மின்னுயர்த்தி

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

அபுல் கலாம் ஆசாத்


அடுக்கு மாடிகளின்
அஞ்சல் பெட்டியே!

உன்னால்
மாட முகவரிகளில்
மனிதத் தபால் வினியோகம்.

நீ
மூட்டு வலியின் முதல் உதவி.

செங்குத்துப் பயணத்தின்
ஒற்றை ரயில் பெட்டி.

அழைப்புப் பித்தான் சங்கேத வார்த்தையில்
அடிக்கடித் திறக்கும்
அலிபாபா குகை.

வந்து போகும் மனிதர்கள்
விட்டுச் செல்லும் சுகந்தம் சுமக்கும்
சின்ன வீடு.

சில நிமிட சிறைச்சாலை.

ஒரு நாள்
நீ வேலை நிறுத்தம் செய்தாய்
வலி நிவாரணிகளின் விற்பனை
விண்ணைத் தொட்டதாம்.

உண்மைதான்,
தூக்கும் தோள்கள் துறவறமேற்றால்
பல்லக்கில் பயணிக்க முடியுமா ?
இங்கே
சில தோள்கள்
சில பல்லக்குகள்.

நீ
மின்சார உதிரம் கொதித்தெழ
மேலேறி இறங்கி
மேலேறி இறங்கி
எதைச் சொல்கிறாய் ?

உயர்ந்தாலும் இறக்கம் உண்டென்கிறாயா ?
எதற்கும் ஓர் எல்லை உண்டென்கிறாயா ?

இதுதான் வாழ்க்கையோ ?

சிலர் சிட்டுக்குருவியாக
சிலர் பருந்தாக
சிலர் நீயாக. . .

***
azad_ak@yahoo.com

Series Navigation

அபுல் கலாம் ஆசாத்

அபுல் கலாம் ஆசாத்