மரணம் ஒத்த நிகழ்வு !

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

ரசிகன்


ஒரு மரணத்தை ஒத்த
நிகழ்வு என்னை சூழ்கிறது!

காலை நடந்தேறிவிட்டதொரு
சுப காரியத்தில்
என்னில் ஒரு பாதியை
அரை மனதோடு வாழ்த்தியாகி விட்டது!

அர்ச்சதைகளும்
மேள தாளங்களும்
என்னை முழுமையாய் மறக்க செய்திருந்தன
இந்த முழு பொழுதையும்…

கடந்து போன இரவுகளை விட
இவ்விரவு
சற்றே அசௌகரியமாய் அரங்கேறுகிறது…

மின் விசிறியின் சுழற்சிக்கு
முதல் காதல்
தாக்கு பிடிக்க இயலாது
தலை சுற்றி கொண்டிருக்கிறது….

தேகம் தவிர்த்து
உயிர் முழுதும் காதலித்த தருணங்கள்
அழ தொடங்குகின்றன…

வேண்டாம்..
இனி அழுது என்ன ஆகப்போகிறது?
என்னையே தேற்றி கொள்கிறேன்…

பயனிருப்பதான அறிகுறியில்லை…

இதயத்துடிப்பு அதிகரிக்கிறது…
வார்த்தைகளை பிடித்திழுக்கிறேன்…

உடல் வியர்க்கிறது…
நினைவுகளை அழுத்தி வைக்கிறேன்!

சாத்தப்பட்ட கதவுகளில்
பயம் தொற்றிக்கொள்வதும்

ஜன்னல் திரை மறைவில்
புழுக்கம் உளருவதுமாய்….

தனிமை கையோங்கிட
ஒரு வித
நடுக்கத்திலேயே இமைகள் அடைக்கிறேன்…!

ஒரு மரணத்தை ஒத்த
நிகழ்வு என்னை சூழ்ந்து கொள்கிறது!


ரசிகன்
பாண்டிச்சேரி

Series Navigation