மிட்டாதார்

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

காசிகணேசன் ரங்கநாதன்.


‘மிட்டாதார் தெரு ‘

அழிந்து போன பெயிண்ட்டாக இருந்தாலும், இன்னும் தெருப்பெயரைத் தெளிவாகப் படிக்க முடிந்தது. எங்கள் வீட்டுச் சாமான்களைச் சுமந்தபடி, ஒற்றை மாடு பூட்டிய வில் வண்டி அந்தத் தெருவுக்குள் நுழைந்தது. அது எங்கள் ஊரின் கடைசியில் இருந்த தெரு. அந்தத் தெருவின் அனைத்து வீடுகளின் பின்புறமும் நீளமாக ஒரே நேர்க்கோடாக ஓனி என்று மக்களால் அழைக்கப்பட்ட சாக்கடை ஓடை ஓடியது. சாக்கடையைத் தாண்டினால் புன்செய் நிலங்கள். வருடத்தின் சில மாதங்கள் விவசாயம் செய்யப்பட்டு சோலைகளாகவும், எஞ்சிய மாதங்களில் பலமாகக்

காற்று வீசும் பொட்டல் வெளிகளாகவும் இருந்தன.

நாங்கள் முதலில் மேட்டுத் தெருவில்தான் குடியிருந்தோம். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் அவசரத் தேவைக்காக வீட்டைக் காலி செய்யச் சொன்னதால், அந்தத் தெருவில் வீடு எதுவும் காலியாக இல்லாததால், இந்தத் தெருவுக்கு வரவேண்டியதாயிற்று. வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. ஒவ்வொரு சாமானாக எடுத்துக் கொண்டுபோய் உள்ளே வைத்தோம். அன்று மாலைவரை ஒவ்வொரு சாமானாக அனைவரும் தேடித் தேடி எடுத்து அதனதன் இடத்தில் வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மாலையில் ஒரு வழியாக வீடு ஒழுங்கானதும் கயிறு, வாளியோடு பொடக்காலியில் போய், கிணற்றிலிருந்து நீர் இறைத்து, கை கால் முகம் கழுவி, தலைக்கு எண்ணெய் தடவி, விசிலடித்தபடி கண்ணாடி பார்த்துத் தலைசீவிப் பெளடர் அடித்து ஷோக்காக வெளியே கிளம்பினேன். வீட்டை விட்டு வெளியே வந்த போது பக்கத்து வீட்டு அன்வர் எதிர்ப்பட்டான். அன்வர் என் பள்ளித்தோழன். அவனுக்கு நாங்கள் வரப்போவது தெரியாது.

‘டேய் ரவி பக்கத்து ஊட்டுக்கு நீங்கதான் வந்திருக்கிறீங்களா ?.. ‘

‘ஆமாண்டா ஒனக்குத் தெரியாதா ? ‘

‘யாரோ வரப்போறாங்கன்னு முனவர் ச்சிச்சா சொன்னாரு ஆனால் நீதான்வரப்போறன்னு தெரியாது. ‘

வீட்டுக்குள்ளே இழுத்துக் கொண்டு போனான்.

‘அம்மி கோன் ஆயா ஹை ரத்தி தேக்.. ‘ அம்மா யார் வந்திருக்காங்கன்னு பாரு.

‘ரவி வாப்பா. நல்லா கீறயா ? பக்கத்து ஊட்ல நீங்கதான் வொந்தி க்கீறதா ? இரு கண்ணு டா சாப்ட்டு போவியான். ‘

‘அன்வர் பைட்னக்கொ போல்ரே அபி ஆத்தியெளன். ‘ அன்வர் அவனை உட்காரச்சொல்லு. இதோ வரேன்.

இருவரும் தோள்மேல் கை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். அது நீளமான தெரு. இரண்டு கிளைச் சந்துகளோடு சுமார் ஐநூறு குடும்பங்கள் வசித்து வந்தன. முழுக்க முழுக்க உருது பேசும் முஸ்லீம் இனத்தவர் மட்டுமே வசிக்கும் தெரு.

‘அன்வர், எங்கம்மா தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னாங்க. ‘

‘அப்படியா, நிறைய காய்கறி வாங்கணுன்னா சந்தைப் பக்கமாப் போலாம். வெறுந் தக்காளிதானே ? இங்க பக்கத்துல மிட்டாதார் கடையிலயே

வாங்கிக்கலாம். ‘

‘மிட்டாதார் கடையா ? ‘

‘ஆமாண்டா. மிட்டாதார் கடைதான். ‘

ஏற்கெனவே மிட்டாதார் தெரு என்ற பெயரினால் எனக்கு உண்டான குழப்பமே இன்னும் தீரவில்லை. முதலில் மிட்டாய்க்காரத் தெருவோ ? என்று நினைத்தேன். ஆனால் தெளிவாக எழுதியிருந்தது. மிட்டாதார் கடை என்று கேள்விப்பட்டதும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அந்தக் கடை ஒரு வீட்டின் இடிபாட்டின் முன்புறம் அமைந்திருந்தது. இடிந்து போன செங்கல் மற்றும் காரையின் மீது மெத்தி, இரண்டு மூன்று பலகைக் கல் பாவி, அதன் மீது மூன்று நான்கு சாக்குப் பைகள் போட்டு, தண்ணீர் தெளித்து ஈரமாக்கி, அதன் மேல் சிறிதும் பெரிதுமாக நான்கைந்து கூறுகள் தக்காளியும், அதே போன்று நான்கைந்து கூறுகள் கத்தரிக்காயும் வைக்கப் பட்டிருந்தது. அருகே ஒரு கல்லின் மேல் கிழவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அன்வர் சொன்னான்.

‘இந்தக் கூறு நாலணா. இது எட்டணா. எது வேணும் ? ‘

நான் ஒரு நாலணா நாணயத்தை அவனிடம் நீட்ட, அவன்,

‘நானா, நாலணா அலியெள. ‘

அவர் கையில் நாலணாவைத் திணிக்க, அதை வாங்கிச் சாக்குக்கு அடியில் போட்டுக் கொண்ட அவர் சட்டை போடாமல் லுங்கி மட்டும் அணிந்து அமர்ந்திருந்தார். வாயில் சின்ன மன்னான் பீடி புகைந்து கொண்டிருந்தது. நல்ல உயரமாக இருப்பார் போலத் தோன்றியது. மூக்கு கொஞ்சம் நீண்டு வளைந்திருந்தது. நான் விரும்பிப் படிக்கும் லயன் காமிக்ஸின் லக்கி லூக் நகைச்சுவைக் கதைகளில் வரும் கிழவரை ஒத்திருந்தார். எங்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நாங்கள் இருவரும் ஒரு கூறு தக்காளியை ஒரு கைக்கு மூன்று நான்காக எங்கள் இரு கைகளிலும் அள்ளிக் கொண்டு கிளம்பினோம். என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

‘டேய் அன்வர், இதுதான் மிட்டாதார் கடையா ?… ‘

‘ஆமா.. ‘ அவன் வாய் பப்பர மிட்டாயைச் சப்பிக் கொண்டிருந்தது.

எதிர்த்த வீட்டின் நீண்ட திண்ணையில் அமர்ந்து கொண்டோம். என்னிடம் கேள்விகள் நிறைய இருந்தன.

‘அப்ப, கடையில இருந்த அந்த தாத்தா யாரு ?.. ‘

‘அவருதான் மிட்டாதார். ‘

‘அப்ப அவரு பேரயா இந்த தெருவுக்கு வெச்சிருக்காங்க ?… ‘

‘ஆமா ரவி. இவரு சாதாரண ஆளு இல்லை. ஒருகாலத்துல பெரிய மிட்டாதாரா இருந்தவரு. ‘

‘மிட்டாதார்ன்னா ? ‘

‘மிட்டாதார்ன்னா.. பெரிய பணக்காரரு. இந்த ஜமீந்தார் எல்லாம் இருக்காங்கல்ல, அந்த மாதிரி. அந்த காலத்துல இந்தத் தெருலயே அவரு

வீடுதான் பெரிய வீடு. அவர் வீட்ல மூட்டை மூட்டையா வெள்ளிக் காசு வெச்சிருந்தாருன்னு சொல்லுவாங்க. அதுக்கப்புறம் ஏளையாயிட்டாரு. ‘

தக்காளியோடு மெளனமாக வீடு நோக்கி நகர்ந்தோம்.

அன்றிரவு ‘அங்கன் ‘ என்று உருதுவில் அழைக்கப்படும் வீட்டின் பின்புறம் இருந்த வெட்டவெளியில் மல்லாந்து படுத்தபடி சாவகாசமாக வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பத்துபேர் ஓடிப்பிடித்து விளையாட வசதியான நல்ல நீள அகலமுடைய அங்கன் அது. கெட்டியாகக் கரைக்கப்பட்ட சாணியிட்டு மெழுகப்பட்டிருந்த அந்த மண் தரை காரை பூசிய தளம் போல உறுதியாக இருந்தது. பக்கத்து வீட்டு தாஹிரா பானு என் அருகே வந்து அமர்ந்தாள்.

‘டேய் ரவி மேல பாத்தியா ?.. ‘

‘ஆங்.. நெறய நட்சத்திரம் இருக்கு. ‘

‘அந்த நட்சத்திரம்லாம் எப்படி வந்துச்சு தெரியுமா ?.. ‘

‘எப்படி வந்துச்சு ?.. ‘

‘பெரிய பெரிய பணக்காரங்கல்லாம் செத்துப் போய்ட்ட பின்னாடி அல்லா கிட்ட போவாங்கல்ல.. ‘

‘ஆமாம். ‘

‘அப்ப அவங்கள்ல பெரிய பணக்காரங்கள எல்லாம் அல்லா நட்சத்திரமா ஆக்கிருவாராம்.. ‘

‘அப்புடியா ?.. ‘

‘ஆமாம். அதோ அந்த நட்சத்திரம் எல்லாத்தையும் விட பெரிசா இருக்குல்ல. ‘

‘ஆமாம். ‘

‘அதுதான் ரொம்பப் பணக்காரரா இருந்தவரு. அத வுட கொஞ்சம் சின்னதா ஒரு நட்சத்திரம் இருக்குல்ல. ‘

‘ஆமாம். ‘

‘அவரு கொஞ்சம் கம்மி பணக்காரரு. ‘

என் மனதுக்குள் கேள்வி எழுந்தது.

‘மிட்டாதார் நட்சத்திரமாவாரா ?… ‘

சில நாட்களில் தேன்கனிக்கோட்டை உரூஸ் சந்தனக்கூடு விழா வந்தது. பெரியவர்கள் தாரை தப்பட்டை முழங்க புலி வேஷம் கட்டி ஆடினார்கள். சிலம்பம், பந்தம் சுற்றுதல், சுருள் கத்தி சுற்றுதல் என உற்சாகமாகக் கண்டு களிக்கும்படி இருந்தது. சூஃபிகள் தப்படித்துப் பாடிவந்தார்கள். பெரியவர்களின் பெரிய சந்தனக் கூடு யானையில் செல்ல, அதனைப் பின்தொடர்ந்து இளையவர்களின் சிறிய சந்தனக் கூடு குதிரையில் வந்தது.அந்த ஒரு வாரமும் நான் அன்வரிடம் சத்தமாக விசிலடிக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் ராஜேஸ்வரி கொட்டாயில் முன்பக்கத்துத் தரை டிக்கட்டில் மண்ணை கும்பாரமாகக் குவித்து அமர்ந்துகொண்டு சினிமாப் படத்தின் நடுவே விசிலடிக்க,

பின்பக்கத்து கூடைச்சேர் டிக்கெட்டிலிருந்து நான்கைந்துபேர் கத்தினார்கள்.

‘டேய் யார்ரா அவன் பிகிலடிக்கறது ?.. ‘

பயந்து மூச்சுக்காட்டாமல் ஒளிந்துகொண்டாலும் மனதுக்குள் பெருமையாக இருந்தது.

அன்று தெருவே பரபரப்பாக இருந்தது. எல்லோரும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். என் வீட்டுப் பக்கம் வந்த அப்சரைப் பார்த்துக் கேட்டேன்.

‘க்யா ரே ?… ‘

‘ரவி நம்ம மிட்டாதார் மகன் இருந்தாரில்லே ?.. ‘

‘ஆமா. ‘

‘அவருக்கு ஆகஸ்லண்ட் ஆயி சத்திபோய்ட்டாராம் ?! ‘

அவர் வாழும் சந்தின் முனை வரை சென்று பார்த்தேன். அவருடைய நீண்ட கதறல் ஒலி கேட்டது. அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. அது இதுநாள் வரை அவர் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளின் பீறிடலாக இருந்தது.

‘அல்லா, என்னைக் கொன்னிருக்கக் கூடாதா ?… ‘

வரலாற்றுப் பாடத்தில் படித்த முகலாய மன்னருடைய நினைவு வந்தது. சாகக்கிடந்த தன் மகனைக் காப்பாற்ற உண்ணாமல் உறங்காமல் மூன்று நாள் தொடர்ந்து தொழுது தன் மகனை காப்பாற்றி தான் உயிர்விட்ட முதிய மன்னனின் கதை.

பிறகு, மீண்டும் மேட்டுத்தெருவுக்கே குடிபெயர்ந்துவிட்டோம். நான் மேல் படிப்புக்காகப் பட்டணம் நோக்கிப் போய்விட விடுமுறைகளில் மட்டுமே ஊருக்கு வருவது வழக்கமாகிப் போனது.

ஒருநாள் கல்லூரித் தேர்வுகள் முடிந்து நன்றாக மழை பெய்து ஓய்ந்த ஒரு இரவில் பேரூந்தை விட்டு இறங்கினேன்.

‘ரவி வாடா நல்லாக்குறயா ? ‘ அன்வர் வெகு உற்சாகமாக வரவேற்றான்.

சைக்கிளின் பின் கேரியரில் கட்டிவைத்த ஆட்டுத் தோலுடன் நின்றிருந்தான்.

‘என்னடா அன்வர், தோல் வியாபாரமா ? ‘

‘அட நீ வேறபா, சந்தைக்கு போயிருந்தனா, மாமு இத தலைல கட்டிட்டாரு. அவரு ஊட்ல கொண்டுபோய் கொடுக்கணும். நான் ஒரு மளிகைக் கடை வச்சிருக்கன். ‘

பள்ளி நண்பர்கள், நெருங்கிய பலர் மற்றும் மலரும் நினைவுகள் அனைத்தையும் நிதானமாகத் துவைத்துக் காயப் போட்டபின்

கடைசியாகக் கேட்டேன்.

‘மிட்டாதார் எப்படியிருக்காரு ?.. ‘

‘உனுக்கு தெரியாதா ? அட.. நீதான் ஊருலயே இருக்கறதில்லையே. அவரு இறந்துபோய் ரொம்பநாள் ஆச்சிபா. சரி நான் வரம்பா. ரொம்ப நேரம் ஆயிடுச்சி. நெறய வேல இருக்குது. ‘

ஈரமான சாலையில் நடந்து, மக்களோடு கலக்கப் பிடிக்காமல் இடதுபுற கொடித்தடத்தில் தனியாக நடந்தேன். நடந்தபடியே மேலே பார்த்தபோது மழை விட்ட வானத்தில், அடையாக அப்பியிருந்த கருப்பு இருளில், தோன்றியிருந்த ஏராளமான நட்சத்திரத் துளைகளின் வழியே வானம் என்னை வெறித்துக் கொண்டிருந்தது. என்னுள் வெகு தன்னியல்பாய் மீண்டும் அந்த கேள்வி எழும்பியது.

‘மிட்டாதார் நட்சத்திரமாயிருப்பாரா ?… ‘

ranganath73@yahoo.co.uk

Series Navigation

author

காசிகணேசன் ரங்கநாதன்

காசிகணேசன் ரங்கநாதன்

Similar Posts