மாங்கல்யச் ‘சரடு ‘கள்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

எஸ்.ஷங்கரநாராயணன்


—-

பெரியசாமி பேரில்தான் சாமி. பேரில்தான் பெருசு. விஷயம் ஒண்ணும் சொல்லுந் தரமில்லை. எப்பப் பேசினாலும் பத்து வார்த்தைக்கு மேல் என்ன பேச என்று குழப்படியாயிப் போகும். இதுவரை பேசியவரை சரியான்னு ஒரு தடுமாத்தமும் இருக்கும். எதுராளி அலட்சியப் படுத்தாமல் இடைமறிக்காமல் கேட்டுக் கிட்டாலேகூட தடுமாத்தம் சாஸ்தியாத்தான் ஆகுமேயொழியக் குறையாது… சென்மம் லபிச்சதே அப்பிடி.

சமீபத்திய அவரது பிரச்னை எப்பிடி செத்துப் போகிறது என்பதே. பக்கத்து வீட்டில் ஒரு இளம் பெண், தற்கொலை செய்து கொண்டு முன்மாதிரியாய் ‘வாழ்ந்து காட்டிப் ‘ போய்ச் சேர்ந்தாலும் இவரு புத்திவரை அது எட்டவில்லை. என்னவோ காதல் தோல்வின்றாங்க. அதுக்காகவெல்லாந் தற்கொலை செஞ்சிக்குவாங்களா என்ன, என்று அப்போது தோணியது. காதல்னா என்ன என்றே அவருக்குத் தெரியாது. கலியாணங் கட்டி பேரன் பேத்தி கண்டாச்சி. காதல் தெரியாது.

அவரது வயசுப்பிராயத்தில் சுப்பிரமணி என்று ஒரு சிநேகிதன். அவன் காதலிச்சான். அதைப்பத்திக் ‘கதை ‘யெல்லாஞ் சொல்வான். அவருக்கு விளங்காத கதைகள் அவை. அவ பின்னாடியே அவன் போனான். எங்கெங்க போனாலும் பின்னாடியே போவது காதல் என்றால் காதல் என்பது நாய்ப்பொறை மாதிரி என்றுதான் பட்டது.

‘ ‘என்ன ? ‘ ‘

‘ ‘நீ ரொம்ப அளஹ்ஹா இருக்கே… ‘ ‘ என்றான் சுப்பிரமணி.

‘ ‘எலேய், அவ அளகா இருந்தா உனக்கென்னடா ? ‘ ‘ என்றுகேட்டான் பெரியசாமி. ‘ ‘அளகா இருந்தால் பின்னாடி போணுமா ? ஏன் ? ‘ ‘ என்று சந்தேகமும் கேட்டான்.

‘ ‘உனக்குக் காதல் பத்தித் தெரியாது ‘ ‘ என்று வெட்கம்பூச அப்போது சிரித்தான் சுப்பிரமணி. அப்பறம் அவளுக்கு இன்னொரு இடத்தில் கல்யாணம் ஆனபோது அழுதான். அது தெரியும். கல்யாணம் நல்ல விசயம்லா – அதுக்குப்போயி இந்த லுாசுத் தா… அளுவறானே என்று தோன்றியது. அவன் அவள் பின்னால் போவதையும் நிறுத்தியானது. பெரியசாமிக்கு ஒரு விசயம தெளிவாப் புரிஞ்சது. அழகான பெண்கள் கல்யாணம் ஆயிட்டா அழகில்லாமப் போயிர்றாளுகள்.

இப்ப அவர் பேத்தி ராணி யாரையோ காதலிக்கறதாச் சொல்றாங்க. ஐயோ இவளும் தற்கொலை செய்துக்கிடப் போறாளான்னு பயந்துட்டார் பெரியசாமி. ஆனால் ராணிக்கு முகத்தில் தனிச் சிரிப்பு வந்திருந்தது. மூக்குச் சளிக்காரி போல இப்ப கையில் சிறுதுணி. கைக்குட்டை வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்துபோல உள்ளே பவுடர். திருட்டுப்பயல்கள் மயக்கமருந்து வெச்சிருப்பாங்கன்னு கேள்விப் பட்டிருந்தார், அதைப்போல. சளின்னு அவசரத்தில் அதையெடுத்து திருடனே மூக்கைத் துடைச்சிக்கிட்டா கதை கந்தல், என நினைத்துக் கொள்வார்.

ராணிக்குச் சளி. இல்லையில்லை – காதல். தெத்துப்பல்க்காரி. முன்பெல்லாம் சிரிக்குமுன் பல்லெடுப்பு வெளிய வந்துரும். அதனால் அதிகம் சிரிக்காமல் புன்னகை மட்டும் செய்கிறவள். என்ன… பார்க்க பல்வலி வந்தாப்போல ஒரு முகஜாடை காணும். அவளுக்கு இப்ப தைரியம் வந்திருந்தது. அவரது பயம் அதிகரித்திருந்தது… ரொம்பச் சிரிச்சி அடுத்தாளை இப்பிடி இம்சை தரப்டாது. காதலிக்கிற ஆம்பிளை கிளம்பிறப் போறான்.

பிரச்னை ராணியின் பல்லெடுப்போ, காதலோ அல்ல. அவளது எதிர்காலத் தற்கொலையும் அல்ல. பெரியசாமி வாழ்க்கையைப் பெரும் அலுப்பாய் உணர்ந்தார்… என்ன செய்ய, எப்பிடிப் பொழுதை ஓட்ட என்றே எட்டவில்லை. மலைபோல் நின்றன விநாடிகள். ஒவ்வொரு விநாடியையும் அவர் காலைத் துாக்கித் தாண்டிப்போக வேண்டியிருந்தது. பச்சைக்குதிரை விளையாட்டு போல. அதென்ன ‘பச்சைக் ‘குதிரை ? விநோதப் பேர். சரிய்யா, தாண்டிட்டோம்னா விட்ற மாட்டாங்க, அதைவிட உயரங் கூட்டி -இப்ப தாண்டப்பு…ன்னு விவகாரத்தை எக்கச்சக்கமாக்கி விடுகிறாங்கள்.

அவர் இருந்து ஒண்ணுஞ் சாதிக்கப் போறதில்லை. சோத்துக்கு தண்டம். நல்ல நாளிலேயே வேலை கீலைன்னு பாடுபடாத மனுசன். இனி யாரால் அவருக்கு என்ன பயன், என அலுத்தார் தன் மனசில். இந்த வாழ்க்கை அவருக்குப் பிடிபடவில்லை. சனங்க எதற்குப் பிறக்கிறார்கள், எதை அனுபவிக்கிறார்கள், தெரியவில்லை. சிலாளுகள் ஜோராய் அனுபவிக்கிறார்கள். சும்மா மைனர்செய்ன் போடுறதென்ன, பெருஞ்சத்தத்துடன் வாகனமேறிப் போறதென்ன, வெத்தலை-பாக்கு போட்டு பல்குத்தித் துப்புறதென்ன. விநோத மீசைகள், விதவிதமான தலைவாரல்கள். கையில் மோதிரம், மணி பார்த்துக் கொள்ளுதல். எதற்கு அடிக்கடி மணி பார்த்துக்கறாங்கன்னே அவருக்குத் தெரியாது.

ஆ காதலிக்கிறாங்கப்பா. அதையுஞ் சேத்துக்க.

இருந்தவரை யாருக்காவது உபயோகமா வாழ்ந்தமா என்று எப்பவாவது பெரியசாமி நினைக்கிறதுண்டு. சம்சாரத்துக்கு ஒரு குடத்துத் தண்ணி எடுத்துத் தந்ததில்லை. பொறுப்பு என்று எதையும் ஏற்றுக் கொண்டதில்லை. எதுக்கெடுத்தாலும் பயம். சந்தேகம். தப்பாயிருமோன்னு ஓர் உதறல். சரி பிறத்தியார் செய்யட்டுமேன்னு பக்கத்ல நின்னு பாத்திட்டே நிக்கிறது. ‘ ‘என்னய்யா ? ‘ ‘ என்று நிமிர்ந்து, வேடிக்கை பார்க்கிற இவரை முறைப்பார்கள். மையமாய் ஒரு சிரிப்பு சிரித்துச் சமாளிக்கிறதுதான்.

இது தெரியாது, அது தெரியாதுன்னு இருந்திட்டு இந்த வயசில் அட இழவெடுத்த சன்மமே… சாகவும்லா தெரியாமப் போயிட்டு, என்றிருந்தது. சாவுலயாவது யாருக்காவது பயன்பட்டா நல்லது, என ஏனோ சிறு ஆசை வந்தது. சட்டென்று ஒரு யோசனை- அட ஆமடா, மக வயத்துப் பேத்தி, ராணி காதல் செயிக்க பிரார்த்தனை செய்வம், என்று திடுதிப்னு ஒரு உற்சாகம். பிறத்தியாள் நன்னாயிருந்தாதானே நாம சந்தோசமா இருக்க முடியும் ? அவங்க இதுநாள்வரை நம்மைத் பொறுத்துக்கிட்டதே நல்ல விசயம்லா ? அதை நினைச்சிப் பாக்கண்டாமா… யாரிடமும் சொல்லிக்கக் கூட வேணாம்… நாமளா ஒர் ரவுண்டு வெட்டிரவுண்டு ஊரைச் சுத்துற நேரம் கோவிலுள்ள ஏறிப்போயி ஒரு கும்புடு, நாடும் வீடும் நல்லாயிருக்கணும்னு ஒரு வேண்டுதல்… சிலாளுகள் வெளவால் போல ஏனோ சாமிமுன்னால் கன்னத்துல அடிச்சிக்குவான்… கண்ணாடி முன்னால நின்னு ராணி பவுடர் அடிக்குமே அதைப்போல. சர்த்தான் நாமளும் வேண்டிக்குவமே ராணிக்காக.

வாழ்க்கையில் முதன் முறையா ஒரு நல்ல காரியம் செய்கிற பரவசம் தாள முடியவில்லை பெரியசாமிக்கு. திடார்னு புதுவெயில் வந்தாப்ல உடம்பெங்கும் கதகதப்பாயிட்டதப்பா. எல்லாரும் கோயில் போகவர இருந்த பரபரப்பான நேரம் அவரும் போக வெட்கமாய் இருந்தது. தனியாப் போவம். வேண்டிக்கிட்டா தனியா, அந்தரங்கமா வேண்டிக்க வேணாமா ?

கோவில் வளாகம் தனித்துக் கிடந்தது. யாரும் இல்லை, என உறுதி செய்து கொண்டார். எதோ தப்புக் காரியம் செய்ய உள்ளே நுழைகிறாப் போலப் பட்டது. சிரித்துக் கொண்டார். மனசாரக் கும்பிட்டு மத்தவாளைப்போல ஒரு பந்தாவான ‘சுப்ரமணீ என்னப்பா முருகா ‘ன்னு சிறுசப்த எடுப்புடன் திருநீறு அள்ளிப்பூச தோரணையாத்தான் இருந்தது. சிறு சந்தோசம்.

– என்னய்யனே முருகா, ராணிக்கு ஒரு குறையும் அமையாம வாழ வை…

கோவில் பிராகாரம் ஒருசுத்து வர்றாரு. ஆடாதோடை செடிப்புதர்ப் பக்கம் சட்னு பரபரப்பு. எய்யா பாம்பு கீம்பு வெளிய கிளம்பிட்டதான்னு அந்தாக்ல பயந்திட்டாரு. பாத்தா, மனுசப் பாம்பு. சாரையும் நாகமும்னாப்ல. ஆருடா எவருடான்னு பாத்தா -என்ன தாத்தா ?…ன்னு சிரிக்கிறாள், அட நம்ம ராணி.

கூட அவன் யாரது தெரியவில்லை.

‘ ‘என்னட்டி இங்கன நிக்கே ? ‘ ‘ என்றார் பெரியசாமி.

‘ ‘ராத்திரி கொஞ்சம் சளில இருமிக்கிட்டுக் கிடந்தீங்களே தாத்தா, அதான் கஷாயத்துக்கு… ஆடாதோடை எடுக்கலாம்னு வந்தேன். செடி உசரம் எட்டுமோ எட்டாதோன்னு…. ‘ ‘

‘ ‘நம்ம தம்பியையும் கூட்டி வந்தியாக்கும் ? ‘ ‘ என்றார்.

‘ ‘ஆமா பாட்டையா ‘ ‘ என்கிறான் அவன் சிறு சிரிப்புடன். அவருக்கு மனம் நெகிழ்ந்தது. சிரிப்பாய்ப் பேசுவதான நினைப்பில் ‘ ‘எனக்கெதுக்குட்டி ஆடாதோடையும் ஆடுறதொடையும்… ஹிஹி ‘ ‘ன்றாரு. ‘ ‘சளி அதும்பாட்டுக்கு வரும் போகும். தாத்தாவுக்குச் செய்யணும்னிருக்கே ஒனக்கு… அதே போதும் ‘ ‘ என்றார்.

நாம பிரியமா இருந்தா, பாரேன் கடவுளை, நம்மேல் அக்கறைப்பட ஜனங்களைக் காட்டுறான் என ஆனந்தத் திகைப்பாய் இருந்தது. அட செத்துற நினைச்சா வாழ்க்கை தட்டுப்படுது. வேடிக்கை.

‘ ‘வர்றம் தம்பி ‘ ‘

‘ ‘சரிங்க தாத்தா. உடம்பப் பாத்துக் கிடுங்க ‘ ‘ என்கிறான் அவன்.

‘ ‘நீயும் உடம்பைப் பாத்துக்கணும் அடிக்கடி! ‘ ‘

ராணியும் அவருமாய் வீடு நோக்கி நடந்தார்கள்.

‘ ‘நீங்க எங்க தாத்தா கோவில்ப் பக்கம் ‘ ‘ என்கிறாள் ராணி.

மன நெகிழ்ச்சியில் அந்தாக்ல அழறாப்ல உணர்ந்தார் பாட்டையா. ‘ ‘என்னமோம்மா உனக்கொரு கல்யாணங் கார்த்திகைன்னு பாத்திட்டா நான் நிம்மதியாக் கண்ணை மூடுவேன் ‘ ‘ என்றார் தோரணையாய். எல்லாரும் பெரியவர்களான பின் அப்படித்தானே சொல்கிறார்கள் ?

அவர் வேண்டிக் கொண்ட வேளையா என்ன தெரியவில்லை. ராணிக்கு கல்யாண மும்முரங்கள் என்று வீட்டில் பரபரப்பு கண்டது. சந்தோசமாய் இருந்தது அவருக்கு. பார்த்தால் வீட்டில் பிறத்தியார் யாருமே அத்தனை சந்தோசமாய் இல்லைபோல் ஏனோ தோணியது. அட கிரகக் கோளாறா என்ன சனியனோ தெரியவில்லை. கடைசிவரை இந்த லோகம் அவருக்குப் புதிராகவே இருந்தது. வாங்கி வந்த வரமோ என்ன எழவோ தெரியல்ல. வெளிய சிரித்துப் பேசினாலும் வீட்டுக்குள் செம்பகம் ராணியத் திட்டுறா. மகள் காதலிப்பது செம்பகத்துக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை வேறெடத்துல மாப்ளை பாக்குறாகளோ…

‘ ‘என்னா விசயம், ஏன் எல்லாரும் இப்டி உம்னு திர்றீங்க ? ‘ ‘

‘ ‘உமக்குத் தெரிஞ்சி என்னாப் போவுது ? நீரு தீத்து வைக்கப் போறீரா ? ‘ ‘ என்று எரிந்து விழுந்தாள் செம்பகம். அதற்குமேல் அவளிடம் பேச வழியில்லாமப் போச்சு. அவள் வீட்டுக்காரன் நல்ல நாளிலேயே செம்பகத்தைப் போட்டு அடிப்பான். ‘ ‘எல்லாம் நீ கொடுத்த எடந்தாண்டி… ஒம் மவளுக்குக் குளிர்விட்டுப் போச்சு ‘ ‘ன்னு… லாரியைக் கிளப்பினாப்ல ஒரே எரைச்சல் கொடுத்தான். அவனே லாரி டிரைவர்தான்.

‘ ‘எம்மா, என்ன உனக்கு வேற எடத்ல மாப்ளை பாக்குறாங்களா ? ‘ ‘ன்னு மெல்ல ராணியிடம் கேட்கிறார். அவ அழுதுக்கிட்டே, ஆனா பாதகத்தி -இல்லன்னு தலையாட்டுறா. பின்னென்னாத்துக்கு இவ அழுகணும் ?… அவர் குழப்பம் அதிகமாயிட்டது.

காதல்தோல்வின்னா அழறதுதான், தற்கொலைதான்… அதே மாப்ளை… அதற்குக்கூட அழுவாளுகளா என அவருக்கு ஆச்சரியம்.

சரி, அப்ப கல்யாணத்துக்கு எதுக்கு இவ்ள அவசரப்படறாங்க ?… அதுவும் தெரியவில்லை.

குளிர்விட்டுப் போச்சுன்னா என்ன ?

அவர் ராணியை சமாதானப் படுத்த விரும்பினார். புன்னகைக்க வைக்க விரும்பினார். அவருக்காக – அவர் சளிக்காக கவலைப் பட்ட ஒரே சீவன் அந்த வீட்டில். கேட்டால் ராணி அவர் சளிக்காக பவுடரில் கைக்குட்டை கூடத் தரக் கூடும்.

‘ ‘ராணி நீ அழப்டாது. நீ விரும்பிய எடத்ல தானே கல்யாணம் நடக்குது- பின்ன ?… ‘ ‘ என்றார் தோரணையாய்.

ராணி அவரைப் பார்த்தாள்.

‘ ‘கண்ணைத் துடைச்சிக்கோ. ‘ ‘

துடைத்துக் கொண்டாள்.

‘ ‘சிரி. ‘ ‘

சிரித்தாள். அட நாமகூட மூளையோட நடந்திக்கிட்டம்னு அவருக்குத் திருப்தி. உற்சாகமாய் இருந்தது.

‘ ‘சீக்கிரம் பிள்ளையப் பெத்துக்குடு ‘ ‘ என்றார் பெரியசாமி. பெரியவர்கள் அப்படித்தானே பேச வேண்டும் ?

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்