மாத்தா-ஹரி – அத்தியாயம் 9

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


டிராக்குலா.கம் அலுவலகம், ஸ்ட்ராஸ்பூர் நகரத்திற்கு தெற்கில், என்சைம்(Entzheim) பகுதியில் இருக்கிறது. அதாது ஸ்ட்ராஸ்பூர் நகரின் பன்னாட்டு விமானதளத்திற்கு அருகில். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த பிரெஞ்சு ராணுவக் குடி இருப்புகளை அகற்றிவிட, பெரும்பாலான கட்டிடங்களைப் பிரபல ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களும், கார்கோ விமான நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்து, அலுவலகங்களுக்கும், பண்டகச்சாலைகளுக்கும் உபயோகித்து வருகின்றன. கைவிரல்களைக் காவி வண்ணத்தில் குவித்து நனைத்து, ஆங்காங்கே தொட்டு எடுத்ததுபோல, இரண்டு அல்லது மூன்று மாடிக்கட்டிடங்கள். பழகியவர்களைத் தவிர மற்றவர்கள் குறைந்தது மூன்றுதரம் சுற்றிவரவேண்டும். என்சைம் •பிரெட், எனத் தகவற்பலகை வைத்து, எண்களைக் குறிப்பிட்டு, வரைபடம் வைத்திருந்தாலும், கண்டுபிடிப்பது அத்தனை சுலபத்தில் இல்லை. ஹரிணியே பலமுறை கவனமின்றி அதைக் கடந்து சென்றுவிட்டு திரும்பக் காரைக் கொண்டுவந்து நிறுத்துவாள். பலருக்கும் அப்படியான அனுபவங்கள் அங்கே இருந்தன. முதல் உலகபோருக்குப் பின்னே ஓர் அவசரத்தில் பிரசவிக்கபட்ட கட்டிடங்கள், ஆயிரம் சதுர மீட்டர் இடம், எழுநூற்றைம்பது யூரோவுக்கு மாத வாடகைக்குக் மலிவாகக் கிடைத்தது. கூடுதலாக, காவல், வெளிப்பராமரிப்பு, நகரசபை வரியென்று ஒர் இருநூற்றைம்பது யூரோ, வழக்கம்போல இம்மாதிரியான நிறுவனத்தினைக் கட்டித் தீனிபோடவென்று இருக்கவே இருக்கின்ன மற்ற செலவுகள். சிரில் படித்தது என்னவோ பாரீஸ் அருகே, எவ்ரி பல்கலைகழகத்தில். உயிரியல்துறையில் பொறி இயல் படித்துவிட்டு, குதிரைப் பண்ணையொன்றில் காயடித்துக் கொண்டிருந்தவன், இதர சந்தோஷங்களை மறந்து, வீட்டில் கணிணி முன்னால் உட்காரப்போக டிராக்குலா.கம் யோசனை, அவ்வபோது வந்துபோனது. ஒரு கட்டத்தில் குதிரையின் பலானதுகளைப் பிடித்து அலுத்துப்போக, இனி டிராக்குலாவை ஒரு கை பார்ப்பதென்று முடிவெடுத்துவிட்டான். பிறர் குருதியை அளவாய் குடிக்கக் கற்றிருக்கிறான். அவர்களாய்த் தேடி வருகிறார்கள். இந்தத் தேதியில் எல்லாம் சுபம்.

ஹரிணி அனாலிஸ்டு புரோகிராமர் என்ற பேரில், வெளி நிறுவனங்களிலிருந்த்து வரும் தகவல்களை செர்வரில் ஏற்றுகிறாள். சிக்கல் வருகிறபோது, அவளுக்குமேலே ‘டேட்டாபேஸ் எஞ்ஜினியராக’ அல்பெர்ட்டோ என்கிற இத்தாலியன். சோனியாகாந்தியை இந்தியாவுக்கு அனுப்பிவைத்ததற்காக இத்தாலிக்கு ஹரிணி வரவேண்டும், என நேற்றுவரை புலம்பிக்கொண்டிருந்தவன், கடந்த சில நாட்களாக ஹரிணிமீது சிரிலிடம் எதையாவதுப் போட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

காலையில் க்ருவாசான் (1) உடன், ஒரு கோப்பை நிறையக் கறுப்புக் காப்பியையைக் குடித்திருந்தபோதும், உடலிற் கண்ணாமூச்சி ஆடுகிற சோர்வினை இனங்காண முடியாமல் இருக்கிறாள். இரண்டொ¡ரு முறை மதாம் குரோ போனில் தொடர்புகொண்டிருந்தாள். இவளுக்கும் அவளை மறுபடியும் பார்க்கவேண்டும்போல இருக்கிறது. ஏனோ தவிர்த்துவிட்டாள். வழக்கத்திற்கு மாறாக இன்று, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அணிந்து அலமாரியில் தொங்கிக்கிடந்த சிவப்பில் வெண்புள்ளிகளிட்ட கைகளற்ற கவுண் ஒன்றையே அணிந்துகொண்டாள். கவுணை எடுக்கும்போதுதான், அம்மாவின் பழைய பழைய கர்னே(2) ஒன்றை நேற்று கண்டெடுத்ததும் ஞாபகத்திற்குவந்தது. இதுவரை ஹரிணி புரட்டியிராத எ•ப். ஸ்காட் •பிட்ஜெரால்டுவின் ‘திஸ் சைட் ஆவ் பாரடைஸ்’ என்ற நாவல், அதன் அடியிற் இருந்தது. புரட்டினாள். தமிழில் நிறைய குறிப்புகள். சிலவற்றை சிரமப்பட்டு படித்துப் பார்த்தாள். சட்டென்று எதுவும் விளங்கவில்லை. அதை அமைதியாக உட்கார்ந்து படிக்கும் மனநிலையும் அவளுக்கில்லை. ஆனால் கடைசிப் பக்கத்தில் பட்டியலிட்டிருந்த பெயர்களும் அவைகளுக்கு எதிரே குறித்து வைத்திருந்த தொலைபேசி எண்களும் முக்கியமாகத் தெரிந்தன.

1. மதாம் குரோ- 03 88 68 17 50
2. மதாம் ஷர்மிளா பூபெல் – 03 88 28 64 33
3. மிஸியே குளோது அத்ரியன் 03 88 67 56 24
4. மிஸியே பிலிப் பர்தோ 03 88 00 45 90
5. மதாம் பத்மா சந்திரன் 01 95 70 44 32
6. மிஸியே நாகரத்தினம் கிருஷ்ணா 03 28 65 66 44

அவள் எதிர்பார்த்ததுபோலவே மதாம் குரோ பெயரை முதலிற் பார்க்க ஆச்சரியம். மிஸியே நாகரத்தினம் கிருஷ்ணாவையும் கிட்டத்தில் பார்த்திருந்தாள். அவர், அம்மாவைத் தனக்கும் தெரியுமென்று ஒருமுறை பல்பொருள் அங்காடி ஒன்றில் பார்த்தபோது, ஹரிணியிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தெரிவித்திருந்தார். ஏதோ கொஞ்சம் எழுதுபவராம். அந்த வகையில் அம்மா அறிமுகமாம். இந்தியாவில் இருந்தேபோதே அம்மா பழக்கமென்றார். அவசியம் வரிசையாக ஒவ்வொருவரையும் பார்த்தாக வேண்டும் என முடிவெடுத்து, கர்னே’யை மறக்காமல் இன்றைக்கு அலுவலகத்திற்கு கொண்டு செல்ல இருக்கிற கைப்பை எதுவென்று பார்த்து அதில் நேற்றே எடுத்துவைத்திருந்தாள். அறையை இழுத்து ஒரு முறைக்கு இரண்டுமுறைபூட்டிவிட்டு, லிப்ட் பிடித்து கீழே இறங்கினாள். காரை எடுத்துக்கொண்டு வெளியில் வர, ஏப்ரல்மாதத்தில் இத்தனை வெயிலைக் காலைநேரத்தில் கண்டதில்லை. ஓட்டுனர் இருக்கைக்குப் பக்கத்திலிருந்த கதவின் கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டாள். கண்களில் காலைச் சூரியன் பிரகாசமாய் நிரப்ப, அதற்கானதை இறக்கி ஒதுக்கினாள், பரவாயில்லை போலிருந்தது. சமிக்ஞை விளக்கைக் கடந்து இடப்புறம் அதிவிரைவு சாலை எண் 35 எடுக்க, சாலை ஸ்தம்பித்திருந்தது. அலுத்துக்கொண்டாள். வழக்கத்திற்கு மாறாகத் தனது அலுவலகத்தை அடைய கூடுதலாக இருபது நிமிடங்கள் தேவைபட்டன. எப்போதும்போல வரவேற்பில் பற்களுக்கிடையில் நகத்தைப் பராமரித்துக்கொண்டிருந்த ஜெனி•பருக்கு ஒரு ‘போன்ழூர்’-காலை வணக்கம். இருக்கையில் உட்கார தலை பளுவாக இருந்தது. பக்கத்து இருக்கையில் கமீலாவைக் காணோம். மறுபடியும் ஒரு காப்பிக் குடிக்கவேண்டும் போலிருந்தது. தலையைப் பிடித்துக்கொண்டு கணிணியைப் போட்டாள். திரையில்..”என்ன ஆச்சரியம்!.. தொப்புழ்க் கொடி அறுபடாமல், கைகால்கள் குவித்து, சிசுவொன்று, மூடிய விழிகளுடன், இரத்தத்தில் தோய்ந்து …அந்த முகம்… ஹரிணி! ஆமாம் அது நீயேதான்.” என வரிசையாக மதாம் குரோ பேசிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்து மறைவதுபோலத் தோற்றம். தன்னைச் சுதாரித்துக்கொண்டு பார்க்கிறாள். அப்படி எதுவுமில்லை. கற்பனை, என்று புரிந்ததும் நிதானத்திற்கு வந்தாள். வேலையில் தொடர்ந்து ஈடுபடமுடிந்தது. இடையிற் திரும்பிப் பார்க்க பக்கத்து இருக்கையில் ‘கமீலா’. அவளைப் பார்த்துப் புன்னகைக்க, பதிலுக்கு அவள் கையை அசைத்தாள். அவளுக்கும் இன்றைக்கு இரண்டு நிறுவனங்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

கடந்த சில தினங்களாவே, மதாம் எலிஸபெத் க்ரோ தன்னை மாதாஹரியின் குழந்தையாக உருவகித்து கூறிய சொற்கள், ஹரிணியின் உடலிற் தொடர்ந்து சிலிர்ப்பினை ஏற்படுத்துகின்றன. அதைத் தவிர்க்க போர்வையைப்போல, இவளோடு அவள் ஒட்டிக்கொண்டதும், அறிந்திராத அரக்கு மாளிகையில் இவளைத் தள்ளியதும், தணலில் வெந்ததும், மெல்ல ஏதோஒன்று இவளிடத்தில் விடுபட அவ்வெப்பம் தணிந்ததும், மீண்டும் ஊமை வலிகளுடன் குளிர்காய நினைப்பதும் தொடர்கிறது. நேரத்தைப் பார்த்தாள், இன்னும் இரண்டு மணி நேரம் அலுவலகத்தில் தாக்குப் பிடிக்கவேண்டும். முடியுமா? என்று தெரியவில்லை. வீட்டிற்குத் திரும்பும் வழியில் மதாம் ஷர்மிளாவைச் சென்று பார்க்கவேண்டும். என்று வேறு தீர்மானித்திருந்தாள்.

இவள் பார்வை விளிம்புகளில், இமைமயிர்களில் இடைவெளிகள்தோறும் எந்நேரமும் கைகால்களை உதைத்துக் கொண்டிருக்கும் சிசுவைப் பார்க்க ஹரிணிபோலத்தான் இருக்கிறது.

உப்பிய கன்னம், நெற்றியில் ஆரம்பித்திருக்கும் தலைமயிர், தடித்திருக்கும் கீழுதடு, கறுத்த புருவங்கள், பெரிய கண்கள் அவள்தான். செவிலித்தாதியொருத்தி சிசுவை வாங்கிக் கொள்கிறாள், அவள் புடவை கட்டி இருந்தது ஆச்சரியமாக இருந்தது. உடலில் ஒட்டிக்கிடந்த கொழகொழப்புகளையும் இரத்தத்தையும் வழித்துவிட்டு, தொட்டித் தண்ணீரில் அமுக்கி எடுக்கிறாள். குழந்தையின் உடற்கூட்டிலிருந்து நீர் சொட்டச்சொட்ட தாதிப்பெண்மணி, தனது பெரிய மார்பில் அணைத்தபடி எடுத்துவர, ஹரிணியின் உடற்கூடு எழுந்து அடங்குகிறது. இவளுக்கு மூச்சுத் திணறுகிறது. தொப்புழ்க் கொடியை வெட்டி எடுத்தவள், என்னவோ செய்கிறாள் இவளுக்கு சுரீர் என்கிறது, அலறி அழுகிறாள். கட்டிலில் போட்டிருக்கிறார்கள். அருகில் முகமற்ற பெண், மெலிந்த கையொன்று வாஞ்சையோடு தலையைத் தடவுகிறது. வெப்பத்துடனான அவளது கண்ணீர்த் துளிகள், ஹரிணியின் தலைமயிரை நனைத்து, பின்னர் கபாலத்தில் இறங்குகிறது. இவள் முகத்தை வெதுவெதுப்பாய் ஏதோ ஒன்று அணைத்துக்கொண்டு விலகாமல் தவிக்கிறது. அதன் தவிப்பை உணர்ந்தவளாக, இவள் அதரங்கள் இரண்டும் முட்டுகின்ற சதைப்பிண்டத்தை நிமிண்டுகின்றன. முகமற்றப்பெண் தனது மார்போடு இவளை மேலும் இறுக்க, அவசரத் தேடலில் சிக்கிய பொருளை, வாய்கொள்ள கவ்வினாள். வெண்ணிற திரவம் அவள் நெஞ்சத்தில், இவள் உடற்கூட்டில், பெண்மணியின் மேலாடையில், இவள் உதட்டோரங்களில் கசிந்து, நனைத்து, திரைந்தபால் நாற்றம் வெளியை நிரப்புகிறது, களுக்கென்ற சத்தம், பாலெடுத்திருந்தாள். மேசையில் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் வெண்ணிற திரவம். காகிதக் கைக்குட்டைகளில் ஒன்றை உருவினாள், துடைத்தாள். பிறகு மற்றொன்றை அதே வேகத்தில் உருவ, பக்கத்து மேசையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த ‘கமிலி ஓடிவந்தாள்’. மூக்கிலிருந்த கண்னாடி கீழே விழுந்துவிடும் என்பதுபோல, அதை நிமிடத்திற்கொருமுறை, எடுப்பதும் திரும்ப வைப்பதுமாய், பேச ஆரம்பித்தாள்.

– உனக்கு என்ன ஆச்சு, இரண்டு நாளா முன்னைப் போல இல்லை. விடுமுறை எடுத்துக்கிட்டு இரண்டு நாள் ஓய்வெடுக்கிறதுதானே, தொக்தரைப்-டாக்டர்- போய்ப் பார். உன்னை யாரோ தப்பா மாற்றி இருக்காங்க..

– என்ன சொல்ற?

– தவறான பழக்கத்துக்கு அடிமையான மாதிரி தெரியுது..

– புரியலை..

– ஏதோ போதைப்பொருளுக்கு அடிமையான மாதிரி, பிறகு பேசுவோம். ஜெனி•பர் வறாள்.

– மத்மசல் ஹரிணி, உங்க போனைச் சரியாய் வைக்கலைண்ணு நினைக்கிறேன். சிரில் உன்னை வந்து பார்க்கச் சொன்ன்னார்.-ஜெனி•பர்.

– கமிலி- அப்புறம் பேசுவோம், சிரிலைப் பார்த்துட்டு வந்துடறேன்.

– டாய்லெட்டுக்குப் போயிட்டு முகத்தைக் கொஞ்சம் நல்லா வச்சிகிட்டுப் போ..

– ஓகே.. வறேன். என்று டாய்லெட்டுக்குள் நுழைந்தவள், தன்னிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் கமிலியால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு நம்பினாள். அம்மாவைப் பற்றிய ஆரம்பம் தனக்குள் இப்படியொரு விளைவை நிகழ்த்தமுடியுமா என்ற கேள்வி. இதில் மதாம் குரோவுக்கும் பங்கிருக்கிறது. அவளைச் சந்தித்த தினத்திலிருந்து உடல் நமநமவென்கிறது. அவள் கூப்பிட்டாளென்று போனது தவறோ? இந்த நேரத்தில் அம்மாவை எவர் நினைவூட்டினாலும், அவர்கள் இவளுக்கு வேண்டியவர்கள்- தவிர்க்க முடியாதவர்கள். நினைவு கூட ஐம்புலன்களிகளில் ஒன்றாக இவளது உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் பின்னூட்டாக இருந்தபடி காரியம் ஆற்ற இவள் உடன்படுகிறாள். அவசரமாய் டாய்லெட் கண்ணாடியில், முகத்தைத் திருத்திக்கொண்டு, வெளியே வந்தவள், கமிலாவைபார்த்து, கீழுதடை இறக்கி, கண்க¨ளை உயர்த்தி, புன்னகைத்து விட்டு, முழுக்கைச் சட்டையை மடித்துக்கொண்டு மீண்டும் வலது கையினாற் தலைமுடியை ஒழுங்கு படுத்தியபடி, நிர்வாக இயக்குனரான சிரில் அறைக்குள் நுழைவதற்கு முன் கதவைத் தட்டினாள்.

– ‘உய்- வரலாம்- என்பது போல உள்ளிருந்து குரல். ஹரிணி கதவைத் திறந்து பின்னர் பின்புறம் சாத்திக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

– போன் ழூர் – ஹரிணி. உட்கார்.

– போன்ழூர்.. என்ன?

– உன்னைத்தான் கேட்கணும் என்ன ஆச்சு? நேற்று டி.என்.டி. எக்ஸ்பிரஸ் நிறுவனம், வணிகவியல் பொறி இயல் வல்லுனர்களுக்கான தகுதிகள் என்ற இடத்திலே ‘மிஷெலன் நிறுவனம்’ கேட்டிருந்த கல்வித் தகுதிகளைக் கணிணியில் ஏற்றி இருக்க. டி.என்.டி. நிறுவனத்திலே இருந்து காலையிலேயே அடுத்தடுத்து போன்கால்கள். உனக்குத் தெரியாதா என்ன. நாம வளர்ந்துவர நிறுவனம். இப்படி இரண்டு முறை நடந்தால்போதும், மறுபடியும் நான் குதிரைக்குக் காயடிக்கத்தான் போகணும். நம்ம நிறுவனத்திலே விற்பனைத் துறையில இருக்கிற சிலருக்கு உன்னைக் கண்டாலே ஆகலை. நீ என்னோட தோழி என்பதாலே, அவங்க அமைதியாக இருக்காங்க. கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க. சரி இந்தவார இறுதியில் என்ன திட்டம் வச்சிருக்கிற. போன வாரத்தைப்போல ஏதாச்சும் சாக்குப்போக்குச் சொல்லிடாதே. உனக்குப் பிடித்த சீன உணவு விடுதியிலே வழக்கம்போல இரண்டுமேசைகள் சொல்லிவச்சுட்டேன்.

– இந்த வாரமும் என்னால் முடியாது.

– இல்லை நீ வர..

. பார்ப்போம்.. பிறகு சொல்றேன் – என்று ஹரிணி எழுந்திருக்க, அவனும் எழுந்துகொண்டான், எக்ஸிக்கியூட்டிவ் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவளிடம் ஓடிவந்தான். வந்தவேகத்திலேயே, அவள் தலையை இரு கைகளிலும் வாங்கி முத்தமிட்டவன், வலது கையை ஹரிணியின் மார்பில் இறக்கினான். அவன் மார்பிலிருந்து அளவுக்கதிகமாக வெளிப்பட்ட ‘சேனல் 5’ வாசனை, இவளுக்குத் திகட்டியது. வரவேற்பில் இருக்கும் ஜெனி•பர் உபயோகிக்கும் பர்•யூம்., அருவருப்பாக இருந்தது. இவள் விலகிக்கொண்டாள்.

– வேண்டாம் சிரில். என்னை விட்டுடு, நான் போகணும் என்றவள், அவனது பதிலுக்குக் காத்திராமல் கதைவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள்.

– என்ன சிரில் ஏதாச்சும் சொன்னானா?

– தப்பு என்னுடையதுதான். டேட்டாபேஸ் எண்ட்ரியை மாற்றிப்போட்டிருக்கேன். ஏதோ நல்ல மூடில் இருந்திருக்கான்போல, விட்டுட்டான்.

– அதற்குப் பரிகாரமா ஏதாச்சும் எடுத்துக்கிட்டிருப்பானே? நமட்டு சிரிப்புடன் கேட்டாள். என்னைப்பாரு மேலே எதுவுமில்லை, ரொப்பச் சுலபம்..ம்..ஒருத்தனும் தொட்டுபார்க்கமாட்டேங்கிறான்.

சட்டென்று ஹரிணி அவள் மார்பைப் பார்த்துவிட்டு, எதையோ சொல்ல நினைத்தாள். தவிர்த்தாள்

– கமிலி வேலையைப் பாரு. நான் இன்றைக்கு நான்குமணிக்கெல்லாம் கிளம்பணும்.

பாஸ் சிரிலைப் பார்க்கபோன நேரத்தில் கணிணி, அலுத்துப்போய் குறட்டைவிட்டபடி இருந்தது. உறக்கத்தைக் கலைத்தாள். கோப்பைச் சுட்டினாள். டி.என்.டி. எக்ஸ்பிரஸில் கேட்டிருந்த கமர்ஷியல் இஞ்சினியர் பணிக்கு, விற்பனைத்துறைஇயலில் பொறி இயல் பட்டமும், ஐந்து ஆண்டு அனுபவமும் தேவைபட்டது. ஆனால் ‘மிஷெலன் நிறுவனத்திற்கு, விற்பனைத்துறை தலைமைக்கு உதவியாளர்கள் வேலைக்குக் கேட்டிருக்கிறார்கள், தகுதி: அனுபவமற்ற ஆரம்பநிலை பொறியாளர்கள். அதைச் செய்து முடிக்க, இவள் நினைத்ததற்கு மாறாக ஐந்து மணி ஆகிவிட்டது. இவளை அதிகாரம் செலுத்தும் இடத்திலிருக்கும், ‘ஆல்பெர்ட்டே’¡விடம் காட்டவேண்டும். அதற்கெல்லாம் நேரமில்லை. கைப்பையைத் திறந்து, பட்டியலில் இரண்டாது இடத்திலிருந்த மதாம் ஷர்மிளா சந்திரனுக்குத் தொலைபேசியில் பேசினாள்.

மறு முனையில், இவள் பயந்ததுபோல எதுவுமில்லை. தொலைபேசியில் கேட்ட நடுத்தர வயது பெண்மணியின் குரல் இவள் எதிர்பார்த்த குரல் என்பதில் சந்தேகமில்லை.

– மதாம் ஷர்மிளா

– உய்(ஆமாம்)?

– என்னுடைய பேரு ஹரிணி, என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் எங்க அம்மாவை உங்களுக்கு நன்றாகத் தெரியுமென்று நினைக்கிறேன்.

– யாரும்மா?

– அவங்க பேரு பவானி, அதாவது பவானி தேவசகாயம். அவங்ககூட தற்கொலை பண்ணிகிட்டதா கேள்விப்பட்டிருப்பீங்க..

– ஆமாம்மா.. பவானி பெண்ணா நீ. சின்ன வயசுல பார்த்தது. இப்ப எங்க இருக்க?

– இங்கேதான் ஸ்ட்ராஸ்பூர்ல ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறேன். நேற்றுதான் எதிர்பாராதவிதமா உங்கள் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்தேன். சந்தேகத்தோடுதான் எடுத்தேன். பல வருடம் ஆயிட்டுது இல்லையா, இன்னமும் இந்த எண்ணில் இருப்பீர்களா என்று சந்தேகம்.

– எங்கே போறது? இங்கேதான் இருக்கிறேன். ஒரு தடவை வீட்டுக்கு வந்து போயேன்.

– ஆமாம் எனக்கும் வந்தாகணும். சொல்லப்போனால் உடனே பார்த்தாகணும், சாயந்திரம் உங்களுக்கு வேறு பிரச்சினைகள் இருக்கா? இல்லைண்ணா சுமார் ஆறுமணி வாக்கில் வந்திடுவேன். எங்கே இருக்கீங்க?

– ஹோத்பியர்லதான் பதினைந்து வருஷமா இருக்கிறோம். மாய் கதரீன், புல்வார் விக்தோர் ஹியுகோவில 35ம் எண் கட்டிடம், இரண்டாவது மாடியில இருக்கிறோம். அதாவது ஒப்பித்தாலுக்கு வலப்புறம், ‘சுமா’ கடை இருக்கிறதே அதுக்குப் பின்னால்.

– ஓகே.. மதாம்.பிரச்சினைஇல்லை கண்டுபிடித்துவிடுவேன். அரைமணிநேரத்துல வந்துடறேன்.

– வீட்டுலதான் இருப்பேன். எங்கே போயிடப்போறேன். வா..வா.. எனக்கும் உன்னை பார்க்கணுங்கிற ஆசை இருக்கு. எதிர்பார்த்துக்கிட்டிருப்பேன்.

‘நன்றி’ என பிரெஞ்சில் தெரிவித்துவிட்டு, கைக்காடிகாரத்தைப் பார்த்தாள் மணி ஐந்தே கால் என்றிருந்தது. கமிலாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள். சக ஊழியர்கள் ஒவ்வொருவராகப் புறப்பட்டுக்கொண்டிருந்தனர். பார்க்கிங்கில் இருந்த தனது ‘•போர்டு கியா’ காரைக் கண்டுபிடித்து, வெளியில் வந்தாள். சாலையில் காலை வரும்போதிருந்த வெயில் இல்லை. வானில் ஏர்பிரான்ஸ் விமானமொன்று விமான தளத்தில் தரை இறங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. 90கி.மீ வேகத்தில் வாகனத்தைச் செலுத்தி, அதிவேகச் சாலை எண் 35 எடுத்து, எதிரே ‘ஹோத்பியர் ‘ எக்சிட் வெள்ளைப் பலகை தெரிகிறதா எனப் பார்த்துக்கொண்டுவந்தாள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் எதிர்பட்டது. அதிவேக சாலையைவிட்டு வெளியில் வந்து நிதானமாக ஊர்ந்தாள். எதிர்ப்பட்டவர்களும் இவளைப்போலவே தங்கள் தங்கள் வாகனங்களில் நிதானமாக எதிர்கொண்டார்கள்.

சாலைகளில் மக்கள். பிரான்சில் குளிர்காலத்தை வழி அனுப்பிவிட்டு, வசந்த காலத்தில் காலடி எடுத்துவைப்பதற்கான அடையாளம், உடையில் வெளிப்பட்டது. தடித்த, பெரும்பாலும் நீண்ட, கறுப்புவகை பெரிய ஆடைகளைத் தவிர்த்துவிட்டு, பெரியவர்கள் முதற்கொண்டு மெல்லிய, குட்டையான, முடிந்த அளவு உடலைக் காட்சிப்படுத்திக்கொண்டு நடந்தார்கள். பிரான்சில் இளம் பெண்கள் ஆடைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், ஹரிணி அறிந்தவள்தான், அவள் உடுத்தாததா? மேற் சட்டைகள் முடிந்த அளவு சுருங்கிப்போகும், கவர்ச்சிக்கு முக்கியத்துவம், கைகளற்ற சட்டைகள், இலைமறை காய்களாக மார்புகள் குலுங்க, தொப்புளில் வளையம் சிரிக்க, முன்பாதி மின்பாதியாக மூச்சு அவிழும் டெனிம். பையன்களும் இளைத்தவர்களா என்ன, பொத்தான்கள் இருந்தாலும் ஒருவனும் போட்டதாக இல்லை. மார்பில் சுருள் சுருளான மயிற்கண்கள் தெரிய நடக்கிறார்கள். ஜிம்முக்குப் போகும் பையன்கள் என்றால், புடைத்துக்கொண்டிருக்கும் தங்கள் கைகளை நிமிடத்திற்கு ஒரு முறை உயர்த்தியபடி நடக்கிறார்கள். சிலருக்குப் போலோ பிடித்திருக்கிறது. பெண்களின் அத்தனை கற்பனைக்கும் வழிகோலுவதுபோல இடுப்போடு ஒட்டிய ஜீன்ஸ் அல்லது லொடலொட சம்மர் காட்டன் வகை பாண்டாகூர், பெர்முடா… பிள்ளைகள் நடையில் ஆர்வம், இளைஞர்களின் நடையில் துள்ளல், பெண்களின் நடையில் இனிமை, முதுமைகள் நடையில் அலுப்பு..

ஹரிணிக்கும் காரை எங்கேயாவது நிறுத்திவிட்டு ஆசைதீர நடக்கவேண்டும் போலிருக்கிறது. மிமோசா மரங்கள் மஞ்சளாய் பூத்திருந்தன. சிவப்பும் ஊதா நிறத்திலும் கொக்கலிக்கோ மலர்களின் பூரிப்பு.. வரிசையாய் நின்றிருந்த மரோன் மரங்களில் சோளக்கதிர்கள்போல வெள்ளைவெளேரென்று வானைப் பார்த்தபடி கொத்துக்கொத்தாய்ப் பூக்கள், அதை தொட்டு விளையாடுகிற குளவிபோன்ற சின்னஞ்சிறிய வண்டுகள். சாம்பல் வண்ண வானம். இதமான வெப்பம். காற்றில் இலைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் அழகினை நின்று ரசிக்கலாம் போலிருக்கிறது. நேரமில்லை.

காரை வலப்புறம் திருப்ப ‘மாய் கத்ரீன்’ என்று எழுதி இருந்தது. வாகனங்கள் நிறுத்தும் இடத்தைத் தேடி உரிய இடத்தில் நிறுத்தி இறங்கிக் கொண்டாள். இளைஞர்கள் கும்பல் காரை வெறித்துப் பார்த்தது. இவளுக்கு உள்ளூர பயம். அதை மறைத்துக் கொண்டு அவர்களிடத்தில் புன்னகை செய்தாள். அந்தப் புன்னகைக்கு அவர்கள் கொடுக்கும் மதிப்பென்ன என்பது காரைத் திரும்பிவந்துப் பார்க்கத் தெரியும். மனதைத் திடப்படுத்திக்கொண்டு அவர்களிடத்தில் ஒரு சிரிப்பு. சம்பந்த பட்ட முவரியைத் தேடினாள். அரசாங்கம் கட்டிக்கொடுத்திருக்கும் ஏழைகள் H.LM குடியிருப்புகள் அதாவது ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய்க்காரர்களுக்கான குடி இருப்புப் பகுதி. இரவு எட்டுமணிக்குமேல நடமாட முடியாதப் பகுதி. அடிக்கடி காவற்துறையினரும், இளைஞர் கூட்டமும் மோதிக்கொள்ளத் தயார் நிலையில் இருக்கும் பகுதி. இடப்புறம் தெரிந்த பன்னிரண்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் ‘முப்பத்தைத்து’ என்ற எண் தெரிந்தது. வெளியில் அழைப்பு மணிகளோடு இருந்த பெயர்களைப் பார்த்தாள். பெயர்களின் மேல் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள், சில இடங்களில் சிகரெட் தீ முனகளின் தழும்புகள், சுலபத்தில் படித்துவிடமுடியாதபடி இருக்கின்றன. முதல் வரிசையில் கீழிருந்து மேலே இரண்டாவது வரிசையில் மதாம் ஷர்மிளா என்று எழுதி இருந்தது. மணியை அழுத்த, சிறிது இடைவெளிக்குப்பிறகு, ‘கொர் கொர்’ என்ற சத்தத்திற்கு இடையில், ‘உய்’ என்று ஒரு குரல். ‘பவானி தேவசகாயத்தோட பெண் வந்திருகிறேன்’- பதிலுக்கு இவள். மீண்டும் கொர்..கொர்.. இந்தமுறை கதவை அழுந்தத் தள்ள திறந்துதுகொண்டது. திறந்ததும், குப்பென்ற மூத்திர நாற்றம்- வழியெங்கும் விளம்பரப் பத்திரிகைகள் இறைந்து கிடந்தன. இரண்டாவது மாடி என்றதால் படிகட்டுகளை உபயோகித்து மேலே வந்தாள். மதாம் ஷர்மிளா கதவைத் திறந்துகொண்டு காத்திருந்தாள். இவள் போட்டிருந்த காலணியைக் கழட்டப்போக, மதாம் ஷர்மிளா, பரவாயில்லை அப்படியே வா என்றாள். இவளுக்கு மனம் இடங்கொடுக்கவில்லை, அவற்றைக் கழட்டி கதவருகே விட்டுவிட்டு உள்ளே வந்தாள்.

– நல்லவேளை எங்கே அசான்சேர்(3) எடுத்துவிடுவாயோண்ணு பயந்தேன்- மதாம் ஷர்மிளா.

– ஏன்?

– இந்தக் கட்டடத்துல இருக்குற பசங்களுக்கு அசான்சர்ல ஏறினாத்தான் மூத்திரம் வரும்போலிருக்கிறது. அங்கேயே பெய்ஞ்சுடுவாங்க..

– நாங்களும் இதைக் காலிபண்ணிகொண்டு வேற இடம் போகணும்னு ஒவ்வொரு வருஷமும் முட்டி மோதறோம், எங்கே கொடுக்கிறாங்க. உட்கார் இப்படி.. உனக்கு உங்கப்பா சாடைண்ணு நினைக்கிறேன். என்ன சாப்பிடற?.

– எதுக்கு வீண் சிரமம். உங்களை எப்படியும் இன்றைக்குப் பார்க்கணும் நினைச்சேன் வந்துட்டேன்.

– ரொம்ப சந்தோஷம். ம்.. நீ எப்படி இருக்கவேண்டியவ. இப்படி அநாதையா.. அய்யோ கடவுளே.. மதாம் ஷர்மிளா வாக்கியத்தை முடிக்கமுடியாமல் கண்கலங்கியபடி இருந்தாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ஹரிணி, நிலவிய இறுக்கத்தைக் குறைக்க நினைப்பவள்போல பேசினாள்.

– மிஸியே இல்லையா?

– இல்லை அவர் பிள்ளைகளோட தனியா இருக்கார். நான் தனியா இருக்கிறேன். அது பெரிய இராமாயணம். இந்த நேரத்துல அந்தப் பிரச்சினை எதற்கு. சரி நீ சொல்லு? அரசாங்கத்தில் உதவியில வளர்ந்ததா உன்னைச் சொன்னாங்களே?

– ஆமாம், நான்கு வருடமாகுது வெளியில் வந்து.

– பெத்தி அமிண்ணு(4) யாராச்சும்?

– இல்லைங்க..

– நல்லது. அவசரப்படாத. நம்மூர் பையன்களாப் பார்த்துக்கட்டிக்க..

– ம்.. எனக்கு அம்மாவைப் பத்தி சேதிகள் தெரியணும்.

– என்ன தெரியணும்?

– ஏதாச்சும், முதன் முதலில் அம்மாவை நீங்க எப்ப பார்த்தீங்க.

– 1987ம் ஆண்டுண்ணு நினைக்கிறேன். புதுச்சேரிக்கு வரவேண்டி இருந்தது. தேவசகாயந்தான் வழக்கம்போல பீச்சுவரைக்கும் போயிட்டுவரலாமா என்று கேட்க, அவனுடன் புறப்பட்டு வந்தேன்.

– அன்றைக்குத்தான் முதன் முதலாக அம்மாவைப் பார்த்தீர்கள், இல்லையா?

– ஆமாம்மா. அதுதான் எங்கள் முதற் சந்திப்பு. உங்கள் அப்பா தேவசகாயந்தான், பவானியையும், பத்மாவையும் அறிமுகப்படுத்திவைத்தார். பாவானிமேல் அவருக்கிருந்த காதலோ, திருமணம் செய்து கொள்ள இருந்ததோ அன்றைக்கு எனக்குத் தெரியாது. ஆனால் பத்மாவை ஒன்றிரண்டுமுறை தேவசகாயம் வீட்டிற்கு வந்திருக்கும்போதெல்லாம் சந்தித்திருக்கிறேன்.

– அப்போ நீங்கள் புதுச்சேரி இல்லையா?

– இல்லை, நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே காரைக்கால்தான். தேவசகாயத்தின் அப்பாவும் எங்கள் அப்பாவும் அண்னன் தம்பிகள் என்றாலும் அம்மாக்கள் வேறு. வேறு. எங்கள் தாத்தா அவரது முதல் மனைவியின் பிள்ளைகளுக்குப் பிரெஞ்சு குடி உரிமைக் கேட்டு விண்ணப்பம் போடும்போது எங்கள் குடும்பத்தை ஏதோ காரணத்தால் விட்டுவிட்டார். அப்பாவேறு புதுச்சேரியில் ஆரம்பத்தில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஆணையராக இருந்ததால், பிரான்சுக்கு வர விருப்பமில்லாதவராக இருந்தார். அதன்பிறகு அப்பாவுக்குக் காரைக்கால் நகரமன்றத்தில் ஆணையராக உத்தியோக உயர்வு கிடைத்தது. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஊர் பிடித்திருக்க காரைக்காலிலேயே தங்கிவிட்டோம். அங்கே மாதாகோவில் வீதியில்தான் எங்கள் வீடு. அந்த வீதியில் பார்த்தாயென்றால், பெரும்பாலோர் பிரான்சில் இருப்பவர்கள் மாதத்திற்கு ஒருமுறையாவது அவர்கள் குடும்பத்திலிருந்து பிரான்சுக்குப் போகின்றவர்களாகவோ அல்லது வருகின்றவர்களாகவோ இருப்பார்கள். அவர்களைப்பார்க்க அம்மாவுக்கும் பிரான்சுக்குச் செல்ல ஆசைபட்டு அப்பாவை வற்புறுத்த, அதற்காக கோர்ட், கோன்சுலா(5) என்று அலையவேண்டியிருந்தது. புதுச்சேரிக்கு அன்றைய தினம் வந்திருந்ததும் அப்படியான ஒரு காரணத்திற்குத்தாம்மா..

– அதைப்பற்றிக்கொஞ்சம் சொல்ல முடியுமா? அன்றைக்கு என்ன நடந்ததென்று…

– என்ன சொல்லணும்னு தெரியலை? அதை ஒரு எதிர்பாராத சந்திப்பென்றுதான் சொல்லணும். அன்றைக்குத்தான் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு அப்பாவுடன வந்திருந்தேன். எப்போதாவது காரைக்கால் பக்கம் வந்திருக்கிறாயாம்மா? காரைக்கால் புதுச்சேரிக்கு பஸ்ஸில் போய்வருவதென்றால் அத்தனை சிரமம். காரைக்கால் பத்தி கேள்விப்பட்டதுண்டா?

– இல்லைங்க, சொல்லப்போனால் இந்தியாவுக்கே நான் சென்றதில்லை. சமீப காலமா இந்தியாவுக்குப் போய்வரணுமென்ற ஆசை.

– ஆச்சரியமாயிருக்கு, இவ்வளவு நல்லா தமிழ் பேசற. இங்கிருக்கிற நம்ம பிள்ளைகள் இத்தனை அழகா தமிழ் பேசி நான் பார்க்கலை.

– ஒரு ஆர்வத்தில் கற்றுக்கொண்டதுதான்.

– உங்க அம்மாவிடத்திலிருந்து உனக்குத் தமிழ்ல ஆர்வம் வந்திருக்கலாம்.

– இருக்கலாம்.. அவர்களுக்கும் அதில் பங்கு இருக்கிறது.

– நீ டெலிபோன்ல பேசினப்போ எனக்குப் புரியலை. பேசின தமிழைக் கேட்டு கிட்டத்துலதான் இந்தியாவிலிருந்து வந்திருக்கணுமென்று நினைச்சேன். பிறகு நீ பவானியுடைய பெண்ணுண்ணு சொல்ல எனக்கு ஆச்சரியம். ஒன்றிரண்டுமுறை அவர்கள் வீட்டிற்கு அதாவது உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறேன். நீ அப்போது குழந்தை. அப்போது இங்கே பக்கத்தில் துரைசாமிண்ணு புதுச்சேரிக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு என்ன வேலைண்ணா, நம்ம ஆட்களைப் பத்தித் தப்பா செய்திகள் வந்ததென்றால் முதல் வேலையாக, அன்றைக்கு மாத்திரம் DNA(6), பேப்பரை வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு வருகின்ற போகின்றவர்களிடத்திலெல்லாம் சொல்லிக்கொண்டு திரிவார். எங்க வீட்டு மனுஷனிடம் அந்தப் பேப்பரை படித்துகாட்டி இருக்கிறார். அவரும் அதைக் கையோடு கொண்டு வந்து என்னிடத்தில் காட்டினார். அன்றைக்கெல்லாம் எனக்குத் தூக்கமில்லை. புதுச்சேரியில் முதன் முதல் உங்க அம்மாவைப் பார்த்தப்ப, எனக்கே பொறாமையாக இருந்தது, அவ்வளவு அழகா இருப்பாங்க. மாதாவே! அவங்களைப் பேப்பர்ல கரிக்கட்டையாகப் பார்ப்பேண்ணு நினைக்கலை.

மதாம் ஷர்மிளாவின் கண்கள் சட்டென்று குளமாயின. முந்தானையால் கண்களைத் துடைத்துகொண்டாள். சோபாவில் முன்னும் பின்னும் கால்கள் வந்துபோயின, தேவையின்றி முந்தானையை எடுத்து பெரிய மார்புகள் தெரிய விசிறிக்கொண்டாள். உடல் இடமும் வலமுமாக அசைந்து பின்னர் அமைதியானது. ஹரிணிக்கும் என்னவோ செய்தது. தலை குனிந்தபடி அமைதியாக இருந்தாள். மதாம் ஷர்மிளாவே பேசினாள்.

– எங்க தெலி•போன் ந்யுமெரோ(7) யார்கொடுத்தது?

– வீட்டிலிருந்த ஒரு கர்னேயில்(2) இருந்து கண்டுபிடிச்சேன். உங்களால் முடிஞ்ச அளவு அந்த சம்பவத்தை விரிவா சொல்ல முடியுமாவென்று யோசித்துப் பாருங்களேன்.

– நீயும்தான் வந்ததிதிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிற, அந்த சந்திப்புல எனக்கெதுவும் முக்கியமா நடந்தமாதிரி தெரியலை. ஏன்? என்ன தெரிஞ்சுக்கணுமென்று நினைக்கிற?

– எனக்கும் அதற்கான காரணத்தைச் சொல்லத் தெரியலை. ஆனா அம்மாவைப்பற்றி எதுவென்றாலும் தெரிஞ்சுக்கணுமென்று ஆசை. கொஞ்ச நாளா மும்முரமா அப்படியொரு வேட்டையிலே இறங்கியிருக்கேன்.

– இரும்மா.. வந்ததிலிருந்து உன்னை சும்மா உட்காரவச்சிப் பேசிக்கொண்டிருக்கிறேன். காப்பியாவது போட்டுவறேன்.

– வேண்டாங்க மதாம், எதுக்கு உங்களுக்குச் சிரமம். பக்கத்தில்தான் வீடு. போனதும் சாப்பிடவேண்டியதுதான்.

– இருக்கட்டுமே.. இதோ இரண்டு நிமிடத்தில வந்திடறேன். – ஹரிணியின் பதிலுக்குக் காத்திராமல் சமையலறைக்குள் நுழைந்து விட்டாள்.

சுவரில் மாட்டியிருந்த படமொன்றில் சந்தோஷமாக இரண்டு பெண்பிள்ளைகளை முன்னால் நிற்கவைத்துக்கொண்டு, மதாம் ஷர்மிளாவும், மிஸியே பூபெலும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். உரிந்திருந்த வால்பேப்பர்களில், கரப்பான்களுக்கான அடையாளம். ஆங்காங்கே தீய்ச்சல் கண்டதுபோல அழுக்குகள். ஒரு பக்கம் வெளிச்சமிட்ட கண்ணாடித் தொட்டியில், இவளை ஜாடையாக பார்த்தபடி மீன்கள் தங்கள் எல்லையில் இடித்துக்கொள்கின்றன, அவற்றைச் சீண்டுடுவதுபோல செயற்கைக் காற்றுக் குமிழிகள் தொடர்ந்து நீர்ப்பரப்பில்வெளிப்பட்டு, அதேவேகத்தில் மறைந்தும் போகின்றன. மேசையில் ஜானிவாக்கர் விஸ்க்கி போத்தல் திறந்தபடி இருந்தது. அருகில் குடித்து முடிக்காத விஸ்க்கி கண்ணாடித் தம்ளரில். இவளுக்குத் தலையை வலித்தது. சொல்லிக்கொண்டு போகலாமா என்று நினைத்தாள்.

– எனக்கு ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கு, தேவசகாயம், உங்க அம்மாவை அறிமுகப்படுத்தியபோது என்னண்ணு சொன்னான் தெரியுமா? – காப்பிக் கோப்பையை ஒரு தட்டில் ஏந்தியபடி மதாம் ஷர்மிளா சொல்லிக்கொண்டுவந்தாள்.

– என்ன சொன்னார்?

– அவங்களை மாத்தாஹரிண்ணு சொல்லித்தான் அறிமுகபடுத்தினான்.

(தொடரும்)

1. Croissant – பெரும்பாலும் காலையில் சாப்பிடப்படும் பிரெஞ்சு பன்.
2. Carnet – சிறிய கையேடு
3. Assenceur- Lift
4. Petit ami – – Boy friend – ஆண் நண்பன்
5. Consulat – பிரெஞ்சு தூதரகம்
6. Derniere Nouvelle d’Alsace – பிரான்சுநாட்டின் கிழக்குப் பகுதியில் வெளிவரும் பிரசித்தமான தினசரி
7. தொலைபேசி -எண்

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts