மனசு

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

ப. இரமேஷ்


அந்தி சாயும் நேரம் கணேசன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் என்னங்க, என்னங்க என்று அவரது மனைவியின் குரல் கேட்டு எழுந்தார். “இந்தாங்க, டீ வைச்சிருக்கேன் குடிங்க” என்றாள் சரோஜா.
டீயைக் குடித்துக் கொண்டிருந்த கணேசனுக்கு சிந்தனை முழுவதும் திருமண வயதைத் தாண்டி நிற்கும் தன் மகளின் மீது இருந்தது. ஆசை ஆசையாய் வளர்த்த ஓரே செல்ல மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலை அவரைப் பிய்த்து எடுத்தது.
என்னச் செய்வது ஆசிரியரா வேலைப் பார்க்கும் போது வந்த பணம் வயித்துக்கும் வாயிக்குமே சரியாய் இருந்தது. ஏதோ ரிடையர் ஆன பிறகு அதுல வந்த பணத்துல சொந்தமா ஒரு வீடு கட்டிக்க முடிந்தது கையில எந்த பணமும் இல்லையே என்று பெருமூச்சு விட்டார்.
இதைப் பார்த்த அவரது மனைவி சரோஜா “என்னங்க யோசனை” என்று கேட்டாள். “ஒன்னும் இல்லே நம்மப் பொண்ணுச் செல்வியை நினைச்சாதான் பெரும் கவலையா இருக்கு” என்றார்.
“கவலைப்படாதீங்க, அவளுக்குன்னு எங்காவது ஒருத்தன் பொறந்திருப்பான். நிச்சயமா நாம கும்புடுற கடவுள் கைவிடமாட்டார்” என்று ஆறுதலாய்ப் பேசினாள்.
செல்வி ஆசிரியர் வேலைக்குப் படிச்சிட்டு சும்மா இல்லாம, அருகில் இருந்த அனாதை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். வரதட்சனைக் கொடுக்க முடியாததால ஏற்கனவே இரண்டு முறை செல்வியின் திருமணம் நின்று போனது, அதிலிருந்து திருமணம் என்ற பேச்சைக் கேட்டாலே அவளுக்குக் கோபம் தான் வந்தது.
மறுநாள் காலையில் ஏற்கனவே செல்விக்கு வரன்பார்க்கச் சொன்ன புரோக்கர் முருகன் வந்தார். “சார், சார் கணேசன் சார், உங்கப் பொண்ணுக்கு நல்ல வரனா ஒன்னு வந்துருக்கு மாப்பிள்ளை மேனேஜராக இருக்காரு நாளைக்கு அவங்கள வரச் சொல்லலாமா”.
“என்ன புரோக்கரே இந்தத் தடவை நம்மத் தகுத்திக்குத் தகுந்த மாதிரித்தானே வரன் பார்த்திருக்கீங்க. வரச் சொல்லுங்க பார்ப்போம்”.
புரோக்கர் சென்றதும் வீட்டிலிருந்து கடைத் தெருவுக்குச் சென்று சாமான்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தார். வந்ததும் அப்படியே விழுந்து விட்டார்.
சரோஜா, என்னங்க என்னாச்சு என்று அவரது தலையை அப்படியே தூக்கிப் பார்த்தாள், மயக்கத்தில் இருப்பது தெரிந்ததும் முகத்தில் நீர் தெளித்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் கண்திறந்தார் கணேசன்.
“என்னங்க ஆச்சு வந்தீங்க அப்படியே விழுந்திட்டீங்களே”
“ஒன்னுமில்லே சரோஜா இப்பல்லாம் திடீர் திடீரென்று மயக்கம் வருது”.
“வாங்க டாக்டர்கிட்ட போவோம்”
“அதெல்லாம் வேண்டாம். வயசுஆயிடுச்சில்ல எதாவது பிரஷர் வந்திருக்கும்”.
பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர் எல்லோரும் வந்தனர். வாங்க வாங்க என்று அழைத்தவாறே எல்லோரையும் வரவேற்றார். மாப்பிள்ளைக்கு செல்வியைப் பார்த்தவுடனேப் பிடித்திருந்தது. செல்விக்கும் மாப்பிள்ளையைப் பிடித்திருந்தது.
“பொண்ணுக்கு எத்தனை பவுன் நகைப் போடுவீங்க” என்று ஆரம்பித்தார் மாப்பிள்ளையின் அப்பா.
“என்னால முடிஞ்சத செய்றேங்க” என்றார் கணேசன்.
“முடிஞ்சதுன்னா ஒரு ஐம்பது பவுன் நகையும் 50 ஆயிரம் பணமும் ஒரு வண்டியும் வாங்கித் தருவீங்களா”.
அவ்வளவு எல்லாம் எங்களால செய்ய முடியாதுங்க என்று சொல்ல வாயெடுத்த சரோஜாவைத் தடுத்தார் கணேசன்.
ஏற்கனவே இரண்டு தடவை வரதட்சனையாலதான் கல்யாணம் நின்னுப் போச்சு, இந்த கல்யாணமும் நிக்கக் கூடாதுன்னு நினைச்ச கணேசன் ஒரு வழியாக அவர்கள் கேட்ட வரதட்சனையைச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர் எல்லோரும் சென்றவுடன் செல்வி அழுதேவிட்டாள்,
“அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்பா நம்மால இவ்வளவு வரதட்சணைக் கொடுக்க முடியாதுப்பா”.
“அழாதே செல்வி அப்பா நான் இருக்கேன் எப்படியாவது பணம் ஏற்பாடு பண்ணிடுறேன்” என்று சொன்னவருக்கு மனதில் இனம்புரியாத பயம் அவரைக் கவ்விக் கொண்டது.
பொழுது சாயும் நேரம் பறவைகள் எல்லாம் கீச்கீச் என்று கத்திக் கொண்டே தன் கூட்டைநோக்கிச் சென்று கொண்டிருந்தன.
என்னங்க, என்னங்க, எந்திரிங்க, இப்படி விளக்கேத்துற நேரத்துல தூங்கலாமா என்ற குரல் கேட்டு எழுந்தார் கணேசன். மகளின் திருமணத்திற்கு பணம் இல்லையே என்று நினைத்தவுடன் மனது முழுவதும் ஓரே கவலை அதன் வலி முகத்திலும் உடம்பிலும் தெரிந்தது.
“கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு இப்படி மசமசன்னு படுத்துத் தூங்குறீங்க” என்றாள் சரோஜா.
“ஏண்டி இப்படி கத்தற நான் ஒன்னும் சும்மா படுத்துத் தூங்கல உடம்பு என்னமோ பண்ணுது சொல்லத் தெரியல”
“சரி நான் போய் பணம் ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் கணேசன்.
இரவு மணி 11 ஆனது சரோஜாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை இன்னும் இவர் வரக்காணோமே என்று வாசலைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் கணேசன் வந்தார். “என்னங்க ஏன் இவ்வளவு லேட்டு” அதெல்லாம் ஒன்னுமில்ல பணத்துக்காக நாலஞ்சு பேர்கிட்ட கேட்கப்போயிருந்தேன்.
“பணம் கிடைச்சிட்டாங்க”,
“இல்ல யாரும் பணம் கொடுக்க மாட்டேன்னுட்டானுங்க, நான் எவ்வளவு பேருக்கு உதவி செஞ்சிருப்பேன் அதெல்லாம் ஒருத்தனும் நினைச்சிப்பார்க்கலே, மனசு ரொம்ப வலிக்குது” என்றவாறே அப்படியே சாய்ந்து அமர்ந்தார்.
“சரி போகட்டும் வாங்க சாப்டுட்டு தூங்குங்க”
காலையில் பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த கணேசன் ஒரு செய்தி மட்டும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார் சிறுநீரகம் செயலிழந்த வசதியான ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் கொடுப்பவர்க்கு தக்கச் சன்மானம் வழங்கப்படும் என்று அச்செய்தியில் இருந்தது.
இப்ப குடியிருக்கிற வீட்டை வித்துட்டு கல்யாணம் பண்ணலாம் என்றால் வீடு நல்ல விலைக்கு போகமாட்டேங்குது அப்படியே கேட்குற விலைக்கு வித்தாலும் அந்த பணம் கல்யாணத்துக்குப் பத்தாது என்ன செய்வது என்று புரியாமல் இருந்தபோதுதான் அந்த பத்திரிக்கைச் செய்தி அவருக்கு ஆறுதலாய் இருந்தது.
“சரோஜா நான் பணம் விஷயமா வெளியூர் போறேன் வர்றதுக்கு ஒரு வாரம்ஆகும் என்று சொல்லிவிட்டு அந்த பத்திரிக்கையில் குறிப்பிட்ட ஆஸ்பிட்டலுக்குச் சென்றார். தன்னுடைய சிறுநீரகத்தை தருவதாக ஒப்புக் கொண்டார். ஆபரேஷன் முடிஞ்சதும் அவருக்கு அறுபதாயிரம் பணம் மட்டுமே அவர்கள் கொடுத்தார்கள் அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
கொல்லைப்புறம் வேலை செய்துகொண்டிருந்த சரோஜா, வாசலில் சத்தம் கேட்டு உள்ளே வந்தாள். “எப்ப வந்தீங்க என்ன உடம்புல கட்டுப் போட்டிருக்கீங்க என்று கேட்டாள்” கணேசன் நடந்த விபரத்தைக் கூற சரோஜாவும் செல்வியும் அழுதுவிட்டனர்.
“கடவுள் நமக்கு இப்படியொரு சோதனையைக் கொடுக்கக் கூடாது” என்று அழுதவாறே புலம்பினாள்.
அன்று இரவு நன்றாக அசந்த தூங்கிக் கொண்டிருந்தார் மணி 3 இருக்கும் கணேசன் திடீரென்று வாரி சுருட்டி எழுந்து உட்கார்ந்தார். அருகில் படுத்திருந்த சரோஜா சத்தம் கேட்டு எழுந்தார்.
“என்னங்க தூக்கம் வரலயா, ஏன் எழுந்திட்டீங்க”,
“கனவு கண்டேன் அதான் முழிச்சிட்டேன்”
“என்ன கனவு கண்டீங்க”,
“நான் கும்பிடுகிற அண்ணாமலையாரே சிவனடியார் உருவத்தில வந்து நகைகளை என்னிடம் கொடுப்பது போல கனவு கண்டேன்”
“அப்படியா, அப்ப நல்லதுதாங்க நடக்கும்”,
இதற்கிடையில் பெண்பார்த்துச் சென்ற மாப்பிள்ளை ரகு, பெண் பற்றியும் பெண் குடும்பம் பற்றியும் விசாரிக்கும் பொழுது அவர்களின் கஷ்டம் முழுவதும் அறிந்து கொண்டார். மேலும் அனாதைக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் செல்வியின் நல்ல மனசு அவருக்குப் பிடித்திருந்தது விடியற்காலை நேரம் கணேசன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டுப் படுத்துகொண்டிருந்தார். காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்து கதவைத் திறந்தார். வாசலில் பெண்பார்த்து விட்டுச் சென்ற மாப்பிள்ளை ரகு நின்றிருந்தார்.
“வாங்க, வாங்க, என்ன திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க”
“அதெல்லாம் ஒன்னுமில்லங்க உங்களப் பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தேன், நான் எல்லா விபரமும் கேள்விப்பட்டேன் நீங்கள் பணத்திற்காக படுகிற கஷ்டம் எனக்குத் தெரியும், இந்தாங்க நான் திருமணத்திற்குப் பின் என் மனைவிக்கு கொடுப்பதற்காக முன்னாடியே வாங்கிச் சேர்த்திருந்த நகை 40 பவுன் இருக்கு இதை நீங்க போட்ட மாதிரி செல்விக்கு கல்யாணத்துக்கு போடுங்க”.
“இல்ல மாப்ள அது நல்லா இருக்காது”,
“நீங்க இத வேண்டாம்னு சொன்னா இந்த கல்யாணமே எனக்கு வேண்டாம்”.
“அய்யோ, அப்படிச் சொல்லாதீங்க மாப்ள, உங்க அப்பா, அம்மா ஏதாவது சொல்லப் போறாங்கன்னுதான் அப்படிச் சொன்னேன். உங்களுக்கு இருக்கிற இந்த பெருந்தன்மையான மனசு இந்த உலகத்துல யாருக்கும் வராது, இன்றைக்கு மாப்பிள்ளைகள் எல்லோரும் பெண் வீட்டாரிடம் எவ்வளவு புடுங்கித் திங்கலாம்ன்னு நினைக்கிறாங்க, அவங்களுக்கு மத்தியில நீங்க உசந்திட்டீங்க மாப்ள, நீங்க எங்க விட்டுக்கு மாப்பிள்ளையா வர்றதுக்கு நாங்க கொடுத்து வெச்சிருக்கனும்” கண்ட கனவு பலிச்சிட்டுங்க என்று சரோஜா சொல்ல, மாப்பிள்ளைய நோக்கி கண்களில் நீர்வழிய கையெடுத்து கும்பிட்டார் கணேசன்.

Series Navigation

ப.இரமேஷ்

ப.இரமேஷ்