மாநகரக் கவிதை

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

புதியமாதவி


எப்போது ஏறலாம் ?
எப்போது வேண்டுமானாலும் ஏறலாம்.
எப்போதும் இருக்கும்
எங்கள் மாநகர் வண்டியில்
மனிதர்களின் மந்தைக்கூட்டம்.
ஏறுவது மட்டும்தான் என்வசம்
இறக்கிவிடும் கூட்டத்துடன் கூட்டமாய்
என் பயணம்.
அடிக்கடி இறங்கும் இடம் கூட
என்னால் தீர்மானிக்கப்படுவதில்லை.
சரியான பக்கத்தில் நின்றாலும்
சரியான நேரத்தில் சென்றாலும்
சரியான இடத்தில் இறங்குவதற்கு
உத்திரவாதமில்லை.

கஞ்சியில் உலர்ந்து
கடை இஸ்திரியில்
காஸ்ட்லியாக நடக்கும் காட்டன்கால்கள்
கசங்கி நொறுங்கி
மரக்கால்களூடன் நொண்டியடிக்கும்
கம்பீரநடையில்
கண்துஞ்சாமல்
வெற்றியை நோக்கி வீறுநடைபோடுகிறது
என் மாநகரத்தின் மனித வெளிச்சங்கள்.

லிப்ஸ்டிக்கில் சிவந்த உதடுகள்
எப்போதும் தூங்கிவழியும் சன்னல் இருக்கைகள்
திறந்தவெளி முதுகுகளுடன்
போட்டிப்போடும் செழிப்பான மார்புவெளிகள்
எப்போதும் தாதர் ஸ்டேஷனில் இறங்கக் காத்திருக்கும்
காய்கறிக்கூடைகள்
ஏறி இறங்கும் பூக்காரிகள்
மார்புச்சீலை மறைக்காத
பால்குடிக்குழந்தைகள்
போகிற வழியில் உட்கார்ந்திருக்கும்
மூட்டை முடிச்சுகள்
மீன்கூடையின் கவிச்சல்
வாடாபாவுடன் கலந்து
மல்லிகைப்பூவில் உரசி
குளித்தவுடன் தடவிக்கொண்ட
வாசனைத்தைலத்துடன்
வியர்வையாய்
மெல்லிய உள்ளாடையை ஈரப்படுத்தும்

சேச்சியின் தோள்களுக்கும்
மவுசியின் தொடைகளுக்கும் நடுவில்
எப்போதாவது கிடைக்கும்
எனக்கும் இருக்கை.
அந்த இருக்கையில்
எப்படியும் எழுதிவிட வேண்டும்
இறங்கும் இடம் வருவதற்குள்
எனக்கான
என் கவிதையின் இருத்தலை.

…. புதியமாதவி, மும்பை
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation