பேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

பத்ரிநாத்


கிருஷ்ணா ராவை கொலை செய்து விடலாம் என்று கூறினான் சுப்பு.

சுவாமிநாதன் சைக்கிளை அசுர மிதிமதித்தான். ‘ ‘டர்க்டர்க்.. ‘ ‘ என்று சைக்கிள் மிதி வாங்கியது..சே.. பால்ரஸ் மாற்ற வேண்டும் என்று சைக்கிள் கடை பாய் அன்று சொன்னான்.. ம்ம்.. சைக்கிளையே மாற்ற வேண்டும்.. பிரேக் பிடிக்காது.. பெல் பல காலமாக இல்லை.. சீட்கூட எலும்புக் கூடாய்த் தேய்ந்துப் போய்.. வளைவுகளில் அல்லது ஏதாவது கல் மீது ஏறிவிட்ட போது, படாத இடத்தில் பட்டு வலி உயிர் போகிறது..

ஏஞ்சல் பள்ளிக்கூடக் காம்பவுண்ட் சுவர் அருகே வண்டியை நிறுத்தி, அந்தப் பெஞ்சில் அமர்ந்து கொள்ள நினைத்த போது, பாண்ட் அந்த இடத்தில் கிழிந்திருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான்.. வீட்டுக்காரர் பேரனுக்கு காத்திருந்தான். தினமும் இது ஒரு வேலையாகிவிட்டது.. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டான்.. வெறும் பயலுக்குக் கோபம் எதற்கு ? அவர் பேரன் ஒரு வாய்க் கொழப்புப் பயல், ‘ ‘அங்கிள்.. நீங்க வண்டிய ஓட்டாதேள்.. நடந்து வாங்கோ.. என்னால நன்னா ஒக்கார முடியல.. ‘ ‘, என்பான். தலையெழுத்தேயென்று சைக்கிளில் அவனை உட்கார வைத்து அவன் நடந்து வர வேண்டியிருக்கும்.. ம்.. வாடகை பாக்கி இன்னமும் தரவில்லை. அதனால் இப்படி ஈனத் தொழில், கூழைக் கும்பிடு போட வேண்டியிருக்கிறது.. எத்தனை நாள் இந்த வாழ்க்கை.. ? விரக்தி மேலிட்டது. வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் ஜம்மென்று செட்டில் ஆக வேண்டும்.. தினம் கனவுகளாய்க் கழிகிறது.. பம்பர் லாட்டரி என்றாவது அடிக்காதா.. ? அடித்தால் ஒரே தூக்காய்த் தூக்.. ‘ ‘அங்கிள்.. ‘ ‘ சிந்தனையைக் கலைத்தான் வீட்டுக்காரர் பேரன்.. ‘ ‘ என்னத் தூக்கி விடுங்கோ.. சைக்கிள்ல ஏறணும்.. ‘ ‘,

வண்டியைத் தள்ளிக் கொண்டு வருவது சிரமமாக இருந்தது.. தம்கட்டி இழுத்தான்… சைக்கிளில் ஒரு பாறாங்கல்.. என்ன சாப்பிடுகிறான் இவன்.. யானைத் தீனி தின்பான் போல இருந்தது..

வீட்டுக்குப் போனதும், மனைவி பிடித்துக் கொண்டாள்.. ‘ ‘ஏன்னா இந்த மாசம் கரண்ட் பணம் தரலைன்னு வீட்டுக்காரர் சொன்னார்.. ‘ ‘,

‘ ‘ததேன்னு சொல்லு.. சே.. இதே ரோதனையா.. சுப்பு இன்னமும் புரோக்கரேஜ் பணம் தரலை.. ‘ ‘,

‘ ‘நீங்கதான் அவன வற்புறுத்திக் கேக்கணும்.. அசமஞ்சமா இருந்தா அப்படித்தான் ஏய்ப்பன்.. ‘ ‘, மனைவியின் சொல் உஷ்ணத்தை ஏற்படுத்தியது.. எப்போதும் ஏதாவது செலவு வந்து கொண்டேயிருக்கிறது.. வீட்டுப்புரோக்கர் தொழிலில் என்னத்தைச் சாதித்தோம்.. அவன் வேலை பார்த்து வந்து ஆலை மூடியவுடன், ஏதாவது தொழில் செய்யலாம் என்றால் சரிப்பட்டு வரவில்லை. ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தான்.. அதில் வரும் வருமானம் ஒரு வேளைக்கே வராது என்றதும் இறுதியில் புரோக்கர் தொழிலில் இறங்கினான். பல வருடங்களாக இந்தப் புறநபர் பகுதியில் குடியிருந்தது ஒருவிதத்தில் செளகரியமாக இருந்தது.. அதிலும் இப்போது வியாபாரப் போட்டி.. இறுதியில் சுப்புவுக்கு ‘ ‘காலி மனைகள் ‘ ‘ வாங்கிக் கொடுத்து வருவதில் கொஞ்சம் கஞ்சி குடிக்க முடிந்தாலும், இன்னமும் கொஞ்சம் வருமானம் வந்தால் பல பிடுங்கலிகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.. அட.. ஒரு நல் சட்டை போட்டுக் கொள்ளலாம்..

சுப்பு இப்போது புதிய யோசனைக் கூறுகிறான்.. இவளிடம் கூறி விடலாமா என்று யோசித்தான்.. வேண்டாம்..தவளைகள்.. உளறி விடக் கூடிய அபாயம் இருக்கிறது.. அதுவும் உண்மையில் சுப்பு தன் உதவியை நாடுகிறானா.. ? அல்லது பொய்யா..!

‘ ‘ஏன்ல.. வெளயாட்டுக்கால அப்படிச் சொல்லுதோம்.. நெசமாதான்ல.. ‘ ‘, அந்தப் பெரிய மேஜையின் நடுவில், பெரிய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த பெரிய ஆகிருதி சுப்பு கூறுவது, சுவாமிநாதனுக்கு மயக்கத்தை உண்டு பண்ணியது..

‘ ‘அய்யோ.. கொலையா.. வம்பல மாட்டி விடாதேள்.. பயமா இருக்கு.. ‘ ‘, கண்கள் இருட்டியது, சுவாமிக்கு..

‘ ‘அட.. என்னல நீய்யி.. ரெத்தம் செத்துப் போன ஆளா இருக்கீரு.. எவ்வளவு நாளுக்கல இந்த அரதல் சைக்கிள்ல ஓட்டிக்கிட்டு அவஸ்த படுதீரு.. வாள்கையில முன்னுக்கு வரவேணாமால.. ‘ ‘, கிடா மீசையுடன் குரூரமாகச் சிரித்தான் சுப்பு.. சில வருடங்களுக்கு முன்னர் இவனும் ஒரு ஓட்டை பைக்கில் வலம் வந்து கொண்டிருந்தான்.. என்ன திரிசமம் பண்ணினானோ.. இன்று டாடா சுமோ.. தனி அலுவலகம்.. செல் ஃபோன்.. சுற்றிலும் கருப்புக் கண்ணாடி, அதில் ஜி. எஸ் ரியல் எஸ்டேட் அண்ட் ப்ரமோட்டர்ஸ் என்று பந்தாவாக எழுதப்பட்டு.. ம்… நேரம்தான்..

கிருஷ்ணா ராவைக் கொல்ல வேண்டும்..

அந்தப் புறநகர் பகுதியைக் காட்டை அழித்து நாட்டை உருவாக்கிய மனிதர்கள் கால்கள் பட ஆரம்பித்ததிலிருந்து இன்றய ரியல் எஸ்டேட்காரர்கள் அதன் பரிணாம வளர்ச்சியாய் புதிதாக கண்டுபிடித்ததுதான் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள்.. அந்தப் புறநகர் பகுதியில் நாடு பிடிக்கும் ஏகாதிபத்தியங்கள் போல ரியல் எஸ்டேட்காரர்கள் நாய்ச் சண்டையிட்டுக் கொண்டும், அநியாய விலைக்குப் பிளாட்டை ஏற்றிக் கொண்டும் நில வேட்டையில் ஈடுபட்ட பேரரசர்கள்ி போல ஆக்கிரமித்திருந்தார்கள்.. ஊரெல்லாம் பெட்டி பெட்டிகளாய் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள்.. பெரிய மாடத்திலிருந்து புறாக்கள் எட்டிப் பார்ப்பது போல மனிதர்கள் ஒரு புள்ளிகளாய் அந்தக் குடியிருப்புகளில் தெரிவார்கள்..

சுற்றிலும் இப்படி அடுக்குமாடிகள் சூழ்ந்து கொண்டிருந்தாலும் கிட்டத்தட்ட நடுவில் இரண்டரை கிரவுண்ட் நிலத்தில் அதன் நடுவில் ஐநூறு கதுர அடியில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார் கிருஷ்ணாராவ்.. பிரதான தெருவில் சற்று உள்ளடங்கி இருந்தது அவர் வீடு.. எழுபத்தி ஐந்து வயது கிருஷ்ணாராவ்.. ஒண்டிக்கட்டை (கைம் கிழம் ?) .. இரண்டு பிள்ளைகள்.. கடல் கடந்து ஒருவன் யூகேயில். இன்னொருவன் சிங்கப்பூரில்..மூத்தவன் வெளிநாட்டில் ஒரு மிலேச்சியைக் கைபிடித்துவிட்டான்.. இரண்டாமவன் ஒரு குஜராத்தியுடன் குடித்தனம் நடத்துகிறான்.. இவர்கள் வாசனையே வேண்டாம் என்று தனித்து நிற்கும் பழனிமலை முருகனைப் போல இந்த கிருஷ்ணாராவ்.. கிழட்டு பூதம்..

கிருஷ்ணா ராவ் அந்தக் காலத்தில் வக்கீலாய் இருந்தவர்.. அந்தக் காலத்தில் கார் வைத்திருந்தார்..வீட்டைச் சுற்றித் தோட்டம் அன்று இருந்தது.. இப்போதும் அவ்வாறுதான்.. அந்தக் காலத்தில் வைத்த மரங்கள் ஒவ்வொன்றும் ராட்சஸத்தனமாய் வளர்ந்து அந்தக் கிரவுண்ட் முழுவதும் ஆரத் தழுவியிருக்கும்.. விதவிதமான மரங்கள்.. இரண்டு பெரிய வேப்பமரம், பெரிய பூவரசை, கருவேலும், முள்முள்ளாக நார்த்தங்காய் மற்றும் சுற்றிலும் தென்னை மரங்கள்.. இருபது மரங்களுக்கு மேல் அனைத்தும் நடுத்தர வயது பெண்மணிகளின் மார்பைப் போல குலைத்தள்ளியிருக்கும்.. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு

தலைவனைப் போல யானை உடம்பு சைசில் புளியமரம்.. அதன் வேர்கள் தினவெடுத்த தோள்களின் உருண்டு திரண்ட சதைக்கோளங்கள் போல பெரிய பிரம்மாண்டம்.. நகரமயமாகி வரும் இந்தப் புறநகர் பகுதியில் இருக்கும் இவர் வீட்டுக்குள் சென்றால் முற்றிலும் புதிய சூழ்நிலையில் ஏதோ காட்டுப் பகுதிக்கு வந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றும்.. இதன் நடுவில் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு, காட்டிலாக்கா அதிகாரியைப் போல அமர்ந்திருக்கும் கிருஷ்ணாராவ்..

இந்தக் கிரவுண்டின் மேல் காதல் கொண்டு கார்த்திகை மாசத்து நாய்களைப் போல் பித்தனாய் அலைந்தார்கள் பல ரியல் எஸ்டேட்காரர்கள்.. எப்படியாவது வளைத்துப் போட வேண்டும் என்று நாக்கை நீட்டிக் கொண்டு அலை பாய்ந்தார்கள்.. இந்த வேட்டையில் சுப்புவும் ஒருவன்..

பல நாட்கள் சுவாமியிடம் தெரிவித்தான் சுப்பு.. ‘ ‘ ஏன்ல.. அந்தாளு ஒங்க ஆள்தான்ல.. ‘ ‘, என்றான் சுவாமியின் பூணூலைக் காட்டி ‘ ‘வளச்சுப் போடுல.. அம்பதாயிரம் புரோக்கரேஜ் தரன்ல.. ‘ ‘, என்று ஆசைக் காட்டினான்..

ஐம்பதாயிரம்.. நினைக்கவே ஜிவுஜிவுவென்று ரத்த ஓட்டம் அதிகரித்தது.. ஜம்மென்று ஒரு ஜெராக்ஸ் கடை போட்டுக் கொண்டு செட்டில் ஆகிவிடலாம்.. கிழட்டுச் சனியன்.. சம்மதிக்க மறுத்தது.. எத்தனை நாள்கள் இது பொருட்டு நடையாய் நடந்தான் சுவாமி.. காலையிலேயே அவர் வீட்டிற்குச் சென்று விடுவான்..கிழம் பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு ‘ ‘ பஞ்ச கஷ்டேதி கஷ்டே ‘ ‘ என்று ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருக்கும்.. அவனைப் பார்த்ததும், ‘ ‘ வாடா அம்பி.. நோக்கு பொழுது போலைன்னா இஞ்ச வந்துடுவே.. ‘ ‘, என்று கழுகு மூக்கு விரிய மணிபர்ஸ் வாயால் சிரிக்கும்..

என் கஷ்டம் கிழத்திற்கு எங்கே தெரியப் போகிறது.. இவனும் அசட்டுச் சிரிப்பு சிரிப்பான்..

‘ ‘மாமா.. எத்தன நாள் இந்த ஆத்தில இருக்கப் போறேள்.. பையனப் பாக்க வேணாமா.. ? ‘ ‘, மெதுவாய்க் கொக்கி போடுவான்.. ‘ ‘அதுகள தலை முழுகி வருஷமாச்சுடா.. அத ஏன் கிளர்ற.. ‘ ‘, சிறிது மெளனத்திற்குப் பிறகு மெதுவாய் ஆரம்பிப்பான்.. ‘ ‘ இந்த வீட்டு மதிப்பு ஒங்களுக்குத் தெரியல மாமா.. ‘ ‘,

கூரிய மூக்கு சிவக்கக் கத்தும் ‘ ‘ உம் புத்திய காட்றியே.. நேக்குத் தெரியாதாடா என் வீட்டப் பத்தி.. பெரிசா அளக்கறயே.. இது விசயமா இஞ்ச வராதேன்னு பல முறை சொன்னாலும் கேக்க மாட்டேங்கசரிற ..சரியில்ல.. ‘ ‘,

‘ ‘இல்ல மாமா.. நா என்ன சொல்ல வர்.. ‘ ‘,

‘ ‘யேய்.. நிறுத்து.. எதுவும் சொல்லாத.. ஒம் வழியப் பாத்துண்டு போ.. ‘ ‘,

‘ ‘இதே எடத்தல ரெண்டு ஃப்ளாட்ஸ் வாங்கிக் கொடுத்து அஞ்சு லட்சம் தர்றேன்.. மாமா.. ‘ ‘,

‘ ‘இதப் பாரு சாமா.. நீ அந்த ரவுடி சுப்பு பேச்சக் கேட்டுண்டு வந்து இஞ்ச வந்து குதிக்கற.. நோக்கு புரோக்கரேஜ் ஆசக் காட்டி உன்ன ஏவறான்..அந்த ரவுடிப்பயதான் நம்மவூர் கெட்டத்துக்குக் காரணம்.. இனிமே அனுக்காக இஞ்ச வந்தியோ தெரியும் சேதி.. ‘ ‘, கிழம் படபடத்தது.

‘ ‘சரி.. அவனுக்காக வேண்டாம்.. நேக்குத்தான் கேக்கறேன்.. நாம எல்லாரும் ஒண்ணுக்குள் ஒண்ணுதானே.. அப்படி வச்சுங்கோ.. ‘ ‘,

‘ ‘நீ நம்படவன்னுதான் சும்மா இருக்கேன்.. இல்லைன்னா கெடைக்கற மரியாதையே வேற..

நோக்கு இந்த இடம் வேணும்னா, நா செத்தப்பறம் வித்துக்கோ..அதுகூட முடியாது..நா மடத்துக்குக் கொடுத்துடுவேன்.. ‘ ‘, கேக்கெக்கே என்று சிரித்தது. ‘ ‘பெரிய வார்த்த பேசறேளே..அப்பறம்.. ‘ ‘, என்று தொடங்கியவனை ‘சைகை ‘யாலேயே வெளியே போ என்றது.

இப்படி எத்தனையோ அவமானங்கள் இந்தக் கிழத்திடம் பட்டாகிவிட்டது. இந்த மனிதனை நம்பிப் பிரயோஜனமில்லை என்று சுப்புவிடம் தெரிவித்தான். ‘ ‘செத்தப்பறம் வித்துக்கோ ‘ ‘ என்று கூறுவதாகச் சொன்னான்.. அப்போதுதான் இதைக் கூறினான், சுப்பு..

‘ ‘அய்யிரு விருப்பத்த நிறவேத்திருவோம்.. மேல அனுப்பிருவோம்.. என்னல நா சொல்றது.. ‘ ‘, என்றான் சாதாரணமாக.. முதலில் சுவாமிக்கு ஒன்று புரியவில்லை.. ‘என்ன சொல்கிறான் சுப்பு ‘ , ‘ ‘புரியல ‘ ‘, என்றான்..

‘ ‘இதப்பாருல.. அவன் புள்ளிங்க வெளிநாட்டில இருக்கு.. அதுக திரும்பி வரப் போறதில்ல.. இவரக் கொன்னு போட்டோம்னா அதுக எப்பிடியும் வீட்ட வித்துரும்..அப்ப நீயி எனக்குப் பேசி முடி.. நா அப்ப ஒரே அமுக்கா அமுக்கிறலாம்ல.. ‘ ‘, என்று ஏதோ மரத்தை வெட்டுவதைப் போலக் கூறினான். இவன் இப்படித்தான் பெரிய ஆளாக ஆகியிருப்பானோ.. ? எதற்கும் அஞ்சாதவன் போலயிருந்தது.. இதில் நமக்குப் பிரச்சனை ஆகி ஏடாகூடமாய் மாட்டித் தொலைத்தால் ? நினைக்கவே குலை நடுங்கியது.. மாட்டாவிட்டால் ஐம்பதாயிரம்.. நினைக்க நினைக்க.. ஆஹா.. மாட்டிக் கொண்டால்.. ?

‘ ‘யோவ்.. சரியான ஆளுய்யா.. நீயி.. நீயால கொல பண்ணப் போறவன்.. ‘ ‘ சிரித்தான் சுப்பு, ‘ ‘அதுக்கு வேற ஆளு இருக்குல.. நம்மகிட்ட.. நீயி கொஞ்சம் உதவணுமல.. சரின்னு சொல்லு.. மத்தத நா பாத்துக்கிறேன்ல.. ‘ ‘,

ஆம்.. வேறு வழியில்லை.. அந்தக் கிழம் இருந்து என்ன பயன் ? அதன் சாவிலாவது எனக்குப் பயன்படட்டுமே.. இது விந்தையான உலகம்.. ஒருவரை ஒருவர் விழுங்கித்தான் வாழ வேண்டியுள்ளது. இந்த உலகில் எல்லாம் அப்படியே.. பூச்சியைத் தவளை விழுங்குகிறது.. அந்தத் தவளையை பாம்பு உண்கிறது. அந்தப் பாம்பை மனிதன் சாப்பிடுகிறானாம்.. வெளிநாட்டில்.. ஆம்.. ஒருவரை ஒருவர் விழுங்கித்தான் வாழ்வது என்பது வாழ்க்கை விதி.. இது நிதர்சனம்.. இதையாரும் மாற்ற முடியாது.. பாவ புண்ணியம் இந்தக் காலத்தில் பார்க்கக் கூடாது..அந்தக் காலம் மலையேறிவிட்டது.. முன்னேற வேண்டும்.. தடையாய் உள்ள கற்களை உடைத்தெறிய வேண்டும்.. நாய் விற்ற காசு குரைக்காது.. யாருக்கும் தெரியப் போவதில்லை.. எனக்கும் சுப்புவுக்கும் தவிர.. அதுவும் நான் கொலையைச் செய்யப் போவதில்லை.. அதற்கு உதவப் போகிறேன்.. அவ்வளவே.. பல பண முதலைகளின் ரிஷிமூலம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தான்.. நாமும் அவ்வாறே.. கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு படிப்படியாய் உயர்ந்தால்.. அப்போது இந்த உலகம் என்னைப் பார்த்துச் சலாம் போடப் போகிறது..

சுப்பு இந்தக் காரியத்தை எப்படி முடிக்கப் போகிறான்..

‘ ‘அதப் பத்தி ஒனக்கென்னல.. கோலப்பன்னு ஒரு ஆளு இருக்கான்.. பலே கெல்லாடி.. அவன அளச்சிக் கிட்டுப் போயி அய்யர காமிச்சு விடு.. அவன் பாத்துகிடுவான்ல.. ஆள காட்டறதுதான் ஒன் வேல.. ‘ ‘,

ஆம்.. வேறு வழியில்லை.. நான் இதைச் செய்துதான் தீர வேண்டும்.. என்னைத் தவிர யாரிடமும் கிழம் இரவில் கேட்டைத் திறந்து வெளியே வந்து பதில் பேசாது.. கிழத்தின் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் சுற்றிலும் மரங்கள் இருப்பது மிகவும் செளகரியமாகப் போய்விட்டது.. காம்ப்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு போய் பெல் அடித்தால் கிழம் வரும்.. நைச்சியமாகப் பேசி வெளியே அழைக்க வேண்டியது அவன் பொறுப்பு.. மற்ற விஷயங்களை கோலப்பன் பார்த்துக் கொள்ளப் போகிறான்..நல்ல திட்டம்தான்.. ஆனாலும் உள்ளுர உதறல் எடுத்தது. ஏதோ மர்மப்படம் பார்ப்பதைப் போல இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் நான் முக்கிய பாத்திரம் ஆற்ற வேண்டியிருக்கிறது.. ஆம்.. துணிந்து விடுவோம்.. கொன்றால் பாவம் தின்றால் போகட்டும்.. அதிருஷ்டம் அடிக்கப் போகிறது.. ஒரு முறைதான்

அது கதைவைத் தட்டுமாம்.. விட்டால் பிடிக்கமுடியாது..

அன்று சுப்பு அறிமுகப்படுத்திய கோலப்பனைச் சுவாமிநாதன் பார்த்து அதிர்ந்து விட்டான்.. அரைக்கால் நாடி கரீரம் அழுக்குக் காக்கிச் சட்டை. அழுக்கு வேஷ்டி.. அதை மடித்துக் கட்டியிருந்ித கோலப்பன் ஒரு நோயாளியைப் போல இருந்ததான்.. முகமெங்கும் நரை.. கண்களைப் பார்த்தாலே இவன் ஒரு குடிகாரன் என்று சொல்லிவிடலாம்..

‘ ‘இந்த ஆளா.. ‘ ‘ குழம்பிப் போனான், சுவாமி.. இவனை ஒரு தட்டுத் தட்டினால் போதும்.. விழுந்து விடுவான் போலயிருக்கிறதே.. வேறு வழியில்ல.. இவன்தான்.. இந்த வேலையில் அமர்த்தியது சுப்பு.. அவன் சொன்னால் சொன்னதுதான்.. நம்புவோம்..

மாலையும் இரவும் தழுவிக் கொள்ளும் நேரம்.. ஏழு மணி.. இரவு மெதுவாக அனைவரையும் கருப்பாக்கிக் கொண்டிருந்தது..

சைக்கிளில் முன்னால் சென்று கொண்டிருக்க.. பின்னால் ஐந்தடி தள்ளி நடந்து வந்தான் கோலப்பன்.. அவன் சட்டைக் காலர் பின்னால் சிறிய சைசில் ஒரு வெட்டரிவாள் சொருகியிருந்ததான்.. சுவாமியின் இதயம் சற்று நின்று, பின்பு துடித்தது.. இவன் இன்றே ஏதாவது கண்றாவியைப் பண்ணப் போகிறானா.. ? உடம்பு லேசாக நடுங்கியது..

தெருவில் ஜன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.. நல்ல சந்தர்ப்பம்.. கிழம் என்ன செய்து கொண்டிருக்கும்.. ? சைக்கிளை வெளியே நிறத்தினான்.. இதயம் சம்மட்டியாய் அடித்துக் கொள்ள, மெதுவாய்க் காம்பவுண்ட் கேட்டைத் திறந்தான்.. கேட் சத்தம் கீறீச்சிட்டது.. அந்தச் சத்தத்தைக் கேட்ட கிழம் லைட்டை வேறு போட்டுவிட்டது.. அடச் சனியனே..

‘ ‘ஆரு.. ‘ ‘, கிழத்தின் குரல்..

‘ ‘நான்தான்னா.. சுவாமி.. ‘ ‘, என்றான் நடுநடுங்கியவாறு..

‘ ‘சுவாமியா..உன்னத்தான் நெனச்சிண்டேன்.. ‘ ‘, என்று கேட்டைத் திறந்து வெளியே வந்ததே விட்டது.

‘ ‘என்னடா அகாலத்திலே வரமாட்டியே… ‘ ‘, என்று கிழம் முடிப்பதற்குள், சுவாமி கத்தினான்.. ‘ ‘கோலப்பா.. இந்த ஆளுதான்.. ‘ ‘,

பின்னால் இருந்த கோலப்பன் அரிவாளடன் பாய்ந்து வர, அந்த க்ஷணத்தில் அங்கு ஒரு குழப்பச் சூழ்நிலை நிலவியது.. மேலே என்ன நடக்கிறது என்று பார்க்க விரும்பவில்லை.. சுவாமிக்கு இதயமே வெடித்து விடுமோ என்று அஞ்சி வெளியே சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினான்.. உலகம் சுழன்று சழன்று வந்தது.. எப்போது வெளியே வந்தான். எப்போது சைக்கிளை ஓட்டினான் என்பது அவனுக்கே தெரியவில்லை.. பின்னால் வினோத சத்தங்கள்..

****

சுவாமிநாதன் இப்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.. காரணம் போலீஸ் அவனைத் தேடுகிறது..

நடந்த கதையே வேறு..

கோலப்பன் கிழத்தின் மீது பாய்ந்து, முதல் அரிவாள் வீச்சைக் குறிதவறி அதன் புஜத்தில் பாய்ந்துவிட்டான் …இரண்டாவது குறியை சரியாகக் கழத்தை நோக்கி வைத்துப் பார்த்துச் சரியாக வீசத் தொடங்கிய அந்த வினாடி.. ஆம் அந்த வினாடியில் தலைக்கு மேலே நாற்பதடி உயரத்திலிருந்து ஒரு தேங்காயை அந்தத் தென்னை மரம் இரக்கங் கொண்டு உதிர்க்க சரியாக கோலப்பன் தலையில் அது விழ.. வீழ்ந்த அதிர்ச்சியா.. ? அல்லது மண்டை உடைந்ததா.. ? அது சரியாகத் தெரியவில்லை.. கோலப்பன் அதே இடத்தில் கபால மோட்சம் அடைந்து விட்டான்..

கிழட்டுப் பூதம் பிழைத்துக் கொண்டு ‘ ‘குய்யோ முறையோ.. ‘ ‘ என்று ஆளைச் சேர்த்து விட்டது..

கிழம் பலே கில்லாடி.. யாரை ரவுடி என்றதோ அவனுடன் எந்த மாதிரி ஒப்பந்தம் போட்டுக் கொண்டதோ ? என்னவோ ? அவனுடன் கூட்டுச் சேர்ந்து சுவாமியை போலீசில் மாட்டி விட்டது..

சுவாமி அன்று சொன்னான்.. ‘ ‘நாம் ஒண்ணுக்குள் ஒண்ணு.. ‘ ‘, என்று..

பணம் என்று வரும்போது சுவாமியும் அப்படிப் பார்க்கவில்லை..

உயர்ப் பாதுகாப்பு என்று மோசடி ஒப்பந்தம் போட்டுக் கொண்ட கிழமும் அப்படிப் பார்க்கவில்லை..

(1999)

prabhabadri@yahoo.com

Series Navigation

author

பத்ரிநாத்

பத்ரிநாத்

Similar Posts