‘மயங்குகிறாள் ஒரு மாது.. ‘ இசை அமைப்பாளர் விஜயபாஸ்கர் மறைவுக்கு அஞ்சலி.

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

திண்ணை


‘மயங்குகிறாள் ஒரு மாது ‘, ‘அன்பு மேகமே இங்கு ஓடிவா.. ‘, ‘சம்சாரம் என்பது வீணை.. ‘, ‘தப்புத்தாளங்கள் ‘, ‘வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் ‘, ‘மணமகளே உன் மணவறைக்கோலம்.. ‘, ‘என் காதல் கண்மணீ ‘, ‘யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா ? ‘ என்பது போன்ற மறக்க முடியாத பாடல்களை இசை அமைத்த விஜயபாஸ்கர் மார்ச் 3ஆம் தேதி 2002இல் மறைந்தார்.

விஜயபாஸ்கர், பங்களூரில் அரசாங்க பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர். சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வமுடன் இருந்த இவர், கோவிந்த பாவே அவர்களிடம் முறைப்படி ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் கற்றவர். இவர் கர்நாடக சங்கீதமும் பியானோவும் வாசிக்கக் கற்றவர். இவர் பம்பாய்க்குச் சென்று புகழ்பெற்ற இசை அமைப்பாளரான நவுஷத் அவர்களிடம் பணிபுரியச் சென்றார். அந்தக் காரணத்தினால், மாதவ லால் மாஸ்டர் அவர்களிடம் இசை பயிலும் வாய்ப்பும் கிடைத்தது.

1954இல் தயாரிப்பாளர் இயக்குனரான பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி, தான் தயாரித்த ‘ஸ்ரீ ராம் பூஜா ‘ என்ற படத்துக்கு இசை அமைக்கக்கோரிய போது, இவருக்கு முதன் முதலாக ஒரு படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை கன்னடப்படங்கள் வெற்றிகரமான இந்திப்படப் பாடல்களின் மெட்டுக்களைத் திருடியே இசை அமைக்கப்பட்டு வந்தன. விஜயபாஸ்கருக்குப் பிறகு இது மாறியது.

கல்யாணக்குமார் அவர்களுடைய முதல் படமான பாக்யச்சக்ரா-வுக்கு 1956இல் இசை அமைத்ததும் இவரே. அத்துடன் இதன் கதை திரைக்கதை வசனமும் எழுதினார். 1960இல் வந்த ‘ராணி ஹொன்னம்மா ‘ என்ற படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் பாடல்களுக்கு இசை அமைத்ததும் இவரே. கன்னடத்தின் மிகப்புகழ் பெற்ற எழுத்தாளரான குவெம்பு அவர்களது ‘ஜெயபாரதி ஜனனிய தனுஜதே ‘ க்கும் இசை அமைத்தது இவரே. ‘சாந்த துக்காராம் ‘ என்ற ராஜ்குமார் படத்துக்கு இவர் அமைத்த இசை இவரை கன்னட இசை உலகத்தின் உச்சியில் உட்காரவைத்தது.

புட்டண்ண கனகல் என்ற சிறந்த இயக்குனருடன் இவர் ஜோடி சேர்ந்து உருவாக்கிய படங்களும் இசையும் தொடர்ந்து பலகாலம் கன்னட மக்களை மகிழ்வித்து வந்தது. இந்த ஜோடி பலராலும் பாராட்டப்பட்ட நீண்டகால ஜோடியாக கன்னட திரைத்துறையில் இருந்தது.

மலையாளத்தின் சிறந்த இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணன் இவரது இசையால் கவரப்பட்டு தன்னுடைய ‘மதிலுகள் ‘ என்ற படத்துக்கு இவரை இசை அமைக்கக்கோரினார். இது கேரள விமர்சகர்கள் பரிசு பெற்றது.

விஜயபாஸ்கர் சுமார் 670 கன்னட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கொங்கணி, ஒரியா, துளு படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். சுமார் 350 கன்னடப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். கிராமீய இசையே தன்னுடைய இசையின் அடிநாதம் என்று இவர் வெளிப்படையாக அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார்.

http://www.deccanherald.com/deccanherald/mar10/ent1.htm

***

Series Navigation