மஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

திராவிடன்


திராவிடனாகிய நான் எழுதியது: தமிழ்நாட்டில் அரசாங்க ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பார்ப்பனர் இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும்(ஆரியர் இனத்துக்கும் திராவிடர் இனத்துக்கும்) வெவ்வேறான அளவுகோல்கள் 2 ஆயிரம்காலமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது…

லேப் டாப் காலத்தில் கூட காஞ்சிபுரம் சங்கரமட நிர்வாகத்தின் கீழான கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்- பார்ப்பனரால்லாத மாணவர்களுக்குத் தனித்தனி விடுதிகளை அமைத்துள்ளதும் ‘இன வேறுபாடு- இன வெறித்தனம் தானே ‘….

ம.ந. பதில்: ஆமாம். பிராமணர்களுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வெறு அளவு கோல்கள் வைத்திருப்பது இனவெறி தான். ஆனால் இந்த பரந்த பாகுபாடு மட்டுமல்லாமல்,

ஒவ்வொரு சாதிக்கும் ஒரு படி நிலை கற்பிக்கப் பட்டிருக்கிறது. தன் படி நிலையைப் பெரிதும் போற்றி, தனக்குக் கீழே இருப்பதாய் பிராமணீயம் கற்பித்த பொய்யை அப்படியே விழுங்கிப் பிரதிபலிக்கிற மற்ற மேல் சாதியினரின் இனவாதம், சாதீயம் பற்றி ஏன் உங்களைப் போன்றவர்கள் மெளனம் சாதிக்கிறீர்கள் ?

இரட்டை கிளாஸினை எதிர்த்து எந்த ஊரில் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியிருக்கிறது ?

இந்த விடுதிகள் தவிர்த்து வேறு எந்த சாதியினர் நடத்தும் விடுதியிலும் இது போன்ற நடைமுறை இல்லை என்று நிச்சயமாய் உங்களால் சொல்ல முடியுமா ?

இந்த விடுதி அரசாங்க உதவி பெறுகிறதா அல்லது பிராமணர்கள் அமைத்த ட்ரஸ்டினால் நடைபெறுகிறதா ? விடுதிகளில் இப்படிப் பட்ட பிரிவினைகளுக்குப் பல உதாரணங்கள் உண்டு.

நகரத்தார்கள் , விஸ்வகர்மாக்கள் போன்ற பல சாதியினர் பல இடங்களில் விடுதிகள் நடத்துவதுண்டு அங்கு மற்ற சாதியினருக்கு அனுமதி இல்லை.

உதாரணமாக, திராவிடர் கழகம் பிராமணர்களை அங்கத்தினராய் அனுமதிப்பதில்லை என்பதும் ஓர் இனவாதமா ?

திராவிடனாகிய எனது பதில்:

தோழர் ம.ந. குறிப்பிடுவது போல் ‘பிராமணீயம் கற்பித்த பொய்யை அப்படியே விழுங்கிப் பிரதிபலிக்கிற ‘ போக்கு 2 ஆயிரம் காலத்துக்கும் கூடுதலானது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே ‘பிராமணீயம் கற்பித்த பொய்யை விழுங்கிப் பிரதிபலித்த ‘ கொடூரத்தை அழித்து தகர்க்கவே தந்தை பெரியார் களம் அமைத்தார்.

பெரியாரியப் பார்வையிலான தமிழ்த் தேசிய பார்வை என்பது

சமூக விடுதலை- பெண் விடுதலை- அரசியல் விடுதலை

* கலாசாரத்தால்- மொழியால்- ஒரே நிலப்பரப்பில் வாழும் திராவிடர் மரபினத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசிய இன மக்களுக்கு இடையே கற்பிதம் செய்யப்பட்ட- ம.ந வரிகளில் சொல்வோமே..

‘பிராமணீயம் கற்பித்த பொய்களால் ‘ சக்கிலியனாக-பறையனாக-பள்ளனாக-நகரத்தாராக-தேவராக-தேவேந்திரகுல வேளாளராக- பிளவுபட்டு நிற்கும் தமிழ்ச் சமூகத்தினர் ஒரே இன மக்கள் என்பதற்கான ‘சமூக விடுதலை ‘ப் போராட்டம்.

* தமிழ்ச் சமூகத்தின் சரிபகுதியினராகிய பெண்கள் மீதான அடிமைச் சுமைகள் தகர்ப்பு-

* இத்தகைய சமூக விடுதலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அரசியல் விடுதலை

இவைகள்தான்.

இந்த லட்சியங்களுக்காக வரையறுக்கப்பட்ட செயல்திட்டங்கள்- நடைமுறைகளில் முதன்மையானது ‘பறையர் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது ‘ என்ற அடிப்படை.

தமிழ்ச் சமூகத்தில் ‘பிராமணீயம் கற்பித்த பொய்யால் ‘ கீழ் நிலை மக்களாக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் விடுதலையால்தான் தமிழ்ச் சமூக விடுதலை சாத்தியமாகும் என்பதே பெரியாரியம்.

ம. ந. எழுப்பியுள்ள கேள்வி:

‘பிராமணீயம் கற்பித்த பொய்யை அப்படியே விழுங்கிப் பிரதிபலிக்கிற மற்ற மேல் சாதியினரின் இனவாதம். சாதீயம் பற்றி ஏன் உங்களைப் போன்றவர்கள் மெளனம் சாதிக்கிறீர்கள் ? ‘ இந்த விடுதிகள் தவிர்த்து வேறு எந்த சாதியினர் நடத்தும் விடுதியிலும் இது போன்ற நடைமுறை இல்லை என்று நிச்சயமாய் உங்களால் சொல்ல முடியுமா ?

இந்த விடுதி அரசாங்க உதவி பெறுகிறதா அல்லது பிராமணர்கள் அமைத்த ட்ரஸ்டினால் நடைபெறுகிறதா ? விடுதிகளில் இப்படிப் பட்ட பிரிவினைகளுக்குப் பல உதாரணங்கள் உண்டு.

நகரத்தார்கள் , விஸ்வகர்மாக்கள் போன்ற பல சாதியினர் பல இடங்களில் விடுதிகள் நடத்துவதுண்டு அங்கு மற்ற சாதியினருக்கு அனுமதி இல்லை.

பதில்:

நண்பரே….

உங்கள் கருத்துப்படியான ‘மேல் சாதியினரின் இனவாதம், சாதீயம் என்பது பிராமணீயம் கற்பித்த பொய் ‘ என்பதற்குள்ளேயே இவை அனைத்தும் அடங்கும்.

அப்படியிருக்கும் போது மூலத்தை தகர்க்கத்தானே நாம் யுத்தம் நடத்தவேண்டியிருக்கும்…

மேல்சாதி என்பதே இல்லை- எல்லோரும் தமிழ்ச் சாதி மக்கள்–

‘உனது சூத்திரப்பட்டம் போகவேண்டுமானால் பறையன் பட்டம் போகவேண்டும் ‘ என்று அறைகூவல் விடுக்கிறது பெரியாரியம்.

ம. ந. எழுப்பிய கேள்வி: ‘இரட்டை கிளாஸினை எதிர்த்து எந்த ஊரில் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியிருக்கிறது ? ‘ – ம. ந. அவர்களே

பதில்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தொடக்க விழா மாநாட்டு உறுதிமொழியையும் உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடையும் ஒருமுறை படிக்கவும்(தேடிப்பாருங்கள்)

பார்ப்பனீயக் கோட்டையாகக் கருதப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்- சென்னை அய்.அய்.டி.யில் தமிழர்களுக்கு குறிப்பாக ஆதி திராவிடர்களுக்காக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்காக குரல் கொடுத்து வந்தது விடுதலை க. ராசேந்திரன் தலைமையில் இயங்கிய நேற்றைய பெரியார் திராவிடர் கழகம்- இன்றைய தந்தை பெரியார் திராவிடர் கழகத்துடன் இணைந்துள்ளது.

இன்று ஆதி திராவிடர் இயக்கங்களாக நடைமுறையில் இயங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய இயக்கங்களின் நட்பு சக்தியாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்றளவும் இருக்கிறது…

புதிய தமிழகத்தின் மாநாடு ஒன்றில் பங்கேற்ற காரணத்துக்காக திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சரசுவதி அவர்கள் அரசின் இன்றளவுக்கும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்றைய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பெரும்பகுதி சென்னை, பழனி தோழர்கள் ‘ஆதிதிராவிடர் ‘ என்றழைக்கப்படும் சமூகத்தினரே…

ம. ந. ‘திராவிடர் கழகம் பிராமணர்களை அங்கத்தினராய் அனுமதிப்பதில்லை என்பதும் ஓர் இனவாதமா ? ‘

தன்னை ஆரியர் என்றும் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும் எங்களுக்கு கீழ் நிலையிலானவர்கள் நீங்கள் என்றும் மண்ணின் மைந்தர்களான திராவிடர்களை மூளை அடிமைகளாக்கிய எங்களது எதிரிகளை எங்களது விடுதலை இயக்கத்தில் நாங்கள் எப்படி அனுமதிப்போம் ?

3. 97 விழுக்காட்டு திராவிடர் இனத்தவர்கள் தங்களது கல்வி, வேலை வாய்ப்பில் 69 விழுக்காடு கூட பெறுவதை 3 விழுக்காட்டு பார்ப்பனர்கள் அரசியல் அதிகாரத்தின் பெயரால் ஒடுக்கி வருவது இனவெறித்தனம் தானே… இந்திய அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாத திராவிடர் இனத்தவர் மற்றும் இதர இனத்தவர்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வெறும் 27 விழுக்காட்டை கூட அனுமதிக்காத ‘பார்ப்பனர் போராட்டம் ‘ இனவெறித்தனம் தானே…

ம.ந. பதில்: இந்தப் போராட்டத்தில் பிராமணர்கள் மட்டும் தான் இருக்கிறார்களா ? மற்ற மேல்சாதிக் காரர்கள் இல்லையா ?

திராவிடன் கருத்து: மேல்சாதிக்காரர்கள் என்றழைக்கப்படுவோர் அந்த போராட்டத்தில் இருந்திருக்கலாம். வாய்ப்புகள் உண்டு.

அதற்குக் காரணம் ‘பிராமணீயம் கற்பித்த பொய்யை அப்படியே விழுங்கிப் பிரதிபலிக்கிற ‘ அடிமைத்தனம் தானே… எந்த ஒரு பிரச்சனைக்கும் எய்தவனைத்தான் நோகவேண்டுமே தவிர அம்பையா நோவது….

4. இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின்(இந்திய கூட்டரசின் அரசியல் சாசனமே ஒத்துக்கொண்ட வரிதான்) கலாசார-மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய அம்சங்களையும் பறித்து – ஒடுக்கி அவற்றை மயானத்தில் புதைத்துவிட்டு ‘இந்திய தேசியம் ‘ என்ற புதிய தேசிய கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கும் ‘இந்திய கூட்டரசு ‘ என்பது இனவாத அரசுதானே…

வரலாறு ஏற்றுக்கொண்ட முன் தோன்றிய மூத்த திராவிடர் மரபினத்தின் மூலவர்களான தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இந்திய பார்ப்பன இனவாத அரசின் ஒடுக்குமுறை இனவெறி தானே….

இசுரேலியத்தின் சியோனிசக் கோட்பாட்டை ஆதரித்து நிற்கும் அமெரிக்காவை சாடும் நண்பர்களே….. தமிழ்த் தேசிய இனம், ஆந்திரத் தேசிய இனம், கன்னட தேசிய இனம், காசுமீரத் தேசிய இனம் மற்றுமுள்ள இந்திய துணைக்கண்டத்தின் தேசிய இனங்கள் அனைத்தையும் தீவிரவாதிகளாகச் சித்தாஞ்க்கும் ‘இந்தியா ‘ என்ற கூட்டரசு நாடு ஒரு இனவாதக் கோட்பாடு நாடுதானே..

ம. ந. பதில்:

இனவாதத்தை அறிவியல் எப்போதோ தூக்கியெறிந்து விட்டது.

தேசீய இனங்களின் பகுப்பையும் மானுடவியல் ஒப்புக் கொள்வதில்லை. உதாரணமாக அமெரிக்க தேசிய இனம் என்று ஒன்று உண்டா ? நிச்சயமாக இல்லை. கனடாவில் இரண்டு மொழிகள் புழங்குகின்றன. கனடிய தேசிய இனம் என்று ஒன்று உண்டா ? அமெரிக்காவின் வரலாறு 300 ஆண்டுகளுக்குச் சற்று மேல் தான் என்பதால் நாம் ஒரு தேசம் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள சிறந்த உதாரணமாய் இருக்கும். பலவேறு மொழி பேசுவோர் , பலவேறு பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள் இணைந்து ஒரு தேசத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்திய தேசப் பற்று இனவாதம், தமிழ் தேசப் பற்று இனவாதமில்லை என்ற வாதம் அடிப்படையில் கோளாறான வாதம்.

கூட்டரசு எப்படி இனவாத அரசாக முடியும் ? ஜனநாயக முனைப்புகள் தீவிரம் பெறப் பெற , எல்லா விதமான மக்களும் தமக்குரிய இடம் பெறுவதற்கான வழிவகைகள் கூட்டாட்சியில் தான் இருக்குமே தவிர தனியாட்சி என்ற ஜனநாயக விரோத பாசிஸக் கருத்தில் உருவாகிற தேசங்களில் இல்லை என்பது கடந்த 100 வருடங்களில் மீண்டும் மீண்டும் பலவாறாய் வரலாற்றில் தெரிகிறது.

மதம் தேசியத்தின் அடிப்படை என்ற விஷமத் தனமான பிரசாரத்தினால் பிளவுண்ட பாகிஸ்தான் எங்கே போய் நிற்கிறது ? சிறுபான்மை மக்கள் சுத்தமாக இல்லாத படி அனைவரும் அச்சுறுத்தப் பட்டி நிற்கின்றனர்.

உருது மொழியை கிழக்கு வங்க மக்களின் மீது திணித்து அதனால் பிளவுண்டு கிடக்கிறது.

இஸ்லாமியப் படைகள் இஸ்லாமிய மக்களை கொலைவெறித்தனமாய்க் கொன்று குவித்தன. 50 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் ராணுவ ஆட்சி தான் அங்கே.

யூகோஸ்லேவியா மூன்று நாடுகளாய்ப் பிளவுண்டதன் பின்பு என்ன நடந்தது ? செர்பியாவும் கோசோவோவும் அடித்துக் கொண்டன.

தமிழ் நாட்டின் மக்கள் பெரியாரின் சமத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட போதே அவருடைய கருத்துகளுக்குச் செவி சாய்த்துக் கேட்கத் தயாராய் இருந்த போதும் கூட , தனித் தமிழ்நாடு கொள்கைக்கு ஆதரவை அளித்ததே இல்லை.

அதில்லாமல், பார்ப்பன எதிர்ப்பை வேலை முன்னுரிமையைப் பெறும் உபாயமாய்ப் பயன் படுத்திக் கொண்ட போதிலும், கலாசார ரீதியாக பிராமணத்துவதுடன் தன் உறவைத் துண்டித்துக் கொள்ளவில்லை.

சுயமரியாதைத் திருமணங்கள் மேடையில் உரக்க பெரியாருக்கு அஞ்சலி செலுத்தின போதும்,– அந்த அளவிற்கு இவை முக்கியமான நிகழ்வுகள் என்று தான் நான் கருதுகிறேன் — திருமணத்திற்கு முதல் நாளும், அடுத்த நாளும் சடங்குகளை பெரும்பாலும் விட்டொழிக்கவும் இல்லை. இந்து மதம் ஒழிய வேண்டும் என்றும், இந்து என்று சொல்லாதே இழிவைத் தேடிக் கொள்ளாதே என்றும் உரத்துப் பேசின திராவிடர் கழகம், இந்து என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எங்கள் கதவுகள் திறந்திருக்காது என்றோ, இந்துப் பெயர்கள் கொண்டவர்களை நாங்கள் எங்கள் உறுப்பினராய் ஆக்கைக் கொள்ள மாட்டோம் என்று எப்பொழுதாவது தெரிவித்தது உண்டா ?

எத்தனை தி முக – அ தி மு க – திராவிடர் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் இந்து மதத்தினை விட்டொழித்து விட்டு இஸ்லாமிற்கு மாறினார்கள் ? கிறுஸ்தவர்களாய் ஆனார்கள் ? நான் தான் மதமற்றவன், நாத்திகன் என்று இவர்களுக்கு நொண்டிச்சாக்கு இருக்கும் பட்சத்தில், மத நம்பிக்கை இருக்கிற தம் அம்மா, மனைவி, மக்களை இந்த அசிங்கமான ‘இந்து ‘ என்ற இழிவான பதத்திலிருந்தும் , மதத்திலிருந்தும் மீட்டு ஏன் முஸ்லீம்களாய் ஆக்க வில்ல ? இது என்ன போலித்தனம் ? எனக்குத் தெரிந்து திராவிட இயக்கத்தினரில், முரசொலி அடியார் என்ற ஒருவர்தான் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் பெரியார் பாதையில் சென்றதனால் இஸ்லாத்தைத் தழுவினாரா அல்லது இஸ்லாமிய மார்க்கத்தைப் பயின்றபின்பு அதன் நெறிகளால் கவரப் பட்டு மாறினாரா என்று எனக்குத் தெரியாது ? தெரிந்தவர்கள் சொல்லலாம்.

பெரியாரின் இயக்கத்தை விமர்சிக்கிற முதல் ஆள் நானல்ல. கடைசி ஆளாகவும் நான் இருக்கப் போவதில்லை. ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்தில் இருந்ததன் பின்பு தான் கம்யூனிஸ்ட் ஆனார். அண்ணா திராவிடர் இயக்கத்திலிருந்து பிரிந்ததும் கூட ஒரு வகையில் விமர்சனம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியும் இன்றைய நிலையில் பா ஜ கவுடன் கூட்டுச் சேர்வதும் கூட , ஒரு வகையில் சந்தர்ப்ப வாதம் என்றால் இன்னொரு வகையில் மாறிவரும் அரசியல் யதார்த்தத்திற்கான அங்கீகாரம் என்று கொள்ள வேண்டும்.

பெரியார் இறந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகி விட்டன. கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக் காலம் இது. இந்த இடைவெளளியில் ஒரு தெலுங்கரும், ஒரு கன்னடியரும் பிரதமர் ஆகியுள்ளனர்.

மத்திய அரசின் முக்கிய இடங்களில் வேறு வேறு மாநிலங்களின் குரல்கள் ஒலிக்கின்றன. ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர் குடியரசுத் தலைவர் ஆகியிருக்க்கிறார். இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் ஒரு முஸ்லிம் தொழில் வல்லுனரின் பெயர் முன்னணியில் நிற்கிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் முடிவு பெற்ற விஷயம் என்று ஒன்றும் இல்லை.

இந்தமாதிரி கிடைக்கிற பலன்களை விரிவு படுத்திக் கொண்டே செல்லத் தான் வேண்டும்.

தமிழ்த் தேசிய இனம் என்று ஒன்றும் இல்லை. மதுரையில் செளராஷ்டிரர்களும், நாகர்கோவிலில் மலையாளப் பாதிப்புப் பெற்ற தமிழர்களும்,கிருஷ்ணகிரி பகுதியில் கன்னடியர்களும், சென்னையில் தெலுங்கர்களும், ஆர்க்காட்டிலும், கீழக்கரையில் முஸ்லீம்கள், கன்யாகுமரியில் கிறுஸ்தவர்கள் என்று பலவாறாய்ப் பல நிறங்களையும், பலக் கலாசாரக் குணங்களையும் கொண்ட சமூகக் குழு நம்முடையது என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு – இணைந்து தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ள உருவாக்கப் பட்ட அமைப்பு தான் தேசமே தவிர இதன் மீது பெரிதும் உணர்வு பூர்வமாய் விஷத்தைக் கொட்டிப் பரப்பி மக்களைப் பிரிப்பது ஓர் அர்த்தமற்ற செயல். எது தமிழ்ப் பண்பாடு ? அல்லது தேசிய குணம் ? திருப்பூரில் ஜட்டி தொழிற்சாலைகள் மூடப் படுமா ? கோவணம் தானே நம் தமிழ்ப் பண்பாடு ? வேட்டி கட்டுவது தான் தமிழர் தேசீய உடை ஆக்கப்படுமா ? தட்டுச் சுற்றா ? பஞ்சகச்சமா ?( இப்படியெல்லாம் ஆகாது என்று சொல்லாதீர்கள் .தமிழ் வாத்தியார்கள் நடத்தும் பள்ளிகள் , கல்லூரிகள் சிலவற்றில் ஜீன்ஸ், சல்வார் கமீஸ் அணியத் தடை உண்டு என்பது எனக்குத் தெரியும். அப்படிப் பட்ட குறுகிய மனத்தவரின் தத்துவம் தானே இந்த தமிழ்த் தேசியப் பிரிவினை.)

பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்தது போல, ஆற்காட்டில் முஸ்லீம்களுக்குத் தனி நாடு தருவார்களா இவர்கள் ? மதுரையில் செளராஷ்டிர நாடு ? இப்படியெல்லாம் சிந்திக்காமல் பொத்தாம் பொதுவாய் தமிழ்த் தேசிய இனம் என்று மக்களைத் தூண்டி விடுவது நாணயமற்ற செயல்..

தேசபக்தி என்பது ஒரு கசடான சொல்லாக்கம். அது இந்துத்துவம் கற்பிக்கிற இந்திய தேசப் பற்றாயினும், தமிழ்த் தேசியம் கற்பிக்கும் தமிழ் வெறியாயினும்.. இப்படி தேசப் பற்றைக் கற்பித்துத் தான் எதிர்க் குரல்களை நெறிப்பது பாசிசத்தின் குணாம்சம்.தேச பக்தி என்பது குறைபாடான ஒரு தத்துவமே தவிர தேசத் துரோகம் என்பது நிச்சயம் உண்டு. அது தன் அண்டை வீட்டானை அவன் பேசும் மொழி, நிறம், சாதி போன்றவற்றினால் முத்திரையிட்டு ஒதுக்குவதும், அந்த ஒதுக்கலுக்கு நியாயம் கற்பிப்பதும் தான்.

இன்று குழுக்களாக இணைந்து மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பிராமணர்கள் இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் தம் மதிப்பீடுகளை விட்டு விட்டார்கள் என்றோ அதன் மேன்மை பற்றிய பிரமைகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்றோ சொல்ல முடியாது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நம் கிராம சமூகத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாறுதல், இனி வர்ணாசிரமதர்மம் என்பது சமூகத்தின் செல்நெறியாய் இருக்காது என்பதை பிராமணர்கள் உணர்ந்தது தான் என்று சொல்ல வேண்டும். அவர்களில் பலர் சட்டம் கற்றது தற்செயலான காரியம் இல்லை. இந்தச் சமூக விளையாட்டின் விதிகள் மாறிப் போயின என்பதை முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அவர்கள் தாம். அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதற்குக் காரணமும் அது தான்.

இன்று தமிழ் நாட்டின் கிராமங்களில் பிராமணர்கள் இல்லையென்றே சொல்லி விடலாம். அப்படி இருந்தாலும் அவர்கள் கிராமத்தை இயக்கும் நிலையில் இல்லை. இன்று கிராம சமூகத்தினை இயக்கும் சக்திகள் பிராமணரல்லாத மற்ற மேல்சாதிகள் தாம் என்பதற்கு தமிழ்நாட்டில் புழங்கும் ஜாதிக் கட்சிகளே சாட்சி.

இனி சமூக நீதிக்கான போராட்டம் இந்தப் புதிய பிராமணர்களை எதிர்த்துத் தான் என்பது தான் உண்மை. இந்தப் போராட்டத்தில் திராவிடர் இயக்கம் துணைக்கு வராது.

பிராமண எதிர்ப்பு என்ற சட்டகத்திற்கு வெளியே பார்க்கிற சமூகப் பார்வையும், உண்மை உணர்வும் அவர்களுக்கு இல்லை.

பிராமணர்களை விலக்கி வைத்து விட்டு மேல்சாதி மேலாண்மை பெறுவதற்கான ஓர் உபாயமாய் தனி நாடு கோரிக்கையை இவர்கள் கருதுகிறார்கள் போலிருக்கிறது.

திராவிடன் கருத்து:

ம.ந. மேற்சொன்ன பதிலுக்கு விரிவான விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. வரிக்கு வரி விளக்கம் அளிக்கப்பட வேண்டியுள்ளது.

‘தமிழ்த் தேசிய இனம் என்று ஒன்றும் இல்லை ‘ என்கிறார் ம.ந.

ஒரே நிலப்பரப்பில்- ஒரே கலாசாரத்தில்- ஒரே மொழியின் பேரால் – அரசுகளைச் செலுத்தும் ஆற்றல்கொண்டவர்களாக இருப்பவர்கள் தமிழர்கள்.

இது உலகம் ஏற்றுக்கொண்ட தேசிய இன வரையறைக்குள்ளானதுதான்.

1000 மக்கள் தொகை கொண்ட சமூகமும் லட்சம் மக்கள் தொகை கொண்ட சமூகமும் தேசிய இனமாக-தனி நாட்டு மக்களாக உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நிலப்பரப்பில்- ஒரே மொழியால்- ஒரே கலாசாரத்தால்- ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ‘அரசுகளை ‘ நடத்தியவர்கள்- கடல் கடந்து அரசு நடத்தியவர்கள் ஒரு தேசிய இனம்தான்..

‘ஒரு தெலுங்கரும், ஒரு கன்னடியரும் பிரதமர் ஆகியுள்ளனர்.

மத்திய அரசின் முக்கிய இடங்களில் வேறு வேறு மாநிலங்களின் குரல்கள் ஒலிக்கின்றன. ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர் குடியரசுத் தலைவர் ஆகியிருக்க்கிறார். இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் ஒரு முஸ்லிம் தொழில் வல்லுனரின் பெயர் முன்னணியில் நிற்கிறது ‘- என்று

ம.ந. குறிப்பிடுவது போல் தங்களது சமூகத்தின்- தேசிய இனத்தின் குரலை அவர்கள் பிரதிபலிப்பது என்பது மிகக் குறைவான விழுக்காடுதான். அவர்களது பெரும்பான்மைக் குரல் என்பது ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டுவிட்ட ‘தேசிய இனங்களின் உரிமைகளை அபகரித்த ‘ ஒரு அரசின் குரல்தான்.

அது ஆட்டுவித்தால் ஆடும் குரங்குகள் தான் இவர்கள்.

‘பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்தது போல, ஆற்காட்டில் முஸ்லீம்களுக்குத் தனி நாடு தருவார்களா இவர்கள் ? மதுரையில் செளராஷ்டிர நாடு ? இப்படியெல்லாம் சிந்திக்காமல் பொத்தாம் பொதுவாய் தமிழ்த் தேசிய இனம் என்று மக்களைத் தூண்டி விடுவது நாணயமற்ற செயல்.. ‘ என்பது ம.ந. கருத்து.

திராவிடன் கருத்து:

நாணயமற்ற செயல் என்கிற ம.நவே…

தேசிய இன விடுதலையை முன் வைக்கிற சமூகம்- தன்னைப்போல் வேறு நிலப்பரப்பில் பெரும்பான்மை தேசிய இனமாகவும் தன் மண்ணில் சிறுபான்மை தேசிய இனமாகவும் வாழும் இனத்தின் உரிமைகளை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்- அங்கீகரிக்க வேண்டும் என்பதை உணர்ந்தே செயல்படும்…

தமிழ்நாட்டு சவுராஷ்டிரனுக்கும் இந்திய சவுராஷ்டிரனுக்கும்/

தமிழ்நாட்டு யாதவர்களுக்கும் இந்தியா யாதவர்களுக்கும் என்ன கொள்வினை-கொடுப்பினை இருக்கிறது..

இந்த மண்ணில் நேற்று குடியேறி தன் இந்திய சவுராஷ்டிர கலாசாரத்தையும் மொழியையும் விட்டுக்கொடுக்காமல் வாழும் வந்தேறி சவுராஷ்டிரனுக்கும்

தமிழ்ச் சாதிகளில் ஒன்றாக கலந்துவிட்ட சவுராஷ்டிர சமூகத்துக்கும் வேறுபாடு இருக்கிறது… குடியேறிய இந்த சமூகத்தினர் மொழியால்-வாழ்வியலால் தமிழன். தமிழ்த் தேசிய இனம்.

இவர்களில் தமிழ்நாட்டில் தனித் தேசிய இனமாக – தனிநாட்டுக்கான உரிமை பெற்றவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை.

நெல்லையில் சவுராஷ்டிரர்கள் உண்டு. வட தமிழ்நாட்டில் உண்டு… மத்திய தமிழ்நாட்டில் உண்டு.. தமிழ்நாட்டு எல்லைப் பரப்பு முழுவதும் தமிழ்நாட்டு மக்களோடு கலந்து தமிழர்களில் ஒரு பிரிவினராகவே வாழ்கின்றனர்.

தனித்த நிலப்பரப்பில் இவர்கள் எவரும் இல்லை.

விடுதலை பெற்ற எல்லா தேசிய இனங்களுக்கும் சிறுபான்மை தேசிய இனச் சிக்கல் உண்டு.

இல்லை…இல்லை…எங்களுக்கும் தனித்த உரிமை வேண்டும் என்று தமிழ் நாட்டின் ‘எல்லையோரப்பகுதி ‘ வாழ் சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் கோருவார்களேயானால் முதலில் அவர்கள் நடத்த வேண்டியது தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போர் தான்….

அவர்கள் இந்திய அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள தற்போதைய நிலையில் சிறுபான்மைத் தேசிய உரிமையை எதன் அடிப்படையில் எழுப்ப முடியும் ?யாரை நோக்கி எழுப்ப முடியும் ?

தாங்கள் வாழும் வேறு தேசிய நிலப்பரப்பில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் போது – தாங்கள் சார்ந்திருக்கும் பெரும்பான்மைத் தேசிய இனம் விடுதலை பெற்றிருக்கும் நிலையில்- தாங்கள் தனித்த தேசிய இனம்… என்ற உரிமை முழக்கம் எழுப்ப இயலும்- எழும்.

தமிழ்த் தேசிய நிலப்பரப்பில் உள்ள தமிழர்களே இந்திய அரசுக்கு கீழே அடிமைகளாக உள்ளனர்.

தங்களது வாழ்வியல்- கலாசார உரிமைகளை எந்த தேசிய இனத்தையும் சாராத ‘பார்ப்பனர்களும்- ஒரு தேசிய அரசாக இல்லாத இந்திய அரசும் ஒடுக்கிவரும் நிலையில் ‘ சிறுபான்மை தேசிய இனத்தவராக தங்களை கருதிக்கொள்வோரின் உரிமைகளை இந்த தமிழர்கள் எப்படி பறித்திருக்க முடியும் ?

அவர்களும் யாரை எதிர்த்து போர் புரிய வேண்டும் தேசிய இனங்களின் பொதுஎதிரிகளான பார்ப்பனர்கள்-இந்திய அரசை எதிர்த்துத்தானே…

அதே போல்தான் இசுலாமியர்கள் நிலையும்.

இசுலாமியர்களுக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் பொதுஎதிரி பார்ப்பனர்களும் – ‘இந்திய அரசும் ‘ தான்.

தமிழ்நாட்டு இசுலாமியர்களில் பெரும்பகுதியினர் இந்த மண்ணில் தமிழர்களாக வாழ்ந்து பார்ப்பனீயத்தின் கொடூர ஆதிக்கத்துக்கு அஞ்சி இசுலாமியர்களாக மாறியவர்கள்.

அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக முதல்குரல் வருவது பெரியார் பாசறையில்தான்…

கடந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தடா சட்டத்தை நீக்கிவிட்டு ‘பொடா ‘ சட்டத்தை திணித்த போது முதல் அறைகூவல் விடுத்து கூட்டு இயக்கம் ஏற்படுத்து பொடாவை விரட்டியடித்தது திராவிடர் பேரியக்கத்தைச் சேர்ந்த பெரியார் திராவிடர் கழகம் தான்.

இசுலாமியர்களுக்கு எதிரான எல்லாவகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக இசுலாமிய சமூகத்தோடு நட்பு சக்தியாக நின்று குரல்கொடுத்துவருவது தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பு.

ஆதி திராவிடர்கள்- இசுலாமியர்கள்- கிறித்துவர்கள் என்று ஒடுக்கப்படும் அனைத்து தமிழ்ச் சமூக மக்களோடு நட்பு சக்தியாக இயங்கிவரும் இந்த அமைப்புதான் எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுக்கும் நான் கருதுகிறேன்.

தமிழ்த் தேசிய நிலப்பரப்பில் வாழும் இசுலாமியர்கள் மதத்தால் இசுலாமியர்களாக இருந்தாலும் வாழ்வியல்- கலாசாரத்தால் தமிழர்களோடு பிண்ணிப் பிணைந்தவர்கள்.

அவர்களது உரிமையை தமிழ்த் தேசிய விடுதலை கோரும் பெரியாரிய இயக்கம் நிச்சயம் மதிப்பளிக்கும் என்று உறுதியளிக்கும்.

தனது தேசிய இன விடுதலையை வென்றெடுக்கும் காலத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும்.

தேசிய இனவழியிலான விடுதலைப் போராட்டத்தையும் மதவழிப்பட்ட இன விடுதலைப் போராட்டமும் ஒன்றாக இருக்க முடியாது.

தேசிய இனவழியிலான விடுதலைப் போராட்டம் ஒருகட்டத்தில் மதவழியில் விடுதலை பெற்ற அரசுகளுக்கு எதிராகத்தான் நிற்கும்.

இரண்டையும் ஒன்றாக்கிப் பார்ப்பது தேசிய இன விடுதலை குறித்த உங்களது குழப்ப நிலையே..

ம.ந: ‘இன்று குழுக்களாக இணைந்து மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பிராமணர்கள் இல்லை.

ஆனால் தனிப்பட்ட முறையில் தம் மதிப்பீடுகளை விட்டு விட்டார்கள் என்றோ அதன் மேன்மை பற்றிய பிரமைகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்றோ சொல்ல முடியாது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நம் கிராம சமூகத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாறுதல், இனி வர்ணாசிரமதர்மம் என்பது சமூகத்தின் செல்நெறியாய் இருக்காது என்பதை பிராமணர்கள் உணர்ந்தது தான் என்று சொல்ல வேண்டும்.

அவர்களில் பலர் சட்டம் கற்றது தற்செயலான காரியம் இல்லை. இந்தச் சமூக விளையாட்டின் விதிகள் மாறிப் போயின என்பதை முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அவர்கள் தாம். அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதற்குக் காரணமும் அது தான்.

இன்று தமிழ் நாட்டின் கிராமங்களில் பிராமணர்கள் இல்லையென்றே சொல்லி விடலாம். அப்படி இருந்தாலும் அவர்கள் கிராமத்தை இயக்கும் நிலையில் இல்லை. இன்று கிராம சமூகத்தினை இயக்கும் சக்திகள் பிராமணரல்லாத மற்ற மேல்சாதிகள் தாம் என்பதற்கு தமிழ்நாட்டில் புழங்கும் ஜாதிக் கட்சிகளே சாட்சி.

இனி சமூக நீதிக்கான போராட்டம் இந்தப் புதிய பிராமணர்களை எதிர்த்துத் தான் என்பது தான் உண்மை. இந்தப் போராட்டத்தில் திராவிடர் இயக்கம் துணைக்கு வராது.

திராவிடன்: ம.ந. அவர்களே!!கிராமங்களை விட்டு பிராமணர்கள் காலி செய்திருக்கலாம்..தமிழ்நாட்டை விட்டு பிராமணர்கள் ஓடியிருக்கலாம்.

அவர்கள் தமிழ்த் தேசியவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம்..அவர்கள் பூண்டோடுகூட சுவடே தெரியாமல் மண்ணாக்கப்பட்டிருக்கலாம்..

ஆயினும்

‘பிராமணீயம் கற்பித்த பொய்மை ‘ தமிழ்த் தேசிய இனத்திடமிருந்து அழிக்கப்படும்வரையில் போரடவேண்டியது பெரியாரியலை ஏற்றுக்கொண்டோரின் கடமை. தனிப்பட்ட பிராமணர்களுக்கு மட்டுமே எதிரானது அல்ல பெரியார் இயக்கம்.

பிராமண உடல்களை கொன்றுவிட்டாலே எங்களது தமிழ்த் தேசம் விடுதலை பெற்றதாகிவிடாது.

பிராமணீயம் கற்பித்த பொய்மைகள் மண்ணிலிருந்து அகற்றப்படும் நாளே தமிழ்த் தேச விடுதலை நாள்.

பிராமணர்களை அழித்துவிட்டால் தேசம் விடுதலை பெறும் என்று பெரியார் இயக்கம் கொள்கைகொண்டிருந்தால் அது பெரியார் உயிரோடு இருந்தகாலத்திலே நடைபெற்றிருக்கும்.

ம.நா. அவர்களே…பெரியாரின் தனித் தமிழ்நாடு கொள்கைக்கு ஆதரவை அளித்ததே இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள் ?

வசைபாடுவதாக நினைக்க வேண்டாம்… பெரியார் இயக்கத்தின் வரலாறை முழுமையாக படிக்கவும். கடந்த சில இதழ்களுக்கு முன்பு மார்க்சு நூலுக்கு வெளியான மறுப்பில் மதிவாணன் குறிப்பிட்டுள்ளதை பார்க்கவும்.

சாதிக்கட்சியினரே புதிய பிராமணர்கள் என்று கூறும் ம.ந.வே…

காஞ்சி மடத்துக்கு ‘புதிய பிராமணர்கள் ‘ சங்கராச்சாரியாக வரமுடியுமா ?

கோவில் கருவறைக்குள் நுழையமுடியுமா ?

‘புதிய பிராமணர்கள் ‘ 69 விழுக்காட்டுக்குள்தானே அல்லல்பட வேண்டும்…

ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மீது ‘பிராமணீயம் கற்பித்த பொய்களின் ‘ மீது தான் மஞ்சுளா நவநீதனின் ‘புதிய பிராமணர்கள் ‘ வாழ்கின்றனர்….அந்த பொய்மைகளின் விளைவுகளில் தான் புதிய பிராமணர்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளனர்…. எல்லா நிலைகளிலும் இருக்கும் பிராமணீயம் கற்பித்த பொய்யை தகர்ப்பதே பெரியாரியம்.

‘பிராமணர்களை விலக்கி வைத்து விட்டு மேல்சாதி மேலாண்மை பெறுவதற்கான ஓர் உபாயமாய் தனி நாடு கோரிக்கையை இவர்கள் கருதுகிறார்கள் போலிருக்கிறது ‘–ம.ந..

பெரியாரியல் பார்வையில் தனிநாடு கோருபவர்கள் சாதிகளைக் கடந்தவர்கள்..என்பது உண்மை. உங்களது கண்டுபிடிப்பான ‘மேல்சாதி மேலாண்மை ‘க்கான உபாயத்தில் என்றால் பெரியாரியல் பார்வையில் தனிநாடு கோருபவர்கள் எந்த மேல்சாதியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும்.

‘பொத்தாம் பொதுவாய் ‘ சாடல் சரியல்லவே…

‘தேசபக்தி என்பது ஒரு கசடான சொல்லாக்கம். அது இந்துத்துவம் கற்பிக்கிற இந்திய தேசப் பற்றாயினும், தமிழ்த் தேசியம் கற்பிக்கும் தமிழ் வெறியாயினும்.. ‘ என்கிற நண்பரே… இந்துத்துவம் கற்பிப்பது பொய்மையானது…தமிழ்த் தேசியம் கற்பிப்பதாக நீங்கள் கூறுவது தவறானது. தமிழ்த் தேசியம் என்பது யதார்த்தமானது. கூட்டரசு எப்படி இனவாத அரசாக முடியும் ? ஜனநாயக முனைப்புகள் தீவிரம் பெறப் பெற , எல்லா விதமான மக்களும் தமக்குரிய இடம் பெறுவதற்கான வழிவகைகள் கூட்டாட்சியில் தான் இருக்குமே தவிர தனியாட்சி என்ற ஜனநாயக விரோத பாசிசக் கருத்தில் உருவாகிற தேசங்களில் இல்லை என்பது கடந்த 100 வருடங்களில் மீண்டும் மீண்டும் பலவாறாய் வரலாற்றில் தெரிகிறது. ‘ – என்கிற ம.ந…

இந்திய கூட்டரசு என்பது இந்த துணைக்கண்டத்து அனைத்து மக்களும் விரும்பி உருவாக்கிக் கொண்ட கூட்டரசு அல்ல… ராணுவ பலத்தால் உருவாக்கி வைக்கப்பட்ட பிம்பம் அது..

இந்திய நாட்டு விடுதலைக்கு முன்பே இந்திய ஓர்மைக்கு எதிரான குரல்கள் இந்தியாவில் எதிரொலித்ததது என்பதே உண்மை. திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் தனிநாடாக வேண்டும் என்றும் இந்தியாவின் விடுதலை நாளை துக்க நாள் என்று பிரகடனம் செய்ததும் தமிழ்நாட்டு தந்தை பெரியார் தான்.

-திராவிடன், தமிழ்நாடு

Series Navigation

திராவிடன்

திராவிடன்