மிளகுமாமி சொல்றது என்னன்னா

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

கோமதி நடராஜன்


(அயல் நாடு சென்று கச்சேரி முடித்துத் திரும்பும் பாடக் பாடகியர்களில் அனேகம் பேர்,வந்து இறங்கிய உடன் சொல்வது,அயல் நாட்டு ரசிகர்கள் சென்னை ரசிகர்கள் மாதிரி இல்லை,கச்சேரிக்கு நடுவே எழுந்து போவதில்லை,நன்றாக ரசிக்கிறார்கள்,என்பதுதான்.ஒருவரைப் பாராட்டுவது தவறில்லை அதற்காக அடுத்தவரைக் குறை கூறக் கூடாது.இதைத் தெளிவு படுத்த நினைத்து எழுதப் பட்டதுதான் என் இந்தக் கற்பனைக் கடிதம்.இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப் படவில்லை.)

அம்மாடி

வணக்கம்டியம்மா!

எப்படி ஷேமமெல்லாம் ? இப்பல்லாம், அயல் நாட்டிலே கச்சேரி பண்ணிண்டு திரும்பி வர, பாடக பாடகிகளெல்லாம்,அந்த ஊர் ரசிகர்களை, வாய் ஓயாம புகழ்றதுக்குன்னே ஒரு மேடை போட்டு, பாடித் தீர்த்துக்றதை ஒரு கட்டாயமா வச்சுண்டு இருக்கா.இதைத்தான் நம்ம காலேஜ் பசங்க, பீட்டர்னு சொல்றதுகளோ ?

க்ளிவ்லாண்ட்,கலிஃபோர்னியா,டொரென்டோன்னு கச்சேரி பண்ணிண்டு வந்து ஆறேழு மாசம் இருக்குமா ? ரொம்ப களைப்பா இருப்பியேன்னுதான் இத்தனை நாள்,பேசாம இருந்தேன்.ஜெட் லாக் எல்லாம் சரியாப் போச்சுதாடியம்மா ?ஜெட் லாக் போச்சுதோ இல்லையோ ,அமெரிக்க ரசிகர்களோட கைதட்டலும் கரகோஷமும் உன்னோட காதுலே இன்னும் விழுந்துண்டே இருக்கும்,இல்லையாடியம்மா!இருக்காதா பின்னே ?

எனக்கும் கர்னாடக சங்கீதத்துக்கும்,ரொம்ப தூரம்னு சொல்ல முடியாது, ஆனால் இந்த பைபாஸ் ரூட் அளவு பக்கம்னு வச்சுக்கியேன், பாரதியார் பாட்டெல்லாம் பாடினியானா நல்லாவே ரசிக்கத் தெரியும்,அத்தனை தூரத்தில்தான் இருக்கும் என் ரசனையும்.

இதை எதுக்குச் சொல்ல வரேன்னா,நான் என்னமோ பெரிய சங்கீத மேதைன்னு நினைச்சு நீ, நான் எழுதுறதெல்லாம்,பாடுறதுக்கு சபா கிடைக்காத, வயத்தெரிச்சல்லே ,பொறாமலே எழுதுறேன்னு நினைச்சுடப் படாது பாரு அதுக்குத்தான், இந்த முன்னெச்சரிக்கை.

எல்லா ரசிகர்களையும் மாதிரி நானும் ,உன்னோட வளர்ச்சியை ரசனையோடு கவனித்துக் கொண்டு வந்தவள்தான்.

ஆனா- அம்மாடி நீ சொன்னியே உன்னோட ரசிகர்களைப் பத்தி நாலு வார்த்தை , ‘அமெரிக்கா ரசிகர்களெல்லாம் கச்சேரிக்கு நடுவே எழுந்து போறதில்லை,பாட்டுக்கு நடுவே பறக்றதில்லை அமைதியா இருந்து கச்சேரி முடிஞ்ச பின்னாடிதான் கிளம்புறா அவா முன்னாலே பாடுறதுன்னா சந்தோஷமா இருக்கு,அதனால்தான் போறேன் ‘ன்னு,அதிலே விழுந்துச்சும்மா உனக்கு ஒரு கருப்புப் புள்ளி.

அமெரிக்காலே கச்சேரி பண்ணினா வர்ர ரசிகர்கள்,பாட்டுக்கு இடையே போறதில்லை

கச்சேரி முடியும் வரை இருக்கிறாங்க,எல்லாம் சரிதான்,அதுக்காக..இப்படியா உள் நாட்டு ரசிகர்களுக்கு ரசனையே இல்லைங்ற மாதிரி வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு சொல்றது ?

அம்மாடி! உன்னை வளர்த்து விட்டதே சென்னை ரசிகர்கள்தானே.மறந்துட்டுயாடியம்மா ?உன்னோட முதல் மேடைக்கச்சேரியிலே ,நாலு பேர் எழுந்து போகும் பொழுது இருந்த பொறுமையும்,ரசிக்க ஆள் கிடைக்கலேன்னாலும் பாட, ?ால் கிடைச்சதே பெரிய புண்ணியம்ன்னு இருந்த,அடக்கமும் அமெர்க்கா போய் வந்த பிறகு ஆடியிலே பறக்கிற அம்மியாடுச்சே.பறக்க விடலாமா இப்படி ?நீ பறக்க விட்ட அம்மிக்கல் உன்னோட ரசிகர்கள் தலையிலேன்னா விழுந்துடுத்து.

அமெரிக்கா என்ன, எந்த அயல் நாடானாலும் ,முக்காவாசி ரசிகர்கள்,கையில்,பர்கர் பன்னும்,பீட்ஸாவுமாக வருவா,கச்சேரி முடிந்து வீடு போகும் வழியிலேயே வாயிலே போட்டுண்டே வீட்டில் போய் விழலாம் .இங்கே அந்த மாதிரி நடக்குமா ? அங்கே,ராத்திரி பத்து மணியானாலும், வீட்டுப் பெரியவர்களை அனுசரணையா கவனிக்கத் தேவையிருக்காது ஏனா அவாளும் பர்கர்லே வயித்தை நிறப்பத் தெரிஞ்சவாளா இருப்பா.அங்கே ஒரு குடும்பத்திலேர்ந்து நாலு பேர் கச்சேரிக்கு வந்தால் அவா அவா ஜோலி முடிஞ்சு நாலு கார்லே வருவா,திரும்பரச்சே,சர்ர்னு வெண்ணைய் மாதிரி ,கேபிள்,மெட்ரோ,பியெஸென்னல்,ஈபின்னு குழிவெட்டாத,ரோட்லே வழுக்கிண்டு திரும்புவா.

இங்கே தாம்பரத்லேருந்தும்,ஆதம்பாக்கத்திலேருந்தும் வந்து போரவா எப்படிப் போயிருப்பான்னு நோக்குத் தெரியாதுடிம்மா ?கொஞ்சம் யோசித்துப் பாருடியம்மா புரியும், அவா ஏன் உன்னோட கச்சேரிலேருந்து ,பாதிலே பறக்றான்னு அதுவும் மனசில்லாமதான் கிளம்புவா தெரிஞ்சுக்கொட்டிம்மா..

உன் மேல நேக்கு எந்த துவேஷமும் கிடையாதுடியம்மா,உன் லைன் வேறே என் லைன் வேறே.சரஸ்வதி குடிகொண்டிருக்கும், உன் பாட்டில் மட்டும், ஸ்ருதி சுத்தம் இருந்தா பத்தாது பேச்சும் ஸ்ருதி சுத்தமா இருக்கணும்னு சொல்லத்தான் இதை எழுதுறேன்.குன்றில் ஏறிய குத்துவிளக்கில் குறை இருக்கக் கூடாது பாரு!

நோக்கு ஒரு ஐடியா தரேன் ,இனிமே நீ பாடற சபாலே žட்லே பெல்ட் மாட்டி வைக்கச் சொல்லு,ரசிகர்கள் வந்து உட்காந்த உடனே ,பெல்ட் மாட்டினா உன் கச்சேரி முடிஞ்சப் பின்னாடிதான் எடுக்க முடியும் .அப்புறமா அவா ஆட்டோ கிடைக்காம தெருவிலே நிக்கட்டும் ,பஸ்லே ஃபுட் போர்டிலே தொங்கிட்டு போகட்டும்,இருட்டிலே திண்டாடட்டும்,எவானாவது சங்கிலியை பறிச்சுண்டு ஓடட்டும் ,நமக்கென்ன வந்துச்சு.

ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோ,உன் பாட்டுன்னா, வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுண்டு ஓடி வர்ர நிறைய ரசிகர்களை,நன்னாவே சம்மட்டியாலே அடிச்சுட்டே! அயல் நாட்டிலே, எந்த சிரமும் இல்லாம கச்சேரிக்கு வரும் நூறு ரசிகர்களுக்கு, இங்கே இடிபாடுகளுக்குள்ளே சிரமப் பட்டு ஓடி வர்ர ஒரு ரசிகன் சமம்டிம்மா!அதைத் தெரிஞ்சுக்கணும்.அவாளெல்லாம் நன்னா ரசிக்கிறாங்கன்னு வெறுமே சொல்லியிருந்தேன்னா தப்பில்லே,இந்திய ரசிகர்கள் மாதிரி இடையிலே எழுந்து போறதில்லைன்னு இடிச்சிருக்க வேணாம்னு தோண்ரது. உன்னோட இந்த கருத்து,உன்னோட ரசிகர்களையெல்லாம் நல்லாவே பாதிச்சுடிச்சியம்மா. !ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கலாமா ?கேக்றதுக்கு மனுஷாள் இல்லைன்னா பாடுறவா எங்கே போவா ?

அடுத்தவங்க கஷ்டத்தைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோடியம்மா.எல்லா கஷ்டத்திலேயும் சிரமத்திலேயும் உன்னோட பாட்டை ஒரு மணி நேராமாச்சும் கேட்டா போதும்னு வர்ரவா மனசையெல்லாம் புண்படுத்தாதேடியம்மா.அவாளெல்லாரோட கைதட்டல்தானே உங்களையெல்லாம் ஃப்ளைட்லே ஏத்தி அமெரிக்காவிலே கொண்டுபோய், சேர்த்துச்சு,அதை மறக்கலாமா ?

உன்னோட மனசைப் புண் படுத்துறதுக்காக எழுதலை,புகழின் உச்சிக்குப் போகப் போக ,உன்னோட பாட்டை கேக்றதோட விடமாட்டாங்க, நீ என்ன பேசுறே எப்படிப் பேசறேன்னும் கவனிப்பாங்க,ராகத்திலே குறை இருந்தா மன்னிச்சுடுவா ஆனா பேச்சிலே குறை இருந்தா மன்னிக்கவே மாட்டாடியம்மா.இதை மனசிலே வச்சுண்டு பேசும்மா.

உன் நல்லதுக்காகத்தான் ,ஆத்து ஜோலியெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு எழுதிண்டு இருக்கேன்.

ஏதோ சொல்லத் தோணுச்சு சொல்லிட்டேன்.கேக்றதும் கேக்காம விடுறதும் உன் இஷ்டம்டியம்மா..

அக்கரையுடன் ‘மிளகு ‘

===========================

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்