மடியில் நெருப்பு – 23

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

ஜோதிர்லதா கிரிஜா


23.

“சூர்யாவைக் கொஞ்சம் பேசச்சொல்லுங்க, சார்!” என்ற அதே குரலைச் செவிமடுத்ததும் தலைமை எழுத்தர் ஆத்திரமே உருவானார்.

“யார்ரா நீ? செமத்தியா அடிபடப் போறே, பாரு! நேத்து பேப்பர் படிக்கல்லையா? பொம்பளைங்களை இது மாதிரி ·போன்ல கூப்பிட்டு வம்பு பண்ணின ரெண்டு பசங்களைப் பிடிச்சு ஜெயில்ல போட்டிருக்காங்க! நீயும் ஜெயிலுக்குப் போகணுமாடா?”

அடுத்த விநாடி அவரது முகம் கறுத்துப் பின் சிவந்தது. “·போனை வைடா, பொறுக்கி நாயே!” என்று திட்டிவிட்டு அவர் ஒலிவாங்கியைக் கிடத்தினார். மறு முனையில் இருந்தவன் ஏதோ மிக அசிங்கமாய்ப் பேசியிருந்திருக்க வேண்டுமென்று எல்லாருக்கும் புரிந்தது.

“என்ன, சார்?” என்று முரளி மட்டும் விசாரித்தான்.

“எவனோ போதுபோக்கத்த பொறுக்கிப்பா! கன்னாப் பின்னான்னு பேசறான்! . . .அம்மா, சூர்யா! நீங்க கொஞ்சம் கவனமா யிருக்கணும்!”

தான் கவனமாயிருப்பதன் மூலம் இவனைப் போன்றவர்களுக்கெல்லாம் எப்படி லகான் போடமுடியும் எனும் திகைப்பு ஏற்பட்டாலும், ஒரு தகப்பனைப் போல் கவலைகாட்டும் அவருக்கு மதிப்பளிக்கும் எண்ணத்துடன் சூர்யா தலையை ஆட்டிவைத்தாள்.

“சூர்யா! அந்தாளோட குரல் உனக்குத் தெரிஞ்சவன் யாரோட குரல் மாதிரியாவது இருந்திச்சா?” என்று பவானி அவளை விசாரித்தாள்.

“இல்லே, பவானி. குரல் கொஞ்சம் கரகரப்பா நம்ம நடிகர் எம்.ஆர். ராதாவோட குரல் மாதிரி இருந்திச்சு. ஒருக்கா, குரலை வேணும்னே அப்படிக் கரகரன்னு மாத்திக்கிட்டுப் பேசினானோ என்னமோ! யாருக்குத் தெரியூம்? பேரு வேற சொன்னான் – விநாயகமாம்!”

“ அது உண்மையான பேரா யிருக்காது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கடி. இது மாதிரியான அக்கப்போருக்கெல்லாம் அப்பதான் முடிவு கட்டலாம்!”

“சரிதாண்டி, சும்மா யிரு,” என்று பொய்க் கோபத்துடன் பதில் சொன்னாலும், சூர்யாவின் மனக்கண்கள் முன்பு ராஜாதிராஜனின் கம்பீரத் தோற்றம் தெரிந்தது.

சற்றுப் பொறுத்து, “நாம போயிருந்தப்ப கமலா வீட்டில அந்த தண்டபாணி தென்படல்லே தானே?” என்று சூர்யா பவானியை விசாரித்தாள்.

“நான் கவனிச்சவரைக்கும் அவன் தென்படல்லே. ஒருவேளை நமக்கு முந்தியே வந்துட்டுப் போயிருந்திருப்பானோ என்னமோ? அல்லது, வராமலே கூட இருந்திருக்கலாம். எதுக்கு வீண் வம்புன்னு! இல்லே, கமலா செத்துப் போனதே அவனுக்குத் தெரியாமலும் கூட இருந்திருக்கலாம்.”

“ அந்தாளு அவ வீட்டுக்கு வந்து போய்க்கிட்டிருந்ததை அக்கம் பக்கத்து ஆளுங்க கவனிச்சிருப்பாங்கல்லே?”

“இப்படிக்கூட இருக்கலாமே, சூர்யா? அவன் அவ வீட்டுக்கே போகாதவனாக்கூட இருக்கலாம். கல்யாணம் கட்டாம ருசி மட்டும் பாத்துட்டுத் தூக்கிக் கடாசிட்டுப் போயிர்ற சில ஆம்பளைங்க இருக்காங்கள்லே, அவங்கல்லாம் பொம்பளைங்க கிட்ட பழகுறப்ப ரொம்பவே முன்ஜாக்கிரதாயா யிருப்பாங்க. லெட்டர் எதுவும் எழுத மாட்டாங்க. நாலு பேர் முன்னாடி குறிப்பிட்ட பொண்ணோட தென்படமாட்டாங்க. அந்தப் பொண்ணோட சேந்து ·போட்டோ எடுத்துக்க மாட்டாங்க. . .”

“நீ அவனைப் பாத்திருக்கேல்லே? எப்படி யிருப்பான் ஆளு?”

“ஒரே ஒரு தரம்தான் நம்ம ஆ·பீஸ்லயே பாத்திருக்கேன். என்னிக்கு வந்தான், தெரியுமா? போன மாசம் இருபதாந்தேதி யன்னிக்கு வந்தான். எப்படி இவ்வளவு ஞாபகமாச் சொல்ல முடியுதுன்னா, அன்னிக்கு நம்ம க்வார்டர்லி ஸ்டேட்மெண்ட் அனுப்பவேண்டிய நாள். அந்த ஸ்டேட்மெண்ட் சம்பந்தப்பட்ட சில விவரங்களைக் கமலாகிட்டேருந்து வாங்கவேண்டியிருந்திச்சு. அதை வாங்குறதுக்காகப் போனப்போ, அந்த தண்டபாணி – அவ கிட்ட நின்னு பேசிட்டிருந்தான். – ‘அப்ப, கண்டிப்பா நாளைக்குப் பத்து மணிக்கு! சரியா?’ அப்படின்னு கேட்டது என் காதுலே தெளிவா விழுந்திச்சு. கேட்டுட்டு அவன் உடனே கிளம்பிட்டான். மத்தாநாளு கமலா ஆ·பீசுக்கு வரல்லே. அவனோட அவ வெளியே எங்கேயாச்சும் போயிருந்திருக்கலாம். அதுக்கும் அடுத்த நாளு வந்தப்ப, அந்த ஆளைப்பத்திக் கேட்டேன். அவனைக் கல்யாணம் கட்டப் போறதாச் சொல்லிச்சு. எவெர்சில்வர் பிஸ்னெஸ் பண்றாருன்னு சொல்லிச்சு. நான் வெளிப்படையாவே சொல்லிட்டேன் – அந்த ஆளைப் பத்தி நல்லா விசாரிச்ச பெறகு கழுத்தை நீட்டு, அவசரப்படாதே அப்படின்னு.”

“அப்படியேவா சொல்லிட்டீங்க?”

“ஆமா. உண்மையான நட்புக்கு அதுதானே அடையாளம்? . . .ஏன்னா எடுத்த எடுப்பிலேயே அந்தாளை எனக்குக் கட்டோட பிடிக்கல்லே. அவன் மூஞ்சியும் முகரையும்!”

“அவனைப் பத்தின உங்க அபிப்பிராயத்தையும் கமலாவகிட்ட சொல்லிட்டீங்களா?”

“ஆமா. ஆனா நாசூக்காத்தான் சொன்னேன். ஏன்னா என்னோட கணக்குத் தப்பாவும் இருக்கலாமே! அவளுக்கும் கோவம் வரலாமில்லே? அதான்.”

“கமலா என்ன சொல்லிச்சு அதுக்கு?”

“ . . . . ‘அப்படியெல்லாம் சந்தேகப்படாதே பவானி! வெளியிலே தெரியறதை மட்டும் வெச்சு யாரையும் எடை போடாதேடி. அவரு ஒரு ஜெண்ட்டில்மேனாக்கும். கல்யானச் செலவு முழுக்கவும் அவரேதான் செய்யறதாயிருக்காரு. . . அதுக்குள்ள எனக்கு மூணு பட்டுப் புடவை வாங்திக் குடுத்திருக்காரு’ அப்படின்னிச்சு. அதுக்கு மேல நான் அது கூட வாக்குவாதம் பண்ணல்லே. ஏன்னா, காதல்லே கண்ணவிஞ்சு இருக்குறவங்களோட அந்தக் காதலுக்கு எதிரா என்ன பேசினாலும் தப்பாத்தான், சூர்யா, தெரியும். அதனால நான் வாயை மூடிக்கிட்டேன். ஆனா, அடிக்கடி, ‘கல்யாணத்தை ஆறப் போடாதே, சீக்கிரம் பண்ணிக்க’ன்னு மட்டும் சொல்றதுண்டு. இருந்தாலும், தூக்குப் போட்டுக்கிட்டுச் சாகிற அளவுக்கு அதுக்கு என்ன ஆகியிருக்கும்னு புரியல்லே!. . . ஒருக்கா, தப்பு நடந்து கர்ப்பமாயிடிச்சோ என்னவோ! அந்தத் தடியன் அவளை உதறியிருப்பான். அநேகமா அப்படித்தான் இருக்கும்.”

காதலைப் பற்றிய பவானியின் விமரிசனமும், அவள் ஒருகால் கருவுற் றிருந்திருக்கக் கூடுமென்னும் தனது ஊகத்தைத் துளியும் தயக்கமின்றி அவள் வெளியிட்டதும் சூர்யாவிடம் ஒரு சங்கடமான குறுகுறுப்பை ஏற்படுத்தியதில் அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

சற்று நேர அமைதிக்குப் பின்னர், “கமலாவுடைய செக்ஷனுக்குப் போய் அங்க இருக்கிறவங்கள்லே யாருக்காச்சும் ஏதாச்சும் தெரியுதான்னு விசாரிச்சுப் பாக்கறேன்,” என்ற பவானி ஒரு பெருமூச்சுடன் கிளம்பிப் போனாள்.

சுமார் அரை மணி கழித்துத் திரும்பிவந்தாள்.

“ என்ன, பவானி? புதுசா ஏதாச்சும் தெரிஞ்சுதா?”

“வேற யாருக்கும் எதுவும் தெரியல்லே. ஆனா அவங்க ஹெட்கிளார்க் ஒரு புது விஷயம் சொன்னாரு.”

“என்ன?”

“ஒரு மாசத்துக்கு முன்னாடி, தன்னோட வீட்டை விக்கப் போறதாவும், அதை விக்கிறதுக்கு ஒரு நம்பகமான ஆளாத் தேடிக்குடுங்கன்னும் அவரு கிட்ட அது சொல்லிச்சாம். அரும்பாடு பட்டுக் கட்டின வீட்டை விக்கிற அளவுக்கு அப்படி என்ன கஷ்டம் வந்திருக்கும் அதுக்குன்னு தெரியல்லே. அதைப் பத்தி எங்கிட்ட கமலா சொன்னதே இல்லே. ஏன்னா, நான் ஆயிரம் கேள்வி கேப்பேன்னு அதுக்குத் தெரியும். அவளோட ஒரே தம்பியும் ஸ்காலர்ஷிப்ல படிக்கிறவன். . . ஹெட்கிளார்க் சொன்னாராம் – கஷ்டப்பட்டுக் கட்டின வீட்டை விக்காதேம்மா. உனக்குப் பெரிய தொகை தேவைப்பட்டா, வீட்டை அடகு வெச்சுப் பணம் வாங்கிக்கலாம். அதுக்கு நான் ஏற்பாடு பண்ணித் தர்றேன்னு. . . ஆனா, அதுக்குப் பெறகு அந்த விஷயம் பத்தி அது அவரு கிட்ட எதுவும் பேசல்லையாம். அவரும் கேட்டுக்கல்லையாம். . .”

“ஒருக்கா அந்த தண்டபாணின்ற ஆளு கேட்டிருப்பானோ?”

“இருக்கலாம், சூர்யா. இந்தக் காலத்துலே யாரையுமே சட்னு நம்பிடக்கூடாது. முக்கால் வாசிப் பேரு சின்னமீனைப் போட்டுப் பெரிய மீனாத் தூண்டில்ல மாட்டி இழுக்கிறவங்கதான்! நானும் உன்னய மாதிரிதான் சந்தேகப்பட்டேன்.”

இரண்டே நொடிகளுக்குப் பிறகு, சூர்யா, திடீரென்று முகத்தில் தோன்றிய ஒளியுடன், “பவானி! அந்த தண்டபாணி என்னைக்கு நம்ம ஆ·பீசுக்கு வந்தான்னு சொன்னே?” என்று கேட்டாள்.

அவளது குரலில் ததும்பிய ஆர்வத்தைக் கவனித்த பவானி வியப்படைந்தவளாய், “போன மாசம் இருபதாம் தேதிடி, சூர்யா. ஏன்? எதுக்குக் கேக்கறே?” என்றாள்.

“கொஞ்சம் இரு, பவானி,” என்ற சூர்யா தனது நாள்குறிப்பேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு, “ நான் நினைச்சது சரிதான். அந்தாளை நானும் பார்த்திருக்கேன். அவ்வளவு நிச்சயமா எப்படி நெனப்பு வந்திச்சுன்னா, இத பாரு, டயரியிலே எங்கம்மாவுக்குக் கால்வலிக்கு எதிர்க் கடையிலே எண்ணெய் வாங்கினது பத்தி எழுதியிருக்கேன். நீ கமலாவுடைய செக்ஷனுக்கு அன்னைக்குப் போனே இல்லையா? நீ புறப்பட்ட ஒரே நிமிஷத்துக்கெல்லாம் நானும் ஹெட்கிளார்க்கு கிட்ட சொல்லிட்டு எதிர்க்கடைக்குப் புறப்பட்டேன். அப்ப, சதுர முகமா, அடர்த்தியான மீசையோட ஒரு ஆள் எஸ்டாப்ளிஷ்மெண்ட் செக்ஷ்ன்லேருந்து வெளியிலே வந்தான். என்னை முறைச்சுப் பாத்துக்கிட்டே போனான். அநேகமா அவன்தான் நீ சொல்ற தண்டபாணியா யிருக்கணும். அவனுக்குச் சதுரமுகம்தானே?”

“ஆமா. எத்தினியோ பேருக்குச் சதுரமுகம் உண்டுதான். ஆனாலும், அந்தாளோட முகம் ரொம்ப வித்தியாசமா சச்சதுரமா இருக்கும், சூர்யா. பெரிய மீசைதான். நம்ம ம.பொ.சி. இருந்தாரே, அவரு பாணியிலே வெச்சிருப்பான்.”

“ஆமாமா.”

“அது சரி. அவன் அன்¨¨க்குப் போட்டிருந்த பேண்ட் ஷர்ட் கலர் நெனப்பு இருக்கா, சூர்யா?”

“கறுப்புலே வெள்ளைக் கட்டம் போட்ட ஷர்ட்டும் கறுப்புப் பேண்ட்டும்.!”

“ரொம்ப சரி. அந்தாளேதாண்டி, சூர்யா!”

“எனக்கு ஏன் அவனோட ட்ரெஸ் கூட நெனப்பு இருக்குன்னா, அவனோட பார்வையே எனக்குப் பிடிக்கல்லே. அப்படி ஒரு அநாகரிகத்தோட முறைச்சுப் பாத்துக்கிட்டே போனான். நானும் அவனை எரிச்சலோட முறைச்சேன். அதான்!”

பவானி சிரித்தாள். “உன்னை முறைச்சுப் பார்க்காம எவனாச்சும் பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டுப் போனான்னா, அவன் ஆம்பளையே இல்லைன்னு அர்த்தம்!”

சூர்யாவுக்குப் பெருமையும் வெட்கமும் ஒருசேர வந்தன. அன்று சிவப்பு நிற மாருதி காரில் ராஜாதிராஜனுடன் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது கையை வீசிக் காரை நிறுத்தப் பார்த்த ஆள்தான் தண்டபாணி எனும் கமலாவின் காதலன் என்பது இப்போது தெளிவாகிவிட்டதில் அவளுள் ஒரு படபடப்பும் விளைந்தது.

அதே நாளில் அம்மாவுக்கு மருந்து வாங்கப் போன போது எதிர்ப்பட்ட ஆளும் அவனேதான்! இன்னதென்று புரியாத ஒரு பதைபதைப்பு அவள் மனத்தில் எழுந்தது.

ராஜாதிராஜணை ஏற்கெனவே அறிந்தவன் ஒருவனுக்குரிய முகத்துச் சிரிப்புடனும், உரிமை கலந்த அவசரத்துடனும் அவன் காரைப் பார்த்துக் கையாட்டியதும், அது பற்றி ராஜாதிராஜனைத் தான் விசாரித்த போது அவனைத் தனக்குத் தெரியவே தெரியாது என்றும், “ஓசி”ச் சவாரிக்கு அலையும் எவனோ வழிப்போக்கனாயிருக்கும் என்றும் அவன் கூறியதும் அந்தக் கணத்தில் அவளுக்கு நினைவில் நெருடின.

அவள் மனம் ஏனோ சற்றே அமைதியிழந்து போனது. அவளது அடி வயிற்றில் ஏதோ ஒரு கலக்கம் கிளம்பிற்று.

“என்ன யோசனை, சூர்யா?”

தூக்கத்தில் எழுப்பப்பட்டவளுக்குரிய பதற்றத்துடன் தலையைக் குலுக்கிக்கொண்ட சூர்யா, “ ஒண்ணுமில்லே, பவானி! கமலாவையும் அந்தாளைப் பத்தியும்தான் யோசிச்சேன். . அவனோட அயோக்கியத்தனத்துனாலதான் கமலா தூக்குப் போட்டுக்கிட்டான்னா, அவனுக்குக் கடவுள் செமத்தியான தண்டனை தரணும்னு வேண்டிக்கிட்டேன். . ..” என்று சமாளித்தாள்.

“அவனாலதான் அவளுக்கு இப்படி ஆச்சுன்னே வெச்சுக்கிட்டாலும், அதுக்கான தண்டனையைக் கடவுள் அந்தாளுக்குத் தருவார்னே இருந்தாலும், அதனால கமலாவுடைய போன உயிர் திரும்பி வந்துடுமா என்ன?. . .சரி. . . . சூர்யா! நான் சொல்றேனேன்னு எம்மேலே கோவிச்சுக்காதேடி. சட்டுப் புட்டுனு கலியாணத்தைப் பண்ணிக்கிற வழியைப் பாரு. . “

“ அன்னைக்கு என்னடான்னா, தீர விசாரிக்காம அவசரப்பட்டுக் கலியணம் பண்ணிண்டுடாதேங்கிறாப்ல அறிவுரை சொன்னியே? இப்ப என்னடான்னா இப்படிச் சொல்றே?”

“அழகாயிருக்கேல்லே? அதான் பயமாயிருக்குடி, சூர்யா!’

அப்போது காவல்துறை ஆய்வாளர் காலணிகள் ஒலிக்க அந்தப் பிரிவுக்குள் நுழைந்துகொண்டிருந்தார்..


jothigirija@vsnl.net
(தொடரும்)

Series Navigation