பொய் – திரைப்பட விமர்சனம்

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

நெப்போலியன்


இளமைக்கு கே.பி அழகு… என்பதை மீண்டும் தன் “பொய்” யால் நிரூபித்துள்ளார் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் !

தமிழில் முதல் சர்ரியலிச சினிமா முயற்சியை பொய் திரைப்படம் வரலாற்றில் பதியவைத்துக்கொள்ளும்.

காதலுக்காய் காதலை விட்டுக்கொடுப்பதா… ஒரு பொய்யிற்கு உருவம் கிடைத்தால் அங்கே விதி வந்து சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுமா…

விதியா… தனிமனித செயலா… தீதும் நன்றும் பிறர்தர வாரா… எனும் வட்டத்திற்குள் கே.பி பந்தாவாய் பரமபதம் ஆடியுள்ளார்.

குறும்புப் பொய்கார இளந்தாரி ஹீரோ. லெட்சுமிகடாட்ச இலக்கிய விரும்பியாய் அம்மா. அரசியலில் நல்ல தமிழுடன் அப்பா வள்ளுவனார். அடர்த்தியான காதலுடன் லட்சியக்காரி கதாநாயகி. ஆட்டோகிராப் காதலுடன் இன்னொரு ஹீரோ. அன்னியோன்யமான ரேணுகா தம்பதியினர். இவர்களுக்கிடையே தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவரை யாரும் தொட்டுப்பார்க்காத தைரிய முயற்சியாய்

பொய் உருவகமும் – விதி முகமும் கே.பாலசந்தராகவும் – பிரகாஷ்ராஜாகவும் வெளுத்துக்கட்டியிருக்கிறார்கள்.

இவன் கடல் நீரை வற்ற வைத்துக்கொண்டிருக்கிறான்… எனும் சமுத்திர ஆழ வரிகளுடன் ஹைகூ கவிதையாய் தொடங்கும் படம், கொழும்பு நகரின் நெய்தல் பசுமையை காதல் குறும்புடன் கண்களுக்குள் தாயம் உருட்டுகின்றது. கதைக்களம் இலங்கையிலும் சென்னையிலும் மாறி மாறி பயணிக்கின்றது.

தமிழறிஞர் மகனுக்கு பிறந்ததிலிருந்து “ள” வரவில்லை… இருப்பினும் காதலினால் “ள” வரும் என்பதை… காதலியுடன் ஊடலில் தவறி பள்ளத்தில் கம்பன் என்ற பாரதி பள்ளம் என கத்திக்கொண்டே விழ இரவு முழுக்க மழையில் நடுங்கி பள்ளம் என பலமுறை சொல்லியே “ள” வர …

அங்கிருந்து தொடங்கும் “ள ” பற்றிய அழகான பாடலும் அதன் காட்சிமை அமைப்பும் கே.பி எனும் விருட்சம் இன்னமும் பூக்கும் இளமைப் பூக்களுக்கு ஒரு பூ.

காதலர்களுக்கிடையே ·பைன் (fine) எனும் ஒரு வார்த்தையை முடிவாய் வைத்துக்கொண்டு நடக்கும் அந்த மரத்தடி உரையாடலுக்கும் , ரேணுகா தன் விமானக்கணவனிடம் ” வானத்துசக்களத்தி ” என ஏர்ஹோஸ்டஸ்சை சொல்வதும் வசனகர்த்தா தாமிராவின் பேனா கூர்மையின் பளீச்.

இலங்கை வள்ளவட்டியில் பூ விற்கும் கடற்கரைப்பித்தனும், பெங்கால் நண்பனும் காதலின் இன்னொரு பார்வையை இயக்குனர் பார்வையாளனுக்கு உணர்த்த உதவும் மிகச் சிறந்த காரணிகளாக பயன்படுத்தியிருப்பது… திரைக்கதையின் நுண்மை, படத்தின் பிரதானக்காதலுடன் சம்பந்தமின்றி அவர்களின் காதல் உணர்வுகள் கதை நாயகர்களான இருவருடனும் பகிர்ந்துகொள்ள செய்திருப்பது பாலசந்தருக்கே உரித்தான இன்ட்டலெக்சுவல்!

சொகுசு ரயில் பெட்டிக்குள் நடக்கும் நீண்ட வாக்குவாதத்தின் கேமரா கோணமும்… கலர்·புல் உடைகளுடன் மாறி மாறி பேசும் கன்ட்டினூட்டி

ஷாட்டின் எடிட்டிங் வித்தகமும்… மரக்கிளைகளில் அமர்ந்தபடி காதலின் வெளிப்பாடும்… பொய் உண்டியலும்… கடல் மண்ணில் புதைந்து கிடக்கும் கள்ளிக்காட்டு இதிகாசமும்… காதல் வரும்போது கைகளில் ஏறி இறங்கும் கை பிரேசிலெட்டும்… இலங்கையில் தந்தையின் கார் கண்ணாடியில் எழுதி தன் இருப்பை காட்டிக்கொள்ளும் நேசமும்… பாடலே இல்லாத இசையிலான ஸ்ரீதரின் கடற்கரை குட்டிச்சுவர் போட்டி நடனமும்… இப்படியாய் பாலசந்தரின் பரம ரசிகர்களுக்கு தீனியாய் சொல்லிக்கொண்டே இருக்கும்படியாய் படம் முழுவதும் சபாஷ் போட வைக்கும் குட்டிக்குட்டி சங்கதிகள்.

பாலசந்தருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையே நடக்கும் க்ளைமாக்ஸ் போராட்டம் நிச்சயம் நம்மை நடுக்கும் !

அந்த சர்ரியலிச உணர்வுகளுக்கான உறைவிடத்தை வெண்படல் நிறத்தில் வடிவமைத்த கலை இயக்குனர் பாராட்டுக்குரியவர். வித்யாசகரின்

பாடல்களும் பின்னணி இசையும் – காசிவிஸ்வனாதனின் படத்தொகுப்பும் “பொய்”யிற்கு உண்மையில் பலம்.

அம்மாவின் மரணம் கடைசிவரை பாரதிக்கு தெரியாமலேயே இருப்பது பிரிவின் அதிர்விற்கு இயக்குனர் காட்டியிருக்கும் இரக்கத்தின் உச்சம்.

நவீன தொலைதொடர்பு பெருகிவிட்ட இந்த நாட்களிலும், ஒரு சில பெரிய வீடுகளில் இன்னமும் செல்பேசியை பயன்படுத்த தெரியாத செயலை வள்ளுவனார் மனைவி, வீட்டுத் தொலைபேசியிலேயே மகனுடன் பேசுவதுபோல் அமைத்து… அதை மகன் எங்கிருக்கிறான் என தெரிந்து

கொள்ளாதபடி கதைக்கு லாவகமாய் பயன்படுத்தியிருப்பது நச்.

தரமான ஒரு தமிழ் படத்தை தமிழ் திரையுலகிற்கு தயாரித்து வழங்கிய பிரகாஷ்ராஜின் டூயட்மூவிஸ் பாரட்டுக்குரியது.

கே.பி யின் பலமும் பலவீனமும் எதிர்கால சினிமாவிற்கான கதைக் கருவை ஒரு தேர்ந்த தீர்க்கதரிசியாய் தற்காலத்தில் முயற்சி செய்வதே !

“பொய் “யை ஒரு முறை நீங்கள் பார்த்துவந்தபின் உண்மையில் இதைவிட சொல்வதற்கான சுவையான விஷயங்கள் இன்னமும் அதிகமாகத்தான் இருக்கும்.

பொய்……. மெய் .

———— நெப்போலியன்

சிங்கப்பூர்


[kavingarnepolian@gmail.com]

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்