மழை நனைகிறது….

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


காயும் துணிகள் நனைகின்றன
கை வந்தெடுக்க வரவில்லை.

சாரலும் தூறலும் நுழைகின்றன
சாளரம் சார்த்த
முகம் எட்டிப் பார்க்கவில்லை.

துளிகள் துள்ளிக் குதிக்கின்றன
துள்ளும் உன் வீட்டு
பிள்ளைகள் வெளிநின்று ஓடவில்லை.

ஒருதுளி தொட ஒருதுளி துரத்த
மழையில்
நான் தொட நீ நனையவில்லை.

‘ நீ
வீட்டில் இல்லை என்பதற்கு
வேறின்னமும் வேண்டும் இதைவிட…. ‘
என்கிறேன்
வெளியில் நின்று.

‘ நீ
வெளியில் நிற்கிறாய் என்பதற்கு
வேறின்னமும் வேண்டுமா ‘
என்கிறாயா உள்ளிருந்து.

மழையில்
சில நேரம் ஆடை நனைகிறது
சில நேரம் மனசு நனைகிறது.

வெளியே
நீயில்லாமல் நான் மட்டும்
மழை நனைகிறது.
—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation