மாய மான்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

தி.ஸ்ரீனிவாசராஜ கோபாலன்


சாரங்கபாணியைப் பற்றி நாலு வார்த்தையாவது இங்கு சொல்லியாக வேண்டும். சிறு வயது முதற்கொண்டே அவரது செய்கைகள், சேட்டைகள் மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டலாயின. அத்தோடு நின்று விட்டிருந்தால் தான் பரவாயில்லையே. அவரை தனிமையில் தள்ளி விட்டது தான் பரிதாபம், கொடுமை எல்லாமே. எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அது எத்தனை அல்பமாக இருந்தாலும் சரி, மேம்போக்காகப் பார்த்து விட்டு விட மாட்டார். குலம் கோத்திரம் பார்க்கத் தொடங்கி விடுவார். கங்கையின் உற்பத்தி ஸ்தானம் கங்கோத்திரி என்று படித்திருந்தாலோ, வாய் வார்த்தையாகக் கேட்டிருந்தாலோ போதாதா ? மூலஸ்தானத்தையே சென்றடைந்து, கண்டறிந்து கொண்டு விட வேண்டுமென்கிற தாகம் அவருடையது என்றால் அவரைப் பற்றி என்னவென்று சொல்வது ? இப்படியாக காலப்போக்கில் சாரங்கபாணியும் வளர்ந்து ஆளாகி விட்டார்.

***

உடல் நலம் குன்றியிருந்த தன் சகோதரியைப் பார்த்து வர டெல்லிக்குச் செல்ல வேண்டி வந்தது அவருக்கு ஒரு சமயம். ஆறுதலுக்காக மட்டும் என்றில்லாமல் பாச உணர்வு காரணமாகவும் ஒரு வாரம் வரை தங்கியிருந்தார். தங்களுக்குள் கிளர்ந்தெழுந்த, தங்களிடையே பரிமாறிக்கொண்ட பால்ய கால நினைவுகள் எத்தனை எத்தனையோ. வார்த்தைகளில் வடிக்க முடியாத உணர்வோவியங்கள் அவை. வாழ்க்கையின் இறுக்கம் தளர்ந்து மனசு லேசாகிப் போனது போன்ற சுகானுபவம் அது. சுலபத்தில் கிடைக்காத வரப்பிரசாதம். மூளைக்கு எந்தவொரு வேலையும் கொடுக்காமல், பேச்சே மூச்சாக நிம்மதியாக இருந்தார் சாரங்கபாணி. எதற்கும் ஒரு வரைமுறை உண்டல்லவா ?

‘அப்போ, நான் வரட்டுமா ? ‘ விடைபெற்றுக் கொண்டிருந்தார் ஒரு நாள்.

‘அப்படி அவசரமா என்ன ? கொஞ்ச நாள் இருந்து விட்டுப் போகலாமே ? அம்மாவிற்கும் தெம்பாயிருக்கும். எங்களுக்கும் திருப்தியாயிருக்கும். ‘ உறவுமுறை சொல்லி தலைக்குத் தலை கேட்டுக் கொள்ளலாயினர்.

வெறும் உபச்சார வார்த்தையில்லை அது என்பது அவரவர் முகங்களில் தெளிவாகத் துலங்கியது.

‘திரும்ப வரத் தானே போறேன். மே, ஜூன் வாக்கில் வந்தால் போச்சு. ‘

வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர் அத்தனை பேரும்.

***

ஊர் வந்து சேர்ந்தாயிற்று. மனமோ பசுமையில் புல் மேய்ந்து கொண்டிருந்தது. இஷ்டம் போல் கொஞ்ச நேரம் அதன் போக்கில் விட்டுப் பார்த்தார் சாரங்கபாணி. தறி கெட்டுப் போய் விடக்கூடாதே என்கிற அச்ச உணர்வு தலை தூக்கத் தொடங்கவே, குதிரையை லாயத்தில் கட்டிவிட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தார். அத்தனை சுலபத்தில் ஆகிற காரியமா அது ? அந்த நேரம் பார்த்துத் தான் புதிதாக ஒரு பிரச்சினை முளைத்தது. கண் கட்டு வித்தையா, மாயாஜால மயக்கமா என்று அனுமானிக்க முடியாத படி சாரங்கபாணியை மிரள வைத்தது அந்த நிகழ்வு.

***

சுற்றிச் சுழன்று, வளைந்து, நெளிந்து, நகர்ந்து, ஊர்ந்து, படிப்படியாக வேகம் கூடப்பெற்று நாற்திசையும் பாய்ந்து, பறந்து, அந்தரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது அவர் கண்ணெதிரே தோற்றமளித்த அந்தக் கருவட்டப்புள்ளி. வேகத்தை வைத்து சொல்வதானால் அது ஒரு கருவண்டு. உருவத்தை வைத்து எடை போடுவதானால் அது ஒரு கருவட்டம். ஆரம்பத்தில் இதைக் கண்டும் காணாமலும் தான் இருந்து பார்த்தார் சாரங்கபாணி. ஆனால் நெடுநாள் அப்படி பராமுகமாக இருக்க இயலவில்லை அவரால். இதன் போக்கை அலசி, ஆராய்ந்து பார்த்து விட வேண்டும் என்கிற எண்ணம் துளிர்த்தது அவரிடம். பிறவிக் குணமாயிற்றே ?

தொடக்கத்தில் கடுகத்தனை பரிமாணம் தானிருந்தது அந்தப் புள்ளி. போகப்போக ஆட்டமடங்கி, காற்றில் உதிர்ந்து, மண்ணில் புதைந்து விடும் அது என்று தான் அவர் எண்ணியிருந்தார். அது தான் நடக்கவில்லை. மாறாக அதன் உருவம் சந்தனப்பொட்டு அளவுக்கு வளரலானது. இதென்ன மாயம் என்று அவர் மதி மயங்கி நிற்கையிலேயே அதன் வேகமும் தீவிரமடையலாயிற்று. எங்கிருந்து இதன் உதயம் ? எங்கு இதன் அஸ்தமனம் ? இரண்டுவிதமான ஐயப்பாடுகள் அவர் மனத்தில் எழுந்தன. கருவட்டம் விச்வரூபமெடுத்து தன்னை பாதாளத்தில் அழுத்தி விடுமோ என்ற பீதி ஒருபுறம், அஸ்தமனம் என்று ஒன்று இல்லாமலே போய் விட்டால் என்ன செய்வது என்ற கலக்கம் மறுபுறம். பிரமை பிடித்து ஆட்டிப் படைத்தது அவரை.

***

ஓரோர் சமயம் ஆடியசைந்து சிங்காரத்தேர் போல் பவனி வருகிறது. சில சமயம் சிம்மத்தின் சீற்றத்துடன் சாடி வருகிறது. இதன் தோற்றத்தின் இரகசியமென்ன ? பிறப்பின் லட்சியமென்ன ? என்னை ஏன் இப்படி ஆட்டிப் படைக்கிறது ? கையில் பிடித்து கசக்கி எறிந்து விடலாமென்றால் பிடியில் சிக்க மாட்டேனென்கிறது. கண்ணாமூச்சி காட்டுகிறது. விண்ணில் நின்று கெக்கொலி கொட்டி நகைக்கிறது. இதென்ன திருமாலின் திருவிளையாடலா ? அசுரமாயையா ? சித்து விளையாட்டா ? இல்லை மனப் பிராந்தியா ? எதுவும் புரியாத நிலையில் செய்வதறியாது செயலற்று நிற்கிறார் சாரங்கபாணி.

சூரியன் அஸ்தமிக்கிறான். இரவும் நெருங்குகிறது. எல்லோரையும் போல அந்த மாயக் கருவட்டமும் ஓய்வெடுத்துக் கொள்கிறது போலும். புதுப்பொலிவும், புதுப் பலமும் பெற்று விடிகாலைத் தோன்றி கொட்டமடிக்கப் போகிறது. பேயாட்டம் போடப்போகிறது. என் செய்வேன் இறைவா ?

குழப்பத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மயக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். நாட்களைக் கடத்திக் கொண்டு போவதில் அர்த்தமில்லை. சாரங்கபாணி சங்கல்பித்துக் கொண்டார் அன்று. எப்படி என்று தான் புரியவில்லை. நண்பர்களென்று சிலர் இருக்கத்தான் செய்தார்கள். சரி. ஆனால் நண்பர்களெல்லாருமே ஆப்தர்களாகி விட முடியாதே. தனது நிலையை சொல்லப்போக ‘எப்போதுமே நீ இப்படித்தான். தன்னையும் குழப்பிக் கொண்டு எதிராளியையும் குழப்புகிறவனாயிற்றே நீ. ‘ என்று எகத்தாளமாகக் கூறி விட்டால் மிஞ்சப் போவது அசட்டுப் பட்டமொன்று தான். மனோதத்துவ நிபுணரைப் பார்க்கலாமென்றாலோ, உருப்படியான பதில் ஏதாவது கிடைக்கவாப் போகிறது ? அதிலும் அவ்வளவாக நம்பிக்கையில்லை அவருக்கு, அருள் வாக்கு என்று ஏதேதோ சொல்லிக் கொள்கிறார்களே இப்போதெல்லாம். அணுகிப் பார்க்கலாமா ? சற்று யோசித்துப் பார்த்து விட்டு ‘ஊ ?மே¢ ‘ என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டார் சாரங்கபாணி.

இனி….

***

அண்ணலே, அன்றொருநாள் பொன்மானாய் தோன்றி, காடு மேடெல்லாம் உன்னை இழுக்கடித்த மாயாவியை, கணையன்றினால் உயிர் மாய்த்தாய். அல்லும், பகலும், அனைவரதமும் இன்று என்னை வாட்டி வதைக்கும் பைசாசத்தை கருத்திலிருந்து சிதைத்து விடு. கண்ணிலிருந்து அகற்றி விடு. ஆழ்கடலில் ஆழ்த்தி விடு.

***

lathasekaran@yahoo.co.in

Series Navigation