மாத்தா-ஹரி – அத்தியாயம் 17

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


புதுச்சேரி நேருபூங்கா. இருள், புதிதாக அமைக்கபட்டிருந்த நியோன் விளக்குகளுடைய ஒளி, வளர்ந்த மரங்களின் தலையீடென்று வித்தியாசமானக் காட்சியை வியந்தபடி நிலா. ஆயி மண்டபத்தின் காலில் அதிகாரம் கிடப்பதுபோல, துணைநிலை ஆளுநரின் மாளிகை. கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். நள்ளிரவை கடந்திருந்தது. தலைவலியும் குறைந்திருந்தது. பத்மாவிடம் வற்புறுத்தி இருந்தான், “எப்படியாவது பவானியை சந்திக்கணும் பத்மா, ஏற்பாடு பண்ணமுடியுமா?”. அவள் “பார்க்கிறேன்”, என்றாள். “அப்படி சொல்லாதே! அவளை இன்றைக்கு நான் பார்த்தே ஆகணும். ஆல் இந்தியா ரேடியோ கட்டிடத்திற்கு எதிரே கடற்கரையை ஒட்டிய பாதுகாப்பு சுவரில் அமர்ந்திருப்பேன். அவளைப் பார்க்காதுபோனால் எனது தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று சொல்”. எச்சரித்திருந்தான். பவானி வரவில்லை. கோபம் வந்தது கோபம் பவானி மீதா? அல்லது பத்மா மீதா? பவானியை மிகவும் பிடிக்கிறது. பவானி இடத்திலும், பத்மா முதலான வேறு சில நண்பர்களிடத்திலும் அதைக் காதல் என்று சொல்லிக்கொண்டான். உள் மனம் மறுக்கிறது. பத்மாவோ பவானியோ அல்லது இவனேகூட நினைப்பதுபோல அதற்கான காரணம் காதல் அல்ல. இவனைப்போலவே அவளிடமிருக்கும் அவளது கவிதை உணர்வு? ஊகூம்.. இல்லவே இல்லை. பின் வேறெதுவாக இருக்கும்? இருவரும் பெற்றோரின்றி இருப்பது காரணமோ: இவனது அப்பாவும் அவளுடைய அப்பாவைப்போலவே சமீபத்தில் இறந்திருந்தார். தேவாவைப்போல பவானியும் சிறுவயதில் பெற்றதாயை பறிகொடுத்திருப்பதுகூட நியாயமான காரணமென்று சொல்லலாம். இவனுக்கும் அவளுக்குமான பொதுச் சங்கதிகள் நிறைய இருக்கும்போல. பிறகு வீட்டிற்கு வந்த நாள் முதல், பிசாசுபோல நெஞ்சில் வளர்ந்து வரும் இவனது சித்தி ஏற்படுத்திய பிம்பம். கதைகள், சினிமாக்களில் வரும் சித்தியல்ல என்பதுதான் பிரச்சினை. காங்கிரீட் பலகையில் புரண்டு படுத்தான், முழங்கைகளை மாற்றி மாற்றி தலைக்குக் கொடுத்து கண்ணயர நினைத்தான், அங்கே அவள் காத்திருப்பாள். அதாவது அம்மா என்ற…

– தேவா..இங்கே வா.. யார் வந்திருக்காங்க பாரு.

– ஸ்கூல்ல இருந்து இப்பத்தான் வந்தேன்பா. சட்டையை மாத்திக்கொண்டிருக்கேன்

– பரவாயில்லை, அப்படியே வா.. அந்நியமனிதர் யாருமில்லை. உன்னை யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க.

தேவா அவர்கள் எதிரே வந்து நின்றபோது, அப்பாவின் பிரெஞ்சு ராணுவ உடையுடனும், கெப்பியுடனும் இருந்தான். இவன் உடையைபார்த்துச் சிரித்தாள். அப்பா, ” ராணுவ உடைகள்னா அவனுக்கு ரொம்ப விருப்பம்”, என்கிறார். அப்பாவும் அவளும் புது ஆடைக்குண்டான கதம்ப மணத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தனர். அப்பா வழக்கம்போல தனது வெள்ளை ஸ்லாக் ஷர்ட்டை, கறுப்புப் பேண்டுக்குள் விட்டு, பெல்ட்டால் வயிற்றை இறுக்கியிருந்தார். நரைத்த தலைக்கு சாயம் பூசியிருந்தார். வழக்கதிற்கு மாறாக மழமழவென்ற முகம். ஈறு தெரியச் சிரிக்கிறார். வியப்பாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட அவளை ரோட்டில் பார்த்த்திருக்கிறான். பச்சை மணிலாக்கொட்டை, வெள்ளரிப்பிஞ்சு, மாம்பழமென தெருவில் அந்தந்த மாதங்களில் கிடைக்கிற பொருட்களை தெருவில் கூவி விற்பவள். அவளது கறுப்பு நிறத்திற்குப் பொருந்தாத வண்ணத்தில் காஞ்சிபுரம் பட்டு, இறுக்கமாக ஒர் இரவிக்கை, தடித்த உதடுகள். மை அப்பிய சூன்யக்காரிக்கான பெரிய கண்கள். மூக்குத்தியையும், விழிவெண்படலத்தையும் கவனமாகத் தவிர்த்துப் போட்டிருந்த பவுடர், உதட்டுச்சாயம் முகவாய்க் குழியில் கசிந்திருக்கிறது, கழுத்தில் புதுமஞ்சள் நிறத்தில் சுண்டுவிரல் கனத்திற்கு தாலிக்கயிறு. சுமக்க முடிந்த அளவிற்கு நகைகள், ஒருகிராம் கூடியிருந்தால் கூட உடைந்துவிடுவாள் போல, அத்தனை ஒல்லி. அவனைப்பார்த்து மெல்ல சிரித்தாள்.

– தேவா உனக்கு அம்மாடா, அப்பா முந்திகொண்டார். அதற்கு என்ன பொருள் என்பதை விளங்கிக் கொள்ள இவனுக்குச் சில நொடிகள் தேவைபட்டன. பார்த்துக்கொண்டிருந்தவன், எதையோ விளங்கிக் கொண்டவன் போல தனது அறைக்குத் திரும்ப எத்தனித்தபோது அவளுடைய குரல் தடுத்து நிறுத்துகிறது.

– தம்பி இங்கே வாப்பா..(கூடையை இறக்கிவை.). வீட்டுபடியேறி அவள் உச்சரிக்கும் வாக்கியந்தான். இரண்டாவது வாக்கியம் நெஞ்சுக்குள்ளேயே இருக்கவேண்டும்.

– தேவான்னே கூப்பிடு.

– செத்தமுன்னே உங்க பேரும் தேவாண்ணு சொன்னீங்க.

– ஆமாம் எங்கக் குடும்பப்பேரு ஷியென் தேவசகாயம், எங்கப்பேருண்ணு சொன்னா எனக்கு வேலாயுதம், அவனுக்கு ஆனந்தன். ஆனா எல்லோருக்கும் அவன் தேவா, நான் வேலாயுதம். பக்கத்துல வாடா அம்மா கூப்பிடறாங்க இல்லை.

அப்பாவின் வார்த்தையைத் தட்ட விருப்பமில்லாமல், தயங்கி முன்னேறுகிறான். பயப்படாம வா தம்பி. இழுத்து அருகில் நிறுத்திக்கொண்டாள். பட்டின் ஸ்பரிஸத்தோடு கூடிய மார்புகளை மெத்தென்று உணர்ந்தான். அவள் தலையில் வைத்திருந்த மல்லிகையின் மணம் இவனுக்குக் குமட்டியது. விலகிநின்றான்.

– தேவா சீக்கிரம் கிளம்பு. அரிஸ்டோவில் சாப்பிட்டுட்டு, எம்.ஜி.ஆர். படம் போறோம்.

அதை விரும்பாதவர்போல அப்பா,

– “அவனுக்கு ரஜனி படந்தான் பிடிக்கும். அவங்க கமராதுகளுடன் முந்தாநாள் கூடப் படம்பார்த்துட்டு வந்தான். வீட்டுல இருக்கட்டும் நாம போகலாம். இன்னொரு நா¨ளைக்கு நாம சேர்ந்துபோனால் போகுது.

– இல்லைங்க தம்பியும் வரட்டும்

அப்பா தலையாட்டினார். ஆனால் அவர் முகம் சோர்ந்துபோனது. கசப்புடனேயே புறப்பட்டார். ரிக்ஷா வைத்துக்கொண்டார்கள். தேவாவை மடியில் இறுத்திக்கொண்டாள். தியேட்டர் மாடி இருக்கைக்கு நுழைவு சீட்டு வாங்கிக் கொண்டார்கள். ஆகப் பழைய படம். உணவுவிடுதியில் அசைவ வகைகளை ஒரு பிடி பிடித்துவிட்டு வீட்டுக்குதிரும்ப நினைத்தவன் திட்டம் பலிக்கவில்லை. அப்பாவுக்கும் இது கொஞ்சம் அதிகபடியாகத் தோன்றி இருக்கவேண்டும். செருமித் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இடைவேளையில் அவரிடம் பணம் வாங்கிப்போய், ஸ்டாலில் உள்ள அத்தனையையும் வகைக்கொன்றாய் வாங்கிவந்து இவன் கைகளிற் திணித்தாள். அப்பா முனகினார். ” என்ன தம்பி தலையைச் சாய்த்து பார்க்கிற, படம் ஒழுங்கா தெரியலையா” -அவள். ” எதிர் சீட்டுல, புதுசா ஒருத்தன் உட்கார்ந்துகிட்டு மறைக்கிறான்”. “அப்படியா நீ வேணுமாணா இங்கே வந்து உட்காரறீயா?” “அவனுக்கு ஏன் தொந்தரவு கொடுக்கிற. படத்தை நீ ஒழுங்காப் பாரு”- அப்பா. “இல்லைங்க தம்பிக்கு மறைக்குதாம், இங்கே வந்திடு..”மீண்டும் அவள் மடி. கைவிரல்கள் தலையைக் கோதின. மீண்டும் அவள் மார்பு. முழுசாய் தலைசாய்த்துக்கொண்டான். அவள் இதயத்துடிப்பு இவனுக்குள் கேட்டது. உச்சிமோந்து, அடிக்கடி காதுமடல்களில் பற்களைப் பதித்தாள். உடலில் இவன் அனுபவைத்திராத வெப்பம், ஒரு குறுகுறுப்பு. ‘பயப்படாதே’ என உற்சாகப்படுத்துவதுபோல மனதிற்குள் ஒரு குரல், முகத்தைத் திரும்பியவன் சட்டென்று அவள் மார்பைக் கடித்தான். அவள் போட்ட கூச்சலில் புரொஜக்டர் ஒளியும், தொடர்ந்து படமும் முடிவுக்கு வந்தது. தியேட்டர் ஆட்கள் ஓடிவந்தார்கள். பக்கத்து ஆசனத்தில் இருந்தவன் அவசரமாக எழுந்து தன்பெண்டாட்டியின் மார்பைப் பாதுகாத்தான். மற்றவர்கள் என்ன ஆச்சு என்று. கேட்டார்கள். கலங்கியகண்களைத் துடைத்தபடி தியேட்டரை விட்டு வெளியேறினா¡ள். அவளைநாய்குட்டிபோல, அப்பா துரத்துகிறார். இவன் இருந்து முழுப் படத்தையும் பார்த்துவிட்டுத் திரும்பினான்.

மறுநாள் லேடி டாக்டரிடம் அவளை அப்பா அழைத்துபோனார். மருத்துவர் என்ன கேட்டிருப்பார், இவர்கள் என்ன பதில் சொல்லி இருப்பார்கள் என்பதை நினைத்து, நினைத்து சிரிக்கிறான்.. அடுத்த மூன்று நாட்கள் வீட்டில் அமைதி. இவனைப் பார்த்ததும் அஞ்சி ஓடினாள். வயிற்றில் கட்டிய லுங்கியும், முண்டாபனியனுமாக சமாதானப்படுத்த அவளையே அப்பா சுற்றிவந்தது நினைவில் இருக்கிறது. தேவா, அவளது வரவைப் பற்றி, சகோதரர்களுக்குக் கடிதம் எழுதினான். ஏதோ வீட்டிற்கு அப்பா புதிதாக ஒரு டி.வி. வாங்கிப் போட்டிருப்பதுபோல, “அப்படியா? நல்லதுதான்”, என்று பதில் எழுதி இருந்தார்கள்.

ஒரு மாதம் கடந்திருக்கும். பகல் நேரம். பள்ளியிலிருந்து திரும்பி இருந்தான். மின்சாரத்தடை.. வீடு இருண்டுகிடந்தது. காற்றுத்தடையில்-ஏர்பிரேக்கில்- சட்டென்று நிற்கிற பேருந்து வெளிப்படுத்தும் உபரிக்காற்றின் சத்தம்போல உஸ்ஸென்று கேட்க, நின்றான். கூடத்தில் இரண்டாவதாக இருந்த அறைக்கதவு திறந்து கிடந்தது. இவன் எட்டிப் பார்த்தான். அவள் இவனைக் கவனித்துவிட்டாள். மார்பில் சோர்ந்து பரவிக்கிடந்த அப்பாவைத் தட்டி எழுப்பினாள். தூக்கம் கலைந்தவர்போல திடுக்கிட்டு எழுந்தார். இவனைப் பார்த்து அவள் அசிங்கமாகச் சிரித்தாள்.

அன்றைக்கு வழக்கம்போல அப்பா தனது நண்பர்களுடன் பாருக்குப் போயிருந்த நேரம். “தேவா” – என்று அழைத்தாள். இவன் ஓடினா,ன் சமயலறையில் உட்கார்ந்தபடி விஸ்கிக் குடித்துக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் ‘உட்கார்’ என்றாள். உட்கார்ந்தான்

– குடிக்கிறியா¡?

– வேண்டாம் எனக்குப் பழக்கமில்லை.

– என்னை அம்மாண்ணு கூப்பிட உனக்கு இஷ்டமில்லைதானே? புரியுது. தம்பி உனக்கும் எனக்கும் எத்தனை வயசு வித்தியாசம் இருக்குமென்று நினைக்கிற. அடுத்த பங்குனிவந்தா உனக்கு இருபதுவயசுண்ணு, அவர் சொன்னதா ஞாபகம். எனக்கு என்ன வயசு இருக்கும் சொல்லு பார்ப்பம்.

– முப்பது ?

– நீ ஆக மோசம். ஆவணி பொறந்தா எனக்கு இருபத்தெட்டு. அதனாலென்ன நீ அம்மாண்ணு சொல்றதெல்லாம் வேண்டாம். எலீஸாண்ணே கூப்பிடலாம். இவன் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்க அவள் தொடர்ந்தாள்.

– ஆக உனக்கு அப்பாவாலதான் பயம். அவரு திட்டாதபடி நான் பார்த்துக்கிறேன். சரிதானா? அங்கே அமிர்தாஞ்சனமிருக்கு எடுத்துவா. எடுத்துவந்தான். கொஞ்சம் முதுகிற் தேய்க்கணும்.. பிளவுஸின் கொக்கியைக் கழற்றினாள்.

தேவசகாயத்தை, ஷியென் தேவசகாயம் ஆனந்தன் என்றுதான் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும்.. அதுதான் அவனுடைய முழுப்பெயர். புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த நேரம், தேவசகாயத்தின் தகப்பன் வேலாயுதம் என்ற பெயருடன், பஞ்சம் பிழைக்க சேலியமேட்டிலிருந்து வந்திருந்தார். அவருக்கு வெள்ளாளர் தெருவிலிருந்த திருமலைப் பிள்ளை வீட்டில் எடுபிடி வேலை கிடைத்தது. திருமலைப்பிள்ளை கிறிஸ்துவர். ஒருநாள், வேலாயுதத்தை அழைத்துக்கொண்டுபோன தேவாலயம் போனவர் தனது பங்குத்தந்தையிடம் சொல்லி இவருக்கும் ஞானஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்தார். அன்றிலிருந்து வேலாயுதம் தேவசகாயமாக மாறினார். திருமைலைப்பிள்ளையுடைய மூத்தமகள் புஷ்பத்தின்மேல் வேலாயுதத்திற்கு ஒருகண். தானும் திருமலைப்பிள்ளையும் ‘புனித இருதய ஆண்டவரை’த்தானே பிரார்த்தனை செய்கிறோம் என்ற நினைப்பில், வாய்திறந்து ஒரு நாள் தனது உள்ளக்கிடக்கையே திருமலைபிள்ளையிடம் தெரிவிக்கவும் செய்தார். திருமலைப்பிள்ளைக்கு வந்தது கோபம், “செருப்பாலடி நாயே, இரெண்டுபேரும் கிறிஸ்வரென்றாலும், நீயும் நானும் ஒன்றாகிவிடுவோமா. நான் சாதியிலே வெள்ளாழன் தெரியுமோ? வெளியே போடா..” என்று சத்தம்போட்டார். கோபத்துடன் வெளியேறிய தேவசகாயம், பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து கப்பலேறத் தீர்மானித்தார். வரிசையில் போய் நின்றார். இவரை அழைத்த வெள்ளைக்காரன், “உனக்கும் குடும்பப்பெயரென்று எதுவிமில்லையா? வெறும் தேவசகாயந்தானா?”, எனப் பிரெஞ்சில் கேட்க, பக்கத்தில் நின்ற தமிழர் மொழிபெயர்த்து சொன்னார். “சாமி வேணுமானா, வேலாயுதம்னே எழுதிடுங்களேன், எங்க தகப்பன் வச்சது”, என்றார். நின்றிருந்தவர், இவர் சொன்னதைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்து வெள்ளைக்காரனிடம் சொல்ல, அவன், “வேண்டாம், எங்களுக்குச் சிரமம். அங்கே நிற்கிறவர்கள் எல்லோருக்கும் நாங்கள்தான் பெயர் வைத்தோம். முன்னாடி நிற்கிறவங்க ஏழுபேருக்கும், வரிசையா திங்கள், செவ்வாய், புதன் என்று கிழமைகள் பேரை வைத்தேன். அதோ அங்கே நிற்கிறாரே, பெயர் வைக்கும்போது தும்மினார் அதனால ‘அச்சும்’னு பேரு வச்சிருக்கேன். உனக்கு ‘ஷியென்’ சம்மதமா?”, என்றார். இவர் பக்கத்தில் நின்றிருந்தவரைப்பார்க்க, ” ‘நாய்’ என்று பேர் வச்சிருக்கார், சம்மதமென்று சொல்”, என்றார். “ஏங்க சாமி, வேற நல்ல பேரா எதுவும் இல்லைங்களா? அமாவாசை, பூண்டு, கறுப்பன் என்கிற பெயர்களை மறந்து இப்பத்தான் வேலாயுதம் அப்படி இப்படிண்ணு வைக்க ஆரம்பிச்சிருக்கோம், தேவசகாயம்னே கூட வச்சுக்கலாம், எதுக்காக சாமி ‘நாயி, பேயி’ங்கிற பேரை வைக்கிறீங்க?”, என்றுசொல்ல, வெள்ளைக்காரன் பக்கத்திலே நின்றிருந்த தமிழருக்குக் கோபம் வந்தது. “எந்தப் பேரு வச்சா என்னைய்யா? ‘நாய்’ என்று தமிழ்லயா கூப்பிடப்போறான். அவன் தயவிலே வயித்தை கழுவறோம், பேருல என்ன வந்திட்டுது. அங்கே நிற்கிறாங்க பாரு அவங்களோட போயுட்டு நீயும் நில்லு. நல்லா பேரா வேணுமானா, திரும்பிபார்க்காம வந்த வழியே கிளம்பு,” – என்கிறார். சக தமிழரின் பதிலில் நியாயம் இருப்பதுபோல தெரிந்தது. வேலாயுதம் வரிசையில் நின்றார். கப்பல் ஏறினார். அப்போதுதான் ராணுவத்திற்கு ஆளெடுத்தபோது பக்கத்திலிருந்த தமிழர், பதிவேட்டில், இவரது ஆசையையும் வெள்ளைக்காரன் ஆசையையும் சேர்ந்தே நிறைவேற்றி இருப்பது தெரிந்தது. குடும்பப்பெயராக ஷியென் தேவசகாயமென்றும், இவரதுபெயராக வேலாயுதம் என்றும் எழுதியிருந்தார். கப்பலேறிய ஷியென் தேவசகாயம் சைகோன் போனார். சண்டைபோட்டார். திரும்பிவந்தபோது, தீவிர கிறிஸ்துவராக இருந்தார். புதுச்சேரியில் தென்பகுதியில் பழைய வீடொன்றை வாங்கி இடித்து நவீனப் படுத்தினார். மறக்காமல் ‘அன்னை மரியாள் துணை’ என்று முதல்மாடிச் சுவரில் எழுதிவைத்தார். சொந்த கிராமத்தில் இவருக்கு எஜமானாக இருந்த ரெட்டியார் நிலங்கள் விற்பனைக்குவர வாங்கிப்போட்டார். பின்னர் அவர்களிடமே அதைக் குத்தகைக்கும் விட்டார். பங்குத் தந்தையின் சிபாரிசின்பேரில், மரியம் என்ற பெண்ணை, அருகிலிருந்த அந்தோனியார் ஆலயத்தில் வைத்து மோதிரம் மாற்றிக்கொண்டார். பிரான்சுக்குக் கூட்டிச்சென்றார். ‘பதினைந்து ஆண்டுகள்’ பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு, புதுச்சேரிக்கு நிரந்தரமாகத் திரும்பியபோது வேலாயுதம் மரியம் தம்பதிகளுக்கு இரண்டு பெண்களும் நான்கு ஆண்பிள்ளைகளும் இருந்தார்கள். நமது தேவசகாயம் என்றழைக்கபடுகிற ஆனந்தன் பிறந்தபோது வேலாயுதத்திற்குகா ஐம்பது வயது. “பிரெஞ்சுக்காரன் காசுய்யா, எத்தனை பிள்ளை வேண்டுமானாலும் பெற்றுகொள்வான்யா என்று தெரு பேசியது. அறுபதுகளிலேயே சுளையாக மாதம் கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் வந்தது. பிள்ளைகளைப் பிரெஞ்சு பள்ளியில் சேர்த்தார், ஒருவர் பின் ஒருவராக பிரான்சுக்கு அனுப்பிவைத்தார். தேவசகாயத்திற்கு இருபது வயது என்கிறபோது, காய்ச்சலென்று படுத்த மரியம் எழுந்திருக்கவில்லை. மனைவி இறந்த பதினைந்தாம் நாள் அவளை அழைத்துவந்திருந்தார், சமைப்பதற்கும் சில்லறைவேலைகளுக்கும் ஒருத்தி வேண்டுமே, அதற்காக என்றார்.

அப்பாவின் இறப்புக்குப் பிறகு, இப்போதெல்லாம் சேலியமேட்டிலிருந்த இவர்கள் நிலங்க¨ளைப் பார்த்துக்கொள்ளும் குத்தகைகதாரர்பையன், புதுச்சேரிக்கு வந்தால் இவர்கள் வீட்டில்தான் தங்குகிறான். அவனோடு சேர்ந்துகொண்டு சித்தி வீட்டிலேயே குடிக்கிறாள் இன்னொருமுறை புகைக்கலாம்போல இருக்கிறது. சட்டைப் பையில் மிச்சமிருப்பது, சீண்டுகிறது. கடந்த சில மாதங்களாக பொது இடங்களிலும் உபயோகிக்க ஆரம்பித்திருந்தான். புதுச்சேரியில் மிகசுலபமாகக் கிடைக்கிறது. கூச்சப்படாமல் வாய் திறந்து கேட்கவேண்டும். ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, எனக்கு ‘அது’ வேண்டுமென்று சொன்ன மாத்திரத்தில் பெட்டிக்கடைகாரர்கள் புரிந்துகொள்கிறார்கள், கொடுக்கின்ற பணம் மதிப்பீட்டில் குறைவாக இருந்தால், ‘அது’ என்ற சொல்லுக்கு ஆணுறை என்று பொருள், கூடுதலாக இருந்தால் கஞ்சா என்கிற மரியுவானா. முதன் முறையாக நண்பன் பேச்சுவாக்கில் பெட்டிக்கடையில் கிடைக்கிறதென்று சொன்னான். “இன்னா தம்பி இங்கேயே இழுக்கறியா? ஒரு தம்முக்கு இரண்டு ரூபாய்தான். பொட்டலமென்றால், ஒன்று நூறுரூபாய். போலீஸ்காரன் வர்றானென்று பயப்படாதே, நமக்கு வேண்டியவங்கதான்”- பெட்டிக்கடைக்காரன் தேவசகாயத்திற்குத் தைரிய மூட்டினான்..

பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைச் தரிசிக்கசென்ற இடத்தில், சாது ஒருவர், “அம்மனை சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் ஔடதம்”, என்று இதை அறிமுகப்படுத்திவைத்தார். நாளொன்றுக்கு இரண்டுமுறை இம் மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென, தாடியை வருடியபடி, கண்களைச் சிமிட்டி, உத்தரவாதம் கொடுத்தார். ஷிலமில் வைத்து கைப்பிடி அளவு புகையைக் கசியவிடாமல் அவ்வளவையும், அவசரத்துடன் நெஞ்சுக்குள் இறக்க, கண்களில் நீர்கோர்த்தது, சட்டென்று அதிர்ந்து மீண்டான். குப்பியொன்றில் அடைத்து அவனை யாரோ மேலும் கீழுமாய்த் தாலாட்டுகிறார்கள், கண்கள் இருண்டன, கால்களிரண்டும் சோர்ந்தன, பூமி விலகிச்செல்கிறது. இருகைகளையும் பரத்தி, வானில் பறக்கிறான், மதிற்சுவர் தெரிகிறது, ஆயிரங்கால் மண்டபத்தினை அடுத்து தீர்த்த குளம். இறங்கி நீராடுகிறான், கரையேறி ஆடை தரிக்க, பெண்கள் இருவர் கைதொட்டு அழைத்துபோகிறார்கள், கனகசபை, திருச்சபை, தேவசபை ஆகிய மூன்றுசபைகளுக்கும் செப்போடு வேய்ந்திருக்க, இவனது ஞான சபைக்குப் பிரத்தியேகமாகத் தங்க ஓடும் தங்கக் கலசங்களும். சிவப்புக் கம்பளத்துடனான நடைபாதை, முடியுமிடத்தில் தங்கத்தாலான சிம்மாசானம், இருபுறமும் சேடியர் கவரி வீசுகிறார்கள், அரியணையை நெருங்க கால்கள் பின்னுகின்றன, நடையில் நளினம் சேர்ந்துகொள்கிறது, சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிர காளி அம்மன்..

கண்விழித்தபோது பெரிய நாயொன்று பின் தொடர சைக்கிளை நிதானமாக மிதித்துக்கொண்டு சொல்லும், (அரவிந்தர்)ஆஸ்ரமத்து கிழவன், ராஜ் நிவாஸ் என்றழைக்கப்படும் கவர்னர் மாளிகையில் துப்பாக்கியை சாய்த்துப்பிடித்தபடி காலை உதறும் காவலர். தீசல் எண்ணெய்சட்டியும் பெற்றோமாக்ஸ் விளக்குமாக வண்டியைத் தள்ளிச்செல்லும் நேந்திரங்காய் சீவல் வியாபாரி. விழித்தபடி நிற்கும் தூங்குமூஞ்சி மரங்கள், பெண்ணொருத்தியுடன் அவசரமாக ஆயிமண்பத்திற்குள் ஒதுங்கும் நடுத்தர வயது ஆசாமி. எரிச்சல் வந்தது. எழுந்து வேகமாக நடந்தான். இவனை பார்த்ததும் ஆசாமி பயத்துடன் விலகினான். அவள் முந்தானையை சரி செய்துகொண்டு இவனைப் பார்த்தாள். நேரேசென்று கன்னதில் ஓங்கி அறைந்தான். வாயில் குதப்பிவைத்திருந்த வெற்றிலை ‘பச்’சென்று முகத்தில் விழுந்து வழிந்தது. இவனை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவன் ஓடினான். மண்டபத்தைவிட்டு மெல்ல வெளியேறி சிறிது நேரம் மண்டபத்தின் மேற்கு திசையில் நின்றான். மகப்பேறு மருத்துவமனைக்கு வந்திருந்த கிராமப்பகுதியைச் சேர்ந்த ஏழைகள், பிணங்கள்போல கிடந்தனர். கழுத்தை வலமும் இடமும் திருப்பிப் பார்வையை மேயவிட்டபடி மேற்கு திசையில் இறங்கி நடந்தபோது, இரண்டு ஸ்கூட்டர்கள் ஒன்றன் பின்றாக டயர்தேய கிரீச்சிட்டு நின்றன. அருணாசலமும், குளோதும் ஆளுக்கொரு ஸ்கூட்டரில் அமர்ந்திருந்தார்கள்.

– ருடோல்ப்! ஸ்கூட்டரில் உட்கார் உன்னை வீட்டில் விட்டுட்டுபோறோம்- குளோது

– பரவாயில்லை நான் போய்க்குவேன். -தேவா.

– ராத்திரியில, இந்த நிலைமையில நடந்தா? -அருணாசலம்

– ஆட்டோ பார்த்து போய்க்கிறேன்.

– அதெல்லாம் உடனே முடியற விஷயமில்லை. வா.போகலாம்.

தேவா மறுப்பேதும் சொல்லாமல் பின் சீட்டில் அமர்ந்தான்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா