மழைச்சாரல்…..

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

என். சுரேஷ்


இனிமையான மாலை நேரம்!

இரயிலோர ஜன்னல் வழி மழையை ரசித்துக்கொண்டே இருந்தேன்.

தினமும் எப்படியாவது என்னிடம் ஏதாவது பேச ஆசைப்படும் சகபயணி அவள், “ஏங்க.., நீங்க இறங்க வேண்டின இடம் வந்தாச்சு” என்றதும், அந்த அழகியிடம் மௌனமாக நன்றி சொன்னது எந்தன் புன்னகை!.

என்னிடம் பேச ஆசைப்படும் மனிதர்களிடம் பேச ஆசைப்படாமல், என்னிடம் பேச விருப்பமில்லாதவர்களிடம் பேச ஏன் நான் ஆசைப்படுகிறேன்!

வெறுப்பவர்களை நேசிப்பதும், நேசிப்பவர்களை வெறுப்பதும் பலரிடம் இருக்கும் சொல்லப்படாத ஒரு மனநிலை தானே? இதில் நான் விதிவிலக்காக இருக்க ஆசை தான், இருந்தாலும்….!

எனக்கு ஏன் தான் இந்த மழை மீது இவ்வளவு காதலோ!

இரயில் நிலையத்திலிருந்து என் வீட்டிற்கு அரை மணிநேரப் பயணம். வேண்டுமென்றே குடையை மறந்து விட்டு மழையில் நனைந்து வரும் என்னை ஒரு தாயின் சத்தம் “ நைனா ஏண்டாப்பா இப்படி நனைஞ்சுக்கிட்டு,,,” அதில் கோபத்தை விட தாய்ப்பாசமே அதிகமாக சத்தமிட்டது!

சென்னைத் தமிழை கிண்டல் செய்பவர்கள் தஞ்சாவூர், கோயம்பத்தூர் என பல்வேறு ஊர்களில் உள்ள பேச்சுவழக்கங்களோடு ஒப்பிட்ட்டு குழம்பிப்போய் தவறாய் விமர்சிப்பதை என்ன சொல்ல? அடிப்படையில் சென்னையும் ஒரு கிராமம் தான். ஆரம்பத்தில் மீனவர்களின் சமூகம், பிறகு மற்ற இடங்களிலிருந்து துறைமுகம் சார்ந்த வணிகம் மற்றும் வேலைகளைத் தேடி வந்து சேர்ந்தவர்கள் மிச்சமிருப்பவர்கள், அவ்வளவு தான். கிண்டல் செய்யப்படும் இந்த மொழி தான் சென்னை கிராமத்தின் வட்டாரமொழி! சென்னை கிராமம் இன்னமும் இங்கிருக்கும் ஓலை இல்ல சமூகத்தில் மட்டுமே!

நான் தினமும் இறங்கும் அந்த இரயில் நிலையத்திற்கும் நகர அழகிற்கும் இடையே ஒரு ஓலை சமூகம்.

அந்த சமூகத்தினரின் கஷட்டங்களை கண்டு “தனக்கும் கீழே உள்ளவர் கோடி..” என்ற பாடலை மனதிற்கொண்டு, தன்னை சுத்தப்படுத்தவில்லையே என்ற கவலையை சமாதானப்படுத்தி பயணித்துக்கொண்டிருக்கிறது கூவம்!

அங்குள்ள அந்த ஓலைசமூகத்திலிருந்து வந்தவர்கள் தான் அந்த தாய் வெண்புறா! எனக்கு அவர்களின் குடையை தந்து விட்டு எதிரிலுள்ள அவர்களின் ஓலைவீட்டிற்குள் சென்று விட்டார்கள்.

நான் மழைக்காதலன் என்று இவர்களுக்கு எப்படித்தான் தெரியும் என்று யோசித்து திரும்புகையில், அந்த ஓலைசமூகத்தின் இரத்ததை குடிக்கும் ஒரு மதுக்கடை! அரசே மது விற்கப்படுகிறதே என்று கோபப்படுவது நியாயமா? கள்ளச்சாராயம் ஏழைகள் உயிர்களை அழித்தால் பராவியில்லையா என்ற பதில்-கேள்விக்கு என்னிடம் பதில் இல்லையே! அரசு மதுக்கடைகளில் எப்படி கள்ளச்சாராயம் கலக்கப்படுகிறது என்பதற்கும், அதனால் ஏற்படும் மரணச்செய்திகள் ஏன் செய்திகளாவதில்லை என்று “எதையும் எதிர்ப்போம்” என்ற அடிப்படையற்ற கொள்கையோடு அரசை பார்க்கும் ஒருவன் கேட்ட கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லையே!

அவனது கொள்கையில் முட்டாள்த்தனம் இருப்பினும் அவ்வப்போது அவன் சில புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்பான்; அவனுக்கும் சேர்த்து பதில் இல்லாத அந்நிலை கண்டு ரசிப்பான். நிறைகளை பாராட்டாமல் குறைகள் மட்டும் சொல்லும் அரசிற்கு எதிரான பத்திரிகைக்காரர்கள் இவன் கொள்கையைக் கண்டால் ஒருவேளை இவனை அழைத்து பதவிகள் கொடுக்கக்கூட்டும்!

மீண்டும் எனது பார்வை அந்த ஓலைச்சமூகத்தின் வீதிகள் மீது சென்று கொண்டே இருந்தது.

குப்பை அள்ளுபவன், பிணத்தை எரிப்பவன் என இந்த சமூகத்தை சுத்தப்படுத்தும் மனிதர்கள் தான் அந்த ஓலைசமூகத்திற்குள் பலர். மனதாற சாப்பாடு சாப்பிட நாங்க குடிச்சுத் தான் ஆகனும் என்று போதையோடு உறுதியாக பேசும் அவர்களிடம் நியாயம் இல்லாமல் இல்லை என்று சமாதானப்பட என் மனம் ஏனோ எந்தன் அறிவோடு ஒத்துப்போகவில்லை!

அம்பானிகளை விட இங்கு வாழும் மதுபானகர்கள் அரசின் நிதிக்கு உதவும் கருணையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மழைச்சாரலில் அப்படியே அந்த சமூகத்தின் தெருக்கள் வழியே சென்றுகொண்டிருந்தேன். என்னோடு குடையும்!

ஏறத்தாழ எல்லா ஓலை வீடுகளிலும் பத்து-அடிக்கு-பத்தடி அறை! அவ்வளவு தான். சமையலும் உறக்கமும் எல்லாம் அதற்குள்ளே தான். காலைக்கடன்களை கழிக்க பெரியோர்களுக்கு இரயிலின் வெளிச்சமும் வரவும் இல்லாத நேரம் பார்த்து, பார்த்து, பயந்து,,, பயந்து!

சீறார்களுக்கு இதற்கு எங்கும் சுதந்திரம்!

ஆங்காங்கே ஒன்றோ இரண்டோ மாடிவீடுகள், அவ்வளவு தான்! அதற்கு உரிமையாளர்கள் அதிகமும் சேட்டன்களும் சேட்டுக்களும்! இலங்கை,ஆஸ்திரேலியா அமெரிக்கா வளைகுடா நாடுகள் என எங்கு தான் மண்ணின் மைந்தர்கள் தங்கள் சொந்த மண்ணில் தழைத்து வாழ வைத்தார்கள், இங்கு மட்டும் அதற்கு முரண்பாடு வந்தமைய!

அங்குள்ள வீடுகளில் பலருக்கு மின்சாரமில்லை, குடிதண்ணீர் வரவில்லை, ரேஷன் அட்டை இல்லை – ஆனால் எல்லோருக்கும் வாக்காளர் அடையாள அட்டைகள் உண்டு!

“அம்மா பசிக்குதம்மா” என்று ஆங்காங்கே அழுகை சத்தம் கேட்டு என்னோடு அழுது வந்தது என்னோடு பயணித்து வந்த குடையும்!

மனைவியை அடித்து விட்டு பாயெடுத்து சாலையில், தனது ஓலைவீட்டு முற்றத்தில் இட்டு புலம்பிக்கொண்டே படுத்துக்கொண்டான் ஒருவன். போதையோடு இந்த ஐயா மனைவியிடம் காமம் கேட்கிறான். மனைவிக்கு ஈடுபாடு இருந்தும் வயதிற்கு வந்த பிள்ளைகள் இருக்கையில் எப்படி இதெல்லாம் சாத்தியம். அவள் தனது ஆசைகளை தியாகம் செய்யும் அறிவு அவனின் போதைக்குத் தெரியாததற்கு போதை தெளியும் வரை அவன் பொறுப்பல்ல, மதுவே பொறுப்பு. ஆனால் இந்த மகாபாவி அவனின் மனைவியை அடிக்காமல் இருக்கலாமே!

சின்ன சின்ன விஷயங்களுக்கு தற்கொலைகள் இங்கே சாதாரணச்செய்தி. கோபம், கத்தி, சண்டை, இரத்தம், குழாய் சண்டை, மஞ்சள் நீராட்டு விழா, கடன்வாங்கி ஆடம்பர கல்யாணம், ஆங்காங்கே நடிகர்களின் புகைப்படங்கள், சின்னச் சின்ன கடைகள், பணயத்திற்கு பணம் கொடுக்க காத்திருக்கும் மார்வாடிக்கடைகள், மலையாளமும் தமிழும் கலந்து பேசி, பாலில் தண்ணீரல்ல, தண்ணீரில் பாலை கலந்து டீ தரும் நாயர் டீக்கடைகள், சாக்கடை வாசம், கானாப்பாடல்கள், மரணத்திற்கு போடும் கூத்தாட்டம், கோயில் உற்சவங்கள், உற்சவத்தன்று கூழ், அன்னதனம் மற்றும் ஒலிப்பெருக்கியில் மேடையிட்டு பாடப்படும் சினிமாப்பாடல்கள், அதற்கு ஆட்டமாடி அரசு காவலளர்களிடம் அடிவாங்கும் ஏழை இளைஞர்கள், பள்ளிசீறுடையிட்டே பசியோடு மயங்கி உறங்கும் குழந்தைகள் என அங்கு தான் எத்தனை எத்தனை காட்சிகள்! நாடாளும்

அரசின் பார்வைக்கு மறைக்கும் சூட்சிகளின் உண்மை காட்சிகள்

சினிமாக்காரர்களை கோடீஸ்வரர்களாக்கும் அப்பாவி ரசிகர்கள். கதை பற்றி ஒன்றும் தெரியாமல் முதல் நாளின் முதல் காட்சிக்கு ஆயிரக்கணக்கிற்கு பணத்தை கடன் வாங்கி சினிமா பார்க்க செல்லும் ஏழை அப்பாவிகள். அரசியலுக்கு செல்ல சினிமாவை கையில் பிடித்துகொண்டு நடந்தேற கிடைத்த இதமான ஏழைகளின் முதுகின் சேகரிபுகள் இந்த ஏமாற்றப்படுபவர்கள்.

அதோ அங்கொரு ஆரம்ப கல்விக்கூடம், ஆரம்பித்த இருபது வருடங்களாகியும் அதன் வளர்ச்சி பெரிதாய் ஒன்றும் இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்று விசும்பி அழுகிறது அதன் பெயர்பலகை ஒரு மெல்லிய காற்று அதனை மென்மையாய் தொட்டுச் சென்றதும்!

சினிமா விளம்பரம் ஒன்று சுவரில் நனைந்து கொண்டே அழுதிருந்தது. சினிமாவின் பெயர் “ சேரி நாய் கோடீஸ்வரன்” ( ஸ்லம் டாக் மில்லியனர்). சேரியின் அவலநிலையை படம்பிடித்து பணமும் புகழ்புயலும் சேகரித்தப் பின்னர் சேரிகளை மறந்துபோன நல்லவர்கள் பலரின் பெயர்களும் அங்கே ஆனந்த கண்ணீரில் நனைந்திருப்பதை கண்டேன்.

சைக்கில் ரிக்ஷாக்களும், சைக்கிள்களும், சில மோட்டார் சைக்கிள்களும் ஆட்டோக்களும் தெருக்களில் ஆங்காங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது.

சில ஆட்டோக்களில் மனித இயந்திரங்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதொன்றும் அங்கே பெரிய விஷயமல்ல!

தெருவிற்கு ஒரு கோயில். அதன் வாசல்கலில் சிலர் தங்களை மறந்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். நல்லவேளை அங்கிருக்கும் மரங்கள் ஒன்றையும் இவர்கள் யாரும் வெட்டிக்கொல்லவில்லை!

மரங்கள் நடனமாடி மகிழ்ந்து தென்றல் வீசி தங்களின் நன்றியை தெரிவித்துக்கொண்டு தாலாட்டு பாடிக்கொண்டிருந்தது.

அந்தந்த தெருக்களில் அந்தந்த நாய்கள். இந்த சட்டத்தை மீறினால், அவ்வளவு தான், சத்தமோ சத்தம்,

மழைச் சாரல் தொடர்ந்துகொண்டே இருந்தது.

வேலைக்குச் சென்று விட்டு சைக்கிளோட்டி வீடு திரும்புகிறான் ஒரு இளைஞன். கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், பொறியியற் படிப்பில் சேறும் தனது கனவு முறிந்த கவலையோடு அவன் தற்போது தினக்கூலி ஆகியுள்ளான்.

எந்த சொத்தும் கேட்காமல் படிப்பிற்கு மாணவர்களுக்கு கடன் கொடுக்க மத்திய அரசின் ஆணை இருந்தும் ஏறத்தாழ எல்லா வங்கிகளும் சொத்திருந்தால் தான் கடன் கொடுக்க முடியும் என்று வெறும் வாயால் மட்டுமே சொல்லி, மாணவர்களை வங்கியிலிருந்து வெளியேற்றும் தொடர் கொடுமைக்கு பலியாகி, நியாயம் கிடைக்காமல் அநியாயம் தான் நியாயம் என்ற தவறான புரிதலோடு வாழும் பல லட்சம் மாணவர்களில் இதோ இன்னொருவன் என்று ஆறுதல் படுவதோடு முடிந்ததா என் கடமை! என்னிடமே எனக்கு கோபம்!

பக்கத்திலேயே குடிசைமாற்றுவாரியத்தின் வீடுகள். அதை வாடகைக்கு விட்டு அதில் கஞ்சிகுடிக்கும் ஓலை சமூகத்தின் மீது அனுதாபமின்றி பலர் பேசிக்கொண்டு போகின்றனர்.

ஏழைகளுக்கு சேரவேண்டின பணம் அரசே அஞ்சல்வழி அனுப்பியிருந்தால் இந்த ஓலைசமூகம் என்றோ கோடீஸ்வர சமூகமாக மாறியிருப்பார்கள்.

தனக்கு கீழே பல ஜாதிகள் இருப்பதில் பெருமையும், தனக்கு மேலே பல ஜாதிகள் இருப்பதைப் பற்றின சுயமரியாதையினமையும் மாறும் காலம் விரைவில் வந்து ஜாதிகளின் ஜதியாட்டத்தை மாற்றினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்!

இந்த ஓலைசமூகத்தில் எல்லா ஜாதியனரும் உள்ளனர். இங்கு வாழ ஒரே ஒரு தகுதி தான், வறுமை! இங்குள்ளோர் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் சம்பந்திகளாகும் அளவிற்கு மனங்கள் விஸ்தாரப்படவில்லை. இதனால், இங்குள்ளோரின் காதல் திருமணங்கள் அதிகமும் காவல்நிலையத்தில் தான் நடந்து வருகிறது.

சிலர் மட்டும் கொஞ்சம் படிக்கிறார்கள் ஆனால் என்ன பயன்? சமுதாயநலம் மறந்து சுயநலம் கற்றுத்தரும் சில அரசியல் ஜாம்பவான்களுக்கு இரையாகி விடுகிறார்களே அந்த சிலர்!

நூறு-இரணூறு ரூபாய பணம் வாங்கினதற்கு உண்மையாக ஓட்டுபோடும் நல்லவர்களை இங்கு காணலாம். ஏறத்தாழ எல்லோரும் இங்கு ஓட்டுபொடுவார்கள். படித்தவர்கள் ஓட்டுபோடாமல் இவர்கள் ஓட்டுப்போடுவதை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து தேர்தல் முடிவின் தலைப்புச் செய்தியை வாசித்துவிட்டு சந்தைவர்த்தகம் பார்க்க செல்வார்கள். அவர்களை விட இந்த ஓலைசமூகம் எவ்வளவு அப்பாவிகள்!

இவர்கள் ஓலையில் இருந்தால் தான் கோட்டை உறுதியாகும் என்ற அரசியல் ஞானம் சில கட்சிக் கொடிகளுக்கு உள்ளவரை இந்த சமூகத்திற்கு கல்விக்கண்கள் திறக்கப்படுமா?

சுற்றி சுற்றி அந்த தெருமுனையில் உள்ள, குடை தந்த தாயின் வீட்டிற்கு முன் சென்று சேர்ந்தேன். குடையை கொடுக்க அந்த வீட்டு கதவு என்ற ஒரு கோணியின் முன், “அம்மா இந்தாங்க அம்மா குடை” என்றேன். பதிலே இல்லை என்பதும், மென்மையாக அந்த கோணிக்கதவைத் திறந்தேன். கட்டிட வேலை செய்து வந்த களைப்பில் அந்த தாய் உறங்கிக்கொண்டிருந்தார்கள், பாவம்! அவர்களை எழுப்ப என் மனம் அனுமதிக்கவில்லை.

குடையை அங்கே வைத்துவிட்டு நடந்து வருகையில் “என்னங்க நீங்க இங்கே” என்று ஓர் இனிமையான குரல்! பார்த்தால் அது எனது இரயில் சகபயணி!

நாளைக்கு இரயிலில் சந்திப்போம் என்று சொல்லி வெட்கத்துடன் அந்த ஓலை கிரகத்திற்க்குள் நடந்து போனாள் அந்த அழகி!

nsureshchennai@gmail.com

Series Navigation

என். சுரேஷ்

என். சுரேஷ்