மணிரத்னத்தின்

This entry is part [part not set] of 6 in the series 20000423_Issue

அலைபாயுதே

யமுனா ராேஐந்திரன்


எளிமையையும் அழகையும் இழந்த வாழ்வு

தான் ஒரே மாதிரியான படம் இயக்குபவன் என அறியப்படுவதில் தனக்கு விருப்பமில்லையென்பதை மணிரத்தினம் தனது பல்வேறு உரையாடல்களில் தெரிவித்திருக்கிறார். ‘பகல் நிலவு ‘, ‘நாயகன் ‘, ‘மெளனராகம் ‘, ‘அக்னி நட்சத்திரம் ‘, ‘உயிரே ‘ என அவரது படவரிசையை அவதானிப்பவர்களுக்கு ‘அலைபாயுதே ‘ படம் ஒரு ஆச்சரியமல்ல. வித்தியாசமாகப் படம் தயாரிப்பவர்கள் தமிழ்சினிமாவில் எதிர்கொண்டே ஆகவேண்டிய இரண்டு விபத்துக்கள் உண்டு. ஒன்று திரும்பச் திரும்பச் செய்தலுக்கும் தம்மைத் தாமே பிரதி செய்தலுக்கும் அவர்கள் ஆட்படுவார்கள். பாரதி ராஐா பாக்யராஜா படங்கள் இத்தகைய விபத்துக்கு ஆட்பட்டதுண்டு. இயக்குனருக்கான இமேஜ் வலையில் அவர்கள் ஆட்பட்டு அவர்களது சினிமாக்கள் சந்தைப் பண்டங்களாக ஆகி விடுவதும் உண்டு. கே.எஸ் ரவிக்குமார், சி. சுந்தர் போன்றவர்களின் படங்கள் இதற்கு உதாரணம்; இவர்களின் படங்கள் மினிமம் வசூல் கியாரண்டி கொண்டவை என்பதுதான் அந்த இமேஜ் வலை. இவர்கள் படங்களில் இன்னின்ன இருக்கும் என்பது ஒரு சினிமா பார்வையாளனுக்கு சொல்லாமலே விளங்கும். ‘தளபதி ‘ படத்தின் பின்னால் மணிரத்தினமும் அத்தகைய இயக்குனர் இமேக வலைக்குள் தன்னை ஆட்படுத்துக் கொண்டுவிட்டார் என்பதற்கான சான்றாகவே அலைபாயுதே படம் வெளியாகியிருக்கிறது.

படத்தின் காட்சியமைப்புக்களிலும் பாடல் காட்சிகளிலும் சில காமெரா கோணங்களிலும் மணிரத்தினத்தின் ‘ரோஐா ‘ தொடங்கி, ‘உயிரே ‘ வரையிலான படங்களின் பாதிப்பை ‘அலைபாயுதே ‘யிற் பார்க்க முடிந்தது. ஆற்றின்மீது போகும் ரயில், மழைக்காட்சிகள், அதிரடி, கவர்ச்சி நடனம், அகன்ற திரையில் துாரத்தில் விரியும் புச்சை மலைகள், திரைநிறைந்த ஏரித்தண்ணீரின் நடுவில் ‘லாங் ஷாட் ‘டில் தெரியும் ஒற்றைப்படகு எனச் சொல்லிக் கொண்டு போகலாம். ‘பம்பாய் ‘, ‘இருவர் ‘, ‘உயிரே ‘ படங்களின் பல காட்சி அமைப்புக்கள், வெளி போன்றன ‘அலை பாயுதே ‘ படம் பார்க்கும்போது நமது சிந்தைக்குள் வந்து போகிறது. ‘ரோஐா ‘, ‘பம்பாய் ‘, ‘இருவர் ‘, ‘உயிரே ‘ படங்கள் அரசியல் ாீதியிலானவை. உலகாயுத வகையிலான காட்சியமைப்புக்கள் படத்தின் முக்கியமான காட்சியமைப்புக்களாக இருந்தன.

நகரத்தின் தெருக்கள், கலவரங்கள், துரத்தல்கள், நகரத்தின் அழிவுகள், சினிமாத்துறையின் பிரம்மாண்டம், மக்கள் கூட்டங்கள் போன்றவையும் அழுத்தமான நிறங்களும் அகன்ற திரையும் இந்தப் படங்களின் கதை சொல்லலுக்குத் தேவையான பின்புலமாக இருந்தன. இதே வகையிலான கதை சொல்லும் முறையிலான தேர்வு மத்தியதரவர்க்க வாழ்வு குடியிருப்புகள் மற்றும் வீடுகள் தொடர்பான ‘அலைபாயுதே ‘ வகைக் கதைக்குப் பொருத்தமில்லாதாகிவிட்டிருக்கிறது. ஸோபியா ஹக்கின் பாட்டு வரும் காட்சி அசிங்கமான வியாபார சிந்தையின் உச்சம். படத்தின் கதைப் போக்கிற்கு முற்றிலும் சம்பந்தமற்ற காட்சி, முந்தைய படங்களில் இத்தகைய காட்சிகளை நியாயப்படுத்துவதற்கான கதைத் தர்க்கமாவது இருந்தது. ‘அரபிக் கடலோரம் ‘ பாட்டையும்( ‘பம்பாய் ‘) ‘ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி ‘ பாட்டையும்( ‘இருவர் ‘) ‘தைய்ய தைய்ய ‘ பாட்டையும்( ‘உயிரே ‘) அப்படிக் காண இயலும். ஆனால், ‘அலைபாயுதே ‘யில் வரும் இக்காட்சி, இம்மாதிரி பாட்டை எதிர்பார்த்துவரும் பார்வையாளனுக்குத் தீனி போடுவதற்காக வரும் காட்சி. மகா அபத்தமான நடனக் காட்சி.

கதைதான் என்ன ? மத்தியதரவர்க்கத்தினரின் காதலும் காதலுக்குப் பின்னான நடைமுறை வாழ்வின் வீம்பும் தான் கதை. மிக எளிமையாக அழகாகச் சொல்வப்பட்டிருக்க வேண்டிய கதை. இம்மாதரிரிக் காதல் கதைகளைக் கவிதை மாதிரிச் சொல்லக் கூடிய இளைஞர்கள் இன்று தோன்றி விட்டார்கள். ‘சேது ‘, ‘முகவரி ‘ போன்ற படங்களில், அஐீத்குமார் நடித்த படங்களில் மத்தியதரவர்க்க் குடும்பங்களின் உறவுகள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் மிக இயல்பான வசனங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறன. ‘சேது ‘ படத்தில் சிவகுமார், அவரது மனைவி, தம்பி விக்ரம், அவனது நண்பன் போன்றவர்களிடையிலான உறவு சித்தரிக்கப்பட்டவிதமும உரையாடலில் வரும் இயல்பான மொழியும் அற்புதம். கதை எனும் அளவில் ‘அலைபாயுதே ‘யும் இத்தகைய காதல் படங்களில் ஒன்றுதான். எந்த விதத்தில் இது வேறுபடுகிறது ?. காதலுக்குப் பின்னான வாழ்வில் இளம் தம்பதிகள் எதிர்கொள்ளும் நடைமுறைப்பிரச்சினைகளை எடுத்துக் கொள்வதாக கதை சொல்கிறது.

பெரும்பாலும் என்ன மாதிரி நடைமுறைப்பிரச்சினை தனிக்குடித்தனம் போகும் தம்பதிகளுக்குத் தோன்றும் ?. மிகப்பிரதானமான பரிமாணம் அதனது பொருளாதாரப் பரிமாணமாகும். புள்ளிவிவரம் எடுத்துப் பார்க்காவிட்டால் கூடப் பரவாயில்லை, மத்தியதரவர்க்க குடும்பங்கள் பற்றி கேட்டறிந்த சிந்தை இருந்தால்கூட இது புரிந்து விடும். ‘இந்திரா ‘வில் ஐாதியப் பிரச்சினையை அபத்தமாகச் சொன்ன மாதிரி (கதை: மணிரத்னம்) மத்தியதரவர்க்க இளம் தம்பதிகளின் காதலுக்குப் பின்னான நடைமுறை வாழ்வுப் பிரச்சினையையும் அபத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறது ‘அலைபாயுதே ‘ படம்.

பையன் கம்ப்யூட்டர் தொழிலில் ஒரே முறையில் 9 கோடி ஆர்டர் பெறுகிறவன். பெண் டாக்டர். இவர்களுக்கு என்னதான் பிரச்சினை ? ரயில்வேத் தொழிலாளியானவரின் இரண்டு மகள்களையும் ஒன்றாகப் பெண் கேட்கிறார்கள். பெண் கேட்பவர்களில் ஒருவன் வெள்ளைக்காரியை அல்லது கறுப்பியை மறுத்த இந்தியப் பெண்ணை மணமுடிக்க விரும்பும் ‘பிரின்ஸ்டன் யுனிவர்ஸிடி ‘ மருத்துவ மாணவன். இவன் விரும்பும் டாக்டர் மாணவி ஏற்கனவே ‘கம்ப்யூட்டர் ‘ப் பையனைக் காதலித்தவள்; வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணமும் செய்து கொண்டவள். மூத்தவளுக்கு விளைவாகக் கல்யாணம் தட்டிப் போகிறது. அப்பா கம்ப்யூட்டர் பையனை ரயிலவே நிலையக்கும்பலுக்கு மத்தியில் பளீரென அறைந்துவிட்டு துக்கத்திலும் வியாதியிலும் செத்துப் போகிறார். கொஞ்ச நேரம் பையனுககும் பெண்ணுக்கும் பரஸ்பரம் வீட்டாருக்கும் இடையில் வீம்பு நடக்கிறது. விபத்தில் மனைவி சாகக் கிடக்க, மனைவியுடன் சின்னச் சின்னச் சண்டை போடாது மனைவியைப் புரிந்து நடந்து கொள்வது மட்டுமல்ல அவளைத் தாங்கியும் பிடிக்க வேண்டும் எனும் உபதேசத்துடன் படம் முடிகிறது.

கதாநாயகன் தனது மனைவியின் அக்காவின் தட்டிப் போன கல்யாணத்தை நடத்திவைக்கும் பொருட்டு பெண் பார்த்துப் போனவரையும் அக்காவையும் சந்திக்கவை¢த்துக் காதல் கொள்ளவைக்கிறார். கடைசிக் காட்சியில் பிரிந்தவர்கள் கூடுகிறார்கள்.எல்லாவிதமான சினிமா ஏற்பாடுகளும் இருக்கிறது. உலகமயமாதலை சத்தமில்ாமல் ஒப்புக் கொள்கிற பாத்திரங்கள் கறுப்பியைத் துவேஷமாகப் பார்க்கிற பாத்திரப்படைப்புக்களால் படம் உருவாகியிருக்கிறது. வசனத்தை செல்வராஜ் எழுதியிருக்கிறார். ‘வெடுக் வெடுக் ‘ கென கோபம் கொப்பளிக்கும் இளம் தம்பதிகளுக்கிடையிலான உரையாடல் சில காட்சிகளில் இயல்பாக இருக்கிறது.

ரயில்வேத் தொழிலாளி வீட்டுப் பெண்பிள்ளைகளின் கதையைச் சொல்வதற்கும் கிரிமினல் லாயரின் வீட்டுக் கம்ப்யூட்டர் படிப்புப் பையன் கதை சொல்வதற்கும் மணிரத்தினம் தேர்ந்து கோண்டிருக்கும் பகட்டும் ஸோபியா ஹக்கும் அகண்ட திரையும் அநியாயம். இளம் தம்பதிகளுக்கிடையில் ‘முணுக் முணுக் ‘ என கோபம் வருவதற்கும் சண்டை வருவதற்கும் காரணங்கள் வேறு நிறைய இருக்கிறது. கல்யாணத்துக்கு முன்பாகவே பாத்திர பண்டம், கிரைண்டர், மிக்ஸி என வாங்கி வைக்க மிச்சம் பிடிக்கும் அலுவலகம் போகிற பெண்ணின் அனுபவம் நிச்சயமாக அதைச் சொல்வும் தன்மை கொண்டவை. ஆனால் மணிரத்தினம் சொல்லமுயலும் மத்தியதரவர்க்கம் பார்முலாவுக்குள் அடைபடும் மத்தியதரவர்க்கம்.மணிரத்னத்தின் சினிமர் இமேஜுக்குள் அடைபடும் செலுலாய்ட் மத்தியதரவர்க்கம்.

வீட்டுக்குள் அலைந்நு கதை சொல்லியிருக்க வேண்டிய காமெரா அனாவசியமாக மலைமேல் இறங்கி ஏரியில் குதித்து கடலில் கலவரம் செய்து பகட்டுக் காரியம் செய்திருக்கிறது. மணிரத்தினம் இனிமேல் கதைக்கு நியாயம் செய்கிற மாதிரி படம் எடுப்பாரா என்பது சந்தேகமாயிருக்கிறது.இனி ஒரு ‘மெளனராகம் ‘ மாதிரிப் படம்கூட மணிரத்தனத்திடமிருந்து வராமலேயே கூடப் போகலாம். எளிமையாகச் சொல்லப்படவேண்டிய மத்தியதரவர்க்க வாழ்வு கனவுமயப்படுத்தப்பட்டதால் எளிமையையும் அழகையும் இழந்து நிற்கிறது.

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்