மடியில் நெருப்பு – 12

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அதே நாளின் விடியற்காலையில், ‘யாரு இப்படிப் பொழுது விடிஞ்சதும் விடியாததுமாக் கூப்பிட்றது’ என்று மனத்துள் சலித்தபடி ராஜாதிராஜன் தொலைபேசியை நெருங்கினான்.

“ஹல்லோ!”

“ராஜாவா?”

“யாருங்க பேசுறது?”

“என்னப்பாது! யாருன்னு கேக்குறே! குரல் தெரியாதபடிக்குத் தூக்கக் கலக்கமா?”

“ஓ! ஐம் சாரி! தண்டபாணியா? ·போன்ல கரகரன்னு ஏதோ சத்தம். அதான் உன் குரல் சரியாக் காதுலே விழல்லே..இப்ப தெரியுது. சொல்லு. என்ன சமாச்சாரம்? விஷயம் இல்லாமே ஆறு மணிக்குக் கூப்பிடமாட்டியே?”

“சரியாச் சொன்னேப்பா!..ஆமா? அதென்ன, நேத்து நான் உன் காரை நிப்பாட்டக் கையை ஆட்டினா, நீ பாட்டுக்கு நிறுத்தாமயே போயிட்டியே? வேணும்னே நிறுத்தாம போன மாதிரியில்லே தெரிஞ்சிச்சு?”.

“….’மாதிரி ‘ இல்லேடா! வேணும்னேதாண்டா நிறுத்தாம போனேன். கார்லே ஒரு பொண்ணு இருந்திச்சு. அதான். நீ கவனிக்கல்லையா?”

“நீதான் கறுப்புக் கண்ணாடியை ஏத்தி வெச்சிருந்தியே! ஆனா, ஒரு ஆளு இருந்தது தெரிஞ்சாலும், அது பொண்ணுன்றது எனக்குத் தெரியல்லே. நான் சரியாக் கவனிக்கல்லே. அதான். நான் எதிர்ப் பக்கமே பார்த்துக்கிட்டிருந்ததாலே முதல்லே உன் கார் வர்றதையே நான் கவனிக்கல்லே. ரொம்பப் பக்கத்துல வந்ததும்தான் பார்த்துட்டுக் கையாட்டினேன். நீ நிறுத்தல்லே… அது இருக்கட்டும், பொண்ணு யாருப்பா? புதுச் சரக்கா? … அப்பா இருக்காரா பக்கத்துலே?”

“இல்லே. ஜாகிங் போயிருக்காரு. இருந்தா, இவ்வளவு ·ப்ரீயாப் பேசுவேனா என்ன?”

“அது சரி, பொண்ணு யாருன்னு கேட்டேனே?”

“நீ காட்டிவிட்ட பொண்ணுதாம்ப்பா. அதான், அந்த சூர்யாப் பொண்ணு. நீ சொன்ன யோசனைப்படியே ஒரு வாரம் போல பஸ் ஸ்டாப்ல இருந்த அதை பார்த்துக்கிட்டே கார்லே போனேன். அப்புறம் ஒரு வசதியான நேரத்திலே, ‘உங்க ஆ·பீஸ்லே ட்ராப் பண்றேன், வாங்க’ன்னு கூப்பிட்டேன். மீன் தூண்டில்லே நல்லாவே சிக்கிடிச்சுப்பா…”

“என்னைக்கு?”

“அட, நேத்துதாம்ப்பா முதல் அடியே எடுத்து வெச்சிருக்கேன்…இன்னைக்கு சாயங்காலம் ·போன் பண்றேன்னிருக்குது. தோதுப்பட்டா இன்னைக்கும் சந்திப்போம்னு நினைக்கிறேன். ஒருக்கா, நெதமும் சந்திக்க வேணாம்னு பத்தினித்தனம் பண்ணுமோ என்னமோ? தெரியல்லே…”

“பொண்ணு டக்கரா இல்லே?”

“ஆமாமா. நீ இது வரையிலே ஏற்பாடு செஞ்ச பொண்ணுகள்லேயே இதுதாம்ப்பா பெஸ்ட்! ஆனா கொஞ்சம் கொஞ்சமா அடியெடுத்துவைக்க வேண்டிய கேஸ்!”

“கல்யாணத்துக்கு முந்தியே தப்புப் பண்ணச் சம்மதிக்கிற ரகமாத் தெரியுதா, எப்படி?…அதாவது, நீ தன்னைக் கல்யாணம் கட்டப் போறதா நம்பித் தப்புப் பண்ணத் தாயாரா இருக்குமா, எப்படின்னு கேக்குறேன்!”

ராஜாதிராஜனின் முகம் இறுகியது. அவன் சில கணங்களுக்குப் பதில் சொல்லாதிருந்தான். அவன் விழிகள் சிவந்துவிட்டன.

“என்னப்பா, பதிலைக் காணோம்?”

“இத பாரு, தண்டபாணி! நோ வல்கர் டாக்! அசிங்கமால்லாம் பேசாதே. அந்தப் பொண்ணை நான் நிஜமாவே கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.”

மறுமுனையில் தண்டபாணி ஏகத்துக்கு அதிர்ந்தான். சில கணங்களுக்கு வாயிழந்து போனான். எனினும் விரைந்து சுதாரித்துக்கொண்டான். “அடிடா சக்கைன்னானாம்! என்ன சொன்னே? நீயே கல்யாணம் பண்ணிக்கப் போறியா! அதெப்படிப்பா? அது நான் காட்டிக்குடுத்த சரக்கு!…அது வழக்கம் போல எனக்கும் சொந்தம்! அதானே நமக்குள்ளே இருக்கிற ஒப்பந்தம்?”

“ஏய்! அளந்து பேசு. நான் அந்தப் பொண்ணைக் கட்டிக்கப்போறேன்னு சொன்னதுக்குப் பெறகும் சரக்கு கிரக்குன்னுட்டு மட்டமான பாஷையிலே பேசுறியே! உனக்கே நல்லாருக்குதா? இனிமேப்பட்டு அந்தப் பொண்ணு விஷயத்துலே மட்டமான வார்த்தையெல்லாம் சொல்லாதே!”

“என்னப்பா, குரலே அதிகாரமா இருக்குது! சரி, சரி. ·போன்லே வேணாம். உன்னோட கம்பெனிக்கு வர்றேன் ஒரு பத்து மணிவாக்கிலே. நாம நேர்லே பேசலாம்.”

“தண்டபாணி! நேத்து நீ கை நீட்டிக் காரை நிறுத்தப் பார்த்தப்போ அந்தப் பொண்ணு உன்னை நல்லாவே கவனிச்சிடுச்சு. உங்களுக்குத் தெரிஞ்ச ஆளான்னிச்சு. இல்லேன்னு சொல்லிட்டேன். அப்புறம் இன்னொண்ணு கூடச் சொல்லிச்சு. உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குனு சொல்லிச்சு.”

“அப்ப, நான் காலரைத் தூக்கிவிட்டுக்கலாம்னு சொல்லு!”

“மறுபடியும் சொல்றேன் – இந்த மாதிரிப் பேச்செல்லாம் வேணாம்.”

”சரிப்பா, பேசல்லே. அதை விடு. ஆனா, தெரிஞ்ச ஆளான்னு அந்தப் பொண்ணு கேட்டப்ப, இல்லேன்னு ஏம்ப்பா பொய் சொன்னே?”

“என்னமோ தெரியல்லே, தண்டபாணி! என்னயும் அறியாம அப்படி ஒரு பொய் என் வாயிலே வந்திடிச்சு..”

மறுமுனையில் தண்டபாணி அட்டகாசமாய்ச் சிரித்தான்: “யாரு கிட்டே புருடா விட்றே? என்னை உன்னோட சம்பந்தப் படுத்திக்க உனக்கு இஷ்டமில்லே. அதான் விஷயம்! நான் அந்தப் பொண்ணோட பேசிப் பழகக் கூடாதுன்றதும் உன்னோட நெனைப்பு. உனக்குத்தான் அதும் மேலே காதல் வந்திரிச்சே!” – தண்டபாணியின் குரலில் எகத்தாளி ததும்பியது.

தான் காட்டிக் கொடுத்த ஓர் அழகான பெண்ணைத் தன்னுடன் பங்கு போட்டுக்கொள்ளச் சம்மதிக்காமல் முழுக்க முழுக்கத் தன்னுடையவளாக்கிக் கொள்ளப் பார்க்கிறானே இவன் என்கிற சினம் அவனது குரலில் ஒலித்த தினுசில் தெற்றெனப் புரிய, அவனை எவ்வாறு சமாளிப்பது எனும் திகிலில் ராஜாதிராஜன் ஆழ்ந்து போனான்.

“தண்டபணி! இத பாரு. அந்தப் பொண்ணை நீதான் காட்டிகுடுத்தே. நான் இல்லேன்னு சொல்லல்லே. ஆனா, அதை நான் கல்யாணம் கட்டப் போறேன். ‘காதல் வந்திரிச்சு’ ன்னு நீ நக்கலடிச்சாலும் அதுதான் உண்மை.”

. “பின்னே சும்மாவா? பொண்ணு சும்மா லட்டு கணக்கால்லே இருக்குது!”

“மறுபடியும் சொல்றேன், நீ இது மாதிரியெல்லாம் பஜார்த்தனமால்லாம் பேசாதே! ஆமா!”

“நான் இப்ப என்னப்பா பஜார்த்தனமாப் பேசிட்டேன்! லட்டுன்றது கெட்ட வார்த்தையா என்ன?”

ராஜாதிராஜன் வெகு சிரமப்பட்டுத் தன் ஆத்திரத்தை யடக்கிக்கொண்டான். “ஒரு நண்பனோட வருங்கால மனைவியை கண்ணியமான மனுஷன் இப்படி யெல்லாம் வர்ணிக்க மாட்டாம்ப்பா!”

தண்டபாணி ‘ஓ’என்று பெருங்குரலில் நகைத்தான். “என்னது! என்ன சொன்னே? மறுபடியும் சொல்லு?…கண்ணியமா! அப்படி ஒரு வார்த்தை அகரதியிலே இருக்கிற விஷயமே நம்ம ரென்டு பேருக்கும் இதுநாள் வரையிலே தெரியாதேப்பா? இப்ப என்ன, திடீர்னு புதுசாக் கத்துக்கச் சொல்றே? வருமா என்ன!”

“நண்பன் விஷயம்கிறப்போ கண்டிப்பா வரும். வரணும்! நீ கட்டிக்கப் போற பொண்ணு பத்தி நான் கண்ணியமாப் பேசணும்னு நினைப்பேயில்லே? அதே மாதிரிதான்.”

“எனக்கு அப்படிப்பட்ட செண்டிமெண்ட்டெல்லாம் கிடையாதுப்பா. பணம் கிடைக்கும்னா பொண்டாட்டியைக் கூட வித்துடுவேன்! எனக்கு எல்லாப் பொண்ணுங்களுமே சமம்தாம்ப்பா!”

ராஜாதிராஜனுக்குச் சே என்று வந்தது. இருப்பினும், காரியம் கருதிக் குரலில் ஒரு மென்மையை வரவழைத்துக்கொண்டான்: “இத பாருப்பா, தண்டபாணி! நாம ரெண்டு பேரும் அஞ்சு வருஷமா இந்த சைட் பிஸினெஸ் பண்ணிட்டு இருக்குறோம். பண விஷயத்துலே நான் உங்கிட்ட கணக்குப் பார்க்காம எவ்வளவோ விட்டுக் குடுத்திருக்கேன். இப்பவும், இந்தப் பொண்ணுக்காக நான் உனக்குச் சில ஆயிரங்களைத் தர்றதுக்குத் தயாரா யிருக்கேன். நம்ம தொழிலுக்கு வேற எத்தனையோ பொண்ணுங்க கிடைப்பாங்க. இவளை விட்றுப்பா, தண்டபாணி.”

மறுமுனையில் சற்று நேரம் போல் மவுனம் நிலவியது.

“என்னப்பா யோசனை பண்றே, தண்டபாணி?”

“எவ்வளவு தொகை கேக்கலாம்னுதான்.”

“எரியிற வீட்டிலே பிடுங்கினது ஆதாயம்னு எக்கச்சக்கமா கேட்டுடாதேப்பா. இந்தத் தொழிலை நாம தொடர்ந்து செய்யிறப்போ எங்கிட்டேருந்து பணம் கறக்க இன்னும் எத்தினியோ வாய்ப்பு இருக்கு உனக்கு. இப்போதைக்கு ஒரு தொகையை வாங்கிக்க. பெறகு பார்ப்போம்.”

“அம்பதாயிரம் குடுத்துடு – முத தவணையா.”

“என்னது! அம்பதா! அதுவும் முதல் தவணையாவா! என்னப்பா இது! பகல் கொள்ளையா இருக்கு? பத்து வாங்கிக்கப்பா! ஏன்னா அந்தப் பொண்ணோட குடும்பத்துக்குப் பணம் குடுத்துத்தான் நான் அதை விலைக்கு வாங்கணும். அது ஒண்ணுதானே அவங்க குடும்பத்திலே இப்ப சம்பாதிக்குது?”

“என்னப்பா பேத்தறே! ஆம்பளை, நீ வாதட்சிணை குடுக்கப்போறியா! கிழிஞ்சுது, போ!”

“வேற வழியில்லே, தண்டபாணி. அதனோட சம்பாத்தியம் போயிடுமில்லே? அதுலதானே அந்தக் குடும்பம் வாழ்ந்துக்கிட்டிருக்குது?”

பேசிக்கொண்டே தற்செயலாய்த் திரும்பிய ராஜாதிராஜன் வெலவெலத்துப் போனான். அறை வாயிலில் ஜகந்நாதன் நின்றுகொண்டிருந்தார்.

‘எப்ப வந்தாரு? என் பேச்சை எந்த இடத்துலேர்ந்து கேட்டிருப்பாரு?’

தொண்டை ஈரம் வற்ற, தன் விரிந்த விழிகளில் அச்சம் தெரிய, அவன் அவரைப் பார்த்தபடி எழுந்து நின்றான்.

jothigirija@vsnl.net
– தொடரும்

Series Navigation