மாத்தா ஹரி அத்தியாயம் -42

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



– உட்காரலாமா கூடாதா?

– என்ன மேடம் இதையெல்லாங்கூட என்கிட்டே எதிர்பார்க்கறீங்க, உட்காருங்க.

– குழந்தை என்ன பண்றா?

– இத்தனை நாழி விளையாடிக்கொண்டுதானிருந்தாள், இப்போதான் தூங்க வச்சேன். எழுப்பட்டுமா?

– வேண்டாம் தூங்கட்டும், பிறகு எழுப்பலாம். ஞாயிற்று கிழமைகள்ல வெளியிலே போகும் பழக்கமேதுமில்லையா?

– இல்லை மேடம் இங்கே வந்து ஒரு மாதந்தான் ஆகப்போகுது, அவருடைய நண்பர்கள் சிலர் இங்கேதான் இருக்காங்க. அவங்கெல்லாம்ங்கூட வீட்டுக்குக் கூப்பிடத்தான் செய்யறாங்க, எதையாவது காரணத்தைச் சொல்லிட்டு தவிர்க்கறேன்

– ஏன்?

– ஒருத்தர் வீட்டுக்குக் கையை வீசிகிட்டு வெறுமனேபோக முடியாதில்லையா?

– உங்க கணவர் வீட்டில் இல்லையா?

– இப்பத்தான் சித்தெ முன்னே, ஒரு சினேகிதரை பார்க்கணுமென்று போனார், இந்தியாவிலிருக்கும்போதே பழக்கம், வந்திடுவார்.

– என்ன குடிக்கிறீங்க காப்பி, டீ?

– எதுவும் வேண்டாம், இப்படி பக்கத்திலே உட்கார்.

– என்ன மேடம் இப்படி பார்க்கறீங்க.

– உன்னுடைய அழகு என்னை அப்படிப் பார்க்கச் சொல்லுது

– என்ன மேடம் நீங்க மட்டும் அழகுக்குக் குறைச்சலா? உங்களுக்கும் ஒரு புடைவையைச் சுற்றி, சேர்த்துமுடிச்சிருக்கும் தலைமுடியையும் அவிழ்த்துத் தொங்கவிட்டு, நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டையும் வைத்துவிட்டால் என்னைப்போல பல மடங்கு ஜொலிப்பீங்க

– அப்படியா, அடுத்தமுறை வரேன், எனக்கு ஒரு புடவை கட்டிவிடு.

– எதற்காக அடுத்தமுறையென்று காத்திருக்கணும், இப்பவே கட்டிவிட்டா போகுது.

– இப்போது வேண்டாம். இன்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம். ஹரிணி எழுந்திருக்கட்டும், அவளை அழைச்சிகிட்டு ஒரான்ழெரி பார்க் வரை போயிட்டுவரலாம். வழக்கமா அவ எழுந்திருப்பது எப்படி? நிறைய நேரம் தூங்குவாளோ? பகலில் தூங்க வைக்காதே. உனக்குத்தான் பிரச்சினை. பிறகு உங்க கணவர்கிட்டே மாற்று சாவி இருக்கு இல்லையா?

– நான் இல்லைண்ணாலும், பிரச்சினை இல்லை, அவர்கிட்டே மாற்று திறப்பு இருக்கு. அவர்கிட்டே இப்படி நாம வெளியிலே போகணுமென்று சொல்லலை. சொல்லாம கொள்ளாம போயிட்டேண்ணு நினைப்பார்.

– அவர்கிட்டே நான் பேசிக்கிறேன் அதுவொரு பிரச்சினையே இல்லை.

அரைமமணி நேரத்திற்குப் பிறகு குழந்தை ஹரிணி, க்ரோ, பவானி மூவருமாக காரில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு எதிரேயிருந்த பூங்காவிற்கு வந்திருந்தனர். எதிர்பார்த்ததைவிட பூங்கா பெரிதாகத்தான் இருந்தது. கண்ணுக்குக் குளிர்ச்சியாய் விரல் உயரத்திற்கு பராமரிக்கபட்டப் புல்வெளிகள் திரும்பியபக்கமெல்லாம் தெரிந்தது, இடையிடையே, மனிதரின் கற்பனைக்கேற்றவாறு, கடிகாரமாய், புத்தகமாய், பூக்கள் தைத்த இரத்தின கம்பளமாய், வட்டமாய், சதுரமாய், நீள் சதுரமாய், தோகைவிரித்து, சிவப்பாய், நீலமாய், மஞ்சளாய், வெள்ளையாய் மொட்டுகள், அரும்புகள், கூம்பிய பூக்கள், மலர்ந்த பூக்கள் கவிதை படித்தன. தலையை உயர்த்திப் பார்க்க வானத்தை சுமந்திருப்பதுபோல அடர்ந்த மரங்கள், அவற்றின் கிளைகளுக்கிடையிலும், முடைந்திருந்த இலைவிதானத்திலும் முற்றிய வெண்ணிறத்தில் சூரிய ஒளி இலைகளில் பச்சையத்தைத் தின்று பசியாறிக்கொண்டிருக்கிறது. வெயிலின் கடுமையை குறைக்க நினைப்பதுபோல வீசும் காற்றினை உணரமுடிந்தது. பிரான்சுக்கு வந்தபிறகு முதன் முறையாக ஒரு பார்க்குக்கு வந்திருப்பது, ஏன் வீட்டைவிட்டுப் இப்படி வெளியில் வந்தது இதுதான் முதல் தடவை. ஹரிணியை வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு க்ரோ நடந்து வந்தாள். அவளை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கொஞ்சம் இடைவெளிவிட்டு பவானி நடக்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் க்ரோவை அலுவலகத்தில் சென்று சந்தித்தது, ஞாயிற்றுக்கிழமை வீடுதேடிவந்து, ஹரிணிக்குப் பரிசுகளை வாரிக்கொடுக்கிறாள், பவானியின் தோள் தொட்டு ஆறுதலாக பேசுகிறாள். பத்மா கூட வெள்ளைக்காரர்கள் அன்பாய் பழகக்கூடியவர்களென்றும், உண்மையாய் உதவக்கூடியவர்களென்றும் சொல்லியிருக்கிறாள். ஷர்மிளாவிற்குங்கூட இரண்டொரு குடும்பங்கள் அப்படி பழக்கம் போலிருக்கிறது, போனமுறை ஒருகூடை ப்ள்ம்ஸ் பழங்களைக் கொண்டுவந்தவள், அவளுக்குத் தெரிந்த வெள்ளைக்கார குடும்பம் கொடுத்ததாகத்தான் சொன்னாள். இருந்தாலும் இதை வளர விடக்கூடாது, இதுகளுக்கு இந்தியர்களென்றாலே பிச்சைக்கார கூட்டம் என்ற நினைப்பிருக்கிறது, அவளுடைய கடமையை மட்டும் நமக்கு செய்தால் போதும்..

– எனக்கென்னவோ நீ ரொம்ப துன்பப்படறமாதிரி தெரியுது? – பவானியின் எண்ண ஓட்டத்த்திற்கு ஏற்றதுபோலத்தான், க்ரோவின் கேள்வியும் அமைந்திருந்தது. கொஞ்சம் துணுக்குறவும் செய்தது.

– எதனாலெ அப்படிச் சொல்லறீங்க, உங்களை பார்க்க வர்றவங்க எல்லோருக்குமுள்ள பிரச்சினைதான எனக்குமிருக்கு. அதாவது புதிதா பிரான்சுக்கு வர புலம்பெயர்ந்த குடும்பகளுக்கு நேரும் ஆரம்ப சிக்கல்கள். நிரந்தரமா குடியிருக்க ஒரு அபார்ட்மெண்ட்டும், இரண்டுபேர்ல ஒருத்தருக்காவது நிரந்தரமாக ஒரு வேலையும் என்று ஆயிட்டா நாங்க சமாளிச்சுடுவோம். அதிகம் பழகாத ஒருத்தியிடம், இதையெல்லாம் சொல்லும்படியாக ஆகிவிட்டதென்கிற கவலையும் பவானியின் பதிலில் தொனித்தது.

– உங்க திருமணமென்ன பெற்றோர்கள் ஏற்பாடு செய்ததா? இங்கே வர நூற்றுக்குத் தொண்ணூறு பேர் அப்படித்தான் சொல்றாங்க அதனாலேதான் கேட்டேன். உங்கக் கிட்டேயுள்ள பல பிரச்சினைகளுக்கு அதுதான் காரணமென்று நினைக்கிறேன்.

– எங்க திருமணம், நாங்களா தீர்மானிச்சதுதான். இருந்தாலும் பெற்றோர் பார்த்துவைக்கிற திருமணமெல்லாம் சிக்கல்கள்ல முடியுதுண்ணு சொல்ல முடியாது. இந்தியாவுல நானொரு வக்கீலா இருந்திருக்கேன். காதல் திருமணம்னு செஞ்சிகிட்டு எங்கிட்ட கண்ணைக் கசக்கிகிட்டு வந்து நின்றவர்களில் பெண்களும் உண்டு. உண்மையைச்சொல்லணுமென்றால் ஹரிணியேகூட அப்படியொருத்திக்கிட்டயிருந்து நாங்க தத்து எடுத்துகிட்டதுதான்.

– நான் இதை எதிர்பார்க்கலை. நாளைக்கு உனக்குண்ணு ஒரு குழந்தை பிறந்தா, இவளை அப்பவும் உன்னாலே இப்படி நேசிக்க முடியுமா.

– முடியும்னுதான் நினைக்கிறேன்.

– அப்படியொரு சந்தேகமிருந்தா, குழந்தையை எங்கிட்டே கொடுத்திடு, அரசாங்க மூலம் அவளை வளர்க்க ஏற்பாடு செய்யலாம். இங்கே அப்படியான பொறுப்புகளை ஏற்கிற குடும்பங்கள் நிறைய இருக்கு.

– இல்லை மேடம் அப்படியெல்லாம் கொடுக்க நினைத்திருந்தால் இவளைத் தத்து எடுத்திருக்கணுங்கிற அவசியமில்லை, வேற சில காரணங்களும் மனதிலிருக்கு, முதல் நாளிலேயே அதைப்பத்தியெல்லாம் சொல்லணுமாண்ணு யோசிக்கிறேன். உங்க கணவர் என்ன செய்யறார்

– எனக்குத் திருமணமாகலை, அதிலே எனக்கு விருப்பமுமில்லை. சிமோன் தெ பொவா மாதிரி நிம்மதியா கடைசிவரை ஒற்றையா இருக்கணும்னு நினைக்கிறேன். ஜோடிண்ணு சேர்ந்தாலே, சில சுதந்திரங்களை நான் விட்டுக்கொடுக்கணும், என்னாலே முடியாது.

– அப்போ ஒரு சார்த்த்ரு கிடைக்கிறவரைக்குமென்று சொல்லுங்க

– அவங்களுடையது, மோதிரம் மாற்றிக்கொண்ட கலப்பு வாழ்க்கை இல்லை. தங்கள் அடையாளத்தை இழக்காத கூட்டு வாழ்க்கை, அவங்க இரண்டுபேருமே அவங்களாத்தான் இருந்தாங்க, நிறம் மாறலை. அந்தம்மாவோட, வாழ்க்கை, சிந்தனை, விருப்பம் எல்லாமே பெண் விடுதலை சார்ந்தது.

– அவங்களுக்குள் பல அவதாரங்கள் இருந்திருக்கு, நூல் கண்டைப் பிரிச்சு சிக்கலாக்கிக்கிட்டு, அடிக்கடி பிரித்துக்கொண்டிருக்கிறமாதிரிதான் அவங்க நடந்துகிட்டு இருந்திருக்காங்க.

– பரவாயில்லையே அவங்களைத் தெரிஞ்சுதான் வச்சிருக்கே. நான் கூட சில நேரங்களில் நூல்கண்டை பிரிச்சுவச்சுகிட்டு உட்கார்ந்திடறேன்.

க்ரோவின் சிவந்த முகத்தில் நிழல் படிந்திருந்தது. மேகத்தில் ஒளிந்த சூரியனா, பேசிய விஷயமா இதில் எதுகாரணமாக இருக்குமென்று பாவானி யோசித்தாள்.

– உண்மைதான், உனக்குள்ள வருத்தங்களை விசாரித்து ஆறுதல் சொல்ல முடியுது. தினந்தோறும் அலுவலகத்திற்கு என்னைத் தேடிவந்து தங்கள் குறைகளை சொல்கிற பலரது சுமைகளை இறக்கி வைக்கிறேன். என்னோட சுமைகளை எங்கே இறக்கி வைக்கிறது? சரி நான் கிளம்பணும் நேரமாச்சு, இன்னொரு நாளைக்கு நிறைய பேசலாம்.

திடீரென்று தும்பை அறுத்துக்கொள்வதுபோலத்தான் அவளுடைய செய்கைகள் இருந்தன. பவானிக்கும் எங்கே தேவசகாயம் வீட்டில்வந்து காத்திருப்பானோ என்கிற கவலை மனதில் அரிக்க, வீட்டிற்குத் திரும்புவதும் சரியென்றே மனதிற்பட்டது. இவர்களுடைய ஜாகைக்குத் திரும்பியதும், சாலை ஓரமாகவே காரை நிறுத்தி, பவானியும், குழந்தை ஹரிணியும் இறங்கிக் கொள்ள க்ரோ உதவி செய்தாள். பவானி காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மேலே வரலாமே என்றாள். தன் கணவன் இந்நேரம் திரும்பியிருப்பான், அவனையும் அறிமுகப் படுத்தமுடியுமென்றாள். க்ரோ இன்னொரு நாளைக்குப் பார்த்துகொள்ளலாம் என்றாள். பவானி வற்புறுத்தவில்லை. இவள் மேலே வந்தபோது, தேவசகாயத்திற்குப் புரையேறியிருந்தது, கண்களில் நீர் கொப்பளிக்கத் திணறிக்கொண்டிருந்தான். எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும் தண்ணீர் வைத்துக்கொள்ளாமல் உட்காருவதென்கிற வழக்கம். மூன்று நாட்களுக்கு முன்பு வைத்த கோழிகுழம்பு மீந்து போயிருந்தது. ருசிபார்க்காமலேயே செய்யும் கை பக்குவம் பவானிக்கு வந்திருந்தது. அவனும் அசைவமென்றால் குறைசொல்லாமல் சாப்பிடுகிறான். இவளுக்கு டப்பாவில் அடைத்து விற்கும் தயிரும், உப்புபோட்ட நாரத்தை பத்தையும் போதும், பிரான்சிலும் அதுதான் வாய்த்தது. பாட்டியின் மரணத்தோடு இவளிடத்தில் பலதும் செத்துபோயிருந்தன, அதில் நாக்கு ருசியும் அடக்கம். பாட்டிலிலிருந்த தண்ணீரை கண்ணாடி தம்ளரொன்றில் ஊற்றி எதிரே வைத்தாள். ஏதாவது கேட்பானென்று நினைத்தாள். அவன் சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தான். மூன்று ஆண்டுகள்வரை க்ரோவைபற்றிய எந்தக் கேள்வியையும் கேட்டவனில்லை, அவளும் அப்படித்தான் மாதத்திற்கு இரண்டு முறையாவது வருவாள், பவானியால் முடியாதென்றால் கூட வம்புசெய்து அழைத்துப் போய்விடுவாள், இல்லை ஹரிணியை மாத்திரம் தூக்கிக்கொண்டு போய்விடுவாள், வரும்போதெல்லாம் குழந்தைக்கான அத்தனையும் வாங்கிக் கொண்டு வந்து அசத்துவாள். அவள் அன்பைக்கண்டு உருகித்தான் போனாள். தேவசாகயத்தின் அத்தனை இம்சைகளுக்கும், க்ரோவின் அன்பு ஒத்தடமாக இருந்தது, விழுகிறபோதெல்லாம் எழுந்திருக்க முடிந்தது. “கடந்த மூன்று ஆண்டுகளில் தேவசகாயமும் க்ரோவும் எத்தனை முறை இங்கே சந்தித்திருப்பார்கள், அவர்களுக்குள் ஒரு கைகுலுக்கல், வணக்கம், உதடோடு சேர்ந்த புன்னகை, எதையாவது கண்டிருக்கிறேனா? இல்லையே. நேற்று கண்ட காட்சி: ஷர்மிளா வீட்டிலிருந்துவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தாள். வழக்கம்போல கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் சோபாவின்மேல் க்ரோவின் கைப்பையைக் கண்டுவிட்டு எங்கேயென்று அவளைத் தேடினாள், பாத்ரூமில் குரல்கேட்டது. கதவினைத் திறக்க, அடங்கி ஒலித்த உரையாடல் சட்டென்று நின்றது. தேவசகாயமும் க்ரோவும் சட்டென்று விலகி நின்றதுபோல இருந்தது. ஒருவேளை பிரமையா? நான்தான் ஒன்றுகிடக்கஒன்று கற்பனை செய்துகொள்கிறேனோ. க்ரோ, இவளைப்பார்த்து, நீ எப்போது வந்த, கதவைத் திறந்த சத்தங்கூட கேட்கலையே என்றுகேட்டபோது, அக்குரலணிந்திருந்த முகமூடியைக் கழட்டலாமா என்றுகூட தோன்றியது. “அவசரப்படாதே” என்ற உள்மனதின் குரலுக்குப் பணிந்து, “இல்லை இப்போதுதான் வந்தேன்”, என்றாள். பதிலுக்கு க்ரோ, ”ஹரிணியைப் பார்க்கலாமென்று வந்தேன், அவள் கிரெஷிலிருந்து வர நேரமாகும் போலிருக்கிறது, சனிக்கிழமை கடைக்குப் போகவேண்டுமென்றாயே, நான்கு மணிக்கு கிளம்பி இரேன், வந்திடறேன்,” என்று சொன்னவள் வழக்கத்திகு மாறாக உடனே புறப்பட்டுவிட்டாள். இவன் என்னடவென்றால் அடுக்களையை உருட்டிய பூனை ஆள் அரவம் கண்டதும் நழுவுவதுபோல நடந்துகொண்டான். க்ரோவை வாசற்கதவுவரை வழி அனுப்பவென்று, பின் தொடர்ந்தவள், அவள்போனதும், கதவைச் சாத்திக்கொண்டு திரும்பிவந்தாள். தேவா நின்றபடி இருந்தான்.

– தேவா உட்காருங்க நான் உங்கக்கிட்டே பேசணும்

– என்ன பேசணும்?

– இது எத்தனை நாளா நடக்குது?

– எது?

– என்ன உண்மையிலேயே புரியாமத்தான் கேட்கறீங்களா?

– நீ ஏதாச்சும் கற்பனை செஞ்சுக்கோ, எனக்குக் கவலையில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னாலே இப்படித்தான் பத்மா மேலே சந்தேகபட்டிருக்க, அவளும் கேள்விபட்டு இங்கே வருவதை நிறுத்திட்டா, இப்போ இந்த பொம்பிளைமேலே உனக்குச் சந்தேகம் வந்திடுச்சி. நானா அவளை நம்மவீட்டுக்குக் கூப்பிட்டுவந்தேன். நீதான் கூப்பிட்ட, அவளும் வந்தா. எங்கிட்டேடே சொல்லாமல்கூட அவகூட நம்ம குழந்தையைத் தூக்கிட்டு போயிடற, அப்போதெல்லாம் நான் ஏதாச்சும் கேட்டேனா?

அவன் பதிலில் நியாயம் இருப்பதுபோலத்தான் இருந்தது. க்ரோவோட இவளுடைய சிநேகிதத்தை ஆரம்பத்திலிருந்து கேள்வி கேட்காமல்தான் அனுமதித்து வந்திருக்கான். யாருக்காக? அவன் சொல்வதுபோல இவளுக்காகவா இல்லை…

– இல்லை நான் என்ன சொல்லவறேன்னா..

– பவானி, போதைப்பொருள் உபயோகம் என்னை மிருகமா மாத்திட்டது உண்மை, இப்ப மாறி இருக்கேன். எனக்கு என்ன தோணுதென்றால், உங்கம்மாவைபோலவே எல்லாப் பெண்களையும் நினைக்கிறபாரு அதை முதலில் நீ நிறுத்தணும்.

– என்னுடைய அம்மாவைபோல? உங்களுக்கு யார் என்ன சொன்னாங்க, என்ன தெரியும்?

– எல்லாம் தெரியும், இப்போ அதுவா முக்கியம், க்ரோவை ஏதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு கேட்டு, பிரச்சினையாக்கிடாதே. அவள் மேரியிலே(நகரசபையிலே) எனக்கு நல்ல வேலை ஏற்பாடு செய்யறேன் சொல்லியிருக்கா.

அவள் அம்மாவைப் பற்றிய பேச்சுவந்ததும், பவானி சட்டென்று அடங்கிப்போனாள், நெஞ்சு குமுறிற்று அவன் வாயை அடக்க ஏதாவது சொல்லவேண்டுமென்று நினைத்தாள். பத்மாதான், வேறுயார் சொல்லியிருப்பார்கள், அவளுக்கு போன் செய்து நாலுவார்த்தை நறுக்காய் கேட்கவேண்டுமென்று மனம் துடித்தது. தேவையா? என்றோ நடந்தது என்றாலும் உண்மை உண்மைதானே! எதற்காக தேவையில்லாமல் ஒரு வாதத்தை வளர்த்து, இருவருக்குமிடையேயான மதிற்சுவரின் உயரத்தைக் கூட்டிக்கொள்ளவேண்டும், பேசிப்பேசி கோபத்தை வளர்த்துகொள்ளவேண்டும். மதிலருகே நின்று கை நீட்டும் இந்த தேவசகாயம் இவளுக்குப் புதியவன், அவனை இக்கரைக்கு அழைத்துக்கொள்வதா இல்லை இவள்தான் அக்கறைக்குப் போவதா?

– பவானி இதைப்பற்றியெல்லாம் பேசுவதில்லை என்று தீர்மானித்துக்கொள்வோம், நம்மைச் சுற்றியுள்ள உலகம் பொய்யாகவே இருக்கட்டும், நாம் உண்மையாக இருப்போம், உண்மையாக நடந்துகொள்வோம், எனக்கும் உனக்கு இடையில் வளர்ந்துள்ள காட்டுச்செடிகளையெல்லாம் பிடுங்கி எறியணுங்கிற வெறி எனக்கு சில நாளா நெஞ்சில் புகையுது.

– தேவா நான் எதிர்பார்க்கலை, எனக்கே சில நேரங்களில் நான் காண்பது பகற்கனவாங்கிற சந்தேகங்கூட இருக்கு. எப்படி இந்த அதிசயம் நடந்தது. நீ முற்றாக மாறணுமென்பதுதான் என் ஆசை.

– நீ சந்தேகப்படற க்ரோவும் அதற்குக் காரணம். அவள்தான் போதைமருந்து தடுப்பு பயிற்சி முகாமிலே என்னை சேர்த்துவிட்டவள். என்னை நிரந்தரமா அதிலிருந்து விடுவித்துக்கொள்ளணுமென்றால், இனி நீ வேண்டும்.

அவள் கண்களையேப் பார்த்தான், பார்த்துக்கொண்டிருந்தான். இவள் கால்களுக்குக் கீழே பூமி மெல்ல இடம்பெயர்வதைப்போல உணர்ந்தாள், நெஞ்சம் வேகமாக துடிக்கிறது, விரலைபிடித்தான், கையை வாங்கினான், திரும்பிப்பார்க்காமல் நடந்தான், பின் தொடர்ந்தாள், அறைக்குள் அவள் வந்துவிட்டாளா என்பதைத் திரும்பிப்பார்த்து உறுதி செய்துகொண்டான். கதவைச் சாத்தினான். செயற்கையாய் இருளொன்று பரவி இருவரையும் சூழ்ந்தது.

– ஹரிணியைவேற போய் கூட்டிவரணும்.- பவானி

– அதற்கு இன்னும் நேரமிருக்கு

– இப்படி பகலில் எதற்கு, நான் எங்க போயிடப்போறேன்.

– நல்ல விஷயத்தைத் தள்ளிப்போடக்கூடாது.

அவள் என்னவோ சொல்ல வாய்திறந்தாள், இவன் தடுத்தான், மெல்ல அணைத்தபடி கட்டிலில் சாய்ந்தார்கள், முன்னெப்போதும் கண்டிராத வெப்பமொன்று இருவரையும் தகித்தது, படிகளை அழுந்த மிதித்து யாரோ மேலே ஏறிப்போவது துல்லியமாகக் கேட்டது. வேர்வையில் நனையும் சரீரத்தின் மணம் இருளோடு கலந்து சன்னலூடாகக் கசிந்தது. பெருமூச்சை காற்றில் கலந்தார்கள். இருவரும் வெகுதூரம், வெகுநேரம் பயணித்தார்கள், கண்ணுக்கெட்டியவரை நட்சத்திரங்கள், எது வேண்டும்? – கேட்கிறான். நட்சத்திரமல்ல நிலா வேண்டும், பௌர்ணமி நிலா – நதி- கடல் குகை-மலை- ஒவ்வொன்றாய் கடந்து மேலேமேலே எவரும் தொடமுடியாத சிகரம், அடையமுடியாத ஆழம், காணாத உலகம்- போதை -களிப்பு -பரவசம். அமுதம் சிற்றோடைபோல ஆரம்பித்து நதியாக பிரவாகமெடுத்துப் பாய்ந்து இருவரையும் நனைக்கிறது. தூக்கம் இமையை அழுத்திற்று., அயர்ந்து உறங்க வேண்டும்போலிருக்கிறது….

(தொடரும்)
nakrish2003@yahoo.fr

Series Navigation