மாத்தா ஹரி அத்தியாயம் -37

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாகட்டாயம் எனது அபிப்ராயத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா?

என்னைக் கேட்டால் அவளை ஹீரோயினா கொண்டாடறதுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதற்கான தகுதி மாத்தா ஹரி.க்கில்லை. அன்றைய பிரெஞ்சு அரசாங்கம், போரிலே ஏற்பட்ட இழப்புகளால், வெகுஜன ஆதரவை இழந்திருந்தது. பொதுமக்கள் கவனத்தைத் திசைதிருப்ப மாத்தா ஹரி கைதும், தண்டனையும் அவர்களுக்கு உதவியது. பிரிட்டிஷ் வரலாற்றிலே ஒரு மரி ஸ்டூவர்ட் மாதிரி இங்கே இவர்களுக்கு மாத்தா ஹரி. நியாயமற்று யாரைத் தண்டித்தாலும் தவறுதான். மாத்தா ஹரியுடைய சுய சரிதையை படித்திருப்பேண்ணு நினைக்கிறேன். அவள் சிறுமியாய் இருக்கிறபோது, தகப்பன் ஏற்படுத்திய கனவுவாழ்க்கை அவளையும் வசீகரிக்கிறது. அவளது தகப்பனாருக்கு வாணிபத்தில் ஏற்பட்ட சரிவும், வறுமைகாரணமாக குடும்பம் தொலைத்த சந்தோஷமும், பெரும்பான்மையோர் கொண்டாடுகிற வாழ்க்கையைத் தின்று பசியாற அவளது மனதிற்குள் ஆசை. அன்றையதேதியில் டச்சு கிழக்கிந்திய காலணிய வாழ்க்கையென்பது, ஆலந்து நாட்டின் பலரின் கனவு. ருடோல்ப் என்றில்லை, இந்தோனேசியாவில் பணிபுரியும் வேறு எந்த ராணுவ அதிகாரி கிடைத்திருந்தாலும் அவனோடு புறப்பட்டுப்போயிருப்பாள். மாத்தா ஹரியின் வாழ்க்கையைப் படித்தால், அவளுக்கு உடல் தேவையைக்காட்டிலும் மனத்தின் தேவை பிரதானமாக இருந்திருக்கிறது. இந்தோனேசியாவில் என்ன நடக்கிறது, அவளுடைய ஆசைகள் கட்டியெழுப்பிய வேகத்தில் இடிந்து விழுகின்றன.. எந்த அழகு தன்னை சிம்மாசனத்தில் உட்காரவைக்கும் என நம்பிக்கொண்டிருந்தாளோ, எந்த அழகு ருடோல்பை மோகம்கொள்ளவைத்ததோ, அந்த அழகிற்கு ருடோல்ப் கதவினை அடைக்கிறான், அவன் நட்சத்திரத்தை நிலவென்று கொண்டாடும் ரகம். உப்பரிகையில், இலவம்பஞ்சிட்ட மெத்தையில் வைத்து நிதானமாய் சம்போகிக்க உகந்த ஐரோப்பிய நிலவின்மேல் அவனுக்குத் தாபம் இல்லை. மாறாக கள்வன்போல, பின்னிரவுகளில் ஈச்சம்புதர்களுக்கிடையில் ஊர்ந்து, சரளைக் கற்களில் கால் தேய நடந்து இருள் திணிக்கப்பட்ட மேடான் குடிசைகளில், அணைந்த மண்ணெனெய் விளக்கருகே கற்றாழை மணக்கும் பெண்ணுடல்களோடு, மூச்சு கசிய அவசரமாய் கலவியை முடிக்கிறான். சிதைந்த ஆசைகளை மீட்க நினைக்கிறாள், கங்கைக்கரை இந்து தேவதை என்ற புதிய அவதாரம், புதிய ஜொலிப்பு, புதிய ஒளிவட்டம் அவள் உடலில் உட்கார்ந்துகொள்கிறது, அது தரும் போதைக்கு பல ருடோல்ப்கள் காலடியில் விழக்கூடும் என நம்புகிறாள். இம்முறை மடமட¦ன்று வெற்றிகளை குவிக்கவேண்டும், கூர்தீட்டப்பட்ட சௌந்தர்யம் திசைகளின்றி சுழல்கிறது, எதிர்ப்படுவதையெல்லாம், சில நேரங்களில் விளையாட்டாயும் வீழ்த்துகிறது, வயது பேதமில்லை, வர்க்கபேதமில்லை, தலைகள் உருளுகின்றன. பிறகு அவள் முறை:

1917ம் ஆண்டு பிப்ரவரிமாதம் 13ந்தேதி…..

போலீஸ் கமிஷனர் பிரியோலெ, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் சூழ ஷான்ஸ்- எலிஸே அவென்யூவிலுள்ள எலிஸே பேலஸ்ஸ¤க்கு வருகிறார். அவருடைய கையில் மார்கெரீத்-ழெர்த்ரூது மாக் லியோட் செல் என்ற மாத்தா ஹரியைக் கைது செய்வதற்கான உத்தரவு. கதவினைத் தட்டுகிறார். பதிலில்லை. மூன்றாவது முறை தட்டியபொழுது, கதவை உடனே திறக்கவேண்டும், இல்லையென்றால் உடைத்துக்கொண்டு நுழைவோம், என மிரட்டுகிறார். உள்ளிருந்து ஒரு பெண்மணியின் குரல். – ‘பெண்மணியொருத்தியின் படுக்கை அறைக்குள் நுழைவதற்கு தயக்கமெதுவும் இல்லையெனில் தாராளமாக வரலாம்.’, போலீஸ் பட்டாளம் உள்ளே நுழைகிறது. குற்றவியல் நீதிமன்றத்தில் கப்பித்தேன் புஷார்டோன் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறாள், விசாரணையின் முடிவில், தனது சொந்த இலாபத்திற்காக எதிரிகளுக்கு உளவு, அவர்களுடன் சேர்ந்து சதி, எனக் குற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். எட்டு வாரங்கள் விசாரணைக்கைதியாக சேன் லசாரில் சிறைவாசம். எப்பாடுபட்டாவது மாத்தா ஹரியை அவள் வாயால், தான் உளவாளி என்ற உண்மையை வரவழைக்கவேண்டுமென நினைக்கிறான். எந்த பிரெஞ்சுராணுவம் மாத்தா ஹரி தனக்காக ஜெர்மானிய அதிகாரிகளிடம் பழகி ராணுவ ரகசியங்கள் அறியப்படவேண்டும் என்று விரும்பியதோ அந்த ராணுவம், அவளை ஜெர்மானியர்களின் உளாவாளி என்கிறது. அவர்களுக்குக் கிடைத்த தகவலின்படி ஜெர்மன் ஒற்றர்படையில் H21 மாத்தா ஹரி. உண்மையா கட்டுக்கதையா? யாருக்குத் தெரியும். ஆரம்பத்தில் சொன்னதுப்போல எல்லா நாட்டு ராணுவ அதிகாரிகளோடும் அவளுக்கு அறிமுகமிருந்தது. ஸ்பெயின் நாட்டில் இருந்த பிரான்சு தூதுவரை, மாத்தா ஹரி வழக்கில் சாட்சியாக விசாரித்தபோது, அவளுக்கும் தனக்குமுள்ள நட்பை மறுக்கவில்லை, ஆனால் யுத்தங்கள் குறித்து ஒரு போதும் இருவரும் உரையாடியதில்லை, என்றார். பிரிட்டிஷ் ராணுவ கேப்டன் ஒருவன், மாத்தா ஹரி ஜெர்மன் ராணுவ அதிகாரிகளை அறிமுகப்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டியதாகக் கூறினான். குற்றவாளி கூண்டிலிருந்த மாத்தா ஹரியோ 1916ம் ஆண்டின் ஜெர்மானிய தாக்குதலுக்குத் தான் எந்தவிதத்திலும் உதவவில்லை என்கிறாள். அவள் கணக்கில் செலுத்தபட்ட 20000 பிராங், உளவுக்காக பெறப்பட்டதல்ல என்று சத்தியம் செய்தாள். இறுதிவரை மாத்தாஹரியின் காதலனா, உபாசகனா என பிறர் முடிவுக்கு வரமுடியாத வக்கில் க்ளூனேவின் வாதம், ஏற்கனவே முடிவாகிவிட்ட தீர்ப்பிற்கு எதிரே பயனற்றதாகிவிட்டது. ராணுவ மாஜிஸ்ரேட்டுகளில் ஆறுபேர் அவளைக் குற்றவாளி என்றார்கள், மாத்தா ஹரிக்கு மரண தண்டனை விதிக்கபட்டது. தண்டனை நிறைவேற்றபட்ட பிறகு மாத்தா ஹரிக்கு நிறைய அபிமானிகள். அவர்கள் மாத்தா ஹரியை தன்னை இந்துமத தேவதையாகக் கற்பிதம் செய்துகொண்டு உருவாக்கிய உலகில் சஞ்சாரம் செய்தவர்கள், அவள் மறுபடியும் உயிர்த்தெழுந்து தங்களை ரட்ஷிக்கக்கூடும் என்று நம்பினார்கள். அப்படி நடந்தால், மாத்தா ஹரி பிறந்ததாக் சொல்லிக்கொண்ட இந்திய மண்ணிலேயே அது நடக்கலாமென்று அந்தக் கூட்டம் நம்பியது. தேவசகாயத்திற்குப் பழக்கமான குளோது அத்ரியன் அப்படிப்பட்டவன்தான். பவானியைப் பார்த்த மாத்திரத்தில் மாத்தா ஹரியென்றே அந்த ஆள் நம்பியிருக்கிறான். தேவசகாயத்தையும் நம்ப வைத்திருக்கிறான். சொல்லப்போனால் அவன் மாத்தா ஹரி தீவிர பக்தனாக இருந்துகொண்டே ஆசிய நாடுகளிலிருந்துகொண்டு ஐரோப்பாவிற்கு போதைமருந்து கடத்துவதில் ஈடுபட்டானென்ற குற்றச் சாட்டு அவன் மீதுண்டு. அக் கும்பலுக்குத் தலைவனாகக் கூட இருந்தவன்.

– டாக்டர் உங்கள் பேச்சின் இடையில் குறுக்கிடுவதற்கு என்னை மன்னிக்கணும், நீங்க கூட பவானியை மாத்தா ஹரிண்ணு நம்பினதாக நம்ம உரையாடல் ஆரம்பத்திலே சொன்னீங்க.

– மறுக்கலை. ஆனால் எனது நம்பிக்கை, எனது பரிசோதனை முடிவுகள் தந்த உண்மையின் அடிப்படையில் உருவானது, முட்டாள்தனமானமானதல்ல. அவை அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் எழுந்வை.. அவற்றின் நோக்கம் மறுபிறவி கொள்கையை ஆதரிப்பதோ அல்லது மறுப்பதோ அல்ல. ஆத்மாவிற்கே இறப்பே இல்லை என்றெல்லாம் வாதிடவும் நான் தயாரில்லை. தேவசகாயமும், அவனுடையக் கூட்டாளிகளும் திரும்பத் திரும்ப அச்சொல்லை அவளிடத்தில் உபயோகித்ததால், அவள் மனம் தடுமாற ஆரம்பித்தது, மன பிறழ்வுக்கு காரணமானது. ஒரு கிரிஸ்மஸ் அன்று, எனது வீட்டிற்கு நண்பர்கள் பலரை அழைத்திருந்தேன். விருந்தினர்களில் தேவசகாயமும் குடும்பமும் அடக்கம், அன்றைக்கு நீயும் வந்திருந்தாய், க்ரோவும் வந்திருந்தாள். கேளிக்கையும் கொண்டாட்டமுமாக இரவு கழிந்துகொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் பலரும், ஏதோ ஒருவகையில் அந்த இரவுக்குக் கலகலப்பு ஊட்டினர். பவானி அமைதியாக இருந்தாள். பொதுவாக கேளிக்கைக் கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வது அவளுக்கு இயல்பு அல்ல. யாரென்று நினைவில்லை. பாவனி நன்றாகப் பாடுவாள் என்றார்கள். எல்லோரும் ஒட்டுமொத்தமாக பவானி..பவானி என்றார்கள். அவள் கூச்சப்பட்டவளாக தன்னால் முடியாது என்கிறாள். தன்னை யாரும் வற்புறுத்தவேண்டாமென்கிறாள், எனக்கும் அது சரியென்று தோன்றியது. விருப்பப்படதாவளை எதற்கு வற்புறுத்துகிறீர்கள் விட்டுவிடுங்கள், நான் இடையில் குறுக்கிட்டுச்சொல்கிறேன். எனது குறுக்கீடு தேவசகாயத்தைச் சீண்டிவிட்டிருக்கவேண்டும். எழுந்தவன், ‘நான் சொல்கிறேன் அவள் பாடுவாள்’, என்கிறான். பவானியைத் தவிர அங்கே எல்லோருமே விஸ்கி எடுத்திருந்தோம். தேவசகாயம் எப்போதும்போல நிறைய குடித்திருந்தான். போதையில் உளறுகிறான் என்றுதான் நாங்கள் முதலில் நினைத்தோம். பவானியும் அப்படித்தான் நினைத்திருக்கவேண்டும், அமைதியாக இருந்தாள். மற்றவர்களும் மௌனமானார்கள். க்ரோ குறுக்கிட்டு, வேறு யாராவது பாடுங்களேன் என்கிறாள். மீண்டும் தேவசகாயம் எழுந்து நின்றான், ‘இல்லை அவள் இன்று பாடுவாள்’, மாத்தா ஹரியென்று அழைத்து தொடர்ந்து தமிழில் என்னவோ சொல்கிறான், அவள் முகம் சிவந்துபோனது, பலரும் பார்த்திருக்க அது நடந்துவிட்டது, தனது ஆடைகளைக் களைந்துபோட்டவள், ‘மாத்தா ஹரிக்கு பாடவராது, ஆடத்தான் வருமென்று ஏறக்குறைய அரை நிர்வாணத்துடன் அவள் நந்துகொண்டவிதம் பலருகுக்கும் அன்றைக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதன் பிறகு அவள் போக்கில் நிறைய மாறுதல்கள், வழக்கமான பவானியாக அவளில்லை. எனவே க்ரோவின் ஒத்துழைப்போடு அவளுடைய மனப்பிரச்சினகளுக்கு தீர்வு காண எண்ணினேன். அதன்விளைவுதான் ஹிப்னாடிசம் மூலம் அவளை அறிய முயன்றது.

– குளோது அத்ரியன் என்பவர் பற்றியும் உங்கக்கிட்டே சில சந்தேகங்கள் கேட்கவேண்டும்., அதற்கு முன்னே, ஹிப்னாட்டிசமுறையில் பவானி அம்மாவை குணப்படுத்த முயற்சித்ததாகச் சொன்னீங்க. எனக்கும் அப்படியொரு பிரச்சினை இருக்கிறது, க்ரோ என்னை மாத்தா ஹரியுடைய குழந்தைண்ணு வர்ணித்த நாள் முதல் அவ்வப்போது மனசுலே துண்டு துண்டா சில காட்சிகள் வந்துபோகுது. சிறுவயதிலிருந்தே பிரெஞ்சு அரசாங்கத்தின் சமூக நலத்துறை காப்பகத்தில் வளர்க்கபட்டவள் நான். ஆறுவயது வரை பவானி அம்மாவோடு இருந்திருக்கிறேன். பெற்றோர்களுடன் சந்தோஷமாக எடுத்துக்கொண்ட ·போட்டோவோ, அல்லது பிரான்சுலே பெரும்பாலான வீடுகளில் இருப்பது மாதிரியான அப்பா, அம்மா, அவர்களது பெற்றோர்கள், மூதாதையர்கள் எனத் தகவல்களைக் கொண்ட ·பேமிலி ட்ரீயையோ எங்கள் வீட்டில் கண்டதில்லை. ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. உளவியல் துறையில் சேர்ந்தவர் என்பதால உங்கக்கிட்டே பேசலாமென்று நினைக்கிறேன். பவானியை என்னை வளர்த்தவளாத்தான் உணருகிறேன், எனது பிறப்பைபற்றிய நினைவு அதை உறுத்திபடுத்துகிறதென்று சொல்லலாம். ஆனால் அந்நினைவுகளில் தெளிவில்லை, எனது பிறப்பு எப்போது நடந்தது எந்த இடத்தில் நடந்தென்று சொல்லப்போதாது, ஆனால் அர்த்தமற்ற காட்சிகளாக வந்து போகின்றன. புதுமழைபோல மண்ணில் விழுந்து பரவிய வேகத்தில் உறிஞ்சப்பட்டுவிடுகிறது.

– உளவியலில் உனக்கிருக்கிற ஞாபகத்தை, உள்ளுரை ஞாபகமென்று அதாவது ஒருவகையான இம்ப்லிசிட் மெமரியென்று சொல்வார்கள். ஒருகுழைந்தைக்கு ஆறுமாதத்திலிருந்து ஒருவருடத்திற்குள் மூளையில் பதிவது. அதைப் பெரிதாக நம்புவதற்கில்லை. நீ பவானியின் குழந்தை இல்லைண்ணு சொல்ற, எனக்கு இந்தத் தகவல் புதிது. இந்தக்கேள்வியை நீ என்னிடத்தில் கேட்பதற்கு எனது உளவியல் அறிவு காரணமாக இருக்குமென்று நான் நினைக்க இல்லை. பவானி என்னிடத்தில் இதுபற்றி பேசியிருப்பாள் என்கிற சந்தேகம், உனக்கு இருக்கிறது. நாங்கள் உனது பிறப்பு குறித்தெல்லாம் பேசியதில்லை. ஆனால் பவானி உன்னை மிகவும் நேசித்தாளென்று உறுதியாகச் சொல்லமுடியும். உனது பிறப்பு பற்றிய கேள்விக்குப் பதில் சொல்லகூடியவர்களென்றுபார்த்தால் தேவசகாயத்தைத் தவிர வேறொருவர் இருக்க முடியாது.

– குளோது அத்ரியன் பற்றி சொல்லுங்க, உங்கக்கிட்டே பேசணும்சொல்லும்போது அவர் போதைப் பொருள் கடத்தினார்னு சொன்னீங்க. மாத்தா ஹரி மறுபடியும் பிறந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் குளோது அத்ரீயன் இந்தியாவுக்கெல்லாம் போனதாகச் சொன்னீங்க. அப்போ க்ரோ சொல்வதுபோல மாத்தா ஹரி என்றபேரில் இயங்குகிற சமயக்குழுவுக்கும் அவருக்கும் தொடர்பிருக்குமா? பிறகு க்ரோ கூட தேவசகாயத்தைச் சந்திச்சா மாத்தா ஹரியுடைய மண்டையோட்டைப் பற்றி விசாரிக்க சொன்னாங்க, அதைத் திரும்பவும் பிரெஞ்சு அரசாங்கத்துகிட்டே ஒப்படைத்துவிடுவது நல்லதென்ற தொனியிலே பேசினாங்க..

– க்ரோவுக்கு உன்மேலே நிறைய அக்கறை இருக்கிறது. பவானிக்கு நேர்ந்தது கொலைண்ணு நீ நம்பறே இல்லையா அதுபோல எதுவும் நடந்திடக்கூடாதென்ற அக்கறையில் அவங்க சொல்லி இருப்பாங்கண்ணு நினைக்கிறேன். அவங்க நம்புவதுபோல அந்த சமயக்குழுவிடம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லதுதானே? தேவசகாயத்தை எப்போது போய் பார்க்கப்போறே? பார்த்தால் அவனிடத்தில் அதுபற்றி கேளேன். இல்லை வீட்டில் தேடிப்பாறேன், எதற்கு வம்பு?

– பவானி அம்மா இறப்புக்கும் இப் பிரச்சினைக்கும் என்ன தொடர்புகள் இருக்குமென்று என்பது புதிராக இருக்கிறது. சொல்லப்போனால் நான் சந்திக்கின்ற பலரும் இதுபற்றித்தான் என்னிடத்தில் பேசுகிறார்கள், எனக்குப் பல இடங்களிலிருந்து அதற்கான நெருக்கடிகள் வருகின்றன. மாத்தா ஹரிக்கு நேர்ந்த மரனத்தின் அடிப்படையில் பவானியின் முடிவு தற்கொலை அல்ல என்று நினைத்ததுபோக இப்போது மாத்தா ஹரியின் மண்டையோடு காணாமற்போனதற்கும் பவானியின் மரனத்திற்கும் சம்பந்தமிருக்குமாவென நினைக்கிறேன். டாக்டர் ஒரு சந்தேகம் இணைய தளங்களில் இரண்டாவது வாழ்க்கை அப்படிண்ணு ஒரு வலைதளம் இருக்கிறதே அதைப்பற்றி ஏதாச்சும் கேள்வி பட்டிருக்கீங்களா?

– இல்லை கேள்விப்பட்டதில்லை. மன்னிக்கணும் ஹரிணி எனக்கு நிறைய அப்பாய்ண்ட்மெண்ட்டுகள் இருக்கு. இன்னொரு நாளைக்கு மறுபடியும் வாயேன் நிறைய பேசலாம்.

– ஓகே டாக்டர் உங்கள் நேரத்தை வீணடித்துவிட்டதாக நினைக்கிறேன். நீங்கதான் என்னை மன்னிக்கணும், நன்றி

– பரவாயில்லை உன்னைச் சந்திக்கணும் என்பதில் உண்மையில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அடுத்தமுறை வருகிறபோது உனது இந்திய நண்பனை அறிமுகப்படுத்து.

– கண்டிப்பாக, அப்போ நான் கிளம்பறேன்.

இருவரும் கை குலுக்கிக் கொண்டனர். டாக்டர் பிலிப் வாசல்வரை வந்து வழி அனுப்பிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டார். ஹரிணி தனது காரை அடைந்து, முன்பக்கக் கதவைத் திறந்துகொண்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தாள். அவளது காருக்குமுன்பு காலியாகவிருந்த இடத்தில் சர்ரென்று ஒரு கார் இவளுடைய வாகனத்தில் மோதுவதுபோல வந்து நின்றது. ஒருவன் அவசரமாக காரிலிருந்து இறங்கிக் கதவைச் சாத்துகிறான், போன வாரத்தில் ஸ்ட்ராஸ்பூர் ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு அரவிந்தனோடு போயிருக்கையில் அவனைப் பார்த்த ஞாபகம். பிலிப் பர்தோ வீட்டின் கதவின் அழைப்பின் மணியை அழுத்திவிட்டு அவன் காத்திருப்பதும், கதவினைத் திறந்து டாக்டர் பிலிப் பர்தோ கைகுலுக்கி வரவேற்பதையும் பார்க்க முடிந்தது. கைத் தொலைபேசி ஒலித்தது. எடுத்தாள், மறுமுனையில் அரவிந்தன் பேசினான்.

– ஹரிணி உன்னை அவசரமாகப் பார்க்கவேண்டும். உங்க அம்மா பிரண்டு பத்மாவைச் சந்திச்சேன். நிறைய விஷயங்கள் பேச இருக்கு. நாளைக்குப் பாரீஸ¤க்கு புறப்பட்டு வரமுடியுமா?

– நாளைக்கா, இந்த மாதம் நிறைய விடுமுறை எடுத்திட்டேன். ஞாயிற்று கிழமைவரை பொருக்கமுடியுமா? எனக்கும் உன்கிட்டே சொல்லிக்கொள்ள விஷயங்களிருக்கு.

– இல்லை எனக்குப் பொறுமை இல்லை. எப்படியாவது உங்க பாஸை சமாளி. நீ சொன்னால் அந்த ஆள் கேட்பாண்ணு சொல்லி இருக்கிற, புறப்பட்டுவா.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா