மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

(பெண்கள் சந்திப்பு, ஊடறு, ஜேர்மன் தமிழ் மகளிர் மன்றம். (ஸ்டுட்கார்ட்))


என்ன செய்யப்போகிறோம்… எப்படி செய்யப்போகின்றோம்…????

மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.
(பெண்கள் சந்திப்பு, ஊடறு, ஜேர்மன் தமிழ் மகளிர் மன்றம். (ஸ்டுட்கார்ட்))

யுத்தத்தின் கரங்கள் இறுகியதால் பட்டினியில் பரிதவிக்கும் வன்னி மக்களின் கோர அவலங்களுடன் மக்கள் நிமிடத்திற்கு நிமிடம் மரணங்களைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள்.

போர் முகம் வன்னிமக்களை மனப்பயத்துடன் கூடிய அலைச்சல்கள், இடப்பெயர்வுகள், தூக்கமற்ற இரவுகள், உயிரழிவுகள் உடமை இழப்புக்கள் என சொல்லெணாத்துயரங்களை பல பரிமாணங்களிலும் எதிர்நோக்க வைத்திருக்கின்றது. பசிக்கொடுமை…போதிய உணவில்லை…பயத்தினால் சிறுவர்களின் கதறல்கள்… இலங்கைப் பேரினவாத அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நடைபெற்றுவரும் போரினால் மக்கள் எங்கு போவது எனத் தெரியாமல் தத்தளிக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு உதவ முடியாமல் இருப்பதை எண்ணி மனம் வேதனையடைகின்றது.
புலிகள் எல்லா வெகுஜன அமைப்புக்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும், ஜனநாயக சக்திகளையும் கோரமாக ஒடுக்கி அழித்தொழித்ததன் விளைவு இன்று வன்னி மக்களுக்கு உதவி எதுவும் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு புலிகளே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட எமது மண்ணில் இவ்வகை வேலை முறைக்கான வெகுஜன அமைப்புக்களையும் புலிகள் அச்சுறுத்தி இல்லாமல் செய்து விட்டனர். அதன் பலனை இன்று வன்னி மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். வேறுபட்ட முகாம்களின் துப்பாக்கி மோதலில் அவதியுறும் இம் மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு கேள்விக்குறியாகி உள்ளது. புலிகள்,அரசு தமக்குக் கவசமாக குழந்தைகள் முதியோர் என பாராமல் வன்னிமக்களை பகடைக்காய்களாகப் பாவிக்கும் மோசமான செயலாகும். இந்நிலையில் இலங்கைப் பேரினவாத அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நடைபெற்றுவரும் போரினால் அனேகமான கிராமங்கள் முற்றாக அழிந்து விட்டன. மக்கள் எங்கு போவது எனத் தெரியாமல் தத்தளிக்கும் இவ்வேளையில் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை இலட்சங்களைத் தாண்டியுள்ளது. இடம் பெயர்ந்த மக்களின் முகாம்களின் மேல் அரசு விமானங்கள் மூலம் குண்டுகளை பொழிந்து வருகிறது.

மோதலில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர் வாழ்வாதாரத்தை உதவி நிறுவனங்கள் வழங்கி வந்தன. அவ் உதவிபுரியும் நிறுவனங்களையும் இலங்கை அரசாங்கம் வெளியேற்றி வி;ட்டது. சர்வதேச தொண்டர் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் வாபஸ் பெறுவதானது தமது நிலைமையை மேலும் மோசமானதாக்குமென சர்வதேச தொண்டர் நிறுவனங்களில் பணிபுரியும் உள்நாட்டை சேர்ந்த அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதே நேரம் அனைத்து தொண்டர் நிறுவனங்களையும் வன்னியை விட்டு அரசாங்கம் வெளியேற்றியதும் பேரினவாதத்தின் இன்னுமொரு கோரமுகத்தினை தான் காட்டி நிற்கின்றது.

அப்பகுதியிலிருந்து நிவாரணப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டால் உணவு, தங்குமிடம், சுகாதார நடவடிக்கைகளுக்கான விநியோகம் என்பன இழக்கப்பட்டுவிடும்’ என்று சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்திருக்கிறார்.
கோரமான அவலநிலையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் இந்நிலையில் போர் இப்படியே தொடர்வதை விட வேறு வழியில்லையென்ற அடிப்படையில் இரு தரப்பினருக்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குபவர்கள் பலர் எம்மத்தியிலிருப்பது கவலைக்கிடமானது. இவ்வகையில் எம்மில் எத்தனை பேர் வன்னிமக்கள் தொடர்பாக எமது சமூகப்பொறுப்பை உணர்ந்திருக்கிறோம் என்ற அழுத்தமான கேள்வி எம்முன் எழுகிறது.

அதேவேளையில் உதவி நிறுவனங்களை வன்னியில் இருந்து வெளியேற்றிய இலங்கை அரசாங்கமே இன்று வன்னி மக்களின் பாதுகாப்பையும் அத்தியாவசிய தேவைகளையும் உறுதி செய்ய வேண்டிய இன்றியமையாத கடமைப்பாடுடையது. இதைச்செய்யாத பட்சத்தில் எத்தகையதொரு இராணுவ வெற்றிக்கும் அர்த்தமில்லை.

போரை நிறுத்தி இலங்கையில் உள்ள அனைத்து பொது மக்களின் பாதுகாப்பையும் இலங்கை அரசு உறுதிப்படுத்தவேண்டும்.
மனித நேயத்திற்காகவும் அப்பாவி மக்கள் தொடர்ந்தும் யுத்தத்தின் பலியாக பழிவாங்கப்படுவதையும் இலங்கை பேரினவாத அரசின் நடைமுறையின் கீழ் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் அப்பாவி தமிழ் மக்களே. இலங்கையை விட்டு வெளியேறி வாழும் நாம் இவ்வகை வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கடமைப்பாடு உண்டு. மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.

(பெண்கள் சந்திப்பு, ஊடறு, ஜேர்மன் தமிழ் மகளிர் மன்றம். (ஸ்டுட்கார்ட்))

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts