மடியில் நெருப்பு – 21

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சில வினாடிகளுக்குப் பேசவே முடியாத அளவுக்கு ராஜாதிராஜனுக்குத் தொண்டை வரண்டு போயிற்று. ஆனால் சுதாரித்துக்கொண்டு இரைச்சலாய்ச் சிரித்தான்.

“இத பாரு, தண்டபாணி. அந்தப் பொண்ணை நான் சின்ன வீடாத்தான் வெச்சுக்கப் போறேன்றதை அது கிட்டவே நான் சொல்லியாச்சு. இதெல்லாம் நிரந்தரமா மறைச்சு வைக்கக்கூடிய விஷயமாப்பா? அதானால எதுக்கு வீண் வம்புன்னு உண்மையைச் சொல்லிட்டேன். அதுவும் அதைப்பத்தித் தனக்குப் பரவாலேன்னு சொல்லிடிச்சு. நீ உன்னால ஆனதைப் பார்த்துக்க ..”

தண்டபாணிக்குப் பேச்சே எழவில்லை.

“அப்புறம், இன்னொண்ணு, தண்டபாணி. சூர்யா பத்தியெல்லாம் இனிமேற்பட்டு ·போன்ல பேசாதே. நேர்ல வந்து பேசு.. ..” – ராஜாதிராஜன் பொட்டென்று ஒலிவாங்கியைக் கிடத்தினான்.

.. .. .. தனது இருக்கைக்குத் திரும்பிய சூர்யாவுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு ராஜாதிராஜனைப் பார்க்க முடியாது என்பது அளவற்ற ஏமாற்றம் அளித்தது. அவள் தன் கையில் இருந்த கோப்பின் ஒரே இடத்தில் கண்களைப் பதித்தவாறு உட்கார்ந்திருந்ததைக் கவனித்த பவானிக்குச் சிரிப்பு வரும் போல் இருந்தது. அடக்கிக்கொண்டு அவளுக்கு அருகே தனது நாற்காலியை நகர்த்திப் போட்டுக்கொண்டு அமர்ந்து தொண்டையைச் செருமினாள்.

சூர்யா தன் எண்ணங்களிலிருந்து விடுபட்டுத் திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

“என்னடி சமாச்சாரம்? அடிக்கடி பெர்மிஷன் போட்டுட்டு வெந்ளியே போறே? யாரு அந்த ஆளு?”

“ஆளா! ஆளுமில்லே, தேளுமில்லே. ·போன் பண்றதுக்காக வெளியிலே போனேன். பதினஞ்சே நிமிஷத்துல திரும்பிட்டேனா இல்லையா?”

“·போன் பண்ணணும்னா ஆ·பீஸ் ·போன்லேருந்து பண்ண வேண்டியதுதானே? எப்பவும் உங்க எதிர் வீட்டுக்குப் பேசறப்பல்லாம் இங்கேருந்துதழ்னேடி பேசுவே? இப்ப என்ன புதுசா ஒரு வழக்கம்?”

“சில குடும்ப விஷயம் பேச வேண்டியிருக்குது. நம்ம ஹெட் க்ளார்க் ·பைலைப் புரட்டிட்டு இருப்பாரே ஒழிய, காது ரெண்டையும் வெடைச்சுக்கிட்டு ஒட்டுக்கேக்குறவருன்னு உனக்குத்தான் தெரியுமே, பவானி! அதான்.”

“அதென்ன புதுசா முளைச்சிருக்கிற குடும்ப விஷயம்? உனக்குன்னு ஒரு குடும்பத்தைத் தேடிக்கப் போற விஷயம்தானே?”

சூர்யாவுக்கு முகம் வெங்காயச் சருகின் வண்ணத்தில் நிறம் மாறிப் போயிற்று.

“சும்மா சமாளிக்காதேடி. நாம கண்ணை மூடிக்கிட்டாலும், மத்தவங்க பார்வை யெல்லாம் நம்ம மேலதாண்டி இருக்குது, எப்பவுமே! அதை மறக்காதே. நீ ஒரு அழகான மன்மதனோட கார்ல முந்தா நாளு போனது யாருக்கும் தெரியாதுன்னு நெனைக்காதே! “

வேறு வழியற்ற நிலையில் சூர்யா தன் சிவந்து விட்ட முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டாள்.

பவானி சிரித்துவிட்டுத் தொடர்ந்தாள்: “ஜோடிப் பொருத்தம் பிரமாதமா யிருக்குன்னு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சுப் பார்த்த ஒரு ஆளு நேத்து ஏங்கிட்ட சொல்லிச்சு.”

சூர்யா தனது இயல்புக்குப் பெருமளவு திரும்பிவிட்டாலும், முகத்துச் சிவப்புக் குறையாத நிலையில், “யாரு எங்களைப் பார்த்தாங்க, பவானி?” என்றாள்.

“அதெதுக்கு உனக்கு? நான் கண்டுபிடிச்ச மாதிரி நீயும் கண்டுபிடி.”

“நம்ம ஆ·பீஸ்காரங்கள்லே யாராச்சுமா?”

“இல்லே. வெளியாளு. “

“ஆம்பளையா, பொம்பளையா?”

“அடுத்து, பேர்களை அடுக்கி, இந்தப் பேரா அந்தப் பேரான்னு கேப்பே போலிருக்கே! யாராயிருந்தா என்ன? அது பொய்யில்லைன்னு உன் மொகம் சொல்லிடிச்சு! எனக்கு வேண்டியது அவ்வளவுதான்.”

சூர்யா பேசாமல் இருந்தாள்.

“எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷம். கார் வெச்சிட்டிருக்கிறவருன்னா, பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையாத்தான் இருக்கணும். எதுக்கும் ஜாக்கிரதையா யிருந்துக்கடி. கூடிய வரையிலே கல்யாணத்தை ஒத்திப்போடு. இதுக்கு இடையிலே அந்த ஆளைப்பத்தி நல்லா விசாரி. நீ கண்கொள்ளா அழகியா யிருக்கிறதால, ஜாக்கிரதையா யிருன்னு சொல்றேன். நான் பேசுறது உனக்குப் பிடிக்கல்லேன்னா சொல்லிடு. ஒதுங்கிக்கிறேன்.”

“சேச்சே! அப்படி யெல்லாம் இல்லே. நானே உங்கிட்ட சொல்றதாத்தான் இருந்தேன். ஆனா இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுச் சொல்லலாம்னு இருந்தேன், பவானி.”

“ ஆளு யாரு, என்னன்னு விவரங்கள் சொன்னா, நானும் எங்க வீட்டுக்காரர் மூலமா விசாரிச்சுப் பார்க்கறேன். உன் மேல உள்ள அக்கறைதான். வம்புக்கு அலையல்லே, சூர்யா. தப்பா எடுத்துக்கல்லேதானே?”

“உண்மையில உன்னோட அக்கறைக்கு நான் நன்றிதான் சொல்லணுமே தவிர, தப்பா எடுத்துக்கிட்டேன்னா, நான் மனுஷியே இல்லே. .. .. நீ சொல்றது சரிதான். ஆனா அவங்க வீட்டில அவங்கப்பா அவசரப்படுவாரு போல. .. ..பெரிய பணக்காரங்கன்றதால அவங்கப்பா ஒத்துக்க மாட்டாருன்னும் சொன்னாரு. ஆனா எப்படியும் பிடிவாதம் பிடிச்சுச் சம்மதம் வாங்கிடுவேன்னிருக்காரு.”

“காரியத்தைச் சாதிச்சாருன்னா சந்தோஷந்தான்.. .. .. என்ன பண்ணிட்டிருக்காரு?”

“அவங்கப்பா பெரிய பிசினெஸ்மேன். இவரும் ஒரு பார்ட்னரா யிருக்காரு.”

“அவரு உனக்கும் பார்ட்னரா ஆகப்போறாருன்னு சொல்லு!”

சூர்யா சிரித்துவிட்டு வேறு ஒன்றும் சொல்லாதிருந்தாள். ‘பெரிய பிசினெஸ்மேன் என்றால் யார், என்ன பிசினெஸ், கம்பெனியின் பெயர் என்ன’என்பதை யெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள பவானிக்குத் துடிப்பாக இருந்தது. ஆனால், சூர்யா சுருக்கமாய் ‘பிசினெஸ்’ என்று சொல்லிவிட்ட பிற்பாடு மேற்கொண்டு என்ன பிசினெஸ் என்று குடைந்து ஆராய்ச்சிக் கேள்விகள் கேட்க அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

“என்னுடைய வாழ்த்துகள்!” என்று ஆங்கிலத்தில் அவளை வாழ்த்திவிட்டு, பவானி நாற்காலியை நகர்த்திக்கொண்டு தன் மேசைக்கு முன் உட்கார்ந்தாள். சூர்யாவின் காதலன் பற்றிய முழு விவரங்களையும் பிறிதொரு சமயம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

அப்போது பியூன் பழநிச்சாமி அவசர நடையில் பிரிவுக்கு வந்து, “நம்ம கமலாம்மா செத்துட்டாங்களாம்!” என்று அறிவித்தான். பிரிவில் இருந்த அனைவரும் தத்தம் வேலையை நிறுத்திவிட்டு விழிகள் விரிய அவனைப் பார்த்தார்கள்.

“என்னப்பா சொல்றே? யாரு சொன்னது உனக்கு? நேத்து கூட கடைத்தெருவில வெச்சுப் பார்த்தேனே! ‘நாளையோட லீவ் முடியுது. ஜாய்ன் பண்ணிடுவேன்’ அப்படின்னு சொல்லிச்சே! “ என்று தமது இருக்கையில் இருந்தபடி ஒரு நம்ப முடியாமையுடன் தலைமை எழுத்தர் கூவினார்.

“நம்ம ஆ·பீசருக்குத்தான் அவங்க தம்பி ·போன் பண்ணி விஷயத்தைச் சொன்னாருங்களாம். உடனே அய்யா எல்லா செக்ஷனுக்கும் போய்ச் சொல்லிடுன்னு என்னை அனுப்பி வெச்சாருங்க. ‘பாடி’யை நாளை காலையிலே பத்து மணிக்கு எடுத்துடுவாங்களாம்.”

தலைமை எழுத்தர் உடனே அலுவலரின் அறைக்குப் புறப்பட்டுப் போனார். ஆண்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் அமர்ந்திருக்க, பவானி கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அழத் தொடங்கினாள். சூர்யாவுக்குக் கமலாவுடன் பழக்கம் இல்லாததால், அழுகை வராவிட்டாலும் வராந்தாவில் சந்திக்க நேரும் போதெல்லாம் ‘குட் மார்னிங்’ சொல்லிப் புன்னகைப் பரிமாற்றம் செய்துகொண்டவர்கள் என்கிற முறையில் அவளுக்கும் கண்கள் கலங்கின.

“அழாதீங்க, பவானி.”

பவானி கண்களைத் துடைத்துக்கொண்டு, “நான் இந்த ஆ·பீசுக்கு வந்த புதுசுலே அவங்கதான் எனக்கு வேலை கத்துக் குடுத்தாங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் அவங்க நல்லவங்கடி, சூர்யா!”

சூர்யா கமலாவைப்பற்றி அரசல் புரசலாய்ச் சில விஷயங்கள் கேள்விப்பட்டிருந்தாள். ‘என்னைப் பொறுத்த வரைக்கும் அவங்க நல்லவங்க தான்’ என்று பவானி சொன்ன சொற்கள் வேறு சிலரைப் பொறுத்த வரையில் அப்படி இல்லை என்பதை உணர்த்தியதைப் புரிந்துகொண்டு சூர்யா அவளை வியப்புடன் ஏறிட்டாள்.

“ஆமாண்டி, சூர்யா. அவளுக்கு அம்மாவும் இல்லே , அப்பாவும் இல்லே. யாரோ சொந்தக்காரங்க வீட்டிலெ வளர்ந்திச்சு. அதுக்குக் கல்யாணம் பண்ணிவைக்க யாரும் முன்வரல்லே. தூரத்து உறவுக்காரப் பொண்ணுகளுக்கெல்லாம் யாரு கல்யாணம் பண்ணி வைப்பாங்க! அவளுக்கு ஒரே தம்பி. காலேஜ்ல படிச்சிட்டிருக்கான். அப்பப்ப அக்காவைப் பார்க்கிறதுக்கு இங்கே வருவான். நீ கூடப் பார்த்திருக்கலாம்.”

“தெரியல்லே.”

அப்போது தலைமை எழுத்தர் திரும்பி வந்தார். “கமலா சாதாரணமாச் சாகல்லையாம். தூக்குப் போட்டுக்கிட்டுச் செத்திருக்குது. அவங்க தம்பி ·போன்ல ஓன்னு அழுதானாம். போலீசெல்லாம் வந்திருக்காங்களாம். நீங்க கொஞ்சம் வந்து பாடி சீக்கிரம் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு கேட்டுக்கிட்டானாம். இப்ப ஆ·பீசர் அங்கே போகப் போறாராம்.”

அவள் தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனாள் என்னும் அதிக்ப்படியான செய்தி அங்கிருந்த எல்லாரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அசாதாரண மவுனத்தில் அனைவரும் ஆழ்ந்தார்கள்.

“நாம ரெண்டு பேரும் நாளைக்குப் போகலாமா, சூர்யா?” என்று கேட்ட பவானிக்குத் தனது ஒப்புதலைத் தலையசைப்பின் மூலம் சூர்யா தெரிவித்தாள்.

“பாவம். செத்துப் போனவளைப் பத்திப் பேசக்கூடாது. ஆனாலும் பேசாம இருக்க முடியல்லே. தண்டபாணி, தண்டபாணின்னு ஒரு போக்கிரியோட தொடர்பு வெச்சிருந்தா. அவனோட மூஞ்சியைப் பார்த்தாலே எனக்கு ஆகாது. ரவுடின்னு நெத்தியிலே எழுதி ஒட்டாத குறைதான். அவ இப்பிடித் தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு அவனே கூட காரண்மாயிருக்கலாம்னு எனக்குத் தோணுது, சூர்யா!” என்ற பவானி தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு எழுந்தாள்.

jothigirija@vsnl.net
– தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா