மனிதர்-1

This entry is part 14 of 49 in the series 19991203_Issue

பாரி பூபாலன்


என் அலுவலகத்தில் ஒருவர் அடிக்கடி இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். இந்தியாவின் அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் விலாவரியாக பேசிக்கொண்டிருப்பார். அவருடன் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் அவரைப் பற்றி எளிதாக எடை போட முடிந்தது.

தான் இந்தியாவை விட்டு வெளியேறி, இங்கு அமெரிக்காவில் வேலை பார்ப்பது வெறும் பணத்திற்காக மட்டுமல்ல. பொதுவாக, தனக்கு இந்திய சமுதாயத்தில் ஒரு அங்கமாய் பங்கேற்க முடியாத இயலாமையில் இருப்பதாய் தோன்றியது. பங்கேற்க முடியாமைக்கு, இந்தியாவின் உள்ளூற ஊடியிருக்கும் இலஞ்ச லாவண்யமும், அரசியல்வாதிகளின் சுயநல நோக்கும், இடையில், தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறி வந்துவிட்டதாய் தோன்றியது.

எப்போதோ நடந்த விஷயங்களை, இப்போதும் ஒரு மனக்கொதிப்புடன், ஒரு வித இயலாமையுடன் விவரித்துக் கொண்டிருப்பார். பள்ளியில் படித்த போது, பிற்பட்ட வகுப்பினருக்கான உதவித்தொகை விண்ணப்பத்தில் கையெழுத்திட வருமான ஆய்வாளரிடம் லஞ்சம் 2 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்ததைப் பற்றியும், கிராமத்தில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கடைக்காரர்களிடமிருந்து மாமூல் வசூலிப்பது பற்றியும், கொடுக்க மறுப்பவர்கள் அடையும் இன்னல்களைப் பற்றியும், எல்லாவற்றையும் முறையாகச் செய்தாலும் லஞ்சம் கொடுத்தாலொழிய வாகன ஓட்டுனர் அனுமதியோ அல்லது பாஸ்போர்ட்டோ வாங்க இயலாத நிலைமை பற்றியும் ஒரு வேகத்துடனும், தன்னால் இதனை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லையே எனும் ஆற்றாமையுடனும் விவரித்துக் கொண்டிருப்பார்.

இந்த அமெரிக்க நாட்டினிலே சில வெள்ளையர்கள், தன்னை சரிசமமாய் மதிக்கவில்லையெனிலும், இங்கு எதுவும் ஒரு முறைப்படி நடப்பதாயும், எதுவும் ஒரு சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நடப்பதாகவும், காவலர்களும் அதிகாரிகளும் சமுதாயத்திற்கு தொண்டு புரியும் அளவில் கடமையாற்றுவதாகவும் பெருமையுடன் கூறுவார். அமெரிக்காவில் ஒரு சில இடங்களில் இலஞ்சம் ஒருவித அன்பளிப்பாய் நடந்து கொண்டிருந்தாலும், அது ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் குறிக்கிடுவதாய் இருப்பதில்லை என வாதிடுவார். இதனால், தன்னால் ஒவ்வொரு நாளும் நிம்மதியுடன் வீடு போய்ச் சேர முடிகிறது என்பார்.

இந்தியாவில், வாகனத்தில் செல்லும் போது, வழிப்பறியோ அல்லது வேறு வித தீங்கோ பற்றிய பயம்கூட இல்லாமல் போய்விடலாம். ஆனால் எந்த தெரு முனையில் போலீஸ்காரன் வசூல் செய்து கொண்டிருக்கிரானோ, அவனிடம் மாட்டாமல் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடனும் பயத்துடனும் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பியதாய் கூறினார்.

இவரைப் பற்றி இவ்வளவு விஷயங்களை அறிந்த பிறகு, எனக்குள் சிறிது வருத்தமாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட நல்லவர்களையெல்லாம் இந்தியச் சமுதாயம் தன் நாட்டை விட்டு துரத்தி அடிப்பதாய்த் தோன்றியது. இவரைப் போன்ற பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இலஞ்ச ஊழலையும், ஊழலை தன்னுருவாய்க் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் பார்த்து விரக்தி அடைந்து தன்னால் எதுவும் செய்ய இயலாத நிலையில் இந்திய நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாய் தோன்றியது. ஆனால் வசூல் செய்யும் போலீஸ்காரனை நினைத்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்த வேலையை வாங்குவதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டியிருந்ததோ தெரியவில்லை. எங்கள் ஊரில் சில ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் வாலிபர்கள் போலீஸ் வேலையில் சேருவதற்காக பணம் கேட்கிறார்கள் என்பதற்காக, அங்கும் இங்கும் அலைந்து, கடன் வாங்கி, இருக்கும் சிறிது நிலத்தை அடமானம் வைத்து பணம் சேர்த்து, இலஞ்சமாய்க் கொடுத்து சேர்ந்தவர்களும் உண்டு.

Dr. மு. வரதராசானார், இளைஞர்களுக்கு அறிவுரையாக ‘வேலை வாங்குவதற்கு இலஞ்சம் கொடுப்பதே ஒரே வழியென்றால், முதலில் அந்த இலஞ்சத்தைக் கொடுத்து வேலையை வாங்கு ‘ என்று கூறியதாக, நண்பர் ஒருவர் கூறினார். இந்த வேலை கிடைத்தாலொழிய வேறு வழியே இல்லை என்று இருப்பவர்களிடம், நேர்மையைப் பற்றியும் தூய்மையைப் பற்றியும் பேசுவதில் பயனில்லை என்றும் கூறினார். இப்படி இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் இலஞ்சம் வாங்கித்தான் பட்ட கடனை அடைக்கும் நிலைமையாக இருக்கிறது.

சில இடங்களில் பணம் வாங்குவதும், அலுவலக துஷ்பிரயோகம் செய்வதும் அன்றாட நடைமுறையாகிவிட்டது. நகைச்சுவையாய், Y. G. மகேந்திராவின் நாடகத்தில் ஒரு காட்சி. பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கும் அவனது தந்தைக்கும் இடையேயான உரையாடல். சிறுவன் பள்ளியிலே பேனாக்களையும் பென்சில்களையும் திருடியதாக குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறான். தந்தை கூறுகிறார் ‘நீ எதற்கு பள்ளியில் திருட வேண்டும் ? என்னிடம் சொல்லியிருந்தால் ஆபீஸிலிருந்து கொண்டு வந்திருப்பேன் அல்லவா !! ‘

சென்ற வாரம் அலுவலகத்தில் உரையாடிக்கொண்டிருக்கையில் இதே அலுவலக நண்பர் சொன்னார், ‘கிரீன் கார்ட் வாங்குவதற்கு என்னுடைய பிறப்பு பற்றிய சான்றிதழ் இல்லை. ஊருக்குச் சொல்லி இருக்கிறேன், பணம் எவ்வளவு கேட்டாலும் கொடுத்து வாங்கச் சொல்லி ! ‘

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< உனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் ?சுழலும் மின் விசிறி >>

பாரி பூபாலன்

பாரி பூபாலன்