மாத்தா ஹரி – அத்தியாயம் 6

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா“ஆறிலும் சாவு நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டுமன்று பெண்ணுக்கும் அப்படியே. ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழவிரும்புதல் மனித உயிர்களின் கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை” பாரதியின் கட்டுரை ஒன்றில் படித்தது.

தேவசகாயத்துக்கான எனது பதில் இன்பத்துகான திறவுகோலா? எனது மனச் சிறையிலிருந்து விடுதலை பெற்றாகவேண்டுமா? முடியுமா? பவானி தெளிவில்லாமல் இருந்தாள். எதிரே நிறைய பாதைகள், முதல் பாதையில் தேவசகாயம் என எழுதப்பட்டு அம்புக்குறி இடப்பட்டிருந்தது. கண்ணுக்கெட்டியவரை பாதை செப்பனிடப்பட்டு இருக்கிறது. எத்தனை கல் போகவேண்டும் என்ற குறிப்புகள் ஏதுமில்லை. தெளிந்த வானமும், வீசும் காற்றும் சங்கடமற்ற பயணத்தின் குறியீடுகளாகத் தெரிகின்றன. இத்தனை காலாமாய் கண்டிராத இனிமைகள் இதயச் சாளரத்தில் விழுகின்றன, உடல் விம்முகிறது. சாளரத்தைத்திறந்து சாரலில் நனையென்று உடல் சொல்கிறது. திரும்பிப் பார்க்கத் துணிச்சல் இல்லை. அறையில் மிச்சமிருக்கும் இருட்டில் நிற்கும் மனிதன் எப்போதும்போல இவளைப் பயமுறுத்துகிறான். இவள் அமைதியாக இருந்தால் வளர்ந்து நிற்கவும், கண்சிவந்தால் கால்களுக்கு அடியில் சுருங்கிப்போகவும் தெரிந்த நிழல் அவன். தனது அறைக்குத் திரும்பி அழவேண்டும் போலிருக்கிறது. இன்பம் துன்பம் இரண்டையும் அழுகையாய் வெளிப்படுத்தியே பழகிக் கொண்டாள். தனித்து இருக்கிறபொழுது அழுகை சுலபமாக வருகிறது, சுகமாக இருக்கிறது. பிறரிடம் பகிர்ந்துகொள்தைவிட இது பரவாயில்லை. பிறர் யார்? அவரது புரிந்து கொள்ளும் தன்மை என்ன, அவரிடம் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லகூடாது? அதற்கான சொற்கள் எவை, அவரிடம் இருந்து பதிலூட்டாகப் பெறப்படும் சொற்களின் பொருண்மை என்ன? அவற்றில் இருப்பது பரிவா? ஆறுதலா? கிண்டலா? மகிழ்ச்சியா? என்ற தேடுதல்கள் இல்லை. அழுவது சுலபம், பின் விளைவுகள் அற்ற செயல். கண்களும் மனமும் தனிமையும் ஒத்துழைக்கவேண்டும், அழமுடியும். அவள் வாழ்க்கை நகர்வுகளில் அழுகை மட்டுமே துணையாய் இருந்திருக்கிறது, வரமாய் கிடைத்திருக்கிறது. ‘வரம்’ சரியான சொல்லா? மீண்டும் கேள்வி. ‘வரம்’ புராணங்களிலிருந்து இரவல் பெற்ற வார்த்தை, சோம்பேறிகளுக்குச் சுலபமாய் உதவும் மூன்றெழுத்து சொல். அநீதிகளுக்குத் தலை வணங்கவும், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து, முட்டாள் கணவன்மார்களுக்கு முந்தானை விரிக்கும் பெண்களுக்கு உதவும் சொல். தேவசகாயத்தின் கேள்வி, விடுதலையா? வரமா? எதில் சேர்த்தி? எதுவோ ஒன்று இந்த நேரத்தில் ஆராய்ச்சியா முக்கியம். ஆனால் அக் கேள்வி, வழக்கமான ஆண்களின் உத்தியா? அதாவது பெண்ணை உரிமை அற்றவளாகச் செய்து: தனது உடைமை தனது பொருள் என மாற்றிக்கொள்ளும் ஆண்களின் வழக்கமான தந்திரமா? நான் மீசையற்ற பாரதி, மூவலூர் இராமாமிர்தம், பிரெஞ்சுக் காரியான சிமொன் தெ பொவார். வேண்டாம் அவர்களையெல்லாம் முன்மாதிரிகளாக நினைத்துக் குழம்பிப் போகாதே. அதிகம் படித்ததும், அதிகம் விவாதித்ததும், உன்னை எங்கே நிறுத்தி இருக்கிறது?

– ‘நல்ல முடிவாகச் சொல்லுங்கள்’ தேவசகாயத்தின் குரல்.

இரண்டு நாட்களாக அவள் மனதில் ஒட்டிக்கொண்டு அரித்துக்கொண்டிருக்கும் வாக்கியம். சில நேரங்களில் அடி நாக்கில் தங்கிய மிட்டாய்போல இனிக்கவும் செய்கிறது. அதனை இவள் ஒரு முறை சொல்லிப் பார்த்தாள். அச் சொற்களை உச்சரிக்க, அவை பிடிகொடுக்காமல் இவளிடம் வழுக்கிக்கொண்டு, மீண்டும் உள் மனதிற்குத் திரும்பியபடி சிரிக்கின்றன. கடந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தோராயமாக எத்தனை முறை கேட்டிருப்பாள். எண்ணவில்லை. இவள் சந்திக்கிற மற்றவர்களுக்கும் அதுதான் பிரதான வாக்கியமாக இருக்கிறது. காலையில் தனது அலுவலகத்தில் பார்க்கவந்த பெண்ணும் தனது வழக்குப்பற்றிய பிரச்சினைகளை சொல்லி முடித்தவள், ‘ இந்த வழக்கை நீங்கதாம்மா ஏற்று நடத்தணும், உங்களை நம்பித்தான் வந்திருக்கேன். அந்த அய்யோக்கியன்கிட்ட இருந்து எனக்கு விடுதலை வாங்கிக்கொடுங்கம்மா’, என்று வழக்கமான தனது எல்லாக் கட்சிக்காரர்களையும்போலப் புலம்பியவள் இறுதியில், ‘நல்ல முடிவாகச் சொல்லுங்கள்’, என்கிறாள். கோபத்தில், என்னிடம் வராதே வேறு வக்கீலாகப் பார்த்துகொள் என்று அனுப்பி விட்டாள். எதற்காக அப்படிச் செய்தோம் என்று வருந்தினாள். இத்தனைக்கும் அவள் பவானியுடைய சீனியர், சுதா இராமலிங்கம் பரிந்துரையில், இவளைத் தேடிவந்தவள். சீனியரிடம் போனில் பேசவேண்டும். எப்படியாவது அந்தப் பெண்ணின் முகவரியைக் கேட்டுப்பெறவேண்டும். மாதத்திற்கு ஒன்றிரண்டு வழக்குகள் வருகின்றன அதையும் இப்படி… எல்லாவற்றையும் மறந்திருந்தாள். வாழ்க்கை ஜீவ நதியின் உயிர்ப்புடன் சீராகக் கடந்த சில வருடங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அது பொறுக்கவில்லை. தேவசகாயம் கல்லை எறிகிறான், ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் முறை, குவியல் குவியலாகக் கற்களைச் சேர்த்துக்கொண்டு, இவள் நிதானத்திற்கு வரும்போதெல்லாம் ‘களுக்’ என்ற சத்தம். இதயம் சலனப்படுகிறது, வேகமாய்த் துடிக்கிறது. சிவ்வென்று குருதி பாய்வித்துக் கால் விரல்களையும் சிவக்க வைக்கிறது.

அன்றைக்குப் பத்மா வீட்டில் கூடத்தில் ‘கேக்’கினை வைத்துக்கொண்டு, இவளையும் தேவசகாயத்தையும் எதிர்பார்த்து எல்லோரும் காத்திருக்கிறார்கள். பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பரோட்டா அரிஸ்டோவிலிருந்தும், கோழி குருமா ஓட்டல் ஷகீலாவிலிருந்தும் வரவழைக்கபட்டிருந்தது. மீன் வகைகள் ‘ஓட்டல் அஞ்சப்பரி’லிருந்து வந்திருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும், வெள்ளைத் தோல் கப்பித்தேனுக்கு-கேப்டனுக்கு – பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால்கை பிடித்துவிட்ட நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள், தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் காலந்தள்ளிவிட்டு, புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டிருக்கிறார். தவிர ஓய்வூதியமாகக் கிடைக்கும் யூரோ, இந்திய ரூபாயாக மாறும்பொழுது சராசரி புதுச்சேரிவாசியின் வருவாயைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்து நிற்கிறது. பத்மா ஒரேபெண். எனவே பிறந்தநாள் விழாவை ஆடம்பரமாக எடுப்பது புதிதில்லை. வெட்டப்பட இருந்த கேக் பெரியதாகத்தான் இருந்தது. தோட்டத்திலிருந்து முதல் ஆளாகப் பவானிதான் உள்ளே நுழைந்தாள். அடுத்து தேவசகாயம் உள்ளேவந்தான். எல்லோர் கண்களும் இவளையே மொய்த்தன. பவானிக்குக் கூச்சமாக இருந்தது. நிலைமையை இயல்பு நிலைக்கு மாற்ற முனைந்தவள்போல பத்மா,

– என்னடி கேக் வெட்டலாமா? என்றாள். பவானி தலையை ஆட்டினாள். அவளுக்கு இலேசாக தலைவலிப்பது போல் இருந்தது. வந்திருந்த விருந்தினர்களின் அளவுக்கதிகமான வாசனைத் தைலங்களின் உபயோகம் காரணமாக இருக்கலாம். கூடம் எங்கும் அருவருப்பூட்டும் அடர்த்தியான மணம். மெழுகுவர்த்தியை பத்மா ஊதி அணைக்க, சுற்றி இருந்தவர்கள் கை தட்டினார்கள். ‘ழொய்யேஸ் அன்னிவர்சேர்'(1) பாடினார்கள். அருகில் நின்றிருந்த, அண்டைவீட்டு மணி அய்யர் வீட்டுக் கடைக்குட்டி கத்தியை எடுத்துக்கொடுத்தாள். அவள் கவனம் கேக்கில் இருந்தது. முதல் துண்டத்தை எடுத்துக்கொண்டு பத்மா அம்மாவை தேடினாள். கும்பல் பத்மாவின் அம்மாவை முன்னால் தள்ளியது. அவள் உதட்டுச் சாயத்தினைக் கேக் எடுத்துக்கொண்டுவிடுமோ எனப் பயந்தவள்போல, கவனமாக வாயைத் திறந்தாள். பத்மா அதைப் புரிந்துகொண்டு ஊட்டினாள். பிறகு பத்மாவின் அப்பா சிங்காரத்தை எல்லோரும் தேடினார்கள். வேட்டி அவிழ்ந்து அறையொன்றில் கிடந்த அவரை பத்மாவின் மாமா அழைத்துவந்தார். அங்கிருந்தவர்களில் பலரும் ‘வாயைத் திற வாயைத் திற’ என ஒற்றைக் குரலில் சத்தமிட்டார்கள். அவர் வாய் திறப்பதாக இல்லை. அவர் வாழ்நாளில் அந்த அம்மா எதிரே வாய்திறந்து பழக்கப்பட்டவரல்ல. இப்போது மட்டும் திறவென்றால் எப்படி? பத்மாவின் அம்மா பலரும் பார்க்க அவர் வாயில் குத்தினாள். பத்மா அலுத்துக்கொண்டாள். எல்லோருக்கும் கேக் துண்டுகள் பறிமாறப்பட்டன. மணி அய்யர் வீட்டுப் பெண் அவசர அவசரமாக விழுங்கினாள். முடிந்தால் இன்னொரு முறை கேட்டுவாங்கிச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தாள். தகப்பனார் பார்த்தாரென்றால் வம்பு. கேக்கில் முட்டை கலந்திருக்கிறதென்று சொல்லி பொழுதுக்கும் வைவார். அவள் கவலை அவளுக்கு. பத்மா ஒரு தட்டில் ஒன்றுக்கு இரண்டாக கேக் துண்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு பவானியைத் தேடினாள். இவளுக்குப் புரிந்தது.
– நான் இங்கிருக்கிறேன் – அவளுக்குக் கேட்கும்படியாகக் குரலை உயர்த்திப் பவானி சொன்னாள். அவளைப் பார்த்துவிட்டு பத்மா வேகமாய் நடந்துவந்தாள்.

– என்னடி? முகம் என்னவோ மாதிரி இருக்கிறது.. தேவா ஏதாச்சும் சொன்னானா?. எனக்குத் தெரியும். இப்படி ஏதாவது செய்து •பங்ஷனைக் கெடுப்பாண்ணு எனக்கு நல்லாவே தெரியும். நான் வேண்டாமென்று சொன்னேன். கேட்கவில்லை. என்னை மன்னிச்சுடிடி. என் மேல் எந்தத் தப்புமில்லை.
– சீச்சீ நீ வேற.. உன் மேல வருத்தபட என்ன இருக்கு. எனக்கு கொஞ்சம் தனிமை வேணும். நான் கிளம்பறேன். உன்னிடத்திற் சொல்லிக்கொண்டு புறப்படணுமென்றுதான் காத்திருந்தேன்.

– இரு போகலாம். கொஞ்சநேரம் இருந்தால் எல்லாம் சரியாய் ஆயிடும். எல்லோரும் போனபிறகு இருவருமாக உட்கார்ந்து பேசலாமே. வேண்டுமென்றால் தேவா ராஸ்கலை போகச் சொல்றேன்.

– அது அதிகம். அவன் அப்படியொன்றும் தவறாக நடந்துகொள்ளவில்லை. மிகவும் பெருந்தன்மையோடுதான் அவனது பேச்சும் இருந்தது. அவனைக் குற்றஞ் சொல்ல ஒன்றுமேயில்லை. நீயாக ஏதாவது பிரச்சினையை எழுப்பவேண்டாம். எனக்குத்தான் இந்த நிலைமையில் தொடர்ந்து உன்னுடைய விழாவில் மகிழ்ச்சியோடு கலந்துகொள்ளமுடியாது போலிருக்கிறது. அது உன்னையும் பாதிக்கும் விழாவையும் பாதிக்கும். இரண்டொரு நாட்களில் மறுபடி சந்திப்போம். தனியா எனக்கொரு ட்ரீட் கொடு. இப்பொழுதுது நான் புறப்படறேன்.

அவளது பதிலுக்குக் கூடக் காத்திராமல் புறப்பட்டுவந்துவிட்டாள். தேவசகாயத்திடம் சொல்லிக் கொண்டு புறப்படலாமோ என்று நினைத்தவள், வேண்டாமே என்று தவிர்த்துவிட்டாள். ஆனால் அவன் கண்களிரண்டும் இவள் முதுகில் படிந்திருப்பதை உணரமுடிந்தது.

இரண்டு நாட்கள் கடந்திருந்தன. இவளால் முடிவுக்கு வரமுடியவில்லை. நிறைய கேள்விகளுக்கு இவளுக்குப் பதில் தெரியவில்லை. “தேவசகாயம் என்னை மன்னியுங்கள், என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு மிகவும் நன்றி, ஆனால் உங்களுக்கு ஏற்றவள் நான் இல்லை- பவானி ” என்று கதைகளிலும் சினிமாக்களிலும் வழக்கமாக வருகிற வசனத்தை எழுதி, தப்பிக்கும் எண்ணமும் அவளுக்கில்லை. நேராகவே அவனிடம் சொல்லிவிடலாம். அன்றைக்கே சொல்லி இருக்கவேண்டும். “தேவா, பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை. எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது,” என சொல்லி இருந்தால் பிரச்சினை முடிந்தது. சொன்னாயா? மனம் கேட்கிறது.

– ‘நல்ல முடிவாகச் சொல்லுங்கள்’- தேவசகாயம் கெஞ்சுவதுபோல எதிரே நிற்கிறான்.

அவனுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நமட்டுச் சிரிப்புடன் நிற்கும் அவன்? பெரிய கால்களும், நீண்டகைகளும், அகன்ற மார்பும், தேகமெங்கும் வளர்ந்து சடைசடையாய் ஒட்டிக்கிடக்கும் மயிர் கற்றைகளுமாக முகமற்ற அந்த மனிதன்… வாடா வா.. எங்கே வந்தாய் உனக்கு என்ன வேண்டும்? அரக்கன் சிரிக்கிறான். ஓடிச்சென்று சன்னலைத் திறந்தாள். அறையை சூரிய ஒளி வெள்ளமென பாய்ந்து நிரப்பியது. இரண்டாவது ஆள் இல்லை. தேவசகாயம் மட்டும் நிற்கிறான். அருகில் வா என்கிறான். கைகள் நீள்கின்றன. அவளது ஆடையற்ற உடல் வெளியில் மரவட்டைகளாக நெளியும் விரல்கள், அதன் நகக் கணுக்களில் ஒட்டிக்கிடப்பது காமமா? காதலா? எதிர்பாராத நேரமாகப் பார்த்து, சட்டென்று குனிந்து முத்தமிடுகிறான். இத்தனை முரட்டுத்தனம் கூடாது என்று சொல்ல நினைத்தாள். வார்த்தைகள் வர மறுக்கின்றன. விலகியவள், தடுமாறி விழப்போனாள். அவனது இடக்கை அவளது இடையைத் தாங்கிப்பிடித்து நிறுத்துகிறது. அவனது முகம் மீண்டும் இவள் முகத்தில் படிகிறது. அவன் செயலை மறுப்பதற்கு இவள் உடலில் தெம்பில்லை, அனுமதிக்கிறாள். அவன் கைவிரல்களும் அதரங்களும் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாட நினைத்தவைபோல அவள் உடல் எங்கும் பயணிக்கின்றன. உடல் வியர்வையில் நனைகிறது; தலை கிறுகிறுக்கிறது. தனது உடலில் இருந்து தேவசகாயத்தைப் யாரோ பிரித்திருந்தார்கள். இவளுக்கு மூச்சு இறைத்தது. கண் விழித்துப் பார்த்தாள். தேவசகாயம் இல்லை. சன்னல் வழியில் தெரிந்த அடிவானத்தில் கறுத்தமேகம். திறந்திருக்கும் கழுத்தில் சிலுசிலுவென்று காற்று பரவுகிறது. நொடியில் சிறுசிறு துகள்களாக ஆரம்பித்து, பின்னர் நீர்க்கம்பிகளாகச் சடசடவென, அநேகமாக மழை தரை இறங்கலாம்.

(தொடரும்)
———————————————————————-
1. Happy birth day

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா