போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

இரா.முருகன்


‘உலகின் பிரதான தீவிரவாதி புஷ்தான். சதாம் உசைன் இல்லை ‘

நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய எழுத்தாளர் குந்தர்கிராஸின் பி.பி.சி பேட்டியோடு பொழுது விடிந்தது.

‘தேவையில்லாத யுத்தம். புஷ் சொல்வது போல் இது நிச்சயமாகச் சிலுவை யுத்தம் இல்லை ‘

இங்கிலாந்தின் புரட்டஸ்ற்றண்ட் கிறித்துவ மதத் தலைவரான கான்ற்றபரி ஆர்ச்பிஷப் பேசியது தொடர்ந்து வந்தது.

ராத்திரியோடு ராத்தியாக எல்லோருக்கும் நல்ல புத்தி வந்து போர் ஓய்ந்து விட்டதா என்ற சந்தோஷமான சந்தேகத்தோடு தேநீர் கொதிக்கக் காத்துக்கொண்டிருந்தபோது அடுத்த செய்தி.

‘பாக்தாத் நகருக்குள் அமெரிக்க – பிரிட்டாஷ் படைகளின் டாங்குகள் புகுந்தன ‘.

எதுவும் மாறப்போவதில்லை. ஏகாதிபத்தியத்தின் கொடூர இறக்கைகள் நீள நெடுக விரிந்து கொண்டிருக்கின்றன. பிணந்தின்னிக் கழுகுகள் ஈராக்கோடு ஓயப்போவதில்லை.

ஈராக் யுத்தம் முடிந்துபோன சங்கதி போல் பேச ஆரம்பித்துவிட்டது அமெரிக்க அரசு.

‘ஈராக்கைப் புனர்நிர்மாணம் செய்யும் பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு எதுவும் இருக்காது ‘

கேண்டாலியா ரைசம்மாள் அவருக்கே உரிய திமிரோடும் புஷ்ஷின் ஆசியோடும் அறிவித்திருக்கிறார்.

பொம்மை அதிபராகப் பதவி ஏற்கத் தயாராக, ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜே கார்னர் வாஷிங்டனில் இருந்து கிளம்பி வந்து குவைத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் உட்கார்ந்து பியர் குடித்துக் கொண்டிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து ‘புனர் நிர்மாணப் ‘ பணிகளுக்காக பெரிய அமெரிக்க கம்பெனிகள் வருவார்கள். அவர்களுக்கு பல மில்லியன் டாலர் காண்ட்ராக்ட்கள் அமெரிக்க அரசால் வழங்கப்பட்டிருக்கிறன. ‘எங்களுக்குக் கிடையாதா ? ‘ என்று பிரிட்டாஷ் கம்பெனிகள் ஓலமிட, ‘சரி, ஒழியுங்க . உங்களுக்கும் கொஞ்சம் கிள்ளிப் போடறோம் ‘ என்று உதிரி காண்ட்ராக்ட்கள்.

‘இங்கே படை நடத்தி வந்து அதிரடியாச் சண்டை போட்டுக் கைப்பற்றினது நாம ரெண்டு நாடுமட்டும்தான். வேறே எந்தத் தாயோளிக்கும் இங்கே கொள்ளையடிக்கக் குத்தகை கிடையாது. முக்கியமா அந்தக் கேடுகெட்ட பிரஞ்சு, ஜெர்மானியனுங்க ‘

முப்பத்தைந்து மில்லியன் அரபு மக்கள் இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலின் வெறியாட்டத்தைக் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க, உலகத்திலேயே முதலாவதான ‘காண்ட்ராக்ட் அடிப்படையில் நடத்தப்படும் நாடாக ‘ ஈராக் உருவெடுக்க இருக்கிறது. மண்டபத்தில் செருப்புப் பார்த்துக் கொள்ளக் குத்தகை எடுத்தவர்களிடம் இருக்கும் மனிதாபிமானத்தைக்கூடக் காண்ட்ராக்டர்களான இந்தப் பெரிய நிறுவனங்களிடம் எதிர்பார்க்க முடியாது. மனித குல வரலாற்றில், நாகரிகத்தில் முப்பது நூற்றாண்டுகளுக்கும் மேலான சுவடுகள் பதித்த ஒரு பெரிய நாடு, அமெரிக்கக் கம்பெனிகளின் பாலன்ஸ்ஷீட் ஐட்டம்களாக மாறுவதன் மூலம் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பெறப் போகிறது.

அதோ, சதாம் உசேனின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட உன் கசார் நகரின் மக்கள் தங்களின் ரட்சகர்களை வரவேற்றுக் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள். எல்லோர் கையிலும் பிடித்திருப்பது பூங்கொத்துக்களையா ? மன்னிக்க வேண்டும். அவையெல்லாம் குவளைகள். வெறும் குவளைகள்.

‘தண்ணீர் வேணும். குடிக்கத் தண்ணீர் வேணும். ‘

கொல்லும் பசியைக்கூட மறந்து நாட்கணக்காகக் குடிநீர் இன்றித் தவித்துப் பிச்சைக்காரர்களாக ஒரு பெரிய ஜனக்கூட்டமே கையேந்தி யாசிக்க, அமெரிக்க டாங்குகள் பாலைவனத்தினூடே முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்க ராணுவத்தால் லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. டிவி காமிராக்கள் படம் பிடிக்கின்றன. ஒரு சிறுமி அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீரை நிறைத்துக் கொண்டு தூக்கமுடியாமல் தூக்கியபடி நடக்க, டிவி காமிராக்கள் அடுத்த காட்சியைப் படம் பிடிக்கக் காரில் பறக்கிறார்கள். அடுத்த கோட்டையைப் பிடிக்க ராணுவமும் நடக்கிறது. ஆதிமனிதர்கள் போல் தண்ணீருக்காக அடித்துக் கொள்கிற சத்தம் அவர்களைத் தொடர்ந்து மங்கிக் கேட்க வெள்ளைக் கனவான்கள் துப்பாக்கியைத் தோளில் சார்த்திக்கொண்டு சிகரெட் பற்றவைத்துக் கொள்கிறார்கள்.

பாஸ்ராவிலும், உன் கஸாரிலும் குடிநீர் விநியோகம், மின்சாரம், தொலைதொடர்பு எல்லாவற்றையும் சதாம் உசைனிடமிருந்து விடுதலை பெற்றுத் தருவதற்கான புனிதப் போரில் அழித்து ஒழித்தவர்களுக்குத் தெரியாது அவர்களுக்குப் பின்னால் அவர்களின் செல்வத்தைத் தேய்க்கும் படை திரண்டு கொண்டிருக்கிறது என்று.

பழைய அழுக்கு டிரம்களில் கழிவுநீர் போன்ற நாற்றமடிக்கும் தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொண்டு, நாக்கு உலர்ந்தபோது நனைத்துக் கொண்டிருக்கிற உன் கசார் நகரின் மக்களுக்கு கோக்கோகோலாவும் பெப்சியும் மினரல் வாட்டரும் விற்கக் காண்ட்ராக்ட் எடுத்த அந்தக் கம்பெனிகள் நாளைக்கு வரலாம்.

உன் கசாரின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குண்டடிபட்ட, பசித்த, வலியும் தாகமும் தாங்காது அலறும் குழந்தைகளின் ஓலம் எங்கும்.

குலைகுண்டுகள் என்ற கிளஸ்டர் பாம் வீச்சில் மடிந்த உயிர்கள் எத்தனை எத்தனையோ. ஒரு பெரிய பிளாஸ்டிக் குடுவைக்குள் சின்னச் சின்னக் குடுவைகள். அந்தச் சின்னக் குடுவைகளில் உலோகத் தகடுகள். சேர்ந்து விழுந்து சிதறி ஒவ்வொரு குடுவையும் வெடிக்கும்போது அசுரவேகத்தோடு வெளிப்படும் உலோகத்துகள்கள் சதையைக் கிழித்துத் துளைத்து உடலில் புகுந்து உடனே சாவை உண்டாக்கும். அமெரிக்க விமானங்கள் அவ்வப்போது பிச்சையாக வீசியெறியும் உணவுப் பொட்டலங்களைப்போல் அசப்பில் தெரியும் இந்தக் குடுவைக் குண்டுகளைப் பசியோடு பாய்ந்து எடுத்து வெடித்துச் சிதறி மடிவது பெரும்பாலும் குழந்தைகள் தான். வெப்பன்ஸ் ஃஓப் மாஸ் டெஸ்ட்றக்ஷன் இதுதான். ஹன்ஸ் ப்ளிக்ஸ் இவற்றைத் தேடி ஈராக் போனதற்குப்பதில் அமெரிக்கா போயிருக்கலாம்.

‘பாக்தாத் பக்கத்தில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் உறைகளில் ஏதோ ரசாயனப்பொடியைக் கண்டுபிடித்தது அமெரிக்க ராணுவம். சதாம் உசைனின் ரசாயன ஆயுதம் இதெல்லாம் ‘

நேற்றைக்குச் சொன்ன தொலைக்காட்சி இன்றைக்கு பம்மிப் பதுங்கிச் சொல்கிறது – அதெல்லாம் வெறும் மருந்துப்பொடிதான்.

பாக்தாத்தின் சந்தைப்பகுதியில் போன வாரம் விழுந்து பல உயிர்களைப் போக்கிய ஏவுகணை அமெரிக்க வேலை இல்லை என்று துண்டைப்போட்டுத் தாண்டி சத்தியம் செய்தார்கள். சதாம் உசைனின் படைகள் ஏவத் தெரியாமல் ஏவி உண்டாக்கிய விபத்து என்று ஃபுல்சூட் அணிந்த வல்லுனர்கள் குளிர்பதன அறைகளில் உட்கார்ந்து கொண்டு அறிவித்தார்கள். சாவதானமாக அந்த ஏவுகணை விழுந்த இடத்தைத் தீவிரமாகப் பரிசோதிக்க, விழுந்த ஏவுகணையின் ஒரு இக்கிணியூண்டுத் துண்டில் ஒரு எண். அந்த எண்ணை வைத்து அமெரிக்காவில் எந்தக் கம்பெனியில், எப்போது உற்பத்தி செய்யப்பட்டது என்று அந்த ஏவுகணையின் நதிமூலம் ரிஷிமூலமே தெரிந்துவிட்டது.

‘வேணும்னே அந்தத் துண்டை அங்கே புதைத்து வச்சிருக்காங்க. எல்லாம் சதாம் உசைனோட தந்திரம். ‘

வெட்கமில்லாமல் சொல்கிறார்கள். பத்திரிகைகளும் வானொலியும் தொலைக்காட்சியும் அப்படியே அறிவிக்கிறார்கள். படிக்கிறவர்களுக்கும் கேட்கிறவர்களுக்கும் பார்க்கிறவர்களுக்கும் சகல செளபாக்கியங்களும் சித்தியாகட்டும்.

அமெரிக்க அரசாங்கம் சொல்கிறபடிதான் நினைக்க வேண்டும். பார்க்க வேண்டும். பேச வேண்டும். தன்னிச்சையாகப் பேசிய என்.பி.சி தொலைக்காட்சி நிருபரின் சீட்டைக் கிழித்து விட்டார்கள்.

சுதந்திரத்துக்கான இந்த அற்புதமான அமெரிக்க விளக்கத்தைவிட, பல நூறாண்டுகள் மன்னராட்சியில் ஊறிய இங்கிலாந்தில் சுதந்திரம் அதிகம். போன மாதம் வரை டோனி பிளேரின் தொழிற்கட்சி அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்து, ஈராக் போரை எதிர்த்துப் பதவி விலகிய, இங்கே எல்லாத் தரப்பினராலும் மதிக்கப்படும் அரசியல் தலைவர் ராபின் குக் பலகோடி மக்களின் சார்பாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

‘இங்கிலாந்துப் படைவீரர்களைத் திரும்ப அழைக்க வேண்டும். அவர்கள் அமெரிக்காவின் அத்துமீறலுக்குத் துணைபோகக் கூடாது ‘.

தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் காலவே இன்னும் ஒருபடி முன்னால் போய், பிரிட்டாஷ் படைவீரர்கள் அவர்களுடைய அதிகாரிகளின் கட்டளைகளை ஏற்க மறுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ‘பிரிட்டாஷ் ராணுவ வீரர்கள் சிங்கங்கள் போன்றவர்கள். கழுதைகளால் வழிநடத்தப்படும் சிங்கங்கள் ‘ என்கிறார் ஜேம்ஸ் காலவே.

வளைகுடா யுத்தம் இரண்டாம் காண்டத்தில் கொஞ்சம் நகைச்சுவையும் உண்டு.

இணையத்தில் போர் மறுப்பாகப் பத்தாயிரம் கவிதைகளை அவசரமாக எழுதி டோனிபிளேரிடமும் புஷ்ஷிடமும் அளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே போல் போர் ஆதரவுக் கவிதைகளை எழுதவும் இணையத்தளம் ஒன்றை அமெரிக்காவில் மிச்சிகன் நகரில் ஒரு தொழிலதிபர் தொடங்கி இருக்கிறார். அதையெல்லாம் சதாம் உசைனிடமோ அவருடைய நகல்களில் ஒருவரிடமோ தருவார்களோ என்னமோ.

இரண்டு தரப்புக் கவிதைக்கும் சாம்பிள்கள் –

‘ஆண்கள், பெண்கள், குழந்தைகள், விலங்குகள்

எல்லாரும் எல்லாமும் துண்டு துண்டாகிறது.

குறிதவறாத ஏவுகணைகள், புத்திசாலி ஆயுதங்கள்

அழிவு தான் எங்கும் ‘

போர் எதிர்ப்புக் கவிதை இப்படி என்றால், போர் ஆதரவுக் கவிதை இது –

‘பிரான்ஸ் என்று நாடு ஒன்று உண்டு.

அங்கே ஆண்கள் பேண்ட் போடுவதில்லை.

பேடிகளே. போர் வேண்டாம் என்கிறீர்களே.

காருக்குப் பெட்ரோலுக்கு என்ன செய்வீர்கள் ‘

புஷ், பிளேர், உசைன் என்று மூன்று பேரையும் மோசமான கவிதைகளால் மூச்சு முட்டவைத்து ஒழிக்க ஒரு அரிய வாய்ப்பு. உலகக் கவிஞர்களே – முக்கியமாகத் தமிழ்க் கவிஞர்களே, இரண்டு படுங்கள்.

**

இரா.முருகன்

***

eramurug@yahoo.com

Series Navigation