This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
பேர்மிங்ஹாம் எக்பஸ்டன் ஸ்டேடியம். உலகக் கோப்பை கிரிக்கட் அரை இறுதிக் கட்ட ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா மோதல். தொடங்கும் நேரம் காலை ஒன்பதரை. அதே நேரம் ஓமான் நாட்டில் சரியாக மதியம் ஒன்றரை.
அற்புதன் அந்தரப்பட்டான். இரண்டரைக்குத்தான் வேலை முடியும். கொம்பனி பஸ்ஸேறி வதிவிடம் போக மூன்று. மெஸ்ஸில் உணவு முடித்து அறைக்குள் நுழைய மூன்றரை. அதற்குள் இரண்டு மணி நேர விளையாட்டு முடிந்து விடும்.
மேசையில் பரப்பியிருந்த பேப்பர்களை ஒழுங்குபடுத்தினான். அரங்கியிருந்த டெலிபோனை நேராக்கினான். லேசர் பிறின்டரில் ரோனர் முடிந்து விட்டதை சிவப்பு வெளிச்சம் முழித்து முழித்துக் காட்டியது. காலையில் பார்க்கலாம் என்று பிறின்றரை நிறுத்தினான். பக்ஸ் மெசினில் வந்த பேப்பரின் அவசரம் நோக்கினான். அதையும் ‘பென்டிங்’ ட்றேயில் போட்டான்.
கணனிப் பொறியில் ஈமெயில் இன்பொக்சை இறுதியாகச் சோதித்தான். நிய+யோர்க் தலைமை அலுவலகத்திலிருந்து அடுத்தடுத்து மூன்று ஈமெயில்கள் நையாண்டி காட்டி வரிசையில் நின்றன. இங்கு வேலை முடியும் வேளை அங்கு தொடங்குவார்கள். இங்கு ஓடித்திரிகையில் அங்கு இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்திருப்பார்கள். நேரவித்தியாசம் அப்படி. வந்த ஈமெயில்கள் உடனே கவனிக்கப்பட வேண்டியவை. நிறுத்திய இயந்திரத்தை மெயில்களைப் பிறின்ட் எடுக்க மீண்டும் முடுக்கி விட்டான். டோனரை மாற்று டோனரை மாற்று என்று நேரம் புரியாமல் விடாமல் எச்சரிக்கை செய்தது அது.
டோனர் மாற்றி பிறின்ற் எடுத்து புறோகிறாம் மனேஜரிடம் காட்டிக் கதைத்துவிட்டு வர, இரண்டரைக்கு ஐந்து நிமிடம். பூவா தலையா யார் வென்றிருப்பார்கள் ? துடுப்பெடுத்தாடுவது யார் ? இத்தனைக்கும் எத்தனை விக்கட்டுகள் விழுந்திருக்கும் ? சுடச்சுடப் பார்த்துவிடும் வேட்கை ஒரு இடத்தில் நிற்க முடியாமல் செய்தது.
டெலிபோன் அடிக்க, டிஜிட்டலில் மேல்மாடி நண்பனின் பெயர் வந்தது.
“இன்டர்நெற்றில் ஸ்கோர் பார்த்தாயா ?”
“இப்பதான் வேலை முடிந்தது”
“ஒஸ்ரேலியா ‘மார்க் வோ’ முதலாவது ஓவரிலேயே அவுட். சவுத் அப்ரிக்கா வெல்லப் போகிறது. நான் சொன்னேன் அல்லவா”
அவன் தென்னாபிரிக்காவை ஆதரிப்பவன்!
கணனியில் ‘வேர்ட்’ கோவைகளைப் பாதுகாத்து ‘வின்டோசை’ மூடிக்கொண்டு வர வழக்கத்தை விடவும் மேலதிக நேரம் போனது போலிருந்தது. மனேஜருக்கு ‘சீ ய+ டுமோறோ’ சொல்லி பஸ்ஸில் ஏற அவுஸ்திரேலியா 13 ஓவர்ஸ் 58 ரன்ஸ் 3 விக்கட் என்று சொன்னான் நண்பன்.
அவசரம் உணராத பஸ் வழமை மாறாமல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் ஊர்ந்தது. ஓமானி டிரைவரிடம் விரையும்படி கேட்க முடியாது. இந்த அந்தரம் அவருக்குப் புரியாது. ஓமான் மக்களுக்கு கிரிக்கட்டில் ஆர்வமில்லை. கால்பந்துதான் உயிர்.
உள்ளே ஏசியில் உடல் குளிர்ந்தாலும் வெளியே பட்டை உரித்த வெய்யில் பார்த்து மனம் வியர்த்தது. தெருவில் வாகனங்கள் மட்டுந்தான். இருமருங்கு நடைபாதையில் மருந்து போல இரண்டொருவர் வியர்வையில் குளித்து நடந்தார்கள்.
இதில் தென்னாபிரிக்கா வென்றுவிட்டால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானோடு மோதும். எப்படியும் உலகக் கோப்பையை கபளீகரம் செய்து விடுவார்கள். அப்படியானால் அவுஸ்திரேலியாவின் கதி!
கிரிக்கட் வலைக்குள் சிக்கிய மனக்கொசு வெளியேற வாய்ப்பின்றி சுழன்று கொண்டிருக்க பஸ்ஸை வழமையாக மெஸ் முன்னால் நிற்பாட்டும் டிரைவர் இன்றைக்கென்று சர்வ சாவதானமாக கட்டிட நிழல் பார்த்து தூரத்தில் நிற்பாட்டினான். கிரிக்கட் சுவாரஷ்யத்தில் மந்தித்திருந்த வயிறு நாலு வாய் அள்ளிப் போடவே பும்மென்று நிரம்பிப் போயிற்று.
அற்புதன் அறைக்குள் விரைந்தான். சப்பாத்தைக் கழட்டு முன்னரே டாவி தட்டி ஸ்போட்ஸ் சனலைப் போட்டான். திரை நிறைந்த பச்சை மைதானத்தில் படர்ந்திருந்த குளிர்ந்த சீதோஷ்ணம் அவன் உடலைத் தொட்டு அணைப்பது போன்ற பிரமை. பவிலியனில் இருந்த ரசிகர்களின் பலவர்ண மேலாடைகளும் பின்னணியில் தெரியும் பழைய மோஸ்தர் கட்டிடங்களின் பாரம்பரியமும் கண்களில் ஒற்றிக் கொள்ளும் கவர்ச்சி காட்டின.
அவன் இடது மேல் மூலையில் ஸ்கோர் நோக்கினான். 4 விக்கட்டுக்கு 68 ஓட்டங்கள். மிகுதி 33 ஓவர்கள். போகிற போக்கில் 200க்குள் அமுக்கி விடுவார்கள். பாவம் அவுஸ்திரேலியா!ஸஸஸஅவன் சட்டைகள் களைந்து சாரத்திற்கு மாறினான். சாப்பிட்டதும் சுழற்றிக் கொண்டு வரும் குட்;டித்தூக்கம் இன்றைக்கு வராது. ஆட்டம் முடியும் வரை ‘தண்ணிவெண்ணி’ எதுவும் முக்கியமில்லை. அப்படியொரு கிரிக்கட் பைத்தியம்.
அவன் விருப்பத்தோடு காத்திருந்த போட்டி இது. இந்த இரண்டு அணிகளும் நிச்சயமாக ஆரம்ப நிலைகளைத் தாண்டி ‘சுப்பர் சிக்ஸ்’ கட்டத்திற்குள் நுழையும் என நண்பர்களிடம் ஆரூடம் சொல்லியிருந்தான். கணிப்பு சரியாகவே இருந்தது. மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்று தன் கணிப்புச் சாமர்த்தியம் பற்றி பெருமையும் பேசியிருக்கிறான்.
அந்தந்த அணிகளின் பலம் பலவீனம் பரிசீலித்து வெல்லுமா வெல்லாதா எனக் கணிப்பது ஒன்று. அந்தந்த அணியிலுள்ள ஈடுபாட்டின் அடிப்படையில் அவை வெல்ல வேண்டும் என்று விரும்புவது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாதென அவனுக்குப் புரிந்தாலும் விருப்பமான அணி வெல்ல வேண்டுமென விரும்புவதும் மனக்கணக்குப் போடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தோற்றுப் போனால் தோல்விச் சோர்விலிருந்து மீள அவனுக்கு ஒரு முழு நாள் பிடிக்கும். அந்த அளவிற்குத் துவண்டு போவான்.
இன்றைய இரண்டு அணிகளும் அவனுக்கு எந்த வகையிலும் சொந்தமற்ற அணிகள். யார் வென்றாலும் அவன் பாதிப்படையத் தேவையில்லை. ஆனால் அவுஸ்திரேலியா வென்று விட வேண்டும் என்று உள்ளுர ஒரு ஆவல்! தென்னாபிரிக்காவில் வெறுப்பா என்றால் அதுவுமில்லை. அவுஸ்திரேலியாவில் ஏதோ ஒருவித ஈர்ப்பு.
அவுஸ்திரேலியா கப்டன் ‘ஸ்ரீவ் வோ’ நிதானமாக ஆடி மூச்சிழுத்துக் கொண்டிருந்த அணிக்கு செலேன் ஏற்றி உயிர் கொடுத்து விட, ஆட்டம் 213 ஓட்டங்களோடு முடிவிற்கு வந்தது. எனினும் வெற்றி வெகுதூரத்தில்!
இடைவேளை. முகங் கழுவிக் கொண்டு தேநீர் குடிக்க மெஸ்ஸிற்குப் போனான். மேசைகளில் கிரிக்கட் ஜுரம் மையம் கொண்டிருந்தது. வாய் கொடுத்தால் தொற்றிக் கொள்ளும். அவன் தேநீரோடு அறைக்குத் திரும்பினான்.
பன்னிரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்து தலை குனிந்து வெளியேறிக் கொண்டிருந்தார் தென்னாபிரிக்கா கிப்ஸ். பெருத்த அடி. இதிலிருந்து மீளுவதற்கு பகீரதப் பிரயத்தனம் தேவை. தென்னாபிரிக்காவால் அது முடியும். ஆனால் அவுஸ்திரேலியா வெல்ல வேண்டும. அற்புதன் கலவரத்தோடு செற்றியில் விழுந்தான்.
அடுத்த அடி 14வது ஓவரில் வந்தது. கப்டன் கன்சி குரொன்ஜே ஓட்டமேதுமெடுக்காமல் ஆட்டமிழந்தார். இனி அவுஸ்திரேலியாவிற்கு ஏறுமுகந்தான். உற்சாகம் பிரவாகமாய்ப் பொங்கிற்று.
அவன் எப்போதும் இப்படித்தான். வெற்றி தோல்விகளை ஒரே பாங்கில் எடுத்துக் கொள்ள அவனால் முடிவதில்லை. ஒருவரின் வெற்றி மற்றவரின் தோல்வி, இன்று வெல்பவர் நாளை தோற்கலாம். இது சகஜம். இதனால் உண்டாகும் உற்சாகமும் சோர்வும் அர்த்தமற்றவை. விளையாடும் அணிகளிடம் பாகுபாடோ குரோதமோ பக்கசார்போ இல்லாமல் திறந்த மனதோடு விளையாட்டை விளையாட்டாக ரசிக்கத் தெரிந்து விட்டால் நல்ல மட்ச் பார்த்த திருப்தி வரும். அந்தத் திருப்தியே மனதின் சமநிலைக்குச் சான்று.
இப்படியெல்லாம் அவன் எண்ணுவதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் வேதாளம் முருங்கையில் ஏறிவிடுகிறது.
அநேகமாக தோல்வி என நினைத்திருந்த வேளையில் 46வது ஓவரில் வந்த குலூஸ்னர் அடித்த அடிகள் தென்னாபிரிக்காவை வெற்றி வழிக்குத் திடாரெனத் திருப்பிக் கொண்டிருந்தன. 49வது ஓவர் முடிந்த போது 205 ஓட்டங்கள். இன்னும் இருப்பது ஆறே ஆறு பந்துகள். 9 ஓட்டங்கள் எடுத்தாக வேண்டும். கடைசி விக்கட்.
குலூஸ்னர் நின்ற விதம் அதனை எடுத்துவிடுவார் என்று பிரகடணப்படுத்தியது. அற்புதன் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
முதலாவது பந்துக்கு பிரமாணம் தவறாத அடி. பந்து பவுன்றியைத் தாண்டியது. இரண்டாவது பந்துக்கும் செமத்தியான விளாசல். இன்னும் தேவை ஒரே ஒரு ஓட்டம். தோற்க இருந்த தென்னாபிரிக்கா குலூஸ்னரின் தீரத்தால் வெல்லப் போகிறது. ஸ்டேடியம் முழுக்க உறைந்து போயிற்று. டாவி அறிவிப்பாளர் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா பாகிஸ்தானோடு மோதப் போகிறது என்று கத்தினார்.
மூன்றாவது பந்து தவறிப் போயிற்று. நாலாவதை அடிக்க குலூஸ்னர் முன்னே பாய்ந்து விசுக்க, சற்றே பிசகிய பந்து பக்கமாய் விழுந்து உருண்டது. கடைசி ரன் எடுக்கும் கலவரம். எல்லோரின் ஒட்டுமொத்த கவனமும் குலூஸ்னரில் குவிந்திருந்த வெகு நுட்பமான கணம்! குலூஸ்னர் ஓடினார். ஓடுவதா விடுவதா என்று திணறிய டொனால்ட் வேறு வழியில்லாமல் ஓட முற்பட்டு பாதித்தூரம் தாண்டவில்லை, விக்கட் பறந்து விட்டது. ரன் அவுட். கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. தென்னாபிரிக்கா தோல்வி!
அவுஸ்திரேலிய வீரர்கள் மொய்த்துக் கிளம்பிப் பாய்ந்தார்கள். அற்புதன் அசையாமல் அப்படியே இருந்தான். எந்த அணி வெல்ல வேண்டுமென காலையிலிருந்து காத்திருந்தானோ அந்த அவுஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடிவிட்டது. இனி என்ன!
வெற்றியை நம்ப முடியாமல் மனம் பிணங்கிற்று. வயிற்றைப் பிசைந்தது. பரிதாபமாய் நின்ற அதிரடி வீரர் குலூஸ்னரில் அளவற்ற இரக்கம் சுரந்தது. முழுசாக நொறுங்கிப் போயிருந்த தனது அணியை வெற்றியின் விளிம்பிற்குக் கொண்டு வந்த அந்த அசகாயசூரன் மிக இலேசாக எடுத்திருக்கக் கூடிய ஒரு ஓட்டம் கை நழுவிப் போன சோகம். குருட்டாம் போக்கில் அடித்திருந்தாலும் கிடைத்திருக்கும்.
கடைசிப் பந்து வரை சளைக்காமல் உறுதியோடு ஆடுகிற அணி தென்னாபிரிக்கா. பீல்டிங்கில் தன்னிகரில்லாதவர்கள். கூட்டுத் திறமையில் முன்னணி வகிப்பவர்கள். சென்ற உலகக் கோப்பைப் போட்டியில் எல்லாவற்றிலும் வென்று கொண்டே வந்து கடைசியில் தோற்றவர்கள். இம்முறை வெல்லப் போகிறார்கள் என உலகத்தோரால் கணிக்கப்பட்டவர்கள்!
This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue
ஸ்ரீராம்
தெளிவான குழம்பிய குட்டை தன்ண்ள்ளே அலைபாயும் கருங்கடல் தேவையானதை அலைகழிக்கையில் பகைவன் சில சமயத்தில் உதவுகையில் நண்பன் உதவினால் தான் நண்பனோ ? ? ?
சம்பவங்களை தேக்கி வைக்கும் ஓர் வங்கி புத்தியை சில சமயம் புத்தியில்லாமல் செய்யும் நேர்த்தி நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டு இருப்பவன் கத்தியின்றி ரத்தமின்றி மாய்க்கும் சக்தி கொண்டவன் காதலுக்கு உற்ற நண்பன், பல காதலுக்கு பகைவனும் இவனே….
உடலின் முக்கிய பாகம் இருதயம் அந்த இருதயத்தை ஆட்சி செய்யும் முதல்வன் ஆசை இவனின் செங்கோல் சம்பவங்கள் இவனின் படைவீரர்கள் ஓர் நிலையாய் இருக்கையில் இவன் தான் என்றும் முடிசூடா மன்னன்.