கமறுக்க டிபனும் டீயும்வாங்கித்தந்து இரவெல்லாம் கூடவே இருந்தான்.

மறுநாள் காலை பதினொருமணிக்கு தொலைக்காட்சியில் லைவ் ஆக ஒளிபரப்புவதை பார்க்க ஆரம்பித்தார்கள்.அப்போது ஒரு அறிவிப்பு வந்தது..

” இன்றைய இந்த நிமிடத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு உயிர் இழந்தோர் 1100என சொல்லப்டுகிறது. பிணங்களை எடுக்கவோ முறைப்படி புதைக்கவோ இங்கே நேரமுமில்லை ஆட்களும் இல்லை ஆகவே யார் எவர் எனத் தெரியாத நிலையில் சவங்களை பெரிய பள்ளம் தோண்டி அடக்கம் செய்கிறார்கள்” என்று சொல்லி பள்ளத்தையும் உள்ளேகிடந்த சடலங்களையும் குவியலாய் காட்டினார்கள்.

மண்போட்டு மூடும்போது உற்றுப்பார்த்த கலியன்,”ராணீ! என் தங்கச்சி ராணிதான்.. அந்த சிவப்புகவுனுபோட்ட குழந்தை என் தங்கச்சீயேதான்..அய்யோ அதுவும் செத்திடிச்சா?”என்று புரண்டு அழுதபோது பத்ரிக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை.

கலியனை முறைப்படி சுனாமி பேரிழப்புமீட்புநடவடிக்கை எடுப்பவர்களின் சம்மதமும் அனுமதியும் பெற்று சென்னைக்கு அழைத்துவந்தான்.

பத்ரியின் அம்மாவும் கலியனை மகிழ்ச்சியாய் ஏற்று அவனை வளர்த்து, படிக்கவைக்கும் மகனின் பொறுப்பில் தோள்கொடுக்கத் தயாரானாள்.

கலியன் முதல் சிலமாதங்கள் குடும்பநினைவில் வாடி வேதனையிலிருந்தான் .பிறகு சகஜமாகிபோனான்.

திடீரென இரண்டுவருஷதிற்குமேலாகி இப்போது அவன் விரும்பியதால் அவனையும் அழைதுக்கொண்டு நாகப்பட்டிணம் வந்திருக்கிறான்பத்ரி.

ஊர்வந்ததில் மறுபடியும் பழையநினைவுகளில் மனம்தடுமாற வேண்டி இருக்குமே என நினைத்தான்.

ஆனால் கலியன் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமே இல்லை.

“பழகின நண்பர்களைப் பாக்கணூமா கலியா?’

“இல்லைங்க”

“வேலைபார்த்த டீக்கடைக்குப்போகணுமா?’

“வேணாங்க ஐயா”

“வேறெங்கப்பா போகணும்? ”

“கடல்பக்கம்தான்..கடலைப்பாக்கணும்”

பத்ரி ஒன்றும் சொல்லவில்லை அவனுடைய கைபிடித்துகடற்கரை நோக்கி நடந்தான்.

சீராய் ஒரே கதியில் அடித்துக்கொண்டிருந்த அலைகளையே வெறித்துப்பார்த்தான் கலியன்.

பத்ரிக்கு அவனது இறுகியமுகத்தைப்பார்க்கவே அச்சமாக இருந்தது.

எங்காவது திடீரென “என்னோட குடும்பம்போன இடத்துக்கே நானும்போறேன்”என்று கடலை நோக்கி ஓடிவிடுவானோ?

இலேசான திகிலும், கவலையுமாய் அவனையேபார்த்தான்.

கலியன் மெல்லமெல்ல கடலை நோக்கிநடந்தான்.ஆனால் பத்ரியின் கரத்தை விடாமல்பிடித்துக் கொண்டிருந்தான்.நடந்துவந்தவன் சட்டென நின்றான்.

பத்ரி திகைக்கும்போதேகுனிந்து கடலில் எரிச்சலாய் காறித்துப்பினான். காலால் அலைகளை அடித்தான்.”ச்சீ…எல்லாரையும் காவு வாங்கின நீ நல்லா இருப்பியா?உன் உடம்பெல்லாம் உப்பு கரிச்சி இப்பிடி இருக்கறபோதே உனக்கு எத்தினி ஆணவம்? நீ சமுத்திரமா இல்லாட்டி சாவுக்கிடங்கா?” என்றான் கோபமாய்.

“பிறகு பத்ரியிடம்”வாங்க போகலாம்” என்று சொல்லி கடலுக்கு முதுகைக் காட்டியபடிதிரும்பி நடக்க ஆரம்பித்தான்.


shylaja01@gmail.com

Series Navigation

மீட்சி

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

பா. சத்தியமோகன்.


சிறிது நிதானிக்க முடிந்தால்
இந்த நடு வயதில் முழு பலமும் திரட்டிவிடலாம்
சிறிது நல் சுவாசம் தருவீராயின் வரவு செலவுகளில் மீண்டு
நம்பிக்கை முளைகள் விடலாம்.
சுமப்பதற்கு ஒரு கனவு
வலிப்பதற்கு கால்கள்
விரிகிறது பாலை உறவு
சிறு நீர் கழிக்கும் போதும்
துரத்துகிறது
மெய்மையற்ற சமூகம்
ஒரு பாட்டுப்பாடு
முடிந்தால் நாய்க்குட்டியுடன்.

Series Navigation