மாத்தா ஹரி – அத்தியாயம் 4

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


– உங்களை எங்கெல்லாம் தேடுவது?

கழிவறையில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த பவானிக்கு, எதிர்பாராமல் வந்த குரலைக் கேட்டதில் அதிர்ச்சி. எதிரே தேவசகாயம் நின்று கொண்டிருந்தான்.

– எதற்கு?

– பவானி.. உங்களுக்குக் காரணம் தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாததுபோல நடந்துகொள்கிறீர்களா?

– எனக்கு முதலில் வழியை விடுங்கள் தேவா? பேசுவதற்கு நல்ல இடத்தைத் தேர்வு செய்தீர்கள்.

அவனது உடற் தீண்டலின்றி கடந்து செல்ல முடியாது போலிருந்தது. அதை எதிர்பார்த்தவன் போலவே அவனும் நின்றுகொண்டிருக்கிறான். தேவசகாயம் அந்நியன் அல்ல. எனினும் முதன்முறையாக, அவனை நிமிர்ந்து பார்க்கத் தயங்கினாள்.

– உங்கள் தோழியை விசாரித்தேன், நீங்கள் இருக்கலாம் என யூகித்த இடங்களில் எல்லாம் சென்று பார்த்தேன். கடைசியில் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்.

– உங்களுக்கு என்ன வேண்டும்?

– கொஞ்சம் தனியே உங்களிடத்தில் பேசணும்.

– கொஞ்சமென்ன நிறையவே பேசலாம். நாம் இதற்கு முன்னால் பேசியது இல்லையா? உங்களைச் சந்தித்து என்ன ஆறுமாதங்கள் இருக்குமா? இருக்குமென்றுதான் நினைக்கிறேன். இந்த ஆறுமாதத்தில் நிறைய பேசி இருக்கிறோம். இன்றைக்குத் திடுமென்று என்னைப் பார்த்து ‘கொஞ்சம் பேசவேண்டும் தனியே வரமுடியுமா?’ என்பதன் பொருள்தான் எனக்கு விளங்கவில்லை.

– பயப்படாதீங்க! வழக்கம்போல ஒரு கவிதையை உங்களிடத்தில் சொல்லியாகணும். நீங்கள் விரும்பினால், வீட்டின் பின்புறம் அமைதியாக உட்கார்ந்து பேசலாம்.

– அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். உதட்டில் அவனது வழக்கமான மோனாலிஸ புன்னகை. இத்தனை நாட்களாக இல்லாமல், திடீரென்று ஹார்மோன்கள் அவள் உடலில் தமது சித்து வேலையை ஆரம்பிக்கின்றன. நெஞ்சில் அமுதம் சுரக்கிறது. இதயத்தின் படபடப்பினை உணரமுடிந்தது. ஆறுமாதத்திற்கு முன்னால் ‘அல்லியான்ஸ் •பிரான்சேய்ஸ்’ல் பிரெஞ்சு படிக்கவென்று சேர்ந்தபோது, முதல்நாள் வகுப்பு முடிந்து காப்பிபாருக்கு அழைத்துச் சென்ற பத்மா பக்கத்து நாற்காலியில், கழுத்தில் வெள்ளைமணிகளில் கோர்த்த மாலையும், சவரம் செய்யபடாத முகமுமாக, தமிழ்ப் படங்களில் வருகிற அடியாள் போல இருந்த தேவசகாயத்தை அறிமுகப் படுத்தினாள். பிறகொரு நாள், நீதிமன்ற வேலைகளை முடித்துக்கொண்டு இவள் ஸ்கூட்டரில் திரும்பும்போது, காந்தி சிலை அருகே குட்டிச் சுவற்றின் மீது அமர்ந்தபடி சிந்தனையில் மூழ்கி இருந்தவனைப் பார்க்க வியப்பு. அவன் அருகில், இவளை அறியாமலேயே ஸ்கூட்டர் நிதானித்தது. நடப்பதை உணர்ந்தவன்போலத் திரும்பிப் பார்த்தவன், எழுந்து வந்து விசாரித்தான். கையில் தமிழ்க் கவிதை. ஆச்சரியமாக இருந்தது. ‘நீங்களும் பெரிய கவிஞராமே, பத்மா சொல்லி இருக்கிறாள்’, என்றான். பிறகு அவனே உரிமை எடுத்துக்கொண்டு குளிர்பானம் வாங்கி இவளுக்கு ஒன்று கொடுத்தான். அவ்வப்போது கவிதைகள் எழுதிக்கொண்டுவந்து இவளிடத்தில் காட்டுவான். அவன் மனதில் வேறு எண்ணங்களும் இருந்திருக்கவேண்டும் என்பதான சந்தேகங்கள் உண்டு. ஆனால் அவை சந்தேகங்களாகவே இருந்தவரை இவள் மனதிலும் சலனங்கள் ஏதும் இல்லை. ஆனால் இன்றைக்கு? பெண்ணே கவனம்! அவன் பேச அழைக்கிறான் என்று வாலை ஆட்டிக்கொண்டு போய்விடாதே!’, என்று எச்சரித்த உணர்வை, உணர்ச்சி வென்றது. இவளுக்கே வியப்பாக இருந்தது. நானா இப்படி?

– சரி.. வாங்க போகலாம், – மூளை தீர்மானிக்கும் முன்பாக சொற்கள் வெளிப்பட்டன.

எதிரில் நிற்கிறவன் பாலினத்தால் வேறுபட்ட பிரதிநிதி. இவள் பெண்- அவன் ஆண். இருவரும் அவரவர் பருவகாலத்தில் இருக்கிறார்கள். விலங்குகள்போலக் காரியம் ஆற்றலாம். இவர்கள் மனிதர்கள். மானுட வாழ்க்கையின் சமூக நெறிகள் சில விதிகளை வைத்திருக்கிறது, அவற்றை மஞ்சட்கோடுகளாகப் பாவிக்கும் அவசரம் அவர்கள் இருவரிடத்திலும் இல்லை. அவன் முன்னால் நடக்கிறான். அவன் பின்புறத்தைப் பார்த்தாள். ஓர் ஆணுக்கான அத்தனை வசீகரமும் தேவசகாயத்திடம் இருப்பதை உணர்ந்தாள். இந்த உணர்வு வேறு எப்போதேனும் அவளிடத்தில் எழுந்தது உண்டா? என்று தன்னைக் கேட்டுக்கொண்டாள். இல்லை என்று திட்டவட்டமாக அவளால் சொல்ல முடியவில்லை. அவனது அண்மையில் அவ்வப்போது உணர்ச்சிகளின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள், அந்த நேரங்களில் மனக்கட்டுப்பாடு பிடிமானமாக அவளுக்கு உதவி இருக்கிறது. ஒருவகையான அவா தன்னுள் வளர்வதை உணர்ந்தாள். இன்றைய இக்கட்டான இந்த நிலைமைக்கு அவளும் காரணம். அவள் என்றால் அவளல்ல. அவள் அழகு, அதன் ஈர்ப்பு. காந்தக் கதிர்களாகச் செயல்பட்டு, எல்லைக்குள் நெருங்குகிற அத்தனை உயிர்களையும் வளைத்துப்போடும் அதன் கெட்டித்தனம். வயது வேறுபாடின்றி ஆண்களை இரண்டாவது முறையாகத் திரும்பிப் பார்க்கிறார்கள்; பேருந்தில் எழுந்து இடம் கொடுக்கிறார்கள்; நிறைவைத் தராத கவிதைகள் கூட, இவளது படத்திற்காகப் பிரசுரிக்கப்படுகிறது. இவள் கவுன் அணிந்து நீதிமன்றம் போனால், நீதிபதியும் எழுந்து நிற்கிறார். எனவே தேவசகாயம் என்ற இளைஞன், தேடிவந்து இவளிடம் காதலைப் பேசுவதற்குக் காரணங்கள் நிறைய இருக்கின்றன. உணர்ச்சிகளின் சில்மிஷங்களை அடக்கிவிட்டு, நடந்தபடி, தனது மனதில் நிறுத்தியிருந்த தேவசகாயம் என்ற பிம்பத்தை மறு விசாரண செய்தாள்: கணிணிப் பொறியாளன், நல்ல உயரம், அதற்கேற்ப உடல். அழகாய் சிரிக்கிறான். கவிதை எழுதுகிறான். நல்லவைமட்டும் நினைவுக்கு வந்தன. நேற்றுவரை குறைகளாகக் கண்ட வில்லன் தோற்றமும், மதுப் பழக்கமும், வலுவிழக்கின்றன. அடுத்தவரிடம் குறைகள் என்றோ நிறைகள் என்றோ நாம் பார்ப்பது அனைத்துமே அவரவர் கருது கோள்களின் அளவீடு சார்ந்ததென்று இப்புதிய மனநிலைக்குக் காரணமும் கற்பித்தாள். பாம்பைத் தின்பதும், மாட்டை உண்பதும், காளான்களைச் சமைப்பதும் அவரவர் பண்பாட்டின் அடிப்படையில் நியாயமானதுங்கூட. இதில் மற்றொரு பிரச்சினை இருக்கிறது. தேவசகாயத்தின் மனத்தில் அரும்பியுள்ள காதலுக்கு எனது உடலழகு மட்டுமே காரணம் என்றால், பிற்காலத்தில் சிக்கல்கள் இருக்கின்றன. அவரவர் எல்லைக்குள் இருந்துகொண்டு அம்புகள் எய்யக்கூடும். இந்த வேட்டையில் ஆண்கள் தேர்ந்தவர்கள். அவளது சட்ட அறிவும், வழக்கறிஞர் தொழில் அனுபவமும் கற்றுக்கொடுத்த பாடமிது. சிந்தித்துப்பார்த்ததில் இதுவரை எந்த இளைஞனையும் தனது மனதில் மறுவிசாரணைக்கு உட்படுத்தியது இல்லை. அவளுக்குள் விவாதித்துக்கொண்டதில்லை. இதற்கு முன்னதாக வாதிக்கும் பிரதிவாதிக்குமாக அவளே வாதிட்டதில்லை. நீதிபதி இருக்கையிலும் அவளே அமர்ந்திருக்கிறாள். இவளது சிநேகிதிகளில் பத்மா வேறு ரகம், கவிதை என்றால், யார் நடித்தது என்பாள்? அவளுக்குப் பையன்கள் என்றால் பிரெஞ்சு பேசவேண்டும், மேற்கத்திய இசை கேட்கவேண்டும், அவள் கூப்பிடுகிற சினிமாவுக்கு வரவேண்டும்… மீண்டும் மனதில் இன்னொரு கேள்வி. பிறருக்கான ஒழுக்கக் கோடுகளைப் போடுவதற்கு நான் யார்? தனிமனிதர் ஒழுக்கத்தைப் பேணுகிற நான் என்றைக்கேனும் சமூக ஒழுக்கம் குறித்து அக்கறை கொண்டதுண்டா? எனது ஒழுக்கம் எனது பண்பு என்று அலைகிற மனிதர்கள் தனிமரம் அவர்கள் ஒருபோதும் தோப்பாக முடியாது. என்னை அ¨ணைத்துக் கொள்ளவும், கூந்தலைக் கோதவும், தோள்களைத் தழுவவும், புறக்கழுத்தில் முத்தமிடவும், அதரங்களைச் சுவைக்கவும், முலைக்காம்புகளில் பற்கள் பதிக்கவும் ஒருவன் வேண்டாமா? தனது ‘அழகு’க்கு நன்றி தெரிவித்துக்கொண்டாள். மீண்டும் தலையை உயர்த்திப் பார்த்தாள். அவனுக்குள் இருந்த மகிழ்ச்சி நடையில் தெரிந்தது. முதன் முறையாக அவளுக்கு ஒரு ‘தேவையாக’த் தெரிந்தான். தேவசகாயம் இன்றி பவானி இல்லை என்பதுபோல ஒரு மயக்கம். இவளுக்காக அவன் நடக்கவும், உட்காரவும், பேசவும், சிரிக்கவும் தயார் என்பதுபோல நடக்கிறான். நடந்தவன் கவனமின்றி வாசற்கதவில் இடித்துக்கொண்டான். பவானிக்கு வலித்தது.

– கவனித்து நடக்கக்கூடாதா? புத்திசொன்ன இவள் இப்போது இடித்துக் கொள்கிறாள்.

– என்ன கவனித்து நடக்கக்கூடாதா? குரலில் மென்மையைக் குழைத்து அவளைப்போல பேசி காட்டுகிறான். இருவரும் கலகலவென்று சிரிக்கின்றனர்.

இருவரும் தோட்டத்தில் இருந்தனர். காற்று இருவர் தலையையும் கலைத்து விளையாடியது. அந்திச் சூரியன் அவள் முகத்தில் மஞ்சளைப் பூசினான். காற்சட்டைப் பைகளில் கைகளை வைத்துக்கொண்டு அண்ணாந்து பார்க்கிறான். அவனை இவள் பார்க்கிறாள், இவள் பார்ப்பதை அவன் பார்த்துவிடக்கூடாது என்பதைப்போலப் பார்க்கிறாள். அவனும் அதை உணர்ந்தவன்போல, இவள் திசையை மறந்தவன்போல:

– பவானி ! என் மனதை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

– சொல்லுங்கள்

– கடந்த ஆறுமாதத்தில என்னை ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள். இருந்தும் உங்களை எனக்குப் பிடித்திருக்கிறதென்று சொல்வதற்கு எனக்குக் கூச்சம்.

– பிடித்திருக்கிறது என்றால்?

– உங்களை விரும்புகிறேன் அதாவது காதலிக்கிறேன்.

– ஏதோ கவிதை சொல்லப் போவதாகச் சொன்னீர்கள்.

– இதுவும் ஒரு வகையில் கவிதைதான்

– மன்னிக்கணும் தேவா. இதற்கு உடனே பதில் என்னால் சொல்ல முடியாது, நிறைய யோசிக்கணும்.

(தொடரும்)


Series Navigation