மின்னிதழ்கள் அச்சிதழ்கள் அச்சுநூல்களின் பன்மைப் பெருக்கமும் ஆகத் தெளிவாக வேண்டிய வாசகரும்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

தேவமைந்தன்


அன்னப் பறவை இருக்கிறதோ இல்லையோ, வாத்தைப் பார்த்துக் கொண்டாவது நல்லறிவு பெற்று, இன்றைய பன்முகப்பட்டதும் பலதரப்பட்டதுமான அச்சிதழ்/மின்னிதழ்ப் பெருக்கத்தை நாம் எதிர்கொண்டேயாக வேண்டி இருக்கிறது.

மேடையொன்றில் வேடிக்கையாக திருக்குறள் வீ. முனுசாமி அவர்கள் ஒருமுறை கூறினார்: “போகிற போக்கைப் பார்த்தால் எல்லோருமே கவிதை எழுதுவார்கள் போல உள்ளது; எல்லோருமே மேடைப்பேச்சாளர்கள் ஆகிவிடுவார்கள் போல உள்ளது; அப்புறம்… படிக்க ஆர் இருப்பா?.. கேக்க ஆர் இருப்பா?…”

அன்றைக்கு, அவர் சொன்னதன் விபரீதம் உறைக்கவில்லை. “மனுஷன் ஏனோ ஜனநாயக முறையை வெறுக்கிறார்போல இருக்கிறது..வயதாகிறதல்லவா?” என்று எண்ணிக் கொண்டேன். இன்று தெரிகிறது. எதார்த்தம் உறைக்கிறது.

நேற்று நண்பர், ஒருவர் வீட்டுக்கு வந்தார். நெடுங்காலமாய் அவர் வரவில்லை. வந்தவுடன் என்னைப்பற்றித் தாம் அறிந்தவைகளையெல்லாம் என்முன்னேயே மதிப்பிட்டார். இது ஒருவகையில் வேதனை தருவது என்றாலும், புறம் பேசுவதைவிட இதுவே ஆரோக்கியமானது. எப்பொழுதும் சுற்றி வளைத்துப் பேசி மற்றவர்களை மட்டம் தட்டுவதை விட, நேரடியாகப் பேசிவிடுவதே நல்லது. தன் ‘மதிப்பீடு’ என்னும் உடும்புப் பிடியில் ஒருவர் நம்மை எப்பொழுதும் வைத்துக்கொண்டு, இலவச மேஸ்திரியாக இருந்துகொண்டே நம்மை வாழ்நாளெல்லாம் கழுத்தறுப்பதை ‘ஒரு நொடிப் பொழுதில்’ தடுத்துக் கொண்டுவிடும் ‘ஃஜென்’ பாணி, மிகவும் மனநலமானது. அதனால் நண்பர் சொன்னவற்றை உன்னிப்பாகக் கேட்டேன். எல்லாம் நன்றாக இருந்தன – ஒன்றைத் தவிர..

“நீங்க திண்ணை.காம் போல இணைய இதழ்கள்’ல்ல எழுதறதல்லாம் நல்லதுதான். ஆனா அதல்லாம் அச்சுல கொண்டுவர வேணாமா… பாருங்க..நம்ம ஊருல நாள்தோறும் புத்தக வெளியீடு நடக்குது.. உள்ளூரு மேளம் சரிப்படலன்னா வெளியூரு மேளம் வச்சுக்கறாப்பல, அந்த ‘இவர்’ பாருங்க சென்னையில இருக்கிறவருக்கு இங்க புத்தகம் வெளியிட்டுப் பாராட்டறாரு. ‘இவர்’கிட்ட ஆராய்ச்சிக்குப் பதிவு பண்ணிட்டவங்க பாருங்க, ஓடியாடி என்ன அழகா ஏற்பாடெல்லாம் பன்ணறாங்க..நீங்க என்னடா’ன்னா சைபர்ஸ்பேஸ்’லயே எழுத்துகள வச்சுட்டு இருக்கீங்க.. முத வேளையா அதல்லாம் புத்தகமா வெளியிடுங்க…”

இனிமேலும் பொறுக்கக் கூடாதென்று தலையிட்டேன். ஏற்கெனவே மூன்று புத்தகங்களைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் நான் வெளியிட்டிருப்பதை நண்பருக்கு நினைவூட்டினேன். இப்படிப்பட்ட தூண்டுதலை நம்பிப் புத்தகங்கள் பல வெளியிட்டு, அமைப்புகளைத் ‘திறம்பட’ நடத்தியவாறே உள்ளூர் வெளியூர் நூலகங்களுக்குத் தம் புத்தகங்களைத் ‘தள்ளிவிட’த் தெரியாத அப்பாவிகள், பெரியவர்களிடமும் நண்பர்களிடமும் கூடப் ‘புத்தக வியாபாரம்’ செய்யத் தெரியாமல், தம் வீட்டில் தமக்கும் தம் வீட்டாருக்கும் மட்டுமே தெரிந்த மூலையில் அடுக்கப்பட்டிருக்கும் தம் புத்தகங்களை எடுத்துத் துடைத்துப் பாங்காக ‘அன்புடன்’ தந்தே ‘பாரம்’ குறைகிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னேன். அந்த நண்பர் ஒரு ‘புள்ளி’ என்பதாலும் தமிழகத்து, ஏன் உலகத்துத் தமிழ்த் தலைவர்களுக்கெல்லாம் மிகவும் நெருக்கமானவர் என்பதாலும், கொஞ்சமும் மசியாமல் தான் இதுவரை சொன்னதற்கு ஒருபடி மேலே சென்றார்.

“சரி! தேவமைந்தன், நீங்க எல்லோருக்கும் புரியும்படியா பயனுள்ளதா எழுதியிருக்கிறவற்றை மட்டும் நானே புத்தகமாக்கறேன். வெளிநாடுங்க’ மாநிலங்க’ எல்லாத்துலயும் ‘மார்க்கெட்டிங்’கையும் நானே பாத்துக்கிறேன்..” என்று ‘பெரிய வார்த்தைகளை’ உதிர்த்தார்.

நண்பரை ‘ஐயா’ என்று இதுவரை நான் விளித்ததில்லை. இப்பொழுது அதைச் செய்தேன்.

“ஐயா!..’வெளியில வெள்ளையுஞ் சள்ளையும், உள்ளையோ ஒரே கச்சக் கருவாடு நாத்தமும்’ன்னு எங்க ஊருல பழமொழி ஒண்ணு உண்டு. அந்த ‘வேல’யச் செய்யத் தெரியாதவன் நான்… என்ன சொன்னீங்க! அச்சுல கொண்டுவரணுமா? நீங்க சொல்றீங்களே! இந்த அச்சு மொதல்லே வந்தபோதும் இப்படி ஒருத்தரு ‘எழுத்தாணி புடிச்சு எழுதின சுவடி மாதிரி வருமா?’ன்னுதான் இளிச்சுக்கிட்டே கேட்டிருப்பாரு. ஆனா அதையெல்லாம் எதிர்த்துட்டு இன்னைக்கு இராட்சசத்தனமா அச்சு வளர்ந்துறலயா? இன்னைக்கு பத்து வயசுல உள்ள அத்தன பிள்ளைங்களும் கம்ப்யூட்டர் அறிவுலயும் இன்டர்நெட் அறிவுலயும் ‘பிச்சு’ வாங்குது! ‘எனக்கு நேரமே இல்லை’ன்னு சொல்லாம சுறுசுறுப்பா எக்கச்சக்க ‘ஐக்யூ’வோட திரியுது வளர்’ற தலைமுறை! இவங்க அச்சுல ‘வடிக்கிறத’ல்லாம் மூக்குக் கவசம் மாட்டிட்டு ‘ரீசைக்கிள்’ பண்ணப்போற காலம் ஒண்ணும் ரொம்பத் தொலைவில இல்லை. கலைஞர் எந்த வயசுல கம்ப்யூட்டர் கத்துக்கிட்டாருன்னு இவங்களுக்குத் தெரியுமா? அவரு எழுத்துக’ள்ளாம் இன்னைக்கு மின்வெளி’ல உலாவறது ஏன் தெரியுமா? ‘அப்டேட்ட’டா இலாதவங்கள இந்தத் தலைமுறை மதிக்காதுன்னு அவரு தெரிஞ்சுக்கிட்டதாலதான்!..போய்வாங்க’ய்யா..போய்வாங்கய்யா..”

ஆமாம். மேலும் மேலும் எந்தவொன்று பன்முகமாக ‘பின்ன’மாகிப் போகிறதோ, அது வலிமை இழந்து போகிறதென்று ஜே. கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்” என்று பாரதி பாடியதில் “உயிர் மொய்ம்புற ஒன்று” என்பதில் எல்லா மறைபொருளும் அடங்கிக் கிடக்கிறது.

ஒரு சிறிய நகரத்தில் ஒவ்வொரு நாளும் புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது, சிலர், திருமண விழாவில் போடும் விருந்துடன் புத்தக விழா நடத்துகின்றனர் என்றால் என்ன பொருள் தெரியுமா? அச்சு, தன் மதிப்பை இழந்து நீர்த்துப்போய்க் கொண்டே இருக்கிறது என்று பொருள். ஒவ்வொருவரும் தத்தம் புத்தகங்களை மட்டுமே மனத்திலும் கையிலும் வைத்துக் கொண்டு உலவுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? வாசகர் வட்டம் என்று போட்டுக் கொண்டால் போதுமா? எழுத்தாளர் சங்கங்கள் சில, தங்கள் உறுப்பினர்களைக்கூட உயர்த்தாமல், அவற்றின் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்களை மட்டும் உயர்த்திக்கொண்டே போகின்றன. “நான் உமி கொண்டு வருகிறேன், நீ அவல் கொண்டு வா, நாம் ஊதி ஊதித் தின்னலாம்!’ என்ற முறையில்தான் சில எழுத்தாளர் சங்க, வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் தம் சங்க உறுப்பினர்களிடம் உறவு கொண்டிருக்கின்றனர். இன்னொரு கமுக்கம் தெரியுமா? ‘பெரிய்ய’ பதவிகளில் இருப்பவர்களின் புத்தகங்கள், படைப்புகள் மட்டுமே இவ்வாறெல்லாம் வாய்ப்புகளைப் பெறுபவை.

அச்சிதழ்கள், அச்சுப் புத்தகங்களின் நிலைதான் இவ்வாறிருக்கிறது என்றால், மின்னிதழ்களும் பன்முகமாகப் பெருகத் தொடங்கியுள்ளன. வலைப்பதிவர்களைத் தரம் பிரித்து ‘மொய்’ வைக்கும் திரட்டிகள் வேறு பன்முகமாகி வருகின்றன. அவற்றுள் மிகவும் சன்னமாக இழையோடிவரும், புலம்பெயர்ந்தோர் – புலத்தோர் – இந்தியத் தமிழர் – தமிழ்நாட்டுத் தமிழர் என்ற, ‘பின்னமாதலைப் போற்றுகின்ற, கூறுபோடும் மனப்பான்மை’ பெருத்து வளர்ந்து வருகிறது. இது, சைபர்வெளியில் தமிழர் நிலைப்பாட்டைக் கேலிக் கூத்தாக்கிவிடும்.

வலைப்பதிவர்கள் நிலை இன்னும் இரங்கத்தக்கது. சென்னையிலும் பெங்களூரிலும் அவ்வப்பொழுது நிகழும் வலைப்பதிவர் மாநாடுகள் கருத்தரங்குகளுக்குத் தான் அழைக்கப்பெறுவதில்லை என்று வலைப்பதிவரான இளைய நண்பர் ஒருவர் வருந்தினார். “அவங்க குரூப்புகள்’ல எப்படி இடம் பிடிக்கிறது?” என்று வெள்ளந்தியாக விசாரித்தார். என்ன சொல்வேன்! “வானிலுள்ள மீன்களை எண்ணினாலும் எண்ணி விடலாம்! நம் நாட்டு மக்கள் தொகையைப் போலவே பெருகிவரும் வலைப்பதிவர்களை எண்ணிவிட முடியுமா?” என்று நகைச்சுவையாகக் கேட்பதுபோல்(!) கேட்டு அவர் ‘மூடை’ மாற்றினேன்.

சரி! அதைவிடுங்கள். மின்னிதழ்களாவது ஓர்மை பெற்று இருக்கின்றனவா? எனக்குத் தெரிந்து, என்னைப்போல ஒரு சிலரே தாங்கள் படைக்கும் படைப்புகளைப் பன்முகமாகப் பெருகிவரும் மின்னிதழ்கள் எல்லாவற்றுக்கும் அனுப்பிக் கொண்டிராமல், கட்டுத்திட்டமான கோட்பாடு ஒன்றைப் பின்பற்றி வரும் ஓரிரு மின்னிதழ்களுக்கு மட்டுமே அனுப்பி வைக்கிறோம். அவற்றை முழுமையாக வாசிக்கிறோம். நேசிக்கிறோம். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்! ஏதோ கூட்டுக்குடும்பத்தின் கொடுமை பொறுக்கமுடியாமல்தான் தன்னவரை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் போவதாக ‘வேஷங்’கட்டும் ‘புத்திசாலிப் பெண்’போல நடந்து கொள்கிறார்கள். விளைவு.. ஒருவர் தன் அனுபவத்தையெல்லாம் பொழுதுகளையெல்லாம் போட்டு மின்னிதழ் ஒன்றை நடத்திவரும்பொழுது, இவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி முந்திய மின்னிதழின் பெயரின் அதே ஒலியன்கள் வருமாறு பெயரிட்டு இன்னொரு மின்னிதழ் தொடங்குகிறார். அதற்கு அச்சிதழ்களில் ஆரவாரமான விளம்பரங்கள் தொடர்கின்றன. ஒன்றை இவர்கள் தெரிந்து கொள்வதில்லை. அதுதான் சாதாரணமானதோர் ‘அங்காடி உண்மை.’

ஓர் ஊரில் பூக்கடைகள் எத்தனையோ இருக்கும். ஒவ்வொன்றுக்கும் வியாபாரமும் நடக்கும். ஆனால் ஓரிரு பூக்கடைகளுக்கு மட்டுமே ‘விசுவாசமான வாடிக்கையாளர் எண்ணிக்கை’ ஆகக் கூடுதலாக இருக்கும். அதுதான் வெற்றி. மற்றவை, “ஆகுல நீர பிற” என்று வள்ளுவம் சொன்ன வகைதான். “எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேம்படும்!”[“Oil and Truth get uppermost at last”] என்ற ஆங்கிலச் சொலவடையின் தம் தமிழாக்கத்தை அடிக்கடிச் சொல்லி வந்தார் பாவாணர். அது மிகவும் உண்மை.

இன்றைய வாசகர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? ஓடிக்கொண்டே இருப்பவர்கள்.. அவை(audience) சிலவற்றில் பெரும்பான்மையாகக் காணப்படுவர்களைப் போல ஓய்ந்துவிட்டவர்கள் அல்லர். நான் வயதைச் சொல்லவில்லை. மனதைச் சொல்லுகிறேன்.

இன்றைய வாசகர்கள் ஓய்வு ஒழிச்சலில்லாமல், ஒருவரே ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று வேலைகளைச் செய்து கொண்டு, பணத்தின் பின்னே தங்களின் மனம் ரணமாக ஓடிக்கொண்டே உள்ளவர்கள். மெத்தவும் அறிவாளிகள். கண்களில் கூர்மையும், மனத்தில் தெளிவும் கொண்டவர்கள். தன் மாயையில் மற்றவர்கள் மருண்டேயாக வேண்டும் என்று எதிர்பார்க்காத புத்தம் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அடுத்தவர்களைச் சுரண்டிப் பிழைப்பு நடத்த விரும்பாதவர்கள். மயிலாடுதுறையில் பேருந்து ஏறி, ஒரு புத்தகத்தை எடுத்துக் கைகளில் பிரித்துவைத்துக் கொண்டு வாசித்தவாறே பயணம் செய்துவிட்டு, சிதம்பரத்தில் இறங்குமுன் நம்மைப் பார்த்துப் புன்னகை சிந்திவிட்டுப் போகிறவர்கள். எதன்பொருட்டும் எவருக்கும் கட்டுப்பட்டுக் கையைக் கட்டிக் கொண்டிராதவர்கள். தரம் எது என்று நன்றாக அறிந்தவர்கள். ஒத்துவராதவற்றை உடனுக்குடனே ஓரங்கட்டத் தெரிந்தவர்கள், இன்றைய வளருந் தலைமுறையில் பெரும்பாலானவர்கள்.

இத்தகைய வாசகர்கள், பதினைந்து நிமிடம் முதல் முப்பது நிமிடம் வரை மட்டுமே ஒதுக்கி ஒவ்வொரு முறையும் ‘பிரவுசிங் சென்டரி’ல் செலவிட்டு மின்னிதழ்களைப் பார்வையிட விரும்புகிறார்கள். தமக்கு வரும் அச்சிதழ்களைப் பொறுப்பாக ஓரிடத்தில் போட்டுவைத்து, மாதந்தவறாமல் எடைக்குப் போட்டுவிடுகிறார்கள். இல்லமும் உள்ளமும் தூய்மையாகின்றன. காரணம், இப்பொழுதெல்லாம் ‘தூசியின் தாண்டவம்’ மிகவும் கூடுதல்.[கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ் அவர்களின் ‘The Dance of Dust’ வாசித்திருக்கிறீர்களா?]

காலத்தின் அருமையைக் கூடுதலாகக் கருதும் இளைய வாசகர்கள், தாங்கள் இணையம் உலாவும் பொழுது தரமான – நிறைய நுகர்வுப் பயன் விளவிக்க வல்ல இணைய இதழ்களையே வாசிக்க விரும்புவார்கள் என்பதும் உண்மைதானே?

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation