மறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

அ.மோகனா, முனைவர் பட்ட ஆய்வாளர்



அ.மோகனா, முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக் கழகம்

நாஞ்சில் நாட்டு எழுத்தாளர் பொன்னீலனின் கரிசல், புதியதரிசனங்கள் ஆகிய புனைவுகளைத் தொடர்ந்து Òமறுபக்கம்Ó நாவல் வெளிவந்துள்ளது. 1972இல் எழுதத் தொடங்கி 2010இல் இவர் இந்நாவலை வெளியிட்டுள்ளார். இந்நாவலின் விவரணங்கள், வாசிப்புத் தளத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் எத்தகைய தன்மையினை உடையவை என்பது கவனத்துக்குரியது. சுமார் 250 ஆண்டுகால, இன்றும் ஆவணப்படுத்தப்படாத, ஒடுக்குதலுக்கும் பல்வேறு சமூகச் சுரண்டலுக்குமுள்ளான மனிதர்கள் பற்றிய நாவலாக இது விளங்குகிறது.

இந்நாவலுக்குரிய வரலாற்றுத் தரவுகளாக இவர் பயன்படுத்தியது வி. நாகமய்யா, டி.கே. வேலுப்பிள்ளை ஆகிய திருவாங்கூர் உயர் அதிகாரிகள் எழுதிய திருவாங்கூர் ஸ்டேட் மானுவல்கள் (னீணீஸீuணீறீs) மற்றும் நீதிபதி பி. வேணுகோபால் விசாரணைக்குழு அறிக்கை. இத்தரவுகளின்வழிச் சேகரிக்கப்பட்ட சமூக அசைவுகளின் தொடர்ச்சியாக 1982 இல் நடந்த மண்டைக்காட்டுக் கலவரத்தையும் ஆசிரியர் இணைத்துக்கொள்கிறார்.

நாவலின் களமாக இருப்பது தென்திருவிதாங்கூர் மற்றும் அதனைச் சுற்றிய கிராமங்கள். பண்பாட்டுக்கலப்பு மற்றும் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் நிலவுகின்ற நிலப்பகுதி. வருணாசிரம தர்மம், காலனிய ஆதிக்க வரிஏய்ப்பு வன்முறைகள், கிறித்துவத்தின் பரவல் மற்றும் செயல்பாடுகள், பாரம்பரிய தாய்த்தெய்வ வழிபாட்டின் எச்சங்கள் என ஏராளமான பன்முகத்தன்மைகளின் பாதிப்புக்கு உள்ளான மக்கட் சமூகம் வாழ்கின்ற பகுதி. இப்பகுதி மீதான பல அடுக்குநிலைப் பார்வைகளை இந்நாவல் வைத்துள்ளது.

இந்நாவலில் இடம்பெற்றுள்ள பாத்திரங்கள் யாவும் ஏதோ ஓரு மையத்தில் தம் இருப்பின் தரப்பட்ட நிலையினைத் தேடுவனவாகவே அமைந்துள்ளன. பிளக்கப்பட்ட மனிதத் தன்னிலை என்பது நாவல் முழுவதுமாக இடம்பெற்றுள்ளது. ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தின் வரலாறு என்கிற ஒற்றைப்புரிதலுக்குள் இந்நாவலை அடக்கிவிடமுடியாது.

மையப்பாத்திரமான சேது மண்டைக்காட்டுக் கலவரத்தைக் குறித்த கள ஆய்வுக்கான தேடலுடன் பனைவிளை என்னும் நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு வருகிறான். ஆனால் தன் இன அடையாளத்தைத் தேடுவதே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறான். மேட்டிமை எண்ணங்ளோடு அத்தேடல் தொடங்கினாலும் இறுதியில் யதார்த்தத்துடன் சமநிலைப்பட்டுத் தன் அடையாளத்தை உணர்ந்து கொள்கிறான். இத்தேடலுக்கும் சமன்பாட்டுக்கும் உதவுபவர்களாக வெங்கடேசன், முத்து, அலெக்ஸ் ஆகிய பாத்திரங்கள் இடம் பெறுகின்றன.

அடக்குமுறையிலிருந்து விடுபட மாற்றுவழியாக மதச் செயல்பாடுகளையே பெரும்பாலான மக்கள் முன்னெடுக்கின்றனர். இதில் கிறித்துவத்தின் செல்வாக்கு அதிகம். இருப்பினும் மத அடையாளத்தை மாற்ற முடிந்ததே தவிர பாரம்பரியமாகக் கடைபிடித்த சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளிலிருந்து அவர்களால் வெளிவர இயலாத நிலையினை இந்நாவல் நுண்மையாகப் பதிவுசெய்துள்ளது. இதனை மூன்று தலைமுறைகளின் இடைவெளியினூடாக இந்நாவலில் இனங்காண முடியும். வைகுண்டசாமி அய்யா (முத்துக்குட்டி) வழி இயக்கத்தை மாற்று வழியாக ஏற்றுக்கொண்ட சின்னநீலன் (முதல் தலைமுறை)Òஅம்ம கூப்பிடுதா, என்னைய அனுப்பி வையும்.Ó(ப:238) என்று கூறிவிட்டுத் தன் இனஅடையாளத்தை (பூசாரி) மீண்டும் தேடிச்செல்லும் செயல்பாட்டினைக் கூறலாம்.

கிறித்துவத்தின் பரவலைத்தடுக்க இந்துத்துவம் மேற்கொண்டது பிரம்ம சமாஜம் என்கிற, சாதியத்தைச் சாடுவதாக முலாம் பூசப்பட்ட இயக்கம். இதன் மூலம் Ôபூணூல்Õ அணிந்துகொண்டு தனது ஒடுக்கப்பட்ட நிலைக்கு மாற்றினைத் தேடிய சங்கரனின் (இரண்டாம் தலைமுறை) ஊடாட்டங்கள், மூல ஆசிரியன் சேகரித்த தரவுகள், அத்தரவுகளினூடான தேடல்கள் அனைத்தும் சங்கரனின் மூலமாகவே இந்நாவலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி, பெரியாரின் வழியில் தன்னை அடையாளப்படுத்திய வெங்கடேசனும் (மூன்றாம் தலைமுறை) இறுதியில் சாமியாடியைக் கட்டிவைத்த போது Òஆடத்தான் செய்யும்Ó(ப:725) என்று கூறுவதும் அது தொடர்ந்த செயல்பாடுகளின் மூலமும் தன்இருப்பினை உணர்கிறார்.

இந்நாவலில் சில பாத்திரங்களின் வெளிப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. சா….ர் இந்த நாட்டோட நாகரீகத்துக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஊற்றுக்கண்ணாக அமைந்திருந்த சமூகம் கம்மாளன் சமூகம் சார். அவன் ஒடுக்கப்பட்ட வரலாறு தான் இந்தியா ஒடுக்கப்பட்ட வரலாறு (ப:428) என்ற சிதம்பரம் என்னும் கம்மாள இனத்தைச் சார்ந்த பாத்திரத்தின் வெளிப்பாடு, தன் இனத்தின் மீதான பெருமையையும் இன்றைய சூழலில் அவ்வினம் ஒடுக்கப்பட்ட அவலத்தையும் ஒருசேர உணர்த்துகிறது. ஒவ்வொரு சாதிக்குரிய தொன்மங்களையும் வரலாறுகளையும் பெருங்கதையாடல்களோடு இணைத்து அவற்றை ஒடுக்குவது வைதீகத்தின் இயல்பு. அதற்கான எதிர்ப்புக் குரல்கள் நாவல் முழுதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரிங்கள்தௌபே, மீட்அய்யர் ஆகியோரின் நிலைப்பாடுகளும் கவனத்திற்குரியன. மீட்அய்யர் சாதியத்துக்கு எதிரான கருத்தினைக் கொண்டிருந்தாலும் இறுதியில் அதனோடு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினை அடைவது, வருணாசிரம முறையின் வலுவினைக் காட்டுவதாக உள்ளது. நாடார், சாணார், புழுக்கையர், வண்ணார், கம்மாளர், குறும்பர், பறையர், மீனவர்… எனப் பல சமூகங்களின் வாழ்நிலைகள் மிகத்தெளிவாக இந்நாவலுள் பேசப்பட்டுள்ளன. கோயில்களின் நிர்வாகத்தை Òதெய்வீகப்பேரவைÓ என்ற மடாதிபதிகளின் அமைப்பு ஏற்றுக்கொள்வது தொடர்பாக, குன்றக்குடிஅடிகளார் எடுத்த முயற்சியினை, எதிர்த்த சமஸ்கிருத மடாலயத்தின்போக்கு இந்துத்துவ மனோபாவங்களின் மிக மோசமான நிலையினை உணர்த்துகிறது.

இஸ்லாமியர்களுக்குள் நிலவுகின்ற சாதிய முரண்கள், அம்முரண்களினால் மூன்று இஸ்லாமியர்கள் மண்டைக்காட்டுக் கலவரத்தில் மேற்கொண்ட நிலைப்பாடுகளும் குறிப்பிடத்தக்கன. ஏற்கெனவே குறிப்பிட்டபடி 250 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் குறித்த பதிவுகளும் இதில் உள்ளன. குறிப்பாக மருமக்கள் தாயமுறை, தம்பிமார்களின் வீழ்ச்சி, மார்த்தாண்டவர்மா நீராதாரங்களைச் சுற்றி ஆதிக்கசாதியினரைக் குடியேற்றியதன் விளைவாக (மனுஸ்மிருதி) அதுவரை கொண்டாடப்பட்டு இருந்த பனை சார்ந்த தொழில்கள் யாவும் இழிவுபடுத்தப்பட்டு நாடார்கள் நிரந்தரமான ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டது.

நாவலின் சம காலத்திய நிகழ்வான மண்டைக்காட்டு கலவரத்தின் விளைவுகள் வரையிலான பல அரசியல் செயல்பாடுகளைக் காணமுடியும். மீனவ சமூகத்துக்கும் நாடார் சமூகத்துக்குமான இனப்பிரச்சனை ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவவாதிகளால் கிறித்துவ இந்துத்துவ மோதலாக மாற்றப்பட்டதே மண்டைக்காட்டுக் கலவரத்தின் அடிப்படை. இக்கலவரத்தின் போது ஆளும் அரசு ஊமையாக இருந்து வேடிக்கை பார்த்ததன் பின்புலமாக ஓட்டுஅரசியலை நாம் அவதானிக்க முடியும்.

நாவலுள் இடம்பெற்ற அதிகாரத்துக்கு எதிரான போராட்டங்களாக அக்கினிக்காவடி போராட்டம், தோள்சீலைக் கலகம், நேசமணி போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட குமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட நிகழ்வு மற்றும் நிலவுடைமைக்கெதிராக நிகழ்ந்த போராட்டங்களைக் கூறமுடியும். Ôகுமரிமாவட்டப் போராட்டம்Õ நவகாளி நிகழ்வின் மற்றொரு வடிவமாக, பொன்னீலனால் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு சமூகங்களில் வாய்மொழிமரபாக வழங்கப்பட்டுவருகின்ற நாட்டார்கதைகள் பல இடம்பெற்றுள்ளன. சிவணனைஞ்ச பெருமாள் சாமி கதை (வண்ணார்மரபு), கன்னிபூசை, மண்டைக்காடுஅம்மன் பற்றிய கதைகள் (பௌத்தகதை,செவிவழிகதைகள்),அதிகாரத்துக்கு எதிரான சாணார் மக்களின் யானை தலையிடறுகிற கதை, தம்பிமார் கதை (பப்புத்தம்பி,ராமன்தம்பி மருமக்கள்வழி ஏற்பட்ட அதிகாரவெற்றி குறித்த கதை). அருந்ததியர் உருவானது குறித்த அண்ணன், தம்பி கதை. பாப்பான் பறையன் குறித்த வைதிகச்சார்புடைய காமதேனுகதை, இசக்கிகதை, சூரங்குடி பிச்சைக்காலன், அரிசிப்பிள்ளை நாட்டார்தெய்வக்கதை, ஈத்தாமொழிக்குடும்ப உருவாக்ககதை எனப் பல்வேறுகதை மரபுகளோடு சடங்குகளும் இடம்பெற்றுள்ளன.

Òமறுபக்கம்Ó இந்நாவலை வாசிக்க உத்தேசிக்கப்பட்ட வாசகன் காலவெளிகளைக் கடந்ததொரு பயணத்தை மேற்கொண்ட உணர்வினை அடைவது தவிர்க்க இயலாதது.

நாவல் கிடைக்குமிடம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 600 098
தொ.பே.எண் 26359906, 26251968

Series Navigation