மனத்தின் நாடகம் வளவ.துரையனின் “மலைச்சாமி”

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

பாவண்ணன்


மூன்று பக்கங்களில் கீற்றுத் தடுப்புகளும் எஞ்சிய நான்காவது பக்கத்தில் மலைப்பாறையும் கொண்ட ஒரு குடிசை நாவலுக்குள் சித்தரிக்கப்படுகிறது. குறிசொன்னால் பலிக்கும் என்று கிராமத்தவர்களின் நம்பிக்கையைப் பெற்ற நாவலின் மையப்பாத்திரமான மலைச்சாமி என்னும் துறவி அந்தக் குடிசையில் வசிக்கிறார். அக்குடிசை தொலைவிலிருந்து பார்ப்பதற்கு நான்கு பக்கங்களிலும் கீற்றுத் தடுப்புகளைக் கொண்ட குடிசையாகவே தோற்றம் தருகிறது. வாசல் திரையை அகற்றி உள்ளே நுழைந்த பிறகுதான் நான்காவது சுவராக உள்ள பாறையின் இருப்பை உணரமுடியும். மனிதமனத்தில் உறங்கும் காமத்தின் இருப்பும் ஊகித்தறியமுடியாதபடி கட்டுமானத்தில் மறைந்திருக்கும் மலைப்பாறையின் இருப்பும் இணையானவை. வாழ்வில் எல்லாருக்கும் ஏதாவது ஒரு தருணத்தில் காமம் கட்டுப்படுத்தமுடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. கொடுத்தும் பெற்றும் பங்கிட்டுக்கொள்ள அவரவர்களுக்கேற்ற துணைகள் அங்கங்கே கிடைக்கவும் செய்கிறார்கள். பங்கிட்டுக்கொள்வதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறவர்கள் அலையின் போக்கில் நகரும் படகென வாழ்வில் பயணம் செய்கிறார்கள். அதையே ஒரு குற்ற உணர்வாக எண்ணிக் குலைகிறவர்கள் சூறாவளியில் சிக்கிய படகென காலமெல்லாம் தத்தளித்துத் தவிக்கிறார்கள். கோபு, சுலோச்சனா, தேவி எல்லாரும் அலையின்போக்கில் செல்லும் படகுகளாக இருக்கிறார்கள். மலைச்சாமி தவிக்கும் படகாக குமைந்தபடியே இருக்கிறான்.

நாவலின் மையப்பாத்திரம் மலைச்சாமி. நல்ல சகோதரன். நல்ல கணவன். சந்தர்ப்பவசத்தால் கொலைகாரனாகி சிறைக்குச் சென்று தண்டனை அனுபவிக்கிறான். தண்டனைக்காலம் முடிந்து ஊருக்குத் திரும்பி வரும் சமயத்தில் அதிர்ச்சியான செய்தியொன்று அவனுக்குக் காத்திருக்கிறது. சிறைக்கைதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி இறந்துபோனதாக வந்த செய்தியை உண்மையென்று நம்புகிறது அவன் குடும்பம். அடையாளம் தெரியாத அவன் பிணத்தை அவனென்று நம்பி எரிக்கிறார்கள். கைக்குழந்தையின் பாதுகாப்புக்காக அவன் மனைவியை அவனுடைய தம்பியோடு ஊர்க்காரர்கள் சேர்த்துவைக்கிறார்கள். இடி இறங்கியதுபோல செய்தியைக் கேட்டு உறைந்துபோன மலைச்சாமி துக்கத்தை ஆற்றிக்கொள்ள மும்பை செல்கிறான். மனைவியை மறக்கமுடியாத அவனுக்கு அங்கே ஒரு புகலிடம் கிடைக்கிறது. ஒருநாள் புகலிடம் கொடுத்தவரின் மகளுடைய காம விருப்பத்துக்கு அவன் உடன்படும்படியான ஒரு சூழல் உருவாகிறது. அந்த உறவை அவன் விரும்பவில்லை. ஒருபுறம் அதை மனைவிக்கு இழைக்கிற துரோகமாக நினைக்கிறான். இன்னொரு புறம் முதலாளிக்கு இழைக்கிற நம்பிக்கைத் துரோகமாகவும் நினைக்கிறான். ஆனால், குற்றம் சுமத்திவிடுவதாக அச்சுறுத்தி அவனை மீண்டும்மீண்டும் தன் காமவிளையாட்டுக்கு உடன்படவைக்கிறாள் தேவி. ஒரு கட்டத்தில் அவள் அமைதியாக திருமணம் செய்துகொண்டு வெளியேறிப் போய்விட்டாலும் குற்ற உணர்வோடு தொடர்ந்து அங்கே நிற்கமுடியாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறான். பல இடங்களில் அலைந்து துறவியாக மாறி, சொந்த ஊருக்கு அருகிலேயே மலைச்சாமியாக குடியேறுகிறான். தற்செயலாக ஒருமுறை ஆசி கேட்டு வந்த மனைவியையும் தம்பியையும் பார்த்துத் தடுமாற்றம் அடைகிறான். தொடர்ந்து அந்த இடத்தில் இருக்க விருப்பமில்லாமல் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து வெளியேறிவிடுகிறான். மலைச்சாமியின் வாழ்க்கைச் சம்பவங்களை குறுக்கிழையாகவும் பெரியசாமி, சுமதி, சுலோச்சனா, மாலதி, கோபு, குருமணி, காமாட்சி, மீனாட்சிப்பாட்டி என ஏராளமான பாத்திரங்கள் இடம்பெறும் சம்பவங்களை நெடுக்கிழைகளாகவும் வைத்துப் பின்னப்பட்டுள்ளது இந்த நாவல்.

வாழ்வில் காமத்தின் பெறுமானம் என்ன என்பதை இயல்பான கிராமவாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி மதிப்பிட வளவ.துரையன் எடுத்திருக்கும் முயற்சி நாவலின் பலம். உணர்ச்சிப்பிழம்பான ஒரு கதையை உலர்ந்த நடையில் அமைத்திருப்பதும் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்கும் வண்ணம் பாத்திரவார்ப்பில் கவனம் செலுத்தாததும் குறிப்பிடத்தக்க பலவீனங்கள். அத்தியாயங்களை முன்னும் பின்னுமாக அமைத்திருந்தாலும் காலஓட்டத்தைத் துல்லியமாக உணர்கிற அளவுக்கு நாவலின் காட்சிகள் வலிமையானதாக இல்லை.

தம்பியின் வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்று மனத்தின் ஒருபக்கம் நெறிப்படுத்திக்கொண்டே இருந்தாலும், இன்னொரு பக்கம் மனைவியின் முகத்தை தொலைவிலிருந்தாவது ஒருமுறை பார்க்கவேண்டும் என்னும் விருப்பம் முருகேசனைத் தூண்டிக்கொண்டே இருப்பதற்கான காரணத்தை அவ்வளவு எளிதாக வரையறுத்துவிடமுடியாது. உயிருக்குயிராக நேசித்து, நெருக்கமான தருணத்தில் வெளிச்சத்தில் இருட்டும் இருட்டில் வெளிச்சமும் கலந்திருப்பதுதான் வாழ்க்கை என்று எதார்த்தத்தைச் சொல்லி விளங்க வைத்து, கூடிக் கலந்து வாழ்ந்த மனைவியின் முகத்தை மீண்டுமொரு முறை ஆசை தீரப் பார்க்கும் விழைவு ஒன்றுதான் அவன் மனத்தில் இருந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆனபோதும் அவள் முகத்தை நெஞ்சிலேயே சுமந்தபடி திரிந்ததற்குக் காரணம், அந்த முகத்தின் முன்னால் மீண்டும் நிற்கும் தருணத்தில், அந்த முகமும் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிடும் என்ற ஆசை உள்ளூர தூண்டியதாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நாடகத்தை அவன் ஆழ்மனம் அவனுக்குத் தெரியாமலேயே விரும்பியிருக்கக்கூடும். தற்செயலாக, அவன் எதிர்பார்த்ததுபோலவே, அப்படிப்பட்ட ஒரு தருணம் அவனே எதிர்பார்க்காத நேரத்தில் அமைகிறது. பெரியசாமியும் சுமதியும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஆசி பெற்றுச் செல்ல குடிசைக்கே வருகிறார்கள். எதிரில் இருப்பவர்களை அவன் பார்க்கிறான். அவர்களும் பார்க்கிறார்கள். பிறகு திருநீறு பெற்றுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். அவன் எதிர்பார்த்த அதிர்ச்சிக்காட்சி எதுவும் நடந்தேறவில்லை. அவன் இருப்பை அவர்கள் உணரவே இல்லை. அவன் காத்திருப்பு அல்லது தியாகம் அல்லது ஒதுங்கியிருத்தல் எல்லாவற்றையும் அக்கணம் பொருளற்றதாக ஆக்கிவிடுகிறது. அவர்கள் உலகில் தான் இல்லை என்னும் ஏமாற்றம் இடி இறங்கியதைப்போல அதிர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். அதற்குப் பின்னால்தான் அவன் ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறான். மனைவியின் வாழ்வில் இனிமேல் குறுக்கிட்டுக் குழப்பம் விளைவிக்கக்கூடாது என்று எண்ணுவதும் மனம். மனைவி இருக்கிற ஊருக்கருகே செல்லவேண்டும் என்று தூண்டுவதும் மனம். மனைவியின் முகத்தை ஒருமுறை பார்க்கவேண்டும் என்று விழைவதும் மனம். தற்செயலாக குடிசைக்கே வந்ததால் பார்க்கநேர்ந்த மனைவி பாராமுகமாகச் சென்றுவிடுவதைக் கண்டு குமுறி ஊரைவிட்டு வெளியேறவைப்பதும் மனம். எல்லாமே மனம் தனக்குத்தானே நிகழ்த்திப் பார்த்துக்கொள்ளும் நாடகமாகத் தோன்றுகிறது.

பத்தாண்டுகளாக சிறுகதைகளை எழுதிவரும் வளவ.துரையன் தன் முதல் முயற்சியாக இந்த நாவலை எழுதியிருக்கிறார்.

(மலைச்சாமி. நாவல். வளவ.துரையன். மருதா பதிப்பகம், 2/100, ஐந்தாவது குறுக்குத்தெரு, குமரன் நகர், சின்மயா நகர், சென்னை-92. விலை ரூ.100)

Series Navigation