பொன்னாடையும் பெண்களும்

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

புதியமாதவி


அண்மையில் எங்கள் மும்பையில் கொஞ்சம் ஓவர் டோசாகவே நிறைய விழாக்கள், மேடைகள், பேச்சுகள், கூட்டங்கள். சந்தோசமாகத்தானிருக்கிறது மக்களின் ஆர்வக்கோளாறுகளைப் பார்க்கும்போதெல்லாம்.

அவர்களுடன் சேர்ந்து நிற்கும்போது நமக்கும் அந்த ஆர்வக்கோளாறு பிடித்துக்கொள்ளத்தான் செய்கிறது. பல ஆயிரங்கள் செலவு செய்து மிகச்சிறந்த பேச்சாளர்கள், சிந்தனையாளர்களை அழைத்து அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் உள்ளூர் கச்சேர்கள் மணிக்கணக்கில் மேடையில் இருக்க அவசரம் அவசரமாக சிறப்பு விருந்ததினருக்கு அரைமணி நேரம் கொடுத்து அதற்குள் அரங்கின் காவலாளி மணி அடிக்க அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி நூறு இருநூறு தள்ளி ஒரு பத்து நிமிடத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு ஒரு வழியாக விழா முடியும்போது பரிதாபமாக இருக்கிறது பசியுடன் நடந்துச் செல்லும் மகா மகா பிள்ஸ் 50 களைப் பார்க்கும்போது.அவர்களில் 98% சர்க்கரை நோய்க்காரர்களாக இருக்கலாம். விழா முடிந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயண தூரத்திலிருந்து வந்திருப்பவர்கள் பலர். வர வர தமிழர்கள் நடத்தும் விழாக்களுக்கு கூட்டம் குறைந்து கொண்டிருப்பதாய் வருத்தப்படுவது மட்டும் போதாது. அதற்கான காரணங்களையும் அறிய முயல வேண்டும்.

நம் தமிழர்கள் கூட்டங்களில் அமைதி சாட்சியாய் இருக்கும்போதெல்லாம் என் கேரள நண்பர்கள் நடத்தும் இலக்கிய கூட்டங்கள் நினைவில் வராமலில்லை. வரவேற்புரை, தொடக்கவுரை, வாழ்த்துரை எதுவும் கிடையாது. அவர்களில் ஒருவர் மேடையில் வந்து குறைந்தது 5 நிமடங்களுக்குள் சிறப்பு விருந்தைனர் பேசப்போகும் தலைப்பு, கேள்வி நேரம், தேநீர் இடைவேளி நேரம் பற்றி சொல்லிவிட்டு உட்கார்ந்துவிடுவார். அதன் பின் முழுக்க முழுக்க சிறப்புவிருந்தினரின் தனிக்கச்சேரி அரங்கேறும்.
கேள்வி நேரம் சுவை மிகுந்ததாக அமைந்துவிடும். இப்படி எல்லாம் நம்மவர்கள் கூட்டம் நடத்துவார்களா
என்ற ஏக்கம் ஏற்படும்!

இதில் இன்னொரு சடங்கு மேடைகளில் அரங்கேறும். பொன்னாடை போர்த்தும் நேரம். சரி இது கூட வருகிறவருக்குச் சிறப்புச்செய்யும் ஒரு வகைதான். பொன்னாடைப் போர்த்தும்போது ரெடிமேடாக புன்னகைச் செய்ய தெரிந்திருக்க வேண்டும். இது ரொம்ப முக்கியம். இனி. பெண்களுக்குப் பொன்னாடைப் போர்த்தும் நிகழ்ச்சிகள் நடக்கும் போது தான் நம்மால்
பார்வையாளராகவும் உட்கார்ந்திருக்க முடியாது. அதிலும் நமக்கே பொன்னாடைப் போர்த்தினால் கேட்காதீர்கள்… எவ்வளவு அவஸ்தையாக இருக்கும் அந்த தருணங்கள் என்று. இதற்கு என்றே அழைத்து வரப்பட்டிருப்பார்கள் சில இல்லத்தரசிகள். அவர்களைக் கொண்டு மேடையிலிருக்கும் பெண்ணுக்குப் பொன்னாடை போர்த்த அழைப்பார்கள்! அட்டைப்பூச்சிகள் காலடியில் ஊர்ந்து செல்வதாய் தவிக்கும் உணர்வுகளுடன் ரெடிமேட் புன்னகையை அஷ்டகோணலாக வரைந்து கொண்டு மேடையில் நிற்கும் தருணங்கள்.. மிகப்பெரிய தண்டனைதான். தந்தை வயதுடையவர், மூத்த அண்ணன் வயதுடையவர் எல்லாம் மேடையில் இருந்தாலும் ஒரு பெண்ணுக்குப் பொன்னாடைப் போர்த்த ஒரு பெண்தான் வந்தாக வேண்டும் என்பதில் பெருமைப்பட்டுக்
கொள்ள என்ன இருக்கிறது? ஆண்-பெண் சம உரிமைப் பேசுபவர்களும் பகுத்தறிவுப் பாதையில் பயணம் செய்வதாய் எல்லா மேடைகளிலும் முழங்குபவர்களும் இதையேதான் செய்கிறார்கள்!

ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் பொன்னாடைப் போர்த்திவிட்டால் அதில் என்ன பண்பாட்டு இழுக்கு?

இன்னும் சொல்லப்போனால் ஒரு பெண்ணுக்கு ஒரு பெண்ணைத் தேடி அழைத்துவந்து பொன்னாடைப் போர்த்த அழைக்கும்போது அங்கே ஆண்-பெண் உறவு எவ்வளவு கொச்சைப் படுத்தப் படுகிறது! இந்த நேரத்தில் எனக்கு ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. மக்கள் திலகம் என்று பவனிவந்த நடிகர் எம்.ஜி.ஆர், தான் நடித்த எல்லா திரைப்படங்களிலும் திருமணக் காட்சிகளில் பெண்ணுக்குத் தாலி அணிவிப்பதாக காட்ட மாட்டாராம்! மாலை மாற்றும் நிகழ்வை மட்டும் தான் காட்டுவாராம்! என்னவோ தாலி அணிவதை எதிர்க்கும் கொள்கை என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.

அவருக்கு பெண்கள் மீதும் தாலி என்ற புனிதத்தின் மீதுமிருந்த மரியாதையாக இதைப் பலர் சொன்னதுண்டு. ஆனால் உண்மையின் முகம் எப்படி இருந்தது என்பதை நாம் அறிவோம். இன்றைக்கு அ.தி.மு.க.வின் தலைவராக இருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்க்கை வரலாற்றை பிரபலமான வார இதழில் எழுத ஆரம்பித்தார். மிகவும் வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய பக்கங்கள் அவை. எம்.ஜி.ஆரைப் பற்றி எழுத ஆரம்பித்த மறுவாரத்திலிருந்து தொடர் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது வெறும் செய்தி அல்ல.

கொள்கை அளவில், பண்பாட்டு ரீதியில் நெருடலாக இருக்கும் பொன்னாடை சம்பவங்களுக்கு நடுவில் சின்னதாக ஏற்பட்டிருக்கும் ஒரு மாற்றத்திற்காகவாவது மனநிறைவடைய வேண்டியதுதான். இப்படி பொன்னாடைப் போர்த்த ஒரு பெண்ணுக்கு பெண் தேவை என்பதாலெயே இதுவரை வெளியில் பொதுவிழாக்களுக்கு அழைத்துவரப் படாத இல்லத்தரசிகளை அழைத்து வருகிறார்களே!
வாழ்க என் நண்பர்கள்!

………………….அன்புடன்,

புதியமாதவி.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை