மாத்தா- ஹரி அத்தியாயம் -44

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா– என்ன திடீரென்று வந்திருக்க?. கேட்டபடி பிலிப் பர்தோவின் சோபாவுக்கு எதிரிலிருந்த நாற்காலியில் பவானி அமர்ந்தாள். மேசையில் கிடந்த பழைய பிரெஞ்சு இதழைப் புரட்டிக்கொண்டிருந்த பிலிப் தலை நிமிர்ந்தான்.

– திடீரென்று இல்லையே போன் பண்ணிட்டுத்தானே வந்தேன்.

– நல்லா சமாளிக்கற பிலிப். ரொம்ப நாளாச்சு, இப்பவெல்லாம் டெலிபோனெல்லாங்கூட பண்றதில்லை. எங்களை எல்லாம் மறந்திட்டீயோண்ணு நினைச்சேன்.

– மற்றவங்களை மறந்தாலும் உன்னை மறக்கிறதாவது, உண்மையைச் சொல்லட்டுமா, என்னோட இந்த மாற்றத்துக்கு நீதான் காரணம். முன்புபோல நீ என்னிடம் பழகறதில்லை, அடுத்தடுத்து மூன்றுமுறை உன்னைதேடி வந்து ஏமாந்துபோனேன். கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குமேலே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு நல்ல நண்பர்களாகத்தானே இருந்துவந்திருக்கோம். நாம அறிமுகம்பண்ணிகிட்ட தேதியிலிருந்து இரண்டுவாரத்திற்கு ஒருமுறையாவது உன்னைத் தேடி வந்திருப்பேன், இரண்டுபேரும் இதே இடத்தில் உட்கார்ந்து நேரங்காலமின்றி விவாதித்திருக்கோம், தவறினால், சில நேரங்களில் வெளியிற் சென்றும் உரையாடியிருக்கோம், பிரச்சினைன்னா என்கிட்டே நேரடியா சொல்லியிருக்கலாம், அதைவிடுத்து என்னமோ என்னைத் தவிர்க்கிறமாதிரி உன்னுடைய நடவடிக்கை இருந்தது, அதனாலே வருவதை நிறுத்திக்கொண்டேன்.

– நல்லவேளை, வீடு தேடிவந்து மனசிலிருப்பதைத் சொல்லணுமென்று உனக்குத் தோணியதே அதற்கு நன்றி., அதுசரி என்கிட்டே திடீர்ணு இன்றைக்கு இதைச் சொல்லியாகணும்னு தீர்மானிச்சது எப்படி, இந்த இடைபட்ட காலத்திலே என் போக்கிலே மாற்றமிருக்கும்ணு நினைச்சியா, இல்லை..

– அப்படித்தான் வச்சுக்கேன்

– நான் சொல்லி முடிக்கலை?

– எனக்குப் புரியலை.

– நான் சொல்லவந்ததை முழுசா சொல்லி முடிக்கலை.

– சரி சொல்லு கேட்கிறேன். .

– இப்போ என்னை நீ தேடிவந்தது, என் போக்கிலே மாற்றமிருக்குமென்று நினைச்சா, அல்லது நீ உன்போக்கிலே மாற்றத்தைத் தேடிக்கொண்டதாலா, இரண்டில் எது காரணம்?

பிலிப் பர்தோ, புரிந்துகொண்டவன்போல எழுந்துகொண்டான். எதிரிலிருந்த பெண்மணியின் பார்வையைத் தவிர்க்க நினைக்கிறான். கவனம் சுவர்க்கடிகாரத்தில் பதிந்தது. சின்ன முள்ளைவிட்டு பெரியமுள் வெகுதூரத்திற்குவந்திருந்தபோதிலும் அதனோடு மறு சுற்றில் இணையும் வாய்ப்பு உண்டென்பதுபோலத்தான் தோன்றியது. ஹை-·பீ சிஸ்ட்டத்தின் மீதிருந்த வண்ணம் தீட்டப்பட்ட தஞ்சாவூர்பொம்மை, பரிகசிப்பதுபோல தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறது. சிகரெட் பற்றவைக்கவேண்டும்போலிருக்கிறது.

– பவானி என்னை மன்னிக்கணும், ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொள்ளலாமா?

வேறு சமயமென்றால் கூடாதென்று தெளிவாகச் சொல்லியிருப்பாள், அவனும் அப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கமாட்டான். இன்றைக்கு அவனுக்கு அது ஓர் கட்டாயத்தேவை, புகையை உள்ளே இறக்கி நெஞ்சத்தில் இருக்கிற சொற்களுக்கு கொஞ்சம் கதகதப்பு ஊட்டவேண்டும், அண்ணத்தில் ஒட்டாமல் நாக்கைப் பிரித்தெடுத்து, பிசிரின்றி சொற்களை இறக்க உஷ்ணம் வேண்டும். பவானியும் அவன் தேவையை உணர்ந்தவள்போல தலை ஆட்டுகிறாள். பிலிப் பர்தோவுக்கு பவானியிடம் இதுமாதிரியான குழப்பங்கள் நிறைய வந்திருக்கிறது. இந்தியர்கள் ஆமாம், இல்லை இரண்டிற்கும் ஒரே மாதிரியாகத் தலையாட்டுகிறார்கள். விரலிடுக்கில் அமர்ந்த சிகரெட் உதட்டிலமர தயங்குகிறது.

– ம்.. என்கிறாள். அனுமதிகிடைத்த திருப்தியில், உதட்டைபிரித்து சிகரெட்டைத் திணித்தான், தீக்குச்சியை உரசியபோது, பவானியின் இருகண்களிலும் தீ நாக்குகள்.

– இடுக்கண் க¨ளைவதுதான் நட்பு, உனக்கு நானே உதவறேன், இப்போ நீ தேவவிரதனா வந்திருக்கீயா, இல்லை பிலிப் பர்தோவா வந்திருக்கீயா?

– அப்போ தேவவிரதன் என்ற பேர்ல உனக்கு எழுதின கடிதத்தை வாசிச்சிருக்க.

– ம்.. வாசிச்சேன் பிலிப். நல்ல நண்பர்களா நாம இருந்தோமென்று சொன்ன. நான் மறக்கலை ஆனா நீ அப்படித்தான் இருந்திருக்கியா. ஆரம்பத்திலேயிருந்து உனக்கு எம்மேலே சபலம் நிறைய இருக்கு, அதை சாமர்த்தியமா மறைச்சுகிட்டு பழகின. கோழைத்தனமும் உங்கிட்டே கூடுதலாக இருக்கிறது. நீ நல்லவனா இருப்பதற்கு உன்னுடைய கோழைத்தனந்தான் காரணம், கெட்டவர்களுக்கு மாத்திரமல்ல, வாழ்க்கையிலே நல்லவர்களா இருப்பதற்குக்கூட துணிச்சல் வேணும். கோழைகள் நல்லவர்கள்னு சொல்லிகிறதுல எந்த அர்த்தமுமில்லை. அவனுக்கேக்கூட அவனால எந்தப் பலனுமில்லை. எதையும் அடுத்தவங்க ஆரம்பிச்சுவைக்கணும். ஏதாவது ஒருவகையிலே சமிக்ஞை கிடைக்கணும், அப்படித்தான் எதிர்பார்க்கிற, ஒன்றும் ஆகலைண்ணு தெரிஞ்சதும், ஒருமுறை என்னென்னவோ உளறின, நான் நேரடியாக விஷயத்தைத் தொட்டதும் ஓடி ஒளிஞ்ச, இருந்தும் வாழ்க்கையிலே மிகவும் இக்கட்டான நெருக்கடியிலே என்னை நீ காப்பாற்றின, மாத்தா ஹரியாக இருந்த என்னை உன் ஹிப்னாட்டிஸம் மூலம் மீட்டதாகவும் சொல்லியிருக்கே, அவற்றையெல்லாம் மறக்காமல்தான் இருக்கிறேன், நட்பை விடக்கூடாதென்றுதான் நினைக்கிறேன். ஆனால் அத்தனைக்கும் பின்னே என்னை சொந்தமாக்கிக்கணுங்கிற சுயநலமிருப்பதைப் பார்க்கிறபோது ஆத்திரம் வருது.

– கொஞ்சம் நிறுத்தறியா, என்னுடைய தரப்பை சொல்லவா வேண்டாமா?

– இரண்டு நிமிடம் பொறு, சொல்லணுமென்று நினைச்சதை சொல்லிடறேன், அப்புறம் மறந்திடுவேன். என்னைச் சுற்றி இருக்கிறவர்களில் இங்கே மகாபாரதத்தைப் பத்தி கொஞ்சம் ஆழமா ஞானம் உள்ளவங்கண்ணுப் பார்த்தா அது நீதான். கங்கைக்குப் பிறந்தவனென்று சொல்லப்பட்ட தேவவிரதன் என்ற பேருல ஒளிந்துகொண்டு கடிதம் எழுத உன்னால்மட்டுமே முடியும். ஒருவேளை மாத்தா ஹரிக்குப் பிடிச்ச கங்கையின் மகன் அந்த தேவவிரதன் என்ற காரணமா. அதுமட்டும் காரணமாய் இருக்க முடியாதென்று¡ன் நினைக்கிறேன். மாத்தா ஹரியை வெறுப்பதுபோலத்தானே இதுவரை என்கிட்டே பேசியிருக்கிற, எதனாலே பின்னே தேவவிரதன் பேருல ஒரு கடிதம்னு யோசித்து பார்க்கையிலதான் உனது திட்டம் புரிந்தது. தேவ விரதன் நீ தானென்று தெரிஞ்சு, கடிதத்திலுள்ள சொற்களுக்கு மயங்கி உன் பின்னாடி புறப்பட்டுவந்தால் இலாபம், இல்லையென்றால் தேவசகாயத்தையும் என்னையும் சேர்த்துவைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தினால், அந்த பேருல கடிதம் எழுதியதாகச் சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம். அதற்கேற்றார்போல மிகுந்த கவனத்துடன் சொற்களை உபயோகிச்சிருக்க. நீ சாமர்த்தியசாலிண்ணு நினைக்கலாம், ஆனா அப்பவும் நீ கோழைதான். உன்னுடைய கடிதத்தை படிச்சேனே தவிர, எழுதினது நீதாண்ணு புரிஞ்சதும், கிழித்துப் போட்டதுமட்டுமல்ல, அதைச் சுத்தமா மறந்திருந்தேன், இப்பவும் பழைய பிலிப் பர்தோண்ணு சொல்லு, எங்க வீட்டுக் கதவு எப்பவும் உனக்காக திறந்திருக்கும்.

– முடிச்சுட்டியா நான் பேசட்டுமா? இப்போதும் உன்னை நேசிக்கிறேன். ஆமாம்., அதைத் தெளிவா சொல்லணுமென்றுதான் வந்தேன். தேவசகாயத்தோடு சேர்த்துவைக்கவா இத்தனை நாள் உழைச்சேன். உண்மையைச் சொல்லணுமென்றால், மாத்தா ஹரியின் விசுவாசிகளில் நானும் ஒருத்தன், அவபேருலே ஒரு சமயக்குழுவை ஆரம்பிச்சு நடத்திவறேன். அதிலே இன்று நேற்றல்ல ஆரம்ப முதலே குளோது, க்ரோ எல்லோரும் இருக்க்கிறோம், மாத்தா ஹரிக்கு, தான் கங்கையில் பிறந்ததா ஒரு நம்பிக்கை இருந்தது, மீண்டுமொரு மாத்தாஹரியைக் கங்கை கரையில் தேடிப்பார்க்கலாம் என்றுதான் இந்தியாவுக்கு வந்தோம். ஆனால் அவளை புதுச்சேரியிலேயே தரிசிக்க முடியுமென்றோ அவளுக்குப் பவானிண்ணு பேர் வைத்திருப்பார்களென்றோ நாங்கள் நினைக்கலை. ஹஷீஸ்க்காக தேவா குளோது சொல்றபடியெல்லாம் தலையாட்டற நிலைமையில இருந்தது எங்களுக்குச் சாதகமா அமைஞ்சுது. ஆனா இத்தனை மோசமாக உன்னை கொடுமை படுத்துவானென்று நான் நினைக்கிலை. ஏன் குளோது கூட நினைக்கிலை. இந்த மூன்று வருடத்திலே, என்னென்னவோ நடந்துபோச்சு, எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அவனோட இருக்கணுங்கிற அவசியமெல்லாம் இல்லை, இந்தியாவிலேயே இப்பல்லாம் நிலைமை ரொம்ப மாறிபோச்சுண்ணு நீயே சொல்லியிருக்கே, அப்படி இருக்கிறப்போ பிரான்சுலே நீ யாருக்காக இப்படி வேதனைகளை அனுபவிக்கணும், ஹரிணிதான் பிரச்சினைன்னா நான் பார்த்துக்கறேன். அவளோட எதிர்காலத்துக்கு நான் பொறுப்பு.

– தேவசகாயம் என்னைக் கொடுமைப் படுத்தியிருக்கான், இல்லைண்ணு சொல்லலை, ஆனால் இன்றைக்குக் காலையிலே போதைமருந்து பழக்கத்தையெல்லாம் விட்டுட்டேண்ணு சொன்னான், அவனை நம்பறேன், நம்பித்தான் ஆகணும். இப்படித்தான் இந்தியத் தம்பதிகள் நூற்றுக்குத் தொண்ணூறு பேரு தங்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணறாங்க.

– கடைசியிலே உடன்கட்டையும் ஏறுவீங்க – சொல்லிமுடித்த பிலிப் பர்தோவின் உதடுகளில் ஏளனத்துடன்கூடிய ஒரு சிரிப்பு, இடதுபக்க உதடுகளிரண்டும் அலட்சியத்துடன் பக்கவாட்டில் அசைந்து மீண்டன.

– அதெல்லாம் எப்பவோ முடிஞ்சகதை, எல்லா நாடுகளிலும் எல்லாமும் நடந்திருக்கு, ஏன் நடந்தது எப்படி நடந்ததென்று விவாதிக்க ஆரம்பிச்சா எதிர்காலம்மட்டுமில்லை, நிகழ்காலமும் நமக்குச் சொந்தமில்லை என்றாகும். சென்ற நூற்றாண்டில் நடந்ததென்றாலும் அதை நியாயமென்று சொல்லமாட்டேன். எனினும் ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிர்த்து, பெரும்பாலான பெண்கள் அதை விருப்பித்தான், அன்றைக்கு செஞ்சிருக்காங்க. வெளியாட்கள் நிர்ப்பந்தமில்லாத முடிவென்றால், அது சரி. அப்படியொரு நிலைப்பாடு கொடூரமானது காட்டுமிராண்டித்தனமானதென்கிற விவாதமெல்லாம் அடுத்தக் கட்டம். இருக்கிற ஒரு பிடிசோறையும் கணவனுக்கோ, பிள்ளைக்கோ கொடுத்துவிட்டு தன்பசியை ஆற்றிக்கொள்ளும் பண்பாட்டால் நேர்ந்தது அது. இந்தியாவில் பக்தி என்று ஒரு சொல்லுண்டு. அதைப் புரிந்துகொள்ள இந்திய மண்ணில் வாழ்ந்திருக்கவேண்டும்.

– நீயா இப்படி பேசற, குடும்ப நீதிமன்றத்துலே வழக்குரைஞரா வேற இருந்திருக்கேண்ணு சொன்ன, உன்கிட்ட பிரச்சினண்ணு வந்த பெண்களுக்கு நீதிபோதனைதான் செய்துகொண்டிருந்தியா?

– பிரான்சுலே என்ன செய்யறாங்க, தம்பதிகளை பிரிக்கணுங்கிறதுதான் முக்கியம்னு நினைச்சு செயல்படறாங்களா? இல்லையே. எல்லோரும் சேர்த்துவைக்கணும்னு ஆசைப்படுவாங்க. வியாதியின் நிலைமைக்கேற்பத்தான் சிகிச்சை அளிக்கணும்,

– அப்போ பெண்விடுதலைபத்தியெல்லாம் நீ பேசினது?

– பெண்விடுதலைண்ணா என்னண்ணு நினைக்கிற, புருஷனை அடிக்கடி மாத்தறதா?அதில்லை. பெண்விடுதலைங்கிற பேருல எங்க தலைவிதியை நாங்க தீர்மானிக்கணும்னு நினைக்கிறோம், ஆண்களுக்குச் சமமா பெண்களையும் நடத்துங்கண்ணு சொல்றோம். இந்தப் பிரச்சினையையே எடுத்துக்க, உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளனும்ணு இங்கே வந்திருக்கியே தவிர, இதுலே என் விருப்பத்தைப் பற்றி எப்போதாவது யோசித்திருப்பியா. நீ சொல்றதுபோல கடைசிவரைக்கும் தேவசகாயம் திருந்துகிறவன் இல்லைண்ணு எம்மனசிலே தோன்றியிருந்தால் வேற முடிவு எடுத்திருப்பேன், ஆனா அந்த முடிவை நான்தான் எடுக்கணும். நீயோ, மற்றவங்களோ திணிக்க முடியாது. நீங்க கொண்டாடற மாத்தா ஹரியும் அதைத்தான் செஞ்சா. உறவுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுங்க, ஆனா அது இரண்டு பேரோட பரஸ்பர புரிதலில் அமையணும். இன்றைக்கு இவ்வளவு போதும்ணு நினைக்கிறேன்.

– இப்படியெல்லாம் பேசினா நான் மனதை மாத்திக்கவேண்ணு மட்டும் நினைச்சுடாதே. மாத்தா ஹரி சம்பந்தப்பட்ட எந்த அடையாளத்தையும், எந்தப்பொருளையும் விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை. எனக்கு நீயும் வேணும் அப்படியே உங்க வீட்டு நிலவறையில் இருக்கிற மாத்தா ஹரியுடைய மண்டையோடும் வேணும். மாத்தா ஹரியை வழிபடற எங்களுக்கு அது புனிதப்பொருள். இந்தியாவில குளோது, தேவாகிட்டே அதை கொடுத்திருக்கான், அதை மறுபடியும் பிரான்சுக்குள்ள கொண்டுவந்திருக்காங்க. உங்கவீட்டுலேதான் பூஜை அது இதுண்ணு நடந்திருக்கு. ஒன்றிரண்டுமுறை நானும் அதிலே கலந்துகொண்டிருக்கிறேன். குளோது முன்ன மாதிரியில்லை, மாத்தா ஹரியோட மண்டையோட்டை விற்றால் நல்ல பணம் கிடைக்குங்கிற நினைப்புல அதைத் தனக்குச் சொந்தமாக்கிக்கணுமென்று நினைக்கிறான். கஞ்சா கடத்தறவனுக்குப் புத்தி அப்படித்தான் போகும். வா.. நிலவறையிலே பேய்ப்பார்க்கலாம், அது எங்க இருக்கும்ணு எனக்குத் தெரியும்.

– தேவசகாயத்தோட இன்னொரு வாழ்க்கையைத் தொடங்கலாம்னு நினைக்கிறேன். அவர் சம்மதிச்சா, திரும்பவும் இந்தியாவுக்கேகூட ஹரிணியை அழைத்துக்கொண்டு போயிடலாமாண்ணு நினைக்கிறேன். இந்த சமயத்திலே இப்படியெல்லாம் பேசாதே. தேவா வரட்டும், என்னண்ணு விசாரிக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு எங்க வீட்டிலே நீ சொல்ற மாறி எந்தப் பொருளையும் நான் பார்த்ததில்லை. தேவா வந்தா கேட்டுப் பார்க்கிறேன்.

– தேவாவை நம்பாதே, அவனுக்கு உன்னைக்காட்டிலும் குளோது முக்கியம் அவன் சகோதரி க்ரோ முக்கியம்.

– என்ன சொல்ற?

– என்ன ஆச்சரியமாயிருக்கா, இதைவிட ஆச்சரியமான தகவல்கள் எங்கிட்ட இருக்கு.

– நீ என்ன சொல்லப்போறங்கிறதை ஓரளவு புரியுது.

– ஆமாம்; க்ரோவும் புதுச்சேரியிலே இருந்திருக்கிறாள். பிரெஞ்சு குடியுரிமையுடன், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உதவுவதுதான் அவள் பணி. கல்வி அறிவற்ற ஏழைக்குடும்பங்களுக்கு, பிரெஞ்சு குடியுரிமையைச், சட்டப்படி பெற்றுதர முடியுமென்றால் அதற்கான விணப்பங்களை தயாரிப்பது, அவர்களுக்கு உதவித் தொகைப் பெற்றுத்தருவது, விரும்பினால் அவர்களை பிரான்சுக்குப் அனுப்பி வைப்பது என்றிருந்தாள். அவளுக்குத் தமிழும் நன்றாக வரும். புதுச்சேரியில், பிரெஞ்சு கலாச்சாரத்தோடு தொடர்புள்ள மனிதர்கள் சந்திக்க வாய்ப்புள்ள இடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், அது பெரிய ஊரல்ல என்பதும் உனக்கும் தெரியும். அந்தவகையில்தான் க்ரோ தேவசகாயம் சந்திப்பு நிகழ்ந்தது. அவளுக்குச் சம்பிரதாய திருமணங்கள், கணவன் மனைவி பந்தங்கள் இவற்றிலெல்லாம் ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை கிடையாது, க்ரோ கருத்தரித்தாள். ஹரிணியும் பிறந்தாள், பிறகு என்ன நடந்திருக்கும், அல்லது என்ன நடந்தது என்பதை உனது ஊகத்திற்கே விட்டுடறேன்.

-“….”

– சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிட்டேன், தேவசகாயத்தைப் புரிஞ்சுகிட்டிருப்பேண்ணு நினைக்கிறேன்.தீர யோசித்து நல்ல முடிவை சொல்லு, மாத்தா ஹரியோட மண்டையோட்டையும் தேடி எடுத்துவை, இல்லைண்ணு மட்டும் சொல்லிடாதே. மியூசியத்துல திருடுபோன பொருள் உங்க வீட்டிலே இருக்கிறதென்பது தெரியவந்தால் அதற்கும் தண்டனை உண்டு மறந்திடாதே.

பிலிப் பர்தோ புறப்பட்டு போய்விட்டான், அவனை வழி அனுப்பவேண்டும் என்று கூட தோன்றாமல், தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். கலக்கமாக இருந்தது; எல்லாம் விலகியதுபோல இருந்தது, விடிந்ததென்று எழுந்திருந்தால், வெள்ளிகூட முளைக்காததுபோல இரவு நீண்டுக்கொண்டுபோகிறது. அவள் மனதிலிருந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. தேவசகாயம் பொலபொலவென்று இடிந்து விழுந்திருந்தான், அவனைக் குழைத்து மீண்டும் பாண்டாமாக உருவாக்கமுடியுமா, அதற்கான பலம் தனது கைகளுக்குண்டா. ஹரிணியை தொப்புட்கொடிக்கு யார் உறவென்று தெரியாதவரை நேசிக்க முடிந்தது, இனியும் முடியுமாவென்று தெரியலை. இத்தனை நாளா நேரங்காலம் பார்க்காமல் ஓடிவந்து க்ரோ உதவி செய்ததெல்லாம் ஹரிணிக்காகவா, அவளுடைய பரிவுக்கும் அன்புக்கும்பின்னே இப்படியொரு மர்மம் இருக்கிறதா. பத்மாவுக்கு இவைகளெல்லாம் தெரிந்திருக்கத்தான் வேண்டும். அவளும் இவற்றுக்கெல்லாம் உடந்தையாக இருக்கலாம் யார்கண்டது. எல்லோரும் சேர்ந்துதான் தன்னை ஏமாற்றியிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து பிரான்சுக்கு வந்ததென்றில்லை, பாரிஸிலிருந்து ஸ்ட்ராஸ்பூர் வந்ததுகூட பெற்ற மகளை தன் கண்பார்வையில் வைத்திருக்க க்ரோ தீட்டிய திட்டமோ என்னவோ. தேவா என்ன பதில் வைத்திருப்பான்: “என் பெற்றோருக்கு, துயர் தந்தேன்! பரத்தமை சேர்ந்தேன்! பயனில் பேசுவர் சேர்ந்தேன்! ஏளனப்பட்டேன்! இகழ நடந்தேன்! அறிவிற் சிறந்த உனைத் தவிக்கவிட்டேன்! தத்தளித்தாய்! அதைத் தாங்கமுடியவில்லை” என கோவலனைப்போல பாவமன்னிப்பு கேட்பானா, குற்ற உணர்வில் குறுகிப்போவானா? இனி நானும் அசட்டு கண்ணகிபோல, “”போற்றா ஒழுக்கம் புரிந்தீர்! யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேந்தலின் ஏற்றுஎழுந் தனன்யான்..” என்று சொல்லிக்கொண்டு,, சீரியல் பார்க்க உட்கார்ந்திடலாமா? இப்போதுதான் இந்தியத் தமிழர்களை குட்டிசுவராக்கினது போதாதுண்ணு, உலகம்பூரா பரவிடுத்தே.

– பவானி..!

– அப்பா நீங்களா? வந்திட்டீங்களா? நீங்க வருவீங்கண்ணு எனக்குத் தெரியும்.

– நமக்கெல்லாம் இந்த உலகம் சரிவராதென்று சொல்லியிருக்கேனா இல்லையா?

– எனக்கு முடியலைப்பா. உங்களைப்போல எனக்கும் மழையில் நனையணும், என்னைக் கரைச்சுக்கணும், மண்ணோடு மண்ணோட ஊறிப்போகணும். வந்திடறேன், பாட்டி! அப்பா கிட்டே சொல்லு, அவர் விரல்பிடிச்சு நடக்கணும்னு எனக்கு ஆசை வந்திடுச்சிண்ணு சொல்லு .

– என்ன செய்யற?

– விஸ்கி, இதுவரைக்கும் குடிச்சு பார்த்ததில்லை. இன்றைக்கு குடிக்கணும், தேவைப்படுது, உங்ககிட்டே வரணும்னா, இந்த உடலை விட்டு வரணும், அந்த உடலுக்கு வலிதெரியக்கூடாதில்லையா, அதற்காக குடிக்கறேன்.

– எங்கே போற?

– பத்மாவுக்கு டெலிபோன் பண்ணனும், இதிலே அவளுடைய பங்கு என்னண்ணு தெரிஞ்சுக்கணும், பிறகுதான் நிதானமா.. ஏமாற்றப்போவதில்லை.வந்திடுவேன்

(தொடரும்)


Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா