மாத்தா-ஹரி – அத்தியாயம் 20

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


– வேன்சான் கொலைகளம்
பூத்துக்குலுங்கும் வெர்வேன்
இரவை பகல் எழுப்பும்வேளை
கொலைமரத்தில்
தோட்டாக்களால் துளைக்கப்படவென்று
கண்கள் கட்டுண்டவளாக
பிரியத்துக்குகந்த பெண் உளவாளி;
காணச் சகியாமல் கண்களை மூடி
“ஆகட்டும்” என இரைந்தான்,
வேறொருவன்; அது அவன் கடன்.
கோட்டை சுவரிடையே
இருள்பிரியுமுன்
தீர்ப்பின்வழி மரணம் வந்தது;
உணர்ச்சியின் உந்தலில்
நெஞ்சு வெடித்தது;
சித்தம் பிறழ்ந்தவனாக
சிரித்ததில்
அதிர்கிறது வேன்சான் கொலைகளம்(1)

மாத்தாஹரிக்கு மரணதண்டனை நிறைவேற்றியதை அறிந்து ‘கமி’ (Cami)எழுதி, ழார்ழெல்(Georgel) பாட, 1917ம் ஆண்டின் இறுதியில் எல்லோராலும் முணுமுணுக்கபட்ட கவிதை. வாசிக்கிறபோதெல்லாம், குளோது அத்ரியன்கூட வெடித்து சிரிக்கிறார். மாத்தா ஹரியின் இறப்பு குறித்த கேள்வி இன்றைக்கும் எழுகிறது. ஏன் இறந்தாள்? நிரூபிக்கப்படாதக் குற்றத்திற்காக எதற்காக ஒருத்தியைக் கொல்லவேண்டும்? என்று இவரைப்போல பலர் எழுப்பும் கேள்விகளுக்கு இன்றுவரை பதிலில்லை.

குளோது என்கிற குளோது அதிரியன் கொஞ்சமல்ல நிறையவே வித்தியாசமான மனிதர். வயது ஐம்பது. அவர் எடுக்காத அவதாரமில்லை. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரண தண்டனைக்கு எதிரி, கடைசியில் மாத்தாஹரியின் பரம ரசிகர். இங்கே.. அவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தாஹரியின் படங்கள்தாம்: குழந்தையாக, விடலைப்பெண்ணாக, வாலைக்குமரியாக, வடிவழகியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தாஹரி அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். கிரேக்க தேவதைபோல குட்டை பாவடையும், மார்புப்பெருத்த சட்டையுமாக, அடர்ந்த கூந்தலை இரப்பர் பட்டைக்குள் அடக்கி, வசீகரிக்கும் பார்வையில், நளினமாய் நிற்பதும் அவள்தான். தலையில் இறகும் ரத்தினங்களும் பதித்த கிரீடம் அணிந்து, கைகால்களில், முத்தும் பவளமும் பதிக்கப்பட்ட வளைகள் மின்ன, இருமார்புகளிலும் அலங்கரிக்கபட்ட உலோககக் கவசம் ஒளிர, உடலைவெளிப்படுத்தும் சன்னமான ஆடை தரித்து, சகல புவனங்களையும் அடக்கியாளவல்ல இந்து தேவதை, மாயையின் வடிவமான – மோகினியாக நிற்பவளும் அவள்தான். இரவுபகலென்று பேதமில்லை, இவர் வேண்டும் போது அவள் வருகிறாள்.

இன்று குளோது வேண்டவில்லை, வந்திருக்கிறாள். குளியலறையில் வெகுநேரம் இருந்து விட்டு வந்திருந்தார். அறை நடுவில் நின்றபடி, சுவரில் மாட்டியிருந்த நிழற்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்க, மெல்ல முறுவலித்து ” இறங்கி வரட்டுமாவென?”, படத்திலிருக்கும் மாத்தா ஹரி கேட்கிறாள். இவரது பதிலுக்குக் காத்திராதவள்போல, படத்திலிருந்து வெளிப்பட்டு, அருகில் நிற்கிறாள். அவளிடமிருந்து வெளிப்பட்ட மூச்சு இவர் உதடுகளில் ஒட்டும்போது இனிக்கிறது. அவளது பார்வையில் இலேசாக ஏளனம், என்னவாக இருக்கும் என யோசித்தபோது அவள் திரும்பி நடக்கிறாள். இருவரும் சன்னலொட்டி நிற்கிறார்கள். திறந்திருந்த சன்னற் கதவூடாக, சோகையாய் பகல்வெளிச்சமும், அவ்வபோது காற்றில் தலையசைக்கிற வேப்பமரத்தின் நிழலும் முறைவைத்து அவள் முகத்தில் பதுங்கி விளையாட, பகல்நிலவினை நினைவுபடுத்தும் அவளழகில் மயங்கி நிற்கிறார். மயக்கநிலையிலிருந்து விடுபடாத அவரது உதடுகள் இரண்டும், அவளுடைய முன்நெற்றியை எச்சிற்படுத்துகின்றன. கால்கள் இரண்டும் தவிக்கின்றன. அடங்காத பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டு அவளது தலையில் இளஞ்சூட்டுடன் பரவுகிறது. பண்டமாற்றாக அவள் தலைமயிரிலிருந்து புறப்பட்ட வாசம் இவர் நெஞ்சுக்குள் இறங்கி தித்திக்கிறது. அவரைக் கைப்பிடித்து அழைக்கிறாள். குளோதுவின் பசியறிந்தவள்போல, உடலிற் சுற்றியிருந்த சன்னமான ஆடைகளைக் களைந்தபடி நடக்கிறாள், உச்சிமுதல் பாதம்வரை முழுமையாக அவளை ஒருமுறை பார்த்துமுடித்தபோது, எங்கே தொடங்குவதென்ற குழப்பம்:

– என்ன தயக்கம்? நான் உங்களுடையவள்தானே?

– இல்லை, நண்பர்கள் இருவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்

அறைக்கதவு திறந்திருக்கவேண்டும், பகல் வெளிச்சம் கீற்றாகக் கட்டில்வரை நீண்டு படிந்திருந்தது, அந்த ஒளியின் பின்னணியில் சுவற்றிலிருந்த படத்தைக்காட்டிலும் ஒயிலாக படுத்திருப்பதுபோல தோற்றம். அவளுடைய வாளிப்பான உடல் ஏற்படுத்திய இரசவாதத்தில், இவருக்கு முத்துமுத்தாய் வேர்வை அரும்புகிறது:

– என்ன ஆயிற்று உங்களுக்கு?, இதற்கு முன்பு இப்படி பார்த்ததில்லையே?

– இல்லை, தெரியலை? நீ வேறொருவனுடைய உடமை ஆகிவிடுவாயோ என்கிற கலக்கமாக இருக்கலாம்.

– தேவையில்லாமல் எதையாவது கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நம்மிருவரையும் பிரிப்பதற்கு ஒருவருமில்லை. உங்களுக்கு விருப்பமில்லையென்றாற் சொல்லுங்கள்- நான் புறப்படுகிறேன்

– வேண்டாம்.. மாத்தா ஹரி, போகாதே.. போகாதே!

குளோது புலம்பிக்கொண்டிருக்கும்போதே மடமடவென்று களைந்த ஆடைகளை ஒன்றின் பின் ஒன்றாக அணிந்துமுடித்தவள், மீண்டும் நிழற்படத்தில் நின்றபடி, இவரைப்பார்த்துச் சிரிக்கிறாள்.

– ‘மிஸியே குளோது!’, வெகு தூரத்திலிருந்து அழைப்பதுபோல ஒரு குரல். கண்விழித்தபோது மாலை மணி நான்கு.

புதுச்சேரி நகரத்தின் வடபகுதி. பட்டத்தின் வால்போலக் கடற்கரை குப்பம். கவிச்சியுடன் வீசும் உப்பங்காற்றில் அருகிலிருந்த சாராய ஆலையிலிருந்து வெளிப்படும் துர்நாற்றமும், அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சொந்தமான கால்நடைப்பண்னை நாற்றமும் கலந்து, விநோத கலவையுடனான ஒருவித மணம் காட்டுச்செடிபோலப் பரவி, குளோது அத்ரியன் குடியிருப்பையும் ஆக்ரமித்திருந்தது. பகல் வெப்பத்தில் சூடாகிக் கிடந்த அ¨றையைத் தவிர்த்து வெற்றுடம்பும், பீர்பாட்டிலுமாக வெளியில் வந்தார். வெய்யில் இன்னும் தணியவில்லை. வீதி மனிதர் சஞ்சாரமற்று வெறிச்சோடிக்கிடக்க்கிறது. மார்பு ஒட்டி, வயிறுப்பிய பையன் ஒருவன், நுனிக்காலில் பெடல்போட்டபடி இவரைப் பார்த்து ‘போன்ழூர் முசே’ என்கிறான். தூரத்தில், கடந்த அரைமணிநேரமாக இரண்டொருபெண்கள், வழக்கம்போல வேப்பமரத்தின் அடிப்பகுதியினை நீருற்றிக் கழுவி முடித்து மஞ்சள் பூசிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்வீட்டு வாசலில், கால்நீட்டி அடையாய் பிசறிக்கிடக்கும் மயிற்கற்றையில் ஈர்க்கொல்லியைப் புதைத்து சிம்பிக்கொண்டிருந்த பெண்மணியின் உடல்மீது கண்கள் படிகின்றன, அப்பார்வையைப் புரிந்துகொண்டவள்போல, அவளும் சட்டென்று தலையை நிமிர்த்தி குளோதுவைப் பார்த்தாள். முகம் நிறைய மஞ்சள் பூசி இருந்தாள். இடது கையிலிருந்த மணிகூட்டை, வலதுகை ஆட்காட்டிவிரலால் இரண்டுமுறை தட்டிக்காட்டினார். பிறகு இரண்டு கைவிரல்களையும் ஒட்டாமல் விரித்துக் காட்டினார், அவள் தலையாட்டினாள். இந்தியாவில் மலிவாக எதுவும் கிடைக்கிறது. அதில் இதுவுமொன்று.

குளோதுவுக்குப் பூர்வீகம், பிரான்சு நாட்டின் கிழக்குதிசையிலிருக்கும் அல்ஸாஸ் பிரதேசம். தாய் தந்தையர் இருவரும், இவரை மழலையற்பள்ளியில் சேர்த்த சூட்டோடு பிரிந்துபோனவர்கள். அம்மாவழி தாத்தாவும் பாட்டியும், குளோதுவையும் அவர் தமக்கையையும் பிரான்சின் தென்கிழக்குப்பகுதியிலிருந்த ‘பிராதே’ என்ற நகரத்திற்கு அழைத்துபோனார்கள். கிழவர் நிலக்கரிசுரங்கத்தில் பணியாற்றிவிட்டு, ஓய்வு பெற்றவர், குடிகாரர். கிழவியோ காசநோய்க்காரி. குற்றங்கள் துளிர்விடும் இருப்பிடமாக இருந்ததால் குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம், அதன் தேவைக்காகச் சின்னச் சின்ன திருட்டுகள், சிறுவர்களுக்கான சீர்த்திருத்தப்பள்ளி என ஆரம்பகால வாழ்க்கை. தமக்கை ஒருநாள் புறப்பட்டுப்போனவள்தான் திரும்பவில்லை. இவருக்கும் அப்படியொரு ஆசை, தாத்தாவின் சட்டைப் பையில் ஒருநாள் இருநூறு பிராங்குக்கு மேலிருந்தது, எடுத்துப் பையில்போட்டுக்கொண்டு தொடங்கிய பயனத்தை இதுவரை நிறுத்தவில்லை. உலகில் அத்தனை நாடுகளையும் மிதித்தாகிவிட்டது.

அறுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து, இந்தியாவிற்குப் புறப்பட்டுவந்து கோவாவில் மாதக்கணக்கில், எல்.எஸ்.டியை. விழுங்கியும் மரியுவானாவை முகர்ந்தும் வாழ்ந்துபார்த்தாயிற்று. எழுபதுகளில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம், பின்னர் இயற்கைவாதிகளோடு இணைந்து மாமிசத்தையும், காய்கனிகளையும் பச்சையாக உண்டு குகைகளில் வாழ்ந்த அனுபவம், இப்போது மாத்தா ஹரியைத் தேடிக்கொண்டு மீண்டும் இந்தியா. புதுச்சேரிக்கு வந்த புதிதில் ஜெர்மன் நண்பர் ஒருவர் இல்லத்தில், ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார். இருவருமாக உள்ளூர் ஏழைகளைத் தினக்கூலிக்கு அமர்த்திக்கொண்டு படுக்கை விரிப்புகள், பருத்தி ஆடைகளெனத் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்தனர். கடந்த ஆறுமாதமாதமாக, கலாச்சார அமைப்பொன்றில் பிரெஞ்சு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

கிர்…கிர்ரென்று எரிச்சலூட்டுவதுபோல அழைப்பு மணி. அநேகமாக தேவசகாயம் அல்லது அருணாசலம் இருவரில் ஒருவராக இருக்கவேண்டும். பருத்தியிலான ஒரு பைஜாமாவை அணிந்தவர், குர்தாவைப் போட்டபடி நடந்து வந்து கதவைத் திறந்தார். தேவசகாயம் வந்திருந்தான்.

– வாங்க தேவா வணக்கம் .. உள்ளேவாங்க. எதுலே வந்தீங்க?

– வணக்கம். பைக்கிலேதான் வந்தேன், மெக்கானிக்கிட்டே கேட்டேன். ரெடியாய் இருக்குதுசார், எப்பவேண்டுமானாலும் வாங்கண்ணான். எடுத்துவந்தேன்.

குளோது முன்னால் நடக்க அவரைப் பின் தொடர்ந்து சென்றான்..

– உங்கள் முகத்தை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறமாதிரிதான் தெரியுது. மாத்தா ஹரியை சம்மதிக்கவச்சிட்டீங்கண்ணு சொல்லுங்க.

– ஆமாங்க. என்னாலேயே நம்ப முடியலை. நம்பிக்கை இல்லாமதான் இருந்தேன். எதிர்பாராதவிதமாத் திடீரென்று அவளுடைய பாட்டி இறந்ததால, இப்படியொரு திருப்பம் அமைஞ்சிட்டுது. ஆனால் உண்மையைச் சொல்லணுமென்றால், பவானி இல்லையென்றால் நானில்லை என்பதுமாதிரிதான் தோணுது. நீங்கதான் என்னை ருடோல்ப் என்றும், அவளை மாத்தா ஹரி என்றும் சொல்லறீங்க. இணைய தளத்துல தட்டிப்பார்த்தா, மாத்தா ஹரி பத்தின தகவல்கள் எதுவும் நல்லவிதமா இல்லையே.?

கேட்டதும், குளோதுவின் முகம் கறுத்துப்போனது. இருவரும், வீட்டின் பின் பகுதிக்குவந்திருந்தார்கள். குரோட்டன்ஸ் செடிகளும் கொட்டை வாழைச்செடிகளும், நான்குபுறமும் மண்டிக்கிடக்க இடையில், பராமரிக்கப்பட்ட புல்வெளி. பெரிய வண்ணக்குடை விரித்து, அதனடியில் மேசை, மடிப்பு நாற்காலிகள், போடப்பட்டிருந்தன. தூரத்தில் கடலலைகள் ஆர்ப்பரிக்கும் சத்தம். தேவசகாயத்தின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆசைபட்டவர்போலக் குளோது வாயைத்திறந்தார்.

– தேவா, என்ன பழையபடி ஆரம்பிச்சுட்டீங்க..மாத்தா ஹரியைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும், கொஞ்ச நாட்களுக்கு முன்னால, நேரு பூங்காவில இரவு பத்துமணிக்குமேலே நீங்க இருந்த நிலைமையை வைத்து, தேவா என்பவன் இப்படித்தான் என்று ஒரு தீர்மானத்துக்கு நாங்க வந்திட முடியுமா? வேறொரு நாடா இருந்தா அதற்கேகூட உங்கள் தலையை வாங்கிவிடமுடியும். பவானியை நெருங்கமுடியாது என்றீர்கள். இப்போது வேறுவிதமாகச் சொல்கிறீர்கள். மாத்தாஹரி நிறைய கனவுகளுடன் வளர்ந்தவள். வயது வித்தியாசம் பாராமல் ராணுவ அதிகாரியை மணந்துகொண்டது எதற்காகவென்று நினைக்கிறாய். கப்பல் ஏறி பயணம் செய்யவும், இந்தோ சீனாவை சுற்றிப்பார்க்கவுமா? ருடோல்·பென்ற ஆண்வர்க்கத்தை எதிர்த்து அவள் வழியில் நியாயம் தேடி இருக்கிறாள். ஐந்துபேருக்கு மனைவியாக இருக்கிறவள் உத்தமப் பெண்மணியாகவும் இருக்க முடியுமென்பதை உங்க மகாபாரதம் நியாயப்படுத்துமெனில், எனக்கு மாத்தா ஹரியும் உத்தமி. நீ மெச்சுகிற பவானியைப் நாளைக்கே பிரான்சுக்கு அழைத்துப்போய், மாத்தா ஹரிக்கான நெருக்கடியைக் கொடுத்துப்பார், என்ன நடக்கிறதென்று தெரியும்.

– எங்கள் பெண்கள் ‘அப்படியெல்லாம்’ நடக்கமாட்டார்கள்.

– முதலில் ‘அப்படியெல்லாம்’ என்று ஏதோவொன்றை ஒப்பாததாகச் சித்தரிக்கிறீர்களே, அதுவே கூட எனது பார்வைக்கு உகந்ததாக இருக்கலாம். சரியும், தப்பும் அந்தந்த நாட்டுச் சட்டங்களைப் பொறுத்து தீர்மானிக்கப்படுவதுமட்டுமல்ல, தனிமனிதர் நியாங்களைப் பொறுத்தும் வேறுபடக்கூடியது. அடுத்து ‘எங்கள் பெண்கள்.’ அப்படியெல்லாம் நடக்கக்கூடியவர்கள் அல்லர் என்பதாகச்சொல்லி, மேற்கத்தியபெண்கள் அனைவருமே தப்பானவர்கள் என்ற கருத்தினை வைக்கிறீர்கள், அதுவும் சரியல்ல. உங்களூர் தினசரிகளை வாசித்துப்பாருங்கள், பக்கத்துக்குபக்கம் பாலியற் குற்றங்கள் ஒன்றோ இரண்டோ இருக்கின்றன. மும்பை, பெங்களூர், சென்னைபோன்ற நகரங்களிலுள்ள மேட்டுக்குடிப்பெண்களின் வாழ்க்கை எங்களூர் பெண்களுக்கு எந்தவிதத்திலும் இளப்பமில்லை. மிக முக்கியமாக இன்னொன்று, எங்கள் பெண்கள் அப்படியெல்லாம் நடக்கமாட்டார்கள் என்று சொல்கிற நீங்கள் உங்களுக்கு அதாவது இந்திய ஆண்களுக்குச் சாமர்த்தியமாக விலக்கு அளிக்கிறீர்கள். இந்தியாவில் நாங்கள் அனைவருமே அப்படியெல்லாம் நடந்துகொள்ளமாட்டோம் என்று ஏன் சொல்ல முடிவதில்லை. எதற்காக உங்கள் பெண்களிடத்தில் மட்டும் கற்பை எதிர்பார்க்கிறீர்கள்? கார்வைத்திருக்கிறவன், போக்குவரத்து விதிகளை மீறக்கூடாதென்று பாதசாரியிடம் எதிர்பார்ப்பது போலத்தான் இதுவும்.. சரி என்ன குடிக்கிறாய் -பீர்?

– நீங்கள் விட்டுக்கொடுக்கமாட்டீர்கள், சரி பீரைக் கொடுங்கள்.

அருகிலிருந்த கண்ணாடிக்கோப்பையில் நுரைபொங்க பீரைக் குளோது ஊற்றினர். எடுத்தக் கோப்பைகளை இருவரும் ‘தங்கள் நலத்துக்காக’ என்று, நாசூக்காக இடித்துதொட்டு, நிதானத்துடன் குடித்தனர்.

– அப்போ பவானி உன்னோட பிரான்சுக்குப் புறப்படறாங்கண்ணு சொல்லு.

– மிஸியே குளோது, எங்க விவகாரமெல்லாம் அத்தனை சுலபமா முடியற விஷயமில்லை. மெல்ல மெல்லத்தான் பவானிக்கிட்டே இது பற்றி பேசணும். அருணாசலம் வரவில்லையா?

– வருவேன் என்று சொன்னவர்தான், என்னமோ தெரியவில்லை, இதுவரைக்கும் செய்தி எதுவுமில்லை.

– அது சரி கேட்டதை ஏற்பாடு பண்ணிவச்சிருக்கீங்களா?

– கண்டிப்பாத் தறேன். கொஞ்சகாலம் அளவா உபயோகிக்கணும். இப்போதுதான் அவள் உன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாள்னு சொல்ற, இந்த நேரத்துல அதிகமா உபயோகிச்சு, பைத்தியக்காரத்தனமா எதுவும் செய்து வைக்காதே.

– குளோது.. இந்தியப் பெண்ணொருத்தியை திருமணம் செய்யவிருப்பதாக சொன்னீங்களே, எப்போது?

– ம்…எனக்கொரு மாத்தா -ஹரி கிடைக்கிறபோது – கலகலவென்று சிரிக்கிறார்.

(தொடரும்)

—————————————————————————————————————————————————————————
1. Dans les fosses de Vincennes
Quand fleurissait la verveine
Au petit jour, les yeux bandes,
Au poteau l’espionne est placee
Et celle qu’on va fusiller
C’est elle ! C’est sa bien-aimee !
Fermant les yeux pour ne pas voir
Il cria : ” Feu ! ” C’etait son devoir !
Dans les fosses de Vincennes
Le soleil se leve a peine
Sous les murs du fort
A passe la mort.
Et l’espionne a subi sa peine !
Et lui, brise par l’effort,
Le coeur pris de folie soudaine
Eclate d’un grand rire alors
Dans les fosses de Vincennes !
-Cami


girdja@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா