மழை வருது

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

ஈழநாதன்


‘மழை வருது ‘
‘மழை வருது ‘
முதற் துளிகளின் போதே
கட்டியங்கூறும்
மண் மணக்கும் நாசி.

வீழும்
ஒவ்வொரு துளிகளும்
உடைந்து சிதறுகையில்
கூடவே கரையும் மனம்!

வீழ்ந்து வெள்ளமாய்
ஆகிப்போன துளிகளுடன்
புதுத்துளிகள்
சேரும் சப்தம்;
புற் குழந்தைகளுக்கு
மழையின் தாலாட்டாய்க்
கூடவே கரையும் செவி!

துளிகளின்
ஊடுபுகும்
சூரியன் சிதறல்கள்,
வானவில்லாய்ப் பரிணமிக்கையில்
கூடவே வளையும்
கண்கள்.

மண்கரைந்து ஓடும்
வெள்ள நீர்
அசுத்தமென்றறிந்தும்
அளைந்திடப்
பரபரக்கும் கைகள்.

கூதற் காற்றில்
வெடவெடத்தாலும்
போர்க்கும் மனமின்றி;
குறுக்கே கைவைத்து
குளிருக்கு அடைக்கலம் தேடும்
உடல்!

இத்தனையும்
எனக்கே..
எனக்காக
ஊரில் நின்றிருந்தால்!!

அடுக்குமாடி அறையொன்றின்
சாளரங்களை…
மழைத்துளிகளுக்காய்
சாற்றும் போதுதான்
எத்தனை நினைப்புகளும்,
ஆற்றாமைகளும்!!

ஈழநாதன்

Series Navigation

ஈழநாதன்

ஈழநாதன்