மக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

அ கா பெருமாள்


6. சோமாண்டி கதை

ஒருநாள் கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவனைத் தேவர்கள் எல்லோரும் கூடி நின்று வணங்கி நின்றபொழுது சிவன் தேவர்களிடம் பெரிய யாகம் ஒன்றை நடத்த ஆணையிட்டார். தேவர்கள் பெரிய யாகக்குழி வெட்டினர். அதில் நெருப்பை வளர்த்து பல்வேறு பொருட்களை அவியாக பெய்து யாகம் செய்தனர்.

அந்த யாகக் குழியிலிருந்து சேத்திரபாலன், சங்கிலிபூதம், ஈஸ்வரபாலன் ஆகிய மூன்று பூதங்களும் பிறந்தனர். குழியிலிருந்து ஆவேசமாக வெளிப்பட்ட பூதஙகளைத் தேவர்கள் அமைதிப்படுத்தினர். அவை நீராட எண்ணெய் கொடுத்தனர். உண்ண உணவு கொடுத்தனர்.

பூதங்கள் மூன்றும் சிவனைத் தொழுது நின்றன. ‘ ‘தேவனே நாங்கள் என்ன செய்யவேண்டும் ‘ ‘ என்று கேட்டன. இறைவன் பூதங்களுக்கு நிறைய வரங்கள் கொடுத்த பிறகு. ‘ ‘திருவரங்கத்தில் குடிகொண்ட அரங்கனிடம் சொல்லுங்கள் பூதங்களே அவர் உங்களை ரட்சிப்பார் ‘ ‘ என்று கூறினார்.

பூதங்கள் மூன்றும் திருவரங்கத்துக்குச் சென்றன. அரங்கனை வழிபட்டு நின்றன. நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டன. அரங்கன் அவர்களிடம் ‘ ‘என்னை நாள்தோறும் வழிபட்டு வந்த மறையவன் ஒருவனை இந்த ஊர் மறையவர்கள் பழித்துவிட்டனர். ஒதுக்கிவிட்டனர். அதனால் நான் என் பக்த மறையவனுடன் இந்த ஊரைவிட்டு குடிபெயர்ந்து திருவனந்தபுரம் செல்லப் போகிறேன். பூதங்கள் நீங்களும் என்னுடன் வரலாம் ‘ ‘ என்றான். பூதங்களும் அரங்கனைப் பணிந்து பின்னே சென்றன.

அரங்கன் சோழ நாட்டைக் கடந்து பாண்டி நாட்டுக்கு வந்தான். அங்கே திருக்குறும்குடி என்னும் ஊரில் குடிகொண்டிருந்த நம்பியைக் கண்டான். பூதங்களிடம் ‘ ‘ பூதங்களே இனி நீங்கள் நம்பிகோவிலில் நிலையாகத் தங்கியிருங்கள் ‘ ‘ என்றான். பூதங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. என்றாலும் அரங்கனின் பேச்சுக்கு இணங்கின. நம்பி கோவிலை அடுத்த மலையில் உள்ள சுனையில் அவை தங்கின.

அங்கே பூதங்கள் நிலையான் இருப்பிடம் இல்லாமல் இருந்தன. ஆகவே ஊர்த்தலைவனின் கனவில் அரங்கன் வந்து, பூதங்களுக்குக் கோவில் கட்டி வழிபாடு செய்யப் பணித்தான். அவனும் அப்படியே பூதங்களை பெரிய கோயில்கட்டுவித்து குடியேற்றி ஒரு முதிய நம்பியானை ஏற்பாடு செய்து வழிபாடு செய்தான். இப்படியே நாட்கள் நகர்ந்தன.

பூதங்களின் கோவிலில் பூசை செய்த முதியவனான நம்பியான் இறந்துவிட்டான். அதனால் அக்கோவிலின் பூசையும் சடங்கும் நின்றன. பூதங்கள் ஊர் மணியக்காரனின் கனவில் தோன்றி ‘ ‘வடநாட்டிலிருந்து சந்தனவாழ் நம்பி என்னும் மறையவன் பஞ்சம் பிழைக்க இவ்வூருக்கு வந்துகொண்டிருக்கிறான். அவனுக்குத் தகுந்த மரியாதைகள் செய்து அழைத்து வருவாய். அவனே எங்கள் கோவிலுக்குப் பூசை செய்யும் தகுதி உடையவன் ஆவான் ‘ ‘ என்றான்.

மணியக்காரனும் வடதிசைநோக்கிச் சென்றபோது வழியில்நடந்து களைத்து வந்த சந்தனவாழ் நம்பியைத் கண்டுபிடித்து தக்க உபசாரங்கள் செய்து திருக்குறுங்குடியில் குடியேற்றினான். அவனை பூதங்களின் கோவிலில் பூசை செய்ய வேண்டினான். சந்தன நம்பி முறைப்படியான பூசைகளைப் பூதங்களின் கோவிலில் செய்துவந்தான். மணியக்காரன் அவனுக்கு வேண்டிய பொருளுதவியையும் செய்து வந்தான்.

இப்படியிருக்கும் நாளில் சந்தனவாழ் நம்பியின் மனைவி சோமாண்டி- பூதங்களின் கோவிலுக்குச் சென்றாள். பூதங்களிடம் ‘ ‘எனக்குத் திருமணம் ஆகி வருடங்கள் பல கடந்துவிட்டன. குழந்தை பிறக்கவில்லை . நீங்கள்தான் எனக்கு ஒரு வழிகாட்டவேண்டும் ‘ ‘ என அழுது முறையிட்டாள்.

பூதங்கள் அவளது குறையைத் திருமாலிடம் சொல்லின. திருமால் பூதங்களிடம் ‘ ‘ நீங்கள் மூவரும் கயிலை சென்று சிவனைத் தொழுது நம்பிக்குக் குழந்தை பாக்கியம் உண்டா எனக் கேட்டு வாருங்கள் ‘ ‘ என்றார். பூதங்களும் கயிலை சென்றன. சிவனைப் பணிந்தன. சோமாண்டிக்குக் குழந்தை பிறக்குமா எனக் கேட்டன. சிவனும் அவளுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கும். ஆனால் ஏழு வயதில் இறந்துவிடும். இதை யாராலும் தடுக்கமுடியாது என்றார்.

ஆகவே பூதங்கள் குழந்தை பிறக்கும் என்ற நற்செய்தியை சோமாண்டிக்கு சொல்லின. அவளும் மிக்க மகிழ்ச்சி அடைந்து பூதங்களுக்கு பூசை செய்து காணிக்கை இட்டாள். குழந்தை ஏழுவயதில் இறந்துவிடும் என்ற செய்தியையும் பூதங்கள் சோமாண்டியிடம் சொல்லின. ஆனால் அவள் மகிழ்ச்சியில் அதை கவனம்கொடுத்துக் கேட்கவில்லை.

சிவன் கூறியிபடியே சோமாண்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நம்பியான் அக்குழந்தையை மிகவும் சீராட்டி வளர்த்தான். ஏழு வயதில் அவன் மாண்டுவிடுவான் என்பதுகூட அவனுக்கு மறந்துவிட்டது. ஒருநாள் குழந்தை நம்பியானுடன் நானும் காட்டுக்கோவிலுக்கு வருவேன் என அடம் பிடித்தான். தந்தையோ அவன் வரக்கூடாது என்றான். அப்போது சோமாண்டியும் வீட்டில் இல்லை. தந்தைக்குத் தெரியாமல் தனயன் பின்னே சென்றான்.

நம்பியான் கோவிலினுள் சென்று தன் காரியத்தைக் கவனிக்க ஆரம்பித்தபோதுதான் குழந்தையைக் கவனித்தான். வேறுவழியில்லாமல்

நம்பி மகனைக் கோவிலின் ஒரு பக்கத்தே அமர்த்திவிட்டு பூசை காரியங்களை முறைப்படிச் செய்தான். குழந்தையின் நினைவின்றி பூதங்களைத் தியானித்தான். பின் பூதங்களை அழைத்துக் கோயில் கதவை அடைக்குமாறு சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றான். குழந்தை உள்ளே இருப்பதை அவன் மறந்துவிட்டான்.

சோமாண்டி கணவனைக் கண்டதும் குழந்தை எங்கே என்று கேட்டாள். அப்போதுதான் நம்பியானுக்குக் குழந்தையின் நினைவு வந்தது. தன் தவறு புரிந்தது. நம்பியான் அழுது புலம்பியபடி காட்டுக்கோவிலுக்கு ஓடினான். ‘ ‘பூதங்களே கதவைத் திறந்துவிடுங்கள். என் குழந்தை கோவிலினுள் இருக்கிறான் ‘ ‘ எனச் சப்தமிட்டான்.

ஆனால் பூதங்கள் கோவில் கதவைத் திறக்கவில்லை. கோவிலின் உள்ளிருந்து பேசின. ‘ ‘நம்பியானே கதவு ஒருநாளைக்கு ஒருமுறைதானே திறக்கம். எக்காரணத்தாலும் நாங்கள் முறையை மீறமுடியாது. இந்த வழக்கம் உனக்குத் தெரியாதா, இன்றைக்குப் போய்விட்டு நாளைக்குக் காலையில் வா ‘ ‘ என்றன. நமபியானும் கோவில் வழக்கம் தெரிந்தவன் ஆதலால் பூதங்களை மீண்டும் வற்புறுத்தாமல் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

நம்பியான் குழந்தையின்றி வீட்டிற்கு வருவதைக் கண்டாள் சோமாண்டி. ‘ ‘ஐயோ என் குமரன் வரவில்லை என்றால் உயிரை விட்டுவிடுவேன். அவன் இல்லாமல் வராதே நீ போ ‘ ‘ என்றாள். நம்பியான் மறுபடியும் காட்டுக்கோவிலுக்குச் சென்றான். பூதங்களை அழைத்தான். ‘ ‘பூதங்களே என் குழந்தை இல்லாமல் நான் வீட்டிற்குச் செல்லமுடியாது. குழந்தை இல்லை என்றால் என் மனைவி உயிரை விட்டுவிடவாள் ‘ ‘ என்றாள். பூதங்களுக்குக் கோபம் வந்தது. ‘ ‘கோவில் வழக்கம் தெரியாத பார்ப்பானே வீணாக இங்கே நிற்காதே. போய்விட்டு நாளை வா ‘ என்றன. நம்பியான் பூதங்களை மீண்டும் வற்புறுத்தினான். அழுது மன்றாடினான்

பூதங்கள் கோபம் கொண்டு ‘ ‘ ஓகோ அப்படியா இக்கோவிலின் தெற்குப்பக்கம் வந்து உன் மேல்துண்டை விரித்துப் பிடி. பாலகனைப் போடுகின்றோம் ‘ ‘ என்றன. நம்பியானும் பூதங்களின் பேச்சை நம்பி கோவிலின் தெற்குப் பக்கம் சென்றான். தன் முந்தானையை விரித்துப் பிடித்தான். சங்கிலிபூதம் கோவில் மதிலின் மேல் ஏறி நின்றுகொண்டு குழந்தையைக் கைவேறு கால்வேறாகப் பிய்த்து எறிந்தது. குழந்தையைப் பிணமாகப் பார்த்த நம்பியான் கதறினான்.

குழந்தை இறந்ததை அறிந்த சோமாண்டி தலையை விரித்துக்கொண்டு காட்டுக்கோவிலுக்குப் போனாள். பூதங்களை அழைத்தாள். ‘ ‘பூதங்களே என் கணவன் உஙகளுக்கு வருந்திப் பூசை செய்தானே இப்படிச் செய்துவிட்டார்களே! ஏய் சங்கிலி பூதமே உன்னைப் பழி வாங்குகிறேன் பார் ‘ ‘ என்று வஞ்சினம் உரைத்தாள்.

சோமாண்டி மைலையில் வாழ்ந்த காளிப்புலையன் என்னும் மந்திரவாதியை அழைத்து சங்கிலிபூதத்தை மந்திரம் செய்து சிமிழில் அடைக்கச் சொன்னாள். அவனுக்கு நிறைய பொன் கொடுத்தாள்.. அவனும் அந்தப்பூதத்தின் சக்தியை கடும்தவம் மூலம் ஒடுக்கி சிமிழில் அடைத்தான்.

சோமாண்டி சிமிழை கோவிலின் வெளியே இருந்த வயலில் புதைத்துவிட்டாள்.

மந்திரவாதியிடம் தப்பிய சேத்திரபால பூதம் தன் மாயத்தால் மழை பெய்ய வைத்தது. உடனே அந்த ஊர் கரையாள மக்கள் வயலில் உழ ஆரம்பித்தனர். ஒரு கரையாளனின் ஏர் ஆழம் பதிந்தபோது சிமிழ் வெளியே வந்தது. மற்ற கரையாளர்கள் சிமிழை எடுத்துப் பார்த்தனர். உடைத்தனர். அதிலிருந்து சங்கிலிபூதம் வெளிப்பட்டது. கரையாளர்களை அடித்தது. பின் காளிப்புலையனையும் சோமாண்டியையும் கொன்றது. பின் பிற இரு பூதங்களுடன் கூடி அந்த ஊரைவிட்டு சென்றது.

—-

Series Navigation