மக்கள் புழங்கும் மரபுத் தொடர்கள்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

தேவமைந்தன்


காலைப் பொழுது. இதமான குளிர்ந்த காற்று வீசுகிறது. நாலாபுறமிருந்தும் பறவைகளின் ஒலிகள். சுறுசுறுப்பான அன்றாட வாழ்வை அவை தொடங்கிவிட்டன. இயல்பான வாழ்க்கை வாழும் உயிர்கள் அவை. அவற்றைப் போன்றே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த நம் பெரியவர்கள் சிற்றூர்களிலும், சிற்றூர்களிலிருந்து குடிபெயர வேண்டிவந்தோர் நகரங்களிலும் மரபுத் தொடர்களை மிகவும் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். பழமொழி போலல்லாமல் ஒரு மொழிக்கே உரியது மரபுத்தொடர். ‘மோர்’சின் தந்திக் குறியீடு போலத் தமிழில் சொல்ல வரும் பொருளை மிகவும் சுருக்கமாகப் புலப்படுத்துவது மரபுத்தொடர் என்று செறிவாகக் கூறலாம்.

தமிழில் ஆயிரக் கணக்கான மரபுத் தொடர்களும்; பொதுவாக வழங்கும் தொடர்களும்; வட்டாரம் தோறும் – சமூகம் தோறும்
சிறுசிறு வேறுபாட்டுடன் வழங்கும் தொடர்களும் ஆகவும் பலவாக உள்ளன, ஆங்கிலத்தில் Idioms and Phrases என்று மரபுத் தொடர்களைச் சொல்கிறார்கள். அவற்றை Idioms என்ற ஒற்றைச் சொல்லால் குறித்தல் பொருந்தாது.

‘மின்னாம்பூச்சி பறக்கிறது’ என்றால் மின்மினிகள் அதிகமாகப் பறத்தல் என்று பொருள். மனிதர்கள் மிகுதியாக நடமாடாத பாதைகளில்தான் மின்மினிகள் சுதந்திரமாய்ப் பறக்கும். “நாப்பது வருசத்துக்கு முன்னால இதோ இந்த நேரு வீதி’ல இந்த சாயுங்காலத்துல மின்னாம் பூச்சிக(ள்) பறந்துக்கினு இருக்கும். இண்ணைக்குப் பாத்தா எம்மா(ம்) பேரு.. நடக்க எடமில்லாம போயிட்டிருக்காங்க!” என்று ஒரு பெரியவர் சொன்னார்.

‘காத்தா பறக்கறது’ என்பது விரைவையும் சுறுசுறுப்பையும் உணர்த்தும் மரபுத் தொடர். இதைப் போலவே ‘ஆலாப் பறக்கறது’ என்பதை இதே பொருளில் சிற்றூரார் பயன்படுத்துவர். அதை ‘ஆலாவாப் பறக்கறது’ என்று விவரமறிந்த முதியோர் சொல்கின்றனர். ஆலா என்பது அகன்ற உடலை உடையதொரு நீர்ப்பறவையையும், வெள்ளைத் தலையை உடைய கழுகுவகையைச் சார்ந்த கடற்பறவையையும் குறிக்கும்.

‘சில்லந்தட்டிப் போறது’ என்றால் வறுமைக்கு உள்ளாதல் என்று பொருள். ‘சில்லந்தட்டிப் போகிறது’ என்று இதை எழுதினால் போதும். ”சல்லோ பில்லோ’ன்னு இருக்கறது” என்றால் பெண்டிர் சங்கோசமில்லாமல் ஆடவரோடு பழகுதல் என்று பொருள். இது பிரஞ்சுக்காரர் காலத்திய புதுச்சேரியில் உருவானதாக அறிய வந்தேன். புதுச்சேரி பிரான்சுவா மர்த்தேன் வீதியில் வாழும் வயது முதிர்ந்த ‘சொல்தா’[பணிநிறைவு பெற்ற பிரஞ்சு இராணுவ வீரர்] இதைச் சொன்னார்.

‘சிறவுகட்டிப் பறக்கறது’ என்பதை ‘றெக்கைகட்டிப் பறக்கறது’ என்றும் சொல்வார்கள். ‘மிகவும் விரைவாகச் செல்லுதல்’ என்பது இதன் பொருள். ‘றெக்கை கட்டிப் பறக்குதடா அண்ணாமலை சைக்கிள்’ என்று ‘அண்ணாமலை” படத்தில் பாட்டு வந்ததல்லவா?

‘சுக்கு சுக்கா’ என்ற மரபுத்தொடரை ‘சுக்கல் சுக்கலா’ என்று பயன்படுத்துவதும் உண்டு. “ஆசை ஆசையா வாங்கிய பூச்சித்திரம் தீட்டிய சீனத்துப் பீங்கான் தட்டு, நேற்று கீழே விழுந்து சுக்கல் சுக்கலாப் போயிற்று” என்று நேர்பொருளிலும்; “நீ நன்றாகப் படித்து சமூகத்தில் உயர்ந்த மனிதனாக வருவாய் என்றிருந்த என் எதிர்பார்ப்பை சுக்கல் சுக்கல் ஆக்கிவிட்டாயே!” என்று அணிநயத்திலும் இத்தொடர் பயன்படுத்தப் பெறுகிறது.

‘நெல்லிமூட்டை அவிழ்ந்தது போல’ அல்லது ‘நெல்லிக்காமூட்டையை அவிழ்த்தது போல’ என்றும் பயன்படுத்தப் பெறும் மரபுத்தொடர், செயற்கையாக அல்லது நிறுவன ரீதியாக ஒன்றுபடுத்தப்பட்டவர்கள் சிதறிப் பிரிந்து போதலைக் குறிக்கிறது. ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் மூட்டைக்குள் திரண்டு இருக்கும் நெல்லிக்காய்கள், மூட்டை அவிழ்ந்து கவிழ்ந்தால், ஒன்றுகூட எஞ்சாமல் உருண்டோடிப் போகின்றன. அதைப் பார்த்து இத்தொடர் உருவாகியிருக்கலாம்.

‘பொங்கல் வைக்கறது’ என்ற மரபுத்தொடருக்கும் தைப் பொங்கல் திருநாளுக்கும் தொடர்பில்லை. இது வசவு; அது மங்கலம். இதன் பொருள் ‘அழிப்பேன் என்று கறுவுதல்’ ஆகும். பகையானவர்கள் ஒருவருக்கொருவர் “வா! வா! உனக்குப் பொங்கல் வைக்கிறேன்” என்று கறுவிக் கொள்வார்கள்.

மரபுத் தொடர்களைப் பொறுப்பாக நாம் பயன்படுத்த வேண்டும். சான்றுகள் சில. ஒருவருக்கு, எது நன்மை – எது தீமை என்று பகுத்து அறியும் ஆற்றல் ஆகவும் குறைவாக இருக்கிறது. அவரிடம் மருத்துவர், கலப்படமான உணவை உண்ணவேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்பதில்லை. தூய்மையில்லாத துரித உணவு வகைகளை கண்ட இடத்தில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் “வயிற்றை வலிக்கிறதே” என்று மருத்துவரிடம் வருகிறார். அப்பொழுது மருத்துவர் அவரைப் பார்த்து, “என்னப்பா! இரண்டும் கெட்டானாக இருக்கிறாயே! எப்படிச் சொன்னால்தான் உனக்குப் புரியும்?” என்று கேட்கிறார். ‘இரண்டும் கெட்டான்’ என்று அவர் பயன்படுத்தியது – மரபுத்தொடர். இதன் பொருள், ‘நன்மை தீமை அறியாதவன்’ என்பதாகும்.

‘ஈவு இரக்கம்’ என்ற மரபுத்தொடர், மனக்கசிவைக் குறிப்பதாகும். “என்னப்பா? சிறுபிள்ளையைப் போய் ஈவு இரக்கம் இல்லாமல் அடிக்கிறாயே!” என்று தட்டிக் கேட்கிறார்களே, அந்தப் பேச்சில் உள்ள மரபுத் தொடரை எடுத்து விடுவோம். “என்னப்பா, சிறுபிள்ளையைப் போய் அடிக்கிறாயே!” என்றால் முன்பிருந்த கருணை இரக்கம் ஆகிய தொனிகள் விடைபெற்றுப் போய்விடும்.

‘கதை கட்டுதல்’ என்றொரு மரபுத் தொடர் உள்ளது. அதைக் ‘கதைகட்டி விடுதல்’ என்றும் சொல்வதுண்டு. ‘ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றிய பொய்ச் செய்தியைக் கிளப்பிவிட்டு அதைக்கொண்டு ஆதாயம் பார்த்தல்’ என்பது அதற்குப் பொருள். ‘கதை பண்ணுதல்” என்ற தொடருக்கு, ‘இட்டுக்கட்டிப் பேசுதல்’ என்று பொருள். “அந்தத் தோப்பில் பேய் உலவுவதாக சிலர் கதை கட்டி விட்டார்கள்” என்று எழுதவோ பேசவோ செய்வார்கள். சமூக விரோதிகள், தமக்கு எவரும் இடைஞ்சல் கொடுக்காமல் இருக்க, இவ்வாறு ‘கதைகட்டி விடு’வதுண்டு.

ஆசிரியர் தன் மாணவனைப் பார்த்து, “ஏன் வீட்டுப் பாடம் எழுதி வரவில்லை என்று கேட்டால், என்னவெல்லாம் கதை பண்ணுகிறாய்!” என்று கடிந்து கொள்வார். “பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்!’ ‘வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்’ ‘பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்’ என்றெல்லாம் வேலைக்கார்கள் ‘கதை பண்ணுத’லைப் பற்றி பாரதியார் தான் படைத்த ‘கண்ணன் – என் சேவக’னில் குறிப்பிட்டார்.

‘கதை கட்டுதல்’ என்னும் மரபுத் தொடர் வரிசையில் மூன்றாவது, ‘கதை வளர்த்தல்’ என்பதாகும். சொற்பொழிவாளர் ஒருவர் தம் கையில் ‘மைக்’ எனப்படும் ஒலிவாங்கி கிடைத்தது என்பதற்காக அவையினர் பொறுமையை அளவுக்கு மேல் சோதிக்கும் பொழுது, “என்னையா இது? ‘இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லுவார் என்று பார்த்தால், விடாது கதைவளர்த்துக் கொண்டே போகிறாரே!” என்று பேசுவதை நாம் கேட்கும் வாய்ப்பு, கூட்டங்கள் பலவற்றில் இப்பொழுதெல்லாம் ‘நிறைய’வே கிடைக்கிறது.

இன்னும் பொதுவாக மக்கள் புழங்கும் மரபுத் தொடர்கள் சில: [இவற்றில் பலவற்றை “இணைமொழிகள்(Words in Pairs)” என்று ஞா. தேவநேயப் பாவாணர் சொல்லியிருக்கிறார்]

அக்கம் பக்கம்; அகட விகடம்; அடிதண்டம் பிடிதண்டம்; அடிப்பும் அணைப்புமாக; அடுப்பும் துடுப்பும்[துடுப்பு=துழாவு கரண்டி]; அண்டை அயல்; அந்தியும் சந்தியும்; அரதேசி பரதேசி[அகதேசி என்பது அரதேசி என்று ஒலியிணையாக ஆனது]; அரிசி தவசி; அருமை பெருமை; அலுங்கிக் குலுங்கி; அழுத்தம் திருத்தமாய்; அள்ளாடித் தள்ளாடி; ஆழும் பாழும்; ஆளும் தேளும்; ஆயிற்றா போயிற்றா[“ஆச்சா போச்சான்னு அலட்டிக்கினான்” என்று பேச்சு வழக்கில் உள்ளது]; ஆற அமர; ஆனைக்கும் பூனைக்கும்; இசகு பிசகாய்; இண்டும் இடுக்கும்[இடப்பொருள்]; சிண்டும் சிடுக்கும் [பிள்ளைகள்]; இழுப்பும் பறிப்புமாய்; இளைத்துக் களைத்து; இன்னார் இனியார் என்று; உள்ளது உரியதெல்லாம்; எக்கச் சக்கமாய்; எக்காளமும் ஏடாசியுமாய்;
ஏடாகோடம்; ஏறுக்கு மாறு; ஒட்டு உறவு; ஓட்டமும் நடையும்; ஓய்வு சாய்வு; கண்டவன் கடியவனெல்லாம்; கண்டது கடியதெல்லாம்; கணக்கு வழக்கில்லாமல்; கண்ணும் கருத்துமாய்; கலியாணம் காட்சி; காமா சோமா; கன்னா பின்னா; கிண்டிக் கிளறி; குஞ்சுங் குழுவானும்; குண்டக்க மண்டக்கமாய்[“குண்டக்கா மண்டக்கான்னு” என்பது பேச்சு வழக்கு] குத்தலும் குடைச்சலுமாய்; கூட்டம் நாட்டம்; கூட்டிக் குறைத்து; கூட மாட; கையும் களவுமாய்; கொஞ்ச நஞ்சமாவது; கொள்வனை கொடுப்பனை; குளம் குட்டையெல்லாம்; கோள் குண்டுணி; சீத்துப் பூத்தென்று; சொள்ளை சொட்டை; துட்டுத் துக்காணி; தூசி துரும்பு; தோலும் துருத்தியுமாய்; நன்னியும் குன்னியுமாய்[மணிலாப் பயறு]; பிய்த்துப் பிடுங்கி; பூச்சி பொட்டு; பூவும் பிஞ்சுமாய்; பெண்டு பிள்ளைகள்; பெற்றது பிறந்தது[பேச்சு வழக்கில் ‘பெத்தது’ என்பது திட்டமிட்டுப் பிறந்த பிள்ளைகள் என்றும் ‘பொறந்தது’ என்பது எதிர்பாராமல் கருவுற்றுப் பிறந்த பிள்ளைகள் என்றும் பொருள் தருகின்றன]; பொய்யும் புளுகும்[“பொய்யன் புளுவன்” என்பது பேச்சுத் தமிழ்]; மினுக்கித் தளுக்கி[“மினுக்கிப் பிலுக்கி” என்பது பேச்சுத் தமிழ்]; மூலை முடுக்கெல்லாம்; வாய்க்கும் கைக்கும்; விட்டகுறை தொட்டகுறை; வீடும் குடித்தனமுமாய்; வேர்த்து விருவிருத்து; வேலை வெட்டி[“வேலவெட்டி இல்லாதவன்” என்பதில் வேலை சம்பளம் உடையது; வெட்டி என்பது சம்பளமோ கூலியோ இல்லாமல் செய்வது; ‘வெட்டி’ என்ற சொல் பிற்காலத்துச் சோழர் காலத்துச் சொல்].

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation