மாத்தா-ஹரி – அத்தியாயம் 27

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஹரிணிக்கு ஆச்சரியமாக இருந்தது. மாத்தாஹரியை பற்றிய ஆரம்பக் கட்டத் தகவல்களைப் பெற கணிணியின் உதவியை ஒருவகையில் அவள் நாடி இருந்ததும் உண்மை. ஆனால் கணிணியில் ‘இரண்டாவது வாழ்க்கை’ என்ற மாய உலகம் இருப்பதையும், அதில் மாத்தா ஹரியின் பக்தர்கள், அவள் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டப் பெயர்களில் உறுப்பினர்களாக இருப்பதும் புதிய செய்தி. மாத்தாஹரி சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளுமே, பவானி தேவசகாயத்தோடு ஏதோவொருவகையில் தொடர்பு கொண்டதாக இருக்கிறபோது, வலைதளத்தில், இரண்டாவது வாழ்க்கை நடத்துகிற கூட்டத்தின் நடவடிக்கைகளிலும் அப்படியொன்று இருக்கவேண்டுமென அவளது உள்மனம் நம்புகிறது. ரெஸ்டாரெண்ட்டில் சிறிது நேரத்திற்கு முன்பு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறபோது, ஒருவன் தங்களையே பார்த்துக்கொண்டிருப்பதாக அரவிந்தனால் குற்ப்பிடப்பட்டவன் ஒருவேளை புதுவையில் அப்பாவுக்கு சிநேகிதனாக இருந்த, மதாம் ஷர்மிளா சொன்ன அந்தச் சீனனாக இருக்குமோ என்கிறச் சந்தேகமும் தேவையில்லாமல் எழுந்தது. ஒருவேளை அநாவசியக் கற்பனையாகக் கூட இருக்கலாம். யார் கண்டது? எதற்காக மனதைக் குழப்பிக்கொள்ளவெண்டுமென எண்ணியபோது, அவளைக் காப்பாற்ற முனைந்ததுபோல அரவிந்தன் பேசினான்.

– அக்காள் உங்க அம்மாவைப் பற்றி நிறைய சொல்வாள். உங்க அப்பாவைப் பற்றியும் சொல்லி இருக்கிறாள். அதாவது உங்க அப்பா, உங்க அம்மாவைக் காதலித்தது, உங்க அம்மா கடைசிவரை பிடிகொடுக்காமலிருந்தது, புதுச்சேரியில் உங்க அம்மாவிற்கு ஒரே ஆதரவாக இருந்த பாட்டி திடீரென்று ஒரு நாள் பாத்ரூமிம் வழுக்கிவிழுந்தது, இறந்தது. சம்பவத்திற்குப் பிறகு உங்க அம்மா மனம்மாறி தேவசகாயத்தை மனந்தது, அவருடையக் கட்டாயத்தின் பேரில், நீங்கள் அனைவரும் பிரான்சுக்குத் திரும்பியதுயென என எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் இத்தகவல்களோடு எனக்குத் இரயிலில் அறிமுகமான ஹரிணிக்கும் தொடர்பிருக்குமென சத்தியமாத் தெரியாது. நீ மாத்தா ஹரியைப் பற்றிப் பேசினப்போ, அரைகுறையான தகவல்களைத்தான் காதில் வாங்கியிருந்தேன். நீயும் அப்போது தெளிவாக எதையும் சொல்லவில்லை, பட்டும் படாமல்தான் பேசிக்கொண்டுவந்தாய். எனவே நானும் உன்னை அப்போது வற்புறுத்தவில்லை. ஆனால் எனக்கும் மாத்தா ஹரி என்ற பெயரில் ஓர் ஈர்ப்பு இருந்தது. இதிலே மறைப்பதற்கென்ன இருக்கிறது, ஒரு நாள் அப்படித்தான் வழக்கம்போல அபத்தமான சிலமின் அஞ்சல்களை ரசிச்சுப் படிச்சுட்டு, போர்னோ, நெட்-சாட்டென்று, நேரத்தைப் போக்கிட்டு, வலைதளங்களில் அலைந்து, தடுக்கி விழுந்தபோது கண்டதுதான் ‘இரண்டாவது வாழ்க்கை’. ஆர்வத்தின் காரணமா அங்கே என்ன நடக்கிறதென்று தெர்ந்துகொள்ள, ஒரு வித்தியாசமான பேரை வச்சுகிட்டு அவர்கள் மொழியில், கட்டணம் செலுத்தாத உறுப்பினராக சேர்ந்தேன். அதுபோல மாத்தா ஹரிங்கிற பேருல, இரண்டாவது வாழ்க்கைல ஒரு குழு இயங்கறதைச் தெரிஞ்சுகிட்டதுகூட, தற்காலிகமாக நேர்ந்ததென்றுதான் சொல்லணும். பொதுவாக அதிலிருக்கிற ‘அவதார்’களுக்கு மாத்தாஹரிமேல அளவுகடந்த பிரியம் இருக்கிறது. அவர்கள் அனைவருமே ECPM
அங்கத்தினர்களாக இருக்கவேண்டும்.

– அதென்னது ECPM?

– Ensemble contre la peine de mort – மரணதண்டனைகளுக்கு எதிரான பன்னாட்டு அமைப்பு. மிஷெல் டோப், ழான் பிரான்சுவா தனியெல் என்று சொல்லி இரண்டுபேர் சேர்த்து ஏற்படுத்தின அமைப்பு.. மரண தண்டனையே உலகில் எங்கும் இருக்கக் கூடாது என்பவர்கள். அதற்காக மனித உரிமைகள் அமைப்போடு சேர்ந்து போராடுபவர்கள்.

– அப்படியா? நல்லதுதானே. வேறு ஏதாவது சுவாரசியமான செய்திகளை அதில் பார்த்தியா?

– இருந்திருக்கலாம். மாத்தா ஹரியைப்பத்தின முழுத்தகவல்களையும் ஓரளவு தெரிந்துகொண்டு மறுபடியும் அந்த வலைத்தளத்தில் நுழைந்து பார்த்தால் தெரியும். தவிர சம்பந்தப்பட்ட மாத்தா ஹரி குழுமத்திலே நாம பங்கெடுத்தா ஒருவேளை கூடுதலாகத் தெரியவரலாம். சில அவதார்களுக்காக அவர்கள் காத்திருப்பதையும் பார்த்தேன், இந்தியப் பேர் ஒன்றிலும் ஓர் அவதார் இருப்பது புரிந்தது. அதுவும் உங்க அப்பாவுடைய பெயர் சாயலில்.

– என்ன பெயர்?

– தேவவிரதன்..

– தேவசகாயம்- தேவவிரதன் இரண்டுக்கும் என்னபொருத்தம் இருக்கமுடியும்ணு தெரியலை. பொதுவா இரண்டாவது வாழ்க்கையில வருகிற அவதார்கள் தங்கள் உண்மையான பெயரை மறைத்து வாழ்வதாக சித்தமுன்னே நீ சொன்ன ஞாபகம். அப்பா ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினீயர் என்று தெரியும். அதைக்கொண்டு எந்த முடிவுக்கும் நம்மால வரமுடியாது. ஒருவேளை தேவவிரதன் என்றபேரைப் பத்தின அதிகப்படியானத் தகவல்கள் நமக்குக் கிடைச்சா, ஏதாச்சும் முடிவுக்கு வரலாம். பிறகு சில அவதார்க்ளுக்காக காத்திருப்பதாகச் சொன்னாயே உதாரணத்துக்கு ஒன்றிரண்டு சொல்ல முடியுமா?

– வாடிம் மாஸ்லோ·ப், நோனா.

– உனக்கு அந்தப்பேர்களைப் பத்தி ஏதாச்சும் தெரியுமா?

– மாஸ்லோ·ப், மாத்தா ஹரியை உண்மையா நேசிச்ச ரஷ்ய இளம் ராணுவ அதிகாரி. நோனா, ழான் லூயிஸ் அதாவது மாத்தாஹரியின் மகளோட இன்னொரு பேரு. மாத்தா ஹரியோட மண்டையோட்டைப் பற்றிய தகவலுக்கு ஒரு மில்லியன் லிண்டன் டாலர் பரிசு அறிவித்திருப்பதாகவும் சொன்ன. என்ன ஆச்சு. பாரீஸிலுள்ள அருங்காட்சி அகத்தில் அந்த மண்டையோடு இல்லையா?

– ஜூலை 13, 2000 தேதியிட்ட ஒரு செய்தியின்படி, பாரீஸிலிருந்த அனாட்டமி மியூசியத்திலிருந்து மாத்தாஹரியின் மண்டயோடு காணாமற்போயிருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த மியூசியத்தில் ஏறகுறைய துப்பாக்கி மற்றும் கில்லெட்டினால் கொல்லப்பட்ட புகழ்பெற்ற நூறு குற்றவாளிகளிகளின் மண்டையோடுகள் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். பிரெஞ்சு கல்வி அமைச்சகம் மியூசியத்தை மூடநினைத்தபோது, பிகாரோ தினசரி மாத்தாஹரியின் மண்டையோட்டினைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தது. மியூசியத்தின் பொறுப்பாளர், ரோஜெர் சபான், மாத்தாஹரியின் மண்டையோட்டினைப் பற்றிய பதிவேடு 1918வரை இருந்ததாகவும், பிறகு அதுவுங்கூட அதிசயமாக ஆச்சரியப்படும் வகையில் மறைந்துபோனதாகவும் சொல்கிறார். அந்த மண்டையோட்டினைக் குறித்த தகவலுக்குத்தான்தான் ஒரு மில்லியன் லிண்டன் டாலர் பரிசென்று அறிவித்திருக்கிறார்கள்.

– மாத்தாஹரியின் மண்டையோட்டினைக் கடத்தியதிலும் ஏதேனும் மர்மமிருக்கலாம் போலிருக்கிறது.

– நானும் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்கும் பாரீசில் மாத்தாஹரிக்கு என்ன நடந்ததென்று தெரிந்து கொள்ள ஆவல். அதற்கு முன்னால இந்தோனேசியாவில் மகனுடைய இறப்பிறகுப் பிறகு, மாத்தாஹரி ருடோல்ப் தம்பதிகளிகளின் உறவு எப்படி இருந்தது என்றும் கொஞ்சம் அறியவேண்டும்.

– தெளிவாக எதுவுமில்லை. இருவருமே மாறி மாறி குற்றஞ்சாட்டுகிறார்கள். எனக்கென்னவோ நடந்த சம்பவங்களைப் பார்க்கிறபோது வஞ்சுக்கபட்டவள் மாத்தா ஹரி என்பதில் உறுதியாய் இருக்கிறேன். மாத்தா ஹரியும் சரி, பவானியும் சரி இருவருமே வஞ்சிக்கபட்டிருக்கிறார்கள். துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். இழைத்த கொடுமைகளுக்கான தண்டனையை சம்பத்தப்பட்ட இரு ஆண்களுமே பெறவில்லை என்பதே என் அபிப்ராயம். 1902 ஆகஸ்டு மாதம் 30ல் ருடோல்ப்பும் மார்க்கரீத் என்ற மாத்தாஹரியும் ஆம்ஸ்டர்டாம் நீதிமன்றத்தினால் மணவிலக்குப் பெற்றார்கள். மாத்தா ஹரி என்னசெய்வதென்று புரியாத நிலை. எங்கே செல்வதென்ற குழப்பம். கொஞ்ச காலம் அடுத்தடுத்து உறவினர்கள் வீடுகளில் தங்கி அலுத்து, கடைசியில் போக்கிடமின்றி, அப்போதே உடலை விற்கத் துணிந்ததாகக் குற்ற சாட்டு உண்டு. இந்தோனேசியாவில் கற்ற நாட்டியமும், தனது உடல்வாகும் வேறுவகையான வாழ்க்கைப் பாதையை அவளுக்குக் கோடிகாட்டியது. அது சரியா தவறா? உனக்கு சரி என்பது எனக்குத் தவறாகலாம். எனக்குத் தவறானது உனக்குச் சரியாகலாம். ஆனால் ஒவ்வொருவருவருக்கும் தாங்கள் செய்வது சரி. மாத்தாஹரிக்கும் அன்றைய தேதியில், அந்தக் கணத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும், தன் கனவு மெய்ப்படவேண்டும் எனத் தீர்மானித்ததின் விளைவாக பாரீஸ¤க்குப் புறப்பட்டுவிட்டாள்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation