பொங்கலோடு பொசுங்கட்டும்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

சத்தி சக்திதாசன்


தை பிறந்தது
தை மகள்
நாணத்தோடு
நயமாக நுழைகின்றாள்.

பொங்கள்
பானைக்கு ஏற்றும்
தீயோடு
தோழரே பொசுக்கிடுவோம்
பலவற்றை
மிஞ்சிய கரியிலிருந்து
பிறக்கட்டும்
புதியதொரு
அத்தியாயம்.

முதல் விறகாக
எடுத்திடுங்கள்
எழ்மையெனும்
பெருவிறகை

அடுத்ததொரு விறகாக
அடுக்குங்கள்
சீதனம் எனும்
காய்ந்த மரத்தை

தொடர்ந்து எரியட்டும்
அறியாமை எனும்
கருங்கட்டை

பசியெனும்
பச்சை விறகை
பெற்றோல்
வார்த்தாவது
மூட்டி எரியுங்கள்

நானும் வாழ்ந்து
பிறரையும் வாழ
வைப்பேன்
எனும் அந்த
நல்லெண்ண விறகதனை
மறந்தும்
போட்டுடாதீர்
எரியும் நெருப்பில்

பொங்கல் பானை
பொங்கும்போது
பொங்கட்டும் உங்கள்
மனங்களும்
ஆம்
அநீதியைக் கண்டு
அழியும்
ஏழைச் சிறாரைக்
கண்டு
வாழ்வின்றி தவிக்கும்
தைதேடி ஏங்கும்
இளம் கன்னியரின்
கண்ணீர் கண்டு

பொறுக்காதீர்
இனியும்
வேதனைகளைப்
போக்கும் மருந்து
இளம் தோழரே
உங்கள்
கைகளிலுண்டு
நெஞ்சினில் உரத்தொடு
உரக்கக் கூவுங்கள்
‘பொங்கலோ பொங்கல் ‘.

——————————–
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்