மனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்)

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

பாவண்ணன்


சமீபத்தில் படித்த புத்தகங்களைப்பற்றிய உரையாடல் என்பது படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய செயல் என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தம் சுவையுணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் வாழ்க்கைபற்றிய பார்வையும் அதற்கு உறுதுணையாக இருக்கின்றன. ஒரு புத்தகத்திலிருந்து அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய அம்சங்கள் அதிக அளவில் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கிற நூல்கள் அவர்களுடைய நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. அடுத்தவர்களைச் சந்திக்கும்போது அந்தப் புத்தகத்தைப்பற்றிய உரையாடலை யாராலும் தவிர்க்கமுடிவதில்லை. உரையாட ஆளில்லாதவர்கள் குறைந்தபட்சமாக தன் குறிப்பேட்டிலாவது எழுதிவைத்துக்கொள்ளக்கூடும். இத்தகு உரையாடல் இண்டு வகைகளில் பயன் அளிக்கக்கூடியது. முதலாவதாக, ஒரு புதிய புத்தகத்தைப்பற்றிய அறிமுகம் நிகழ்கிறது. இரண்டாவதாக, புத்தகத்தின் சிறப்பம்சங்களைத் தொகுத்துக்கூற முற்படும்போது, அந்தப் படைப்பு கலைரீதியாக எட்டியிருக்கும் உயரத்தை ஒரு மறுகண்டுபிடிப்பைப்போல உய்த்துணரமுடிகிறது.

இந்த உரையாடலை எழுத்துவடிவில் பதிவுசெய்து பார்ப்பதற்கு ஆசைப்பட்டதோடுமட்டுமின்றி ஓராண்டு கால முயற்சியின் விளைவாக செயற்படுத்தியும் காட்டியிருக்கிறார் முத்துலிங்கம். புதிய வாசகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்து என்றே சொல்லவேண்டும். இருபது எழுத்தாளர்கள் இருபது வெவ்வேறு புத்தகங்களைப்பற்றிய வாசிப்பு அனுபவங்களை இத்தொகுதியில் முன்வைத்திருக்கிறார்கள். இந்த இருபது பரிந்துரைகளையும் நாடிச் செல்ல இக்கட்டுரைகள் ஒரு வாசகனுக்குத் தூண்டுகோலாக அமையக்கூடும். இத்தொகுதியில் ஏழு எழுத்தாளர்கள் தமிழ்ப்படைப்புகளைப்பற்றியும் பன்னிரண்டு எழுத்தாளர்கள் ஆங்கிலப் படைப்பாளிகளைப்பற்றியும் ஒருவர் ஒரு மலையாளப்படைப்பையும்பற்றிப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி சிதறிய வகையில் இக்கட்டுரைகள் அமைந்திருப்பதில் வெவ்வேறு மொழிகள் சார்ந்தும் வெவ்வேறு உலகங்கள் சார்ந்தும் வாசக கவனம் குவியவும் வளரவும் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அடிப்படையில் நான் ஒரு தமிழ் வாசகன் என்கிற வகையில் இருபது எழுத்தாளர்களும் இருபது தமிழ்ப்படைப்புகளை முன்வைத்து தம் அனுபவங்களைப் பதிவுசெய்திருப்பின் அந்தப் பதிவு ஏகதேசமாக சமீபத்திய தமிழ்ப்படைப்புலகத்தின் குறுக்குவெட்டுச் சித்திரமாக அமைந்திருக்கும் என்கிற எதிர்பார்ப்பைத் தவிர்க்கமுடியவில்லை.

தொகுப்பின் தலைப்பாக அமைந்துள்ள “கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது” கட்டுரை எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய நாவலான “மணற்கடிகை”யின் வாசிப்பனுபவத்தை முன்வைக்கும் ஜெயமோகனுடைய கட்டுரையாகும். இயல்புவாதப்பார்வையைப்பற்றி மிகச் சுருக்கமான அறிமுகத்துடன் தொடங்கும் இக்கட்டுரை, மணற்கடிகையின் பக்கங்களில் அது வெளிப்படும் விதத்தை மிகத்துல்லியமாக சுட்டிக்காட்டியபடி செல்கிறது. இயந்திரமயமாகிப்போன வாழ்க்கையைப்பற்றிய கசப்பும் சோர்வும் நாவலின் மையத்தரிசனமாக திரண்டு முன்வரும் விதத்தைச் சுருக்கமாக அடையாளப்படுத்துகிறார் ஜெயமோகன். நு¡லுக்குள் எங்குமே விளக்கப்படாத நாவலின் தலைப்பின் வலிமையை அவர் பகிர்ந்துகொண்டிருக்கும் விதம் வாசக ஆர்வத்தைத் து¡ண்டும் சக்தியுடையது. மணற்கடிகையில் சீராகவும் அமைதியாகவும் மணல் விழுந்துகொண்டே இருக்கிறது. அது முடியும்போது என்ன நிகழும்? அனைத்தும் கவிழ்ந்து மீண்டும் அதே இயக்கம் துளியும் மாற்றமுறாத தன்மையுடன் தொடரும். இந்தக் காட்சியனுபவத்தை முன்வைத்து நாவலின் வாசகஅனுபவத்தை நமக்கு நாமே மதிப்பிட்டுப் பார்த்துக்கொள்ள இவ்வரிகள் மிகப்பெரிய திறப்பாக அமைந்துள்ளன. நாவலை வாசித்துமுடித்தபிறகு, பரந்தாமன், சிவா, சண்முகம், திருச்செல்வன், அன்பழகன் ஆகிய ஆண்பாத்திரங்களுடைய வாழ்வையும் விமலா, பூங்கொடி ஆகிய பெண்பாத்திரங்களுடைய வாழ்வையும் அசைபோட்டுப்பார்க்கும்போது எவ்வளவு பொருத்தமாக இந்த வரிகள் ஜெயமோகனால் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை உணரலாம்.

ஜெயமோகனுடைய “ஏழாம் உலகம்” நாவலைப்பற்றிய வாசிப்பனுபவத்தை முன்வைத்திருப்பவர் மனுஷ்யபுத்திரன். நம்மை நிம்மதியிழக்கச் செய்யும் பிச்சைக்காரர்களின் உலகை ஒரு கொடுங்கனவென கட்டியெழுப்ப முற்படும் இந்த நாவலில் மனிதநேயப் பாசாங்குககள் அனைத்தும் கலைக்கப்படுகின்றன. வாதையும் குரூரமும் அருவருப்பும் கொண்ட அக்கனவுக்குள் அந்தக் குறைப்பிறவிகள் கனவு காண்கிறார்கள். காதல் கொள்கிறார்கள். நெகிழ்ச்சியடைகிறார்கள். வாசகன் ஒவ்வொரு கட்டத்திலும் அதிர்ச்சியின் ஆழத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருக்க, சிறிதும் மிகையுணர்ச்சியில்லாத குரலில் ஜெயமோகன் மிகச்சாதாரணவகையில் அனைத்தையும் விவரித்தபடி செல்கிறார். அந்த எழுத்துமுறையால் நாவல் பெற்றிருக்கும் வெற்றியை மனுஷ்யபுத்திரன் சரியாக அடையாளப்படுத்துகிறார். ஒருபுறம் துயரங்களும் கொண்டாட்டங்களும் வாதைகளும் உடைய பிச்சைக்காரர்களின் வாழ்வும் இன்னொருபுறம் உடற்குறைகளுடைய இப்பிச்சைக்காரர்களைக் கோயில்தோறும் பிச்சையெடுக்கவைத்தும் அவர்களையே விற்றும் வாங்கியும் பணமீட்டும் பண்டாரத்தின் குடும்பம், உறவு , ஆசை, வெற்றி, தோல்விகளும் நாவலில் மாறிமாறி முன்வைக்கப்படுகின்றன. குரூரமும் நெகிழ்ச்சியும் வதைத்தலும் வதைபடலும் வீழ் த்தலும் வீழ்தலும் ஒரே சமயத்தில் மாறிமாறி நிகழும் மனித வாழ்வின் சாட்சியமாக பண்டாரம் விளங்குவதைக் கண்டடைந்து சொல்கிறார் மனுஷ்யபுத்திரன். பண்டாரத்தின் வாழ்க்கையின் ஏற்றஇறக்கமாக அல்ல, மானுடகுலத்தின் ஏற்றஇறக்கமாக இதைக் காணும் திசையைநோக்கி மனுஷ்யபுத்திரனின் வரிகள் நம்மை அழைத்துச் செல்கின்றன. சோ.தருமனின் “கூகை” நாவலைப்பற்றிய வெங்கட் சாமிநாதன் கட்டுரையும் “ஆழிசூழ் உலகு” நாவலைப்பற்றிய நாஞ்சில் நாடன் கட்டுரையும் சா.கந்தசாமியின் “மாயவலி” சிறுகதைகளைப்பற்றியும் அம்ஷன்குமாரின் “ஒருத்தி” திரைக்கதை நூலைப்பற்றிய அசோகமித்திரன் கட்டுரையும் தொகுப்பில் தமிழ்ப்பிரிவில் உள்ள மற்ற முக்கியமான கட்டுரைகளாகும்.

“டீச்சர் மேன்” நூலில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியரின் முப்பது ஆண்டு வாழ்வில் நடந்த பலவித அனுபவங்கள் விவரிக்கப்பட்டிருக்கும் விதத்தை சுவாரஸ்யமான முறையில் எடுத்துரைத்து அறிமுகப்படுத்துகிறார் முத்துலிங்கம். அக்கட்டுரையின் நீட்சியாக முத்துலிங்கம் முன்வைத்திருக்கும் அந்த நு¡லாசிரியரைச் சந்தித்த அனுபவப்பதிவு ஒரு புனைகதைக்குரிய உத்வேகத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இரா.முருகன் அறிமுகப்படுத்தும் “நினைவுகளின் விருந்து” என்னும் மலையாளக் கட்டுரைத் தொகுதியும் இவ்வரிசையில் சேர்த்துப் பார்க்கத்தக்கதாகும்.

நோபெல் பரிசைப் பெற்ற போர்ச்சுகல் நாவலாசிரியரான சரமகோவ் என்பவரின் சமீபத்திய நாவல் “இரட்டை” இந்திரா பார்த்தசாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒரு மர்மநாவலுக்குரிய வேகத்தோடும் விறுவிறுப்போடும் சொல்லப்பட்டாலும் நாவல் அறியமுடியாத மானுடமனத்தின் ஆழத்தைத் தொட்டுப் பார்க்கும் முயற்சியாக விளங்குவதை இந்திரா பார்த்தசாரதி சுருக்கமாக எடுத்துரைக்கிறார். ஒரு சரித்திர ஆசிரியன் தனிமையில் வாழ்ந்து வருகிறான். அவன் பெரிய உணர்ச்சிசூன்யன். எதிலும் ஈடுபாடு இல்லாதவன். யாரோ ஒருவர் பரிந்துரைத்ததன் பேரில் ஒருநாள் வீடியோவில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறான். அப்படத்தில் ஒரு சிறிய கதைப்பாத்திரத்தில் நடித்திருப்பவனுடைய முகம் தன்னைப்போலவே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். பிறகு அவனைத் தேடிச் செல்கிறான். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அவனைக் கண்டடையும் செய்கிறான். நடிகனும் சரித்திர ஆசிரியனும் அச்சுஅசலாக ஒரே மாதிரி இருக்கிறார்கள். அதை நடிகன் தன் மனைவியிடமும் சொல்கிறான். மனைவியோ “என் மனத்தில் உங்கள் இருவரில் ஒருவருக்குத்தான் இடம் சாத்தியம்” என்கிறாள். அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைப்போல ஒலிக்கிறது அவள் குரல். இருவரும் ஒருவரையருவர் இனிமேல் ஒருபோதும் பார்த்துக்கொள்வதில்லை என்ற ஒப்பந்தத்தோடு பிரிந்தாலும் பழிவாங்கும் உணர்ச்சியின் காரணமாக ஒருவன் இன்னொருவனுடைய காதலியுடன் சேர்ந்து திரியத் திட்டமிகிறான். துரதிருஷ்டவசமாக விபத்தில் இருவரும் இறந்துபோகிறார்கள். இப்போது சிக்கல் இன்னும் இறுக்கமாகிறது. நடிகனுடைய மனைவிக்கு யார் கணவனாக இருப்பது? யார் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்னும் புதிர் அவிழும் விதத்தில் நாவலின் கலையாளுமை எப்படி இருந்திருக்கக்கூடும் என்று இ.பா. விவரிக்கும் போக்கிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியச்சூழலில் கன்னடமொழியில் எழுதப்பட்ட ஹயவதனம், நாகமண்டலம் ( கிரீஷ் கார்னாட் நாடகங்கள்) இரண்டு படைப்புகளிலும் இதே கேள்வி வேறு விதங்களில் பிரதிபலித்திருக்கின்றன.

இவ்வரிசையில் வாஸந்தி அறிமுகப்படுத்தும் ஸாண்டர் மராயின் “கனல்” நாவலைப்பற்றிய அறிமுகக்கட்டுரையும் மாலன் அறிமுகப்படுத்தும் அரசநாயகத்தின் சிறுகதைகளைப்பற்றிய அறிமுகக்கட்டுரையும் ஆர்.கே.நாரயண் கட்டுரைத்தொகுதியை அறிமுகப்படுத்தும் பொ.கருணாகரமூர்த்தியின் கட்டுரையும் “பாதென் பாதெனில் கோடைக்காலம்” நாவலை அறிமுகப்படுத்தும் சுகுமாரனுடைய கட்டுரையும் குறிப்பிடத்தக்கவை. அப்படைப்புகளை அவர்கள் உள்வாங்கிச் சுவைத்திருக்கும் விதம் அக்கட்டுரைகளில் செறிவாகவும் தெளிவாகவும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த மையங்களையட்டி தம் மனத்தில் அலையென எழும் எண்ணங்களை முன்வைக்கும் விதமும் வாசிக்க உவப்பாக உள்ளன.

முத்துலிங்கத்தின் முயற்சியால் உருவாகியிருக்கும் இத்தொகுப்பு இளம் வாசகர்களுக்குமட்டுமின்றி, எழுத்தாளர்களுக்கும் மிகச்சிறந்த கையேடு என்பதில் சந்தேகமில்லை.


( கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- கட்டுரைத் தொகுதி. தொகுப்பாசிரியர் அ.முத்துலிங்கம். உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை. ரூ85)


paavannan@hotmail.com

Series Navigation