மடியில் நெருப்பு – 33

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

ஜோதிர்லதா கிரிஜா33.

தொலைபேசியில் தண்டபாணி சொன்ன செய்தி ராஜாதிராஜனை உலுக்கிவிட்டது.

“என்னது! வீடியோ எடுத்தியா? எப்படா எடுத்தே? சும்மாவானும் ரீல் விட்றியா?”

“சத்தியமா எடுத்திருக்கேன், ராஜா!. ரொம்பவும் நுணுக்கமான கருவிப்பா. உயரே தொங்கிக்கிட்டிருந்த ஷாண்டிலியர்லே பொருத்தி யிருந்தேம்ப்பா. என் மேல நம்பிக்கை இல்லாட்டி இப்பவே வாப்பா. போட்டுப்பாரு. நான் இன்னும் பாக்கல்லே. என்ன இருந்தாலும் ஒரு நண்பனோட அந்தரங்கத்தை யெல்லாம் பாக்கலாமா? அது அநாகரிகமில்லே? அதான்!”

மறு முனையில் ராஜாதிராஜனின் முகம் சிவந்ததைத் தண்டபாணி மனக் கண்ணால் பார்த்து ரசித்தான்.

“டேய்! பொறுக்கி நாயே! எனக்கு வர்ற கோவத்துக்கு . . .”

“ஈசி, ஈசி! ஈயத்தைப் பாத்து இளிச்சிச்சாம் பித்தளை! நீ வந்து என்னைப் பொறுக்கின்றே! நல்ல கூத்துப்பா! அதை பத்திப் பரவால்லே. நாம இப்ப பிஸினெஸ் பேசுவோமா?”

“என்னது! பிஸினெஸ்ஸா! ப்ளேக் மெயிலா பண்ணப் பாக்குறே?”

“ரொம்ப க்விக்காப் புரிஞ்சுக்குறே! அந்தப் பொண்ணை விட்டுக் குடுத்துடு. இல்லாட்டி பத்து லட்சம் குடுத்துடு! அந்த வீடியோ டேப்பை உன்னாண்ட குடுத்துட்றேன்.”

“உன் பேச்சை எப்படி நம்புறது? துரோகித்தனமா நடந்திட்டிருக்கியே! அந்த டேப்புக்கு நீ காப்பி எடுத்திருக்க மாட்டேன்றது என்ன நிச்சயம்? நான் எப்படி உன்னை நம்புறது?”

“ஜெண்டில்மன்’ஸ் அக்ரீமெண்ட்தாம்ப்பா!”

மறுமுனையில் ராஜாதிராஜன் கசப்புடனும் ஆத்திரமாகவும் சிரித்தான்: “ஜெண்டில்மேனா! நீயா! அந்த வார்த்தையைச் சொல்றதுக்குக் கூட உனக்கு அருகதை யில்லேப்பா. வாயை மூடு. பத்துலட்சமெல்லாம் எங்கிட்ட கிடையாது. அந்தப் பொண்ணையும் விட்டுக் குடுக்க முடியாது. அது என்னோட கவுரவப் பிரச்சினை.”

இப்போது தண்டபாணி கொல்லென்று சிரித்தான்: “அடி சக்கைன்னானாம்! உன் கெட்ட கேட்டுக்குக் கவுரவம் வேறயா? இத பாரு, ராஜா! பழகிட்ட பாவத்துக்காக நான் பொறுமையாப் பேசிட்டிருக்கேன். மரியாதையா நான் கேட்ட பணத்தைக் குடுத்துடு. இன்னும் ரெண்டு மூணு நாளுக்குள்ளே வரணும். இல்லாட்டி அந்தக் குட்டியை நான் கடத்திடுவேன். அது அம்பது லட்சம் பெறுமான சரக்கு! நண்பனாச்சேன்னு விட்டுக் குடுக்கிறேன். நல்லா யோசிச்சு ஒரு புத்திசாலித்தனமான முடிவுக்கு வா. அரை மணி நேரம் உனக்கு அவகாசம் தர்றேன். “

“டேய் பொறுக்கி நாயே! ·ப்ரண்டாடா நீ? யோசிக்க ஒரு மணி நேரம் குடுத்தாலும் நான் அசையறதா யில்லே. ஒரு வருஷம் குடுத்தாலும் அசையறதாயில்லே! என் பதில் ஒண்ணுதாண்டா. சூர்யா எனக்கு மட்டுந்தான்! அவ உனக்குக் கிடைக்க மாட்டா. பத்து லட்சமும் கிடைக்காது. உன்னால ஆனதைப் பாத்துக்க! ரோக் நமபர் ஒன்!”

“நான் வெறும் ஒன்! நீ ஏ-ஒன்னா?” – தண்டபாணி மேலே பேசும் முன் ராஜாதிராஜன் ஒலிவாங்கியை வைத்துவிட்டான். அவன் கை, கால்கள் அதிர்ந்து கொண்டிருந்தன. முகத்தில் வேர்வை துளித்திருந்தது. ‘எப்படி மாட்டிக்கொண்டேன் இவனிடம்!’ என்று திருப்பித் திருப்பிச் சொன்னவாறு அப்படியே உட்கார்ந்து போனான்.

அவன் விரல்கள் மறுபடியும் தண்டபாணியின் இலக்கத்தைத் தன் தொலைபேசியில் தட்டின.

“என்னாப்பா, ராஜா! என்னமோ பொறுக்கி, ரோக் அது இதுன்னே? இப்ப எதுக்கு ·போன் பண்றே?”

“சரிதாம்ப்பா. நீயும் பொறுக்கி, நானும் பொறுக்கி. அத்த விடு. இப்ப விஷயத்துக்கு வா. ரெண்டு லட்சம் குடுத்துட்றேன். அது கூட கம்பெனிக் கணக்குலே ஏதாச்சும் தில்லுமுல்லு பண்ணித்தான் தரணும்.”

“அது உன்னோட கவலை! ஆனா பத்து லட்சம்தாம்ப்பா என்னோட ரேட்டு. ஒரு லட்சம் கூடக் குறைச்சுக்க முடியாது! பத்து லட்சம். இல்லாட்டி சூர்யா. “ – தண்டபாணி தொடர்பைத் துண்டித்துவிட்டான்.

ராஜாதிராஜன் மிரண்டு போனான். ‘என்னால் பத்து லட்சம் தரவும் முடியாது. சூர்யாவை விட்டுக் கொடுக்கவும் முடியாது! . . . ஆனால், சூர்யாவை எப்படி எச்சரித்து வைப்பது? ‘ உன்னைக் கடத்தப்போகிறார்கள். எச்சரிக்கையாக இரு’ என்றா சொல்ல முடியும்? அவளுக்கு இல்லாத பொல்லாத சந்தேகமெல்லாம் வருமே? . . . எது எப்படிப் போனாலும், சூர்யாவை மட்டும் விட்டுக்கொடுக்கவே முடியாது! ஒருவேளை, கேசட்டை அப்பாவுக்கு அனுப்பிவைப்பானோ? அட, கடவுளே! . . . மாட்டான்! அப்பாவின் செல்வாக்கு அவனுக்குத் தெரியும். பார்க்கலாம்.’

ஒருமணி நேரத்துக்கு மேல் காத்திருந்த பிறகும் ராஜாதிராஜனிடமிருந்து அழைப்பு வராததால், தண்டபாணியே கூப்பிட்டுப் பேசினான்: “என்னப்பா, ராஜா! யோசிச்சியா?”

“அதான் சொல்லிட்டேனே! ஒரு வருஷம் டைம் குடுத்தாலும் அதே பதில்தான்!”

“அப்ப, மாட்டிக்கிறதாத் தீர்மானிச்சுட்டே!”

சட்டென்று தோன்றிய ஓர் எண்ணத்தில், “நான் மாட்டினா, நீயும் மாட்டிப்பே, நைனா! அதை மறந்துட்டியே! எனக்கும் இது வரைக்கும் நெனப்பு வரல்லே, பாரு. நீ மும்பையிலேர்ந்து பத்து லட்சம் பெறுமான போதைப் பொருள் கடத்தி வந்தது போலீசுக்குப் போயிடும். போலீஸ் உன் கையிலேன்னு மனப்பால் குடிக்காதே! இப்ப இருக்குற கமிஷனர் நேர்மையானவரு. தெரிஞ்சுதா? சி.பி.ஐ. வரைக்கும் உன் வண்டவாளம் போகும். தப்பவே முடியாது. அதையும் நெனப்பு வச்சுக்க, ஜெண்டில்மேன்!”

மறு முனை இப்போது மவுனமாகியது. தொலைபேசி வைக்கப்பட்டது.

சற்றுப் பொறுத்து மறுபடியும் மணி யடித்தது. “நான்தாம்ப்பா! நாம ரெண்டு பேரும் ஒரு அக்ரீமெண்டுக்கு வரலாமா?”

“ஜெண்டில்மென்’ஸ் அக்ரீமெண்டா!”

“கிண்டல் வேணாம்ப்பா. நாம ரெண்டு பேருமே ஜெண்டில்மென் இல்லே! சரி அது போவட்டும். நீயும் என்னைப் போலீசுக்குக் காட்டிக் குடுக்காதே, நானும் கேசட்டை உன்னாண்ட திருப்பிக் குடுத்துட்றேன். சூர்யாப் பொண்ணு வழிக்கும் வரல்லே. என்ன சொல்றே?”

“உன்னை நம்பலாமா? அப்பால பேச்சு மாற மாட்டியே?”

“இல்லேப்பா.”

இணைப்பு நின்று போனது. ஆனால் ராஜாதிராஜனுக்கு மனம் அமைதியடையவில்லை. இப்போதைக்கு விட்டுக் கொடுக்கிறாப்போல் நடித்துவிட்டுப் பின்னர் வாலாட்டுவானோ எனும் ஐயம் அவனுள் எழுந்தது. மறுபடியும் தண்டபாணியோடு தொலைபேசினான்: “முக்கியமானது கேக்க விட்டுப் போயிடிச்சுப்பா. அந்த டேப்பை என்கிட்ட குடுத்துடு. அதைப் போட்டுக்கீட்டுப் பாக்காதேப்பா. உன் ·ப்ரண்ட்ஸ் யாருக்கும் போட்டுப் பாக்கவும் குடுக்காதே. . . என்ன, சிரிக்கிறே? எனக்கு உன் மேலே முழு நம்பிக்கை வர மாட்டேங்குது. . .”

“கவலைப் படாதே, ராஜா! அப்படி எதுவும் நடக்காது.”

“அதை வங்கிக்க எப்ப வரட்டும்? இல்லே, நீயே எடுத்துக்கிட்டு வர்றியா?”

“அதைப் பத்திக் கவலையே படாதே, ராஜா! அதை நானே எரிசுட்றேன்.”

“உன்னை நம்பலாமா?”

“போதை மருந்துக் கடத்தல் சம்பந்தமா என்னைப் போலீஸ் கமிஷனர் கிட்ட காட்டிக் குடுக்க மாட்டேன்னு நீ சொல்றதை நான் நம்புறேனில்ல? அப்ப, நீயும் என்னை நம்ப வேண்டியதுதானேப்பா? “

மறுபடியும் அவர்களது உரையாடல் நின்றது. எனினும் இருவரும் ஒருவரை மற்றவர் நம்பவில்லை.

. . . . . . .”இத பாரு, நாகு! ராஜாதிராஜன் மேல எனக்கு நம்பிக்கை இல்லே. ஏன்னா, அவனுக்கு என் மேல நம்பிக்கை இல்லே! என்னோட ஹெராய்ன் வியாபாரத்தைப் பத்தின தகவல்களை யெல்லாம் நான் அவன் கிட்ட சொல்லியிருக்கவே கூடாது. . . தவிர அந்த சூர்யாப் பொண்ணு மேல எனக்கும் ஆர்வமும் ஆசையும் இருக்கு. நீ சொல்றாப்ல நான் எதுக்கு அந்தக் குட்டியை முழுக்க முழுக்க அவனுக்கு விட்டுக் குடுக்கணும்? அதனால, முதல்லே, அவன் மாட்டிக்கணும். நீ இப்ப என்ன பண்றே, உடனே அவனோட ஆ·பீசுக்குப் போறே. அந்தக் கேசட் மூணு ரெடி பண்ணிட்டேன். ஒண்ணை பேங்க் லாக்கர்ல இப்பவே கொண்டுபோய் வெச்சுடப் போறேன். ஒண்னை நீ உனக்குத் தெரிஞ்சவங்க யார் கிட்டயாச்சும் சீல் பண்ணிக் குடுத்து வை. மூணாவதை எப்படியாவது அவனோட கார் டிக்கியிலே கண் மறைவா வெச்சுடு. அவன் தற்செயலா டிக்கியைத் திறந்தாக் கூட அது அவன் கண்ணுல பட்டுடக் கூடாது. அது மாதிரி மறைப்பா வெச்சுட்டு நீ உடனே திரும்பிட்றே. அப்படி வெச்சுட்ட செய்தியை நீ எனக்குத் தெரிவிச்ச உடனேயே நான் போலீசுக்குச் சொல்லிடுவேன். நியாயமான ஆளுன்னு சொல்ற கமிஷனருக்கே ·போன் பண்ணிச் சொல்லிடுவேன். அவன் முந்திக்கிறதுக்கு முந்தி நாம முந்திக்கிடணும்!” என்ற தண்டபாணி கேசட்டுகளை எடுத்து நாகதேவனிடம் கொடுத்தான்.

நாகதேவன் உடனேயே அவற்றுடன் ராஜாதிராஜனின் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டான்.

. . . ராஜாதிராஜனோ முதலில் தண்டபாணியை மாட்டிவைத்துப் போலீசும் பிடித்துச் செல்லும்படி செய்து விட்டால், பிறகு அந்தக் காசட்டைத் தன் பண பலத்தின் மூலம் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணினான். தான் நீலப்படம் எடுப்பதாகத் தண்டபாணி காவல்துறைக்குப் புகார் செய்தாலும், அப்பாவின் செல்வாக்கால் தன்னால் தப்பிவிட முடியும் என்று அவன் உறுதியாக நம்பினான். தவிர, தான் ஒரு விலைமகளுடன் இருக்கையில் தன்னை வியாபார நோக்கில் நீலப்படம் பிடித்து பிளேக்மெயில் செய்து அச்சுறுத்திப் பணம் பறிக்கப் பார்த்தது தண்டபாணியே என்பதை நிரூபிப்பது எளிது என்று அவன் நம்பினான். தான் விலைமகளின் உறவை நாடியது, நீலப் படம் எடுக்கப் பட்டது ஆகியவை தன்னுடையவும் தன் அப்பாவுடையவும் கவுரவத்ததைப் பாதிக்கும் என்பது ஒன்று மட்டுமே அவனது கவலையாக இருந்தது. ‘அந்த அவமான உணர்ச்சியைத்தான் தண்டபாணி பணம் பண்ணப் பார்க்கிறான். போலீஸ் கேசிலிருந்து என்னால் நிச்சயமாய்த் தப்ப முடியும். ஆனால், அவமானத்திலிருந்து அப்பாவும் நானும் தப்ப முடியாதே! குடும்ப கவுரவம் நாளிதழ்களில் நாறும்! இவ்வளவும் ஆனதன் பிறகு சூர்யா என்னை ஏற்பாளா? மாட்டாள்! . . .’

அலுவலகத் தொலைபேசியில் கமிஷனருடன் தொலைபேச அவன் விரும்பவில்லை. அழைப்பு எங்கிருந்து என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். எனவே அவன் பொதுத் தொலைபேசி ஒன்றிலிருந்து பேச முடிவு செய்து எழுந்த நேரத்தில் ஜகந்நாதன் அறைக்குள் நுழைந்தார்.

அவன் ஏமாற்றத்துடன் உட்கார்ந்தான். அவர் கிளம்பிப்போகும் வரை அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

“ரூமுக்கு வெளியிலே ரெட் லைட் போட்டிருக்கியே?”

“காலிங் பெல்னு நினைச்சு அந்த ஸ்விட்ச்சை அழுத்திட்டேம்ப்பா. அணைக்க மறந்துட்டேன்.. .”

அவர் உட்கார்ந்தார்: “ ஏன், என்னவோ போல இருக்கே? கல்பனாவைப் பத்திக் கவலைப் பட்றியா?”

‘அவர் அப்படியே நினைத்துக்கொள்ளட்டும்’ என்பதற்காக அவன் பதில் சொல்லாதிருந்தான். ‘அப்பா எப்போது கிளம்பிப் போவார்?’ எனும் கேள்வியே அவன் உள்ளம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. ஐந்து, பத்து நிமிடங்கள் போல் பார்த்துவிட்டு ஏதேனும் சாக்குச் சொல்லி வெளியே கிளம்பிப் போகவேண்டியதுதான்’ என்று அவன் நினைத்தான்.

. . . ராஜாதிராஜனின் அலுவலகத்தை நாகதேவன் அடைந்த போது, ஜகந்நாதன் தாம் வந்த கார்க்கதவைச் சாத்திவிட்டு அலுவலகத்தினுள் நுழைந்ததைக் கண்டான். ராஜாதிராஜனின் கார் ஓர் ஓரத்தில் நின்றிருந்தது. அதன் அருகே யாரும் இல்லை. எனவே நாகதேவன் மெல்ல அதன் டிக்கியைத் திறந்தான். அதன் தரையில் விரிக்கப் பட்டிருந்த கனத்த ரப்பர் விரிப்புக்கு அடியில், எதிர்ப்புறச் சுவரோரப் பகுதியில் கேசட்டைச் செருகி வைத்துவிட்டு ஓசைப் படாமல் வெளியேறினான்.

. . . அலுவலகம் வந்த சூர்யா அன்று முழுவதற்கும் விடுப்பு எடுத்துக்கொண்டு ராஜலட்சுமியின் வீட்டுக்குப் புறப்பட்டாள். அவள் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது ஒருவர் அவளைக் குறுகுறு வென்று பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பார்வையில் தப்புத் தெரியாததால் சூர்யாவுக்கு எரிச்சல் வரவில்லை. சில நொடிகளுக்குப் பிறகு அவர் அவளை நெருங்கித் தொண்டையைச் செருமிய பின், “எக்ஸ்க்யூஸ் மி!” என்றார்..

‘என்ன’ என்பது போல் சூர்யா அவரை நோக்கினாள்.

“மேடம்! நீங்க தப்பா எடுத்துக்கல்லைன்னா, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லுவேன்.”

அவள் பார்வையில் உடனே தோன்றிய திகைப்பை கண்டதும், “நான் ஒட்டால் சோளாவிலே செர்வரா இருக்கேன்.. . .” என்று அவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இப்போது அவளுக்கு அவரை அடையாளம் தெரிந்துவிட்டது. அவள் திகைப்புடன், “ என்ன சொல்லப் போறீங்க?” என்றாள்.

jothigirija@vsnl.net
தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா