This entry is in the series 20091106_Issue

ரிஷி



வீதியெங்கும் மன்னர்கள் _
வெண்கொற்றக்குடையிழந்து
விரைந்தேகிக் கொண்டிருக்கிறார்கள்
வயிற்றுக்குச் சோறிட.

சோறு என்பதன் பொருள் சிலருக்குக்
கால்வயிற்றுக் கூழாகவும், இன்னும் சிலருக்கு
மூன்று வேளை உணவாகவும்,
மேலும் சிலருக்கு சோறை மீறிய
சிறு சிறு சொத்துக்களாகவும்,
மிகப் பெரும் செயலாட்சிப் பரப்பெல்லைகளாகவும்…..

வாகனங்கள் பெருகப் பெருக
சிறுத்துக்கொண்டே வரும் சாலைகள்
உருமாறிவிடக்கூடுமோ ஒரு நாள்-
எறும்புப்புற்றுகளாய்…?

நடைபாதைகளும் இருசக்கர வண்டிகளுக்கென்றான பின்
பாதசாரிகள் பதுங்குகுழிகளைத் தேடியலைந்தவாறு…

புதையுண்ட மனிதர்கள் நிரம்பிப் புதையுண்ட பதுங்குகுழிகளை
பின்னொரு காலத்திலேனும் அகழ்வாராய்ச்சியாளர்கள்
கண்டெடுக்கக் ஏலுமோ?

நகரும் வதைமுகாம்களாய் பேருந்துகள்.

வலப்புறம் அமர்ந்திருக்கும் வாலிபப் பெண்களின் செவிகளில்
வேரோடியிருக்கின்றன கைபேசிகள்.

சாலைவிதிகள் மீறப்படுவதே வாழ்க்கையான சூழலில்
மனித உரிமைகளும் ஆழக் குழுதோண்டிப்
புதைக்கப்பட்ட வண்ணம்…

Series Navigation