மானுடத்தைக் கவிபாடி…

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

அமர்நாத்சென்னையின் அண்ணா பன்னாட்டுப் புறப்பாட்டில் நள்ளிரவை உச்சி வெயிலாக மாற்றும் விளக்கொளி. டிக்கெட்டைக் காட்டி விமானத்தில் இடம் பிடித்து, பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி, பாதுகாப்புச் சோதனையில் நீண்டநேரம் நிற்கிற சோதனையையும் கடந்தபிறகு, பிரயாணிகள் காத்திருக்குமிடத்தில் சரவணப்ரியாவும், சாமியும் நிம்மதியாக உட்கார்ந்தார்கள். அதற்காகவே காத்திருந்துபோல் இரவுக்கால அட்வில் மாத்திரையைச் சாப்பிட்ட சாமி அவள் தோளில் சாய்ந்து தூங்கிவிட்டான். போனால் போகிறது, அவனுக்குத்தான் இரண்டு நாட்களாக இருமலும் ஜூரமுமாக உடல் சரியில்லை. அவள் இன்னும் ஒருமணி விழித்திருக்க வேண்டும். அவளும் தூங்கிவிட்டால் யார் எழுப்புவது? பொழுதைக் கழிக்க புத்தகம் எதுவும் எடுத்துவரவில்லை. பக்கத்திலேயே ஒரு புத்தகக்கடை. கண்ணாடி ஜன்னல் வழியாகத் தெரிந்த புத்தகங்களின் தலைப்புகளைப் படித்தாள். ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ ‘வண்ணத்துப்பூச்சி…’ தேரிழுக்கும் சத்தத்துடன் ஒரு பெரிய பெட்டியைத் தள்ளிவந்து முன்னால் நிறுத்திவிட்டு எதிரில் ஒருத்தி உட்கார்ந்தாள். குள்ளம்தான், ஆனால் குண்டு என்று சொல்ல முடியாது. ஜரிகை இல்லாத சாதாரண புடவை. பாதியில் குவிமையம் வேறுபட்ட மூக்குக் கண்ணாடி வயதை ஐம்பதுக்குமேல் தள்ளியது. வகிடில்லாமல் வாரிய கூந்தலில் வெள்ளை ஓடியது. உரிமையோடு அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.
சரவணப்ரியாவுக்கும் தெரிந்த முகமாக இருந்தது. பதில் புன்னகை காட்டினாள்.
“எப்படி இங்கே?” என்று கேட்டாள் எதிரில் இருந்தவள்.
பேசுவதற்கு ஒருத்தி கிடைத்தாள் என்கிற திருப்தியில் சரவணப்ரியா, “நாங்க நியுவர்க் வழியா திரும்பிப்போறோம். நீங்களும் ஜெட் ஏர்வேஸில் போறீங்களோ?” என்று திருப்பிக் கேட்டாள்.
“ஆமாம். ஆனா ஜேஎஃப்கேல ராலே-ட்யுரம் போற ப்ளேன் பிடிக்கணும்.”
ராலே-ட்யுரம் என்றதும் சரவணப்ரியாவின் நினைவில் அவளைப் பற்றிய ஒரு காட்சி மெதுவாக உருவாகத்தொடங்கியது. அதில் தெரிந்த முகத்தில் நிறைய இளமை, கண்ணாடியும் இல்லை. இன்னும் பல விவரங்கள் சேர்வதற்குமுன் அவளே, “கரோலைனா தமிழ்ச் சங்கத்திலே நீங்க அந்தாதி பத்திப்பேசினேளே” என்றாள்.
“நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே. அது பதினாலு வருஷத்துக்கு முந்தி நடந்ததாச்சே.”
“அதுக்குப் பிறகு நீங்க அங்கே பேசலையே” என்று காரணம் காட்டினாள் அவள்.
“அந்த தமிழ்ச் சங்கத்திலே நான் பேசினது அதுதான் கடைசி. அந்தாதின்னா கடைசியாத்தானே இருக்கணும்” என்று சரவணப்ரியா தன் சாமர்த்தியப் பேச்சிற்காக சிரிக்க மற்றவளும் கலந்துகொண்டாள். “நாங்க அப்புறம் நாஷ்வில் போயிட்டோம்.”
பெயர் ஞாபகம் இல்லாவிட்டாலும் சரவணப்ரியாவுக்கு அந்தக் கூட்டத்தில் தனக்குப் பிறகு அவள் பேசியது நினைவிற்கு வந்தது. அவள் எந்தப் பொருள்பற்றியும் பேசவில்லை, நிகழ்ச்சியில் அடுத்ததாக பங்குபெறும் ஒருவரை அறிமுகம் செய்துவைத்தாள், அவ்வளவுதான். ஆனால் அது மறக்கமுடியாத அறிமுகம். “தந்தையிடம் முறையாகத் தமிழ் கற்று, அமெரிக்கா வந்தும் மறக்காமல், அதை மேலும் வளர்த்துக்கொண்ட திருமதி சரவணப்ரியா சமீபத்தில் மறைந்த பேராசிரியர் ஏ கே ராமானுஜத்தின் தமிழ்ப்பணி பற்றி உரையாற்றுவார்” அல்லது “மதுரை மணி ஐயரின் சீடருக்கு சீடரான சுந்தரமையர் அவருடைய தாயார் முருகன்மேல் இயற்றிய சில கீர்த்தனைகளைப் பாடுவார்” என்கிற எளிமையான அறிமுகமில்லை. ஒரு காகிதத்தில் எழுதிவைத்து அவள் படித்தது நீண்ட உரைமாதிரியே இருந்தது.
“எத்தனை நாள் தங்கிட்டுப் போறீங்க?”
“இரண்டுவாரம், நீங்க?”
“ஒருமாசம் இருக்கணும்னுட்டுத்தான் வந்தேன். பத்து நாளிலேயே திரும்பிப் போறேன்.”
ஏனென்று அவள் உடனே சொல்லவில்லை. அவள் இராணுவ மருந்தகத்தின் தீவிரசிகிச்சைப் பிரிவில் பணிசெய்தாள் என்பது நினைவிருந்தது. அதனால் சரவணப்ரியா கேட்டாள். “ஈராக் போர்னாலே வேலைலே சீக்கிரமே வரச்சொல்லிட்டாங்களா?”
“அதெல்லாமில்லீங்க. இந்தியா ஓரேயடியா மாறிப்போயிடிச்சு” என்றாள் அசுவராரியமாக. “நீங்களும் பாத்திருப்பீகளே!”
“ஆமாம்! ஏழு வருஷம் கழிச்சு இப்பதான் வரோம். பால்காரன் முதல் பாட்டிமார் வரை எல்லார் கையிலியும் இப்போ ஒரு செல்Nஃபான். நாலுபேருக்குக் கேக்கறமாதிரி கத்தித்தான் பேசறாங்க.”
“அது எப்படியோ போகுது, மத்ததெல்லாம் என்னால பொறுக்கமுடியலை” என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள் மற்றவள்.
“ஆண்டவனிடம் ஆழ்ந்த விசுவாசமும், ஏழைகளிடம் எல்லையற்ற கருணையும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் திரு தேவதாஸ். சிறுவயதில் தந்தைக்கு உபகாரமாக பலமுறை ஜெபம் செய்திருக்கிறார். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே குடிசைப்பகுதிகளுக்குச் சென்று அங்கு வாழும் மக்களுக்குச் சேவை செய்தார். மருத்துவக்கல்லூரியில் அவருக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்கள் எல்லோருமே அவருடைய புத்திகூர்மையில் மயங்கிப்போனார்கள். ஒருகாலத்தில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கப்போகிறார் என்று அந்த கனவான்கள் அபிப்ராயப்பட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. நுங்கம்பாக்கத்திலே இருக்கும் பெரிய ஆஸ்பித்திரி அவர் பெருமையைப் பறைசாற்றுகிறது. ஜனங்களுக்குப் பணிசெய்வதோடு நீ ஆராய்ச்சியும் மேற்கொள்ள வேண்டுமென்று ஆண்டவன் கட்டளை இட்டதைச் சிரமேற்கொண்டு நார்த் கரோலைனா வந்தார் திரு தேவதாஸ். இங்கே வந்தபிறகு மருத்துவத்தில் கணி இயந்திரங்களைப் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சி செய்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பலருக்கு உபகாரம் செய்த புரவலர் மட்டுமல்ல, அவர் ஒரு புலவரும்கூட. அவருடைய பாண்டித்தியத்தைப் பாராட்டாதவர்களே இல்லை.” ஒரு இடைவெளி தந்து எல்லோரையும் ஒருசுற்று பார்த்துவிட்டுத் தொடர்ந்து படித்தாள். “தேவனின் வருகையைக் காணமுடியாதாம். இந்த டாக்டர் தேவதாஸின் வருகை தமிழ் நாட்டில் பலருக்குத் தெரியும், எங்கள் ஊரில் நிறைய பேருக்குத் தெரிந்திருக்கிறது, உங்களுக்கும் இப்போது தெரியப்போகிறது” என்று முடித்தாள். அவள் நிமிர்ந்தபோது பலத்த கைதட்டல்.
சங்கத்தின் விதிமுறைகளில் வசைபாடக்கூடாது என்று ஒரு விதி இருக்கலாம், ‘ஆனால் புகழ்வதற்கு ஒரு வரம்பு இல்லையா?’ என்று சரவணப்ரியாவுக்குத் தோன்றியது.
இவ்வளவும் சொன்னபிறகு தேவதாஸ் எழுந்து வந்தார். சராசரிக்கும் அதிகமான உயரம். நாற்பதுக்கு மேலிருந்தாலும் கண்ணாடி, நரை, தொந்தி எதுவுமில்லை. வெள்ளை குர்த்தாவுக்குக் கீழே அதே நிறத்தில் தழையத்தழைய ஒரு பைஜாமா. செருப்பில் மாட்டிக்கொள்ளாமல் நடந்தது ஆச்சரியம்தான். ஐந்து நிமிடங்கள் ஒலியியக்கத்தில் எதைஎதையோ பிரித்து இணைத்தார். இருந்தாற்போல் ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ என்ற பாடலின் பின்னணிஇசை மட்டும் வந்து பட்டென்று அறுந்துவிட்டது. மறுபடி திருகல். இசை தொடர்ந்தது. அவரே அதை நிறுத்தினார். பிறகு இசை முதலிலிருந்து வந்தது. குரல் வருமிடத்தில் மைக்கைப் பிடித்து நடந்துகொண்டே அவர் பாடினார். மேலோங்கியிருந்த பின்னணி சங்கீதத்தில் குரலின் தரம் தெரியவில்லை. இந்த வித்தையை இந்தக்காலத்தில் பத்துவயதுப் பையனோ, பெண்ணோ கூடச் செய்வார்கள். அப்போது எல்லோரும் வாயைப்பிளந்து பார்த்தார்கள். அந்தப் பாடலுக்குப் பிறகு ‘சித்திரம் பேசுதடி’ என்ற பழங்காலப் பாடல், அதாவது ‘காதலிக்க நேரமில்லை’க்கும் முந்தைய பாடல். முடிந்தபிறகு எல்லா ஒயர்களும் பிரிக்கப்பட்டன. இதற்காகவா இத்தனை ஆரவாரமான அறிமுகம். புலவர் என்று அறிமுகத்தில் புகழ்ந்ததற்கு அவருடைய கவிதைகளில் ஒன்றிரண்டைப் படித்திருக்கலாம்.
அடுத்த நிகழ்ச்சி பத்துவயதுக்குக் குறைவான பெண்களின் நடனம். பாவாடை சட்டையில் தடுமாறிய அவர்களை ஒன்றுதிரட்டியபோது, சரவணப்ரியாவுக்குப் பின்வரிசையில் ஓர் உரையாடல். வாஞ்சிநாதனின் குரல் தனியாகக் கேட்டது. அது தேசபக்தரின் நினைவாக அவர் பெற்றோரிட்ட திருநாமம். ஆனால் பொதுவாக அவர் அறியப்படுவது வம்பநாதன் என்ற பெயரில்.
“Nஃபயட்வில்தானே நீங்களும். அம்மா என்ன டாக்டரை இப்படி புகழ்ந்து தள்ளறாங்க?”
“தப்பா ஒண்ணும் நினைக்காதீங்க” என்றார் அடுத்தவர். “அந்த அம்மா ஒரு நர்ஸ். ஏழைக்குடும்பம், செங்கல்பட்டு பக்கத்திலே ஒரு சின்ன இடத்திலே கஷ்டப்பட்டுட்டிருந்தாங்க. டாக்டர் தேவதாஸ் வெடரன்ஸ் ஹாஸ்பிடல்ல டாக்டர். நாலு வருஷம் முன்னால இந்தியா போயிருந்தப்போ அவங்கமேல பரிதாபப்பட்டு, விஏ ஹாஸ்பிடல் இன்டென்சிவ் கேர்லே வேலை வாங்கிக் கொடுத்து க்ரீன் கார்டுக்கும் ஏற்பாடு செஞ்சாராம் அவர்.”
வேறு எதையோ எதிர்பார்த்த வம்பநாதனுக்கு ஏமாற்றம்தான். இருந்தாலும், “அக்கா அண்ணன்னு யாரும் சிடிசனா இல்லாட்டா, கம்பெனியோ, ப்ரொஃபசரோ யாராவது ஸ்பான்சர் பண்ணித்தான் நாம எல்லாருமே இம்மிக்ரேஷன் வாங்கியிருக்கோம். அதென்ன உயிர்ப்பிச்சை கொடுக்கறமாதிரியா, இல்லை சொர்க்கத்திலே ஏத்திவிடறமாதிரியா? சாதாரணமா நடக்கறதுதானே! அதுக்கா இவ்வளவு புகழணும்?” என்றார். வம்புபேசும் வாயானாலும் அது சொன்னது வாய்மையே என்று சரவணப்ரியா நினைத்தாள்.
பழைய நினைவுகளால் உரையாடல் எங்கே நிற்கிறது என்று சரவணப்ரியாவுக்கு மறந்துவிட்டது. “ஏழெட்டு வருஷத்திலே இங்கே நிறைய மாற்றம்” என்று சொல்லிவைத்தாள்.
“அதையேன் கேக்கறேள்? நானும் 9-11க்கு முன்னால் இந்தியா வந்ததுதான். அப்போவெல்லாம் நான் புடவை வாங்கிட்டு வந்தா எனக்கு உனக்குன்னு சண்டை வரும். இப்போ யாரும் சீந்தலை. எல்லாத்தையும் வேலைக்காரிக்கு தானம் செஞ்சேன். டாலர் நோட்டை நீட்டினால் கும்பிடு போட்டு அம்பது ரூபாய்க்கு மேல தருவான். இப்போ நாப்பது ரூபா குடுக்கறதுக்கு அங்கேபோ இங்கேபோன்னு விரட்டறான்.”
கைப்பையிலிருந்து எடுத்த டிஜிடல் காமராவைக் காட்டினாள். “ஆறு மெக் காமராங்க இது. சும்மாக குடுத்தாலும் யாருக்கும் வேண்டாமாம். பெரிசா கனமா இருக்குதாம். கொணாந்ததை நானே திருப்பி எடுத்துட்டுப் போறேன்.
“ஒவ்வொருவாட்டி போகும்போதும் எங்க பாதிரியார் கோவிலுக்கு நன்கொடை வாங்கிப்பாரு. அப்புறம் அவரோட பையங்களுக்கு அறிவுரை சொல்லிட்டுப் போன்னு கேப்பாரு. ‘படிக்கவே மாட்டேங்கறாங்க. எல்லா வகுப்பிலேயும் முதலா வந்த உன்னைத்தான் உதாரணமா காட்டுவேன். படிக்காம இவங்க எப்படி உருப்படப் போறாங்கன்னு தெரியலை. எதிர்காலத்திலே வேலை இல்லாம திண்டாடறப்போ நீ குடுக்கிற டாலரை வச்சுத்தான் பொழப்பு நடத்தப் போறாங்க’ன்னு சொல்வார். இப்ப என்னன்னா ஒருத்தன் ஆஸ்திரேலியாவிலே இருக்கானாம். இன்னொருத்தன் எதியோப்பியாவாம். அவங்க அனுப்பற பணத்தை வச்சு பெரிய மாடி வீடு கட்டிட்டாரு, ரெண்டுவாட்டி வெளிநாடு போயிட்டு வந்துட்டாரு. நேரிலே போய்ப் பாத்தப்போ நான் யாரு, எம்பேரு விஜயான்னுகூட அவருக்கு மறந்து போயிரிச்சு.”
“உதவி தேவைப்படற வரைக்கும்தான் மனிதர்களுக்கு நம்மை ஞாபகம் இருக்கும், விஜயா!” என்ற பேருண்மையை மொழிந்தாள் சரவணப்ரியா.
“இந்திராணின்னு ஒருத்திங்க, என் கீழே இருந்து என்கிட்டேயே வேலை கத்துக்கிட்டவ. இப்போ மெர்குரிலே ஹெட் நர்ஸாம். காரென்ன, பெரிய ஃப்ளாட் என்ன, காரோட்டறதுக்கு டிரைவர் என்ன” என்று இருகைகளையும் அகல விரித்தாள் விஜயா. “என்கிட்ட இருக்கிறது ஒரு பழைய ஹன்டே, அதையும் நானே ஓட்டிட்டிருக்கேன். பதினெட்டு வருஷ சர்வீஸ். ப்ரமோஷன் வரச்சே கணக்கு தெரியமாட்டேங்குது, வேற யாருக்கோ தள்ளிடறாங்க. விஜயா ஆரோக்கியசாமிங்கற பேரை விக்டோரியா ஆன்டர்சன்னு மாத்திகிட்டாத்தான் கவனிப்பாங்க போலிருக்கு.”
“என்னங்க செய்யறது? நானும் பத்து வருஷமா அதே பொசிஷன்னலதான் இருக்கேன்” என்றாள் சரவணப்ரியா ஆறுதல் தர.
“நாம பத்து டாலர் பீட்ஸா வாங்க கூபான் கொடுக்கலாமான்னு யோசிக்கிறோம். அதையே என் அத்தை வீட்டிலே கண்ணை மூடிகிட்டு நானூறு ரூபாயை தூக்கிக்கொடுத்து வாங்கறாங்க.”
சரவணப்ரியாவும் எதாவது சொல்லியாக வேண்டும். “தங்க மாளிகை போனா என்ன கூட்டம்! கிராம் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே போயிடுத்தேன்னு யாரும் கவலைப்பட்டதா தெரியலை. நான்தான் இருபத்தஞ்சு டாலரான்னு யோசனை பண்ணறேன்.”
இந்த பரஸ்பர அங்கலாய்ப்புகளுக்கு ஒரு முடிவுகட்ட தீர்மானித்து ஒலியியக்கத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் தயாரென்று அறிவித்தார்கள்.
“பெட்டியைப் பாத்துக்கங்க” என்று விஜயா ஒப்பனை அறைக்குச் சென்று வந்தாள். தங்களை அழைக்கும்வரை சாமி தூங்கட்டுமென்று சரவணப்ரியா எழுந்திருக்கவில்லை.
முதல் வகுப்புப் பிரயாணிகளும், குழந்தையோடு வந்தவர்களும் விமானத்திற்குள் சென்றபிறகு கடைசி பத்து வரிசைகளுக்கு அழைப்பு வந்தது.
“நான் சொன்ன தேதிக்கு முன்னாடியே போறதாலே பின்னாலதான் இடம் குடுத்தாங்க” என்று விஜயா எழுந்தாள். “உங்களைப் பேசி போரடிச்சிட்டேன்.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. ஒருமணி போனதே தெரியலை.”
அவள் சக்கரம் வைத்த அந்தப்பெரிய பெட்டியைத் தள்ள முற்பட்டாள்.
ப்ரஸல்ஸில் விமானம் மாறும்போது அவளை மறுபடி பார்க்க முடியும் என்பது நிச்சயமில்லை. இப்போதே கேட்டுவிடுவதுதான் நல்லது.
“டாக்டர் தாஸ் எப்படி இருக்கார்?”
“யாரு?” என்று விஜயா நின்று சரவணப்ரியா பக்கம் திரும்பினாள். இரு குவிமையம் கொண்ட கண்ணாடிக்குப் பின்னால் கேள்வி புரியாத ஒருபார்வை.
“டாக்டர் தேவதாஸ். வெடரன்ஸ் ஹாஸ்பிடல்லே இருந்தாரே.”
“ஓ! அந்த மனுஷனா? பத்து வருசம் முந்தி ஷார்லட் போயிட்டதா கேள்வி. இப்ப அங்கதான் இருக்காரா, இல்லை வேற எடம் போயிட்டாரான்னுகூட தெரியாதே.”


(amarnakal@yahoo.com)

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்