பேந்தா !

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


ஜோதிகாவின் கண்களைப் பார் கோலிக் குண்டுகள் மாதிரி !

கோலிக் குண்டு கண்ணை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்க்கிறாள் பார் !

குழந்தை என்ன அழகு ? கோலிக் குண்டு கண்களோடு ?

மார்க் பாரு ! கோலிக் குண்டு மாதிரி முட்டை வாங்கியிருக்கின்றான் உன் பிள்ளை !

“கோலிச் சோடாவை உடைத்து ஊத்தினேன் அப்புறம் நம்மை பிடிக்க முடியாது. ஆமா !”

“அரசியல் கூட்டத்தில் பேசி தொண்டை கட்டியாச்சு! ஒரு சோடாவை ஊத்தப்பா !”

கோலி குண்டு மீது அப்படி என்ன எனக்குப் பைத்தியம் என்கிறீர்களா ? கொஞ்சம் பேந்த பேந்த முழிச்சாலும் நான் ஒரு கோலி பைத்தியம் தான் !

கோலிக் குண்டு கனவுகளோடு பள்ளிக்குச் செல்லும் போது கோலிக் குண்டுக்கு இப்படி முக்கியத்துவம் என் வாழ்வில் வருமென்று நினைக்கவில்லை ! ஜோதிகாவின் கண்களைப் பார்த்து பேசிவிட்டு நண்பர்கள் அனைவரும் கோலி விளையாடலாமென்று ஆசையில் முடிவெடுத்தோம். இந்த முறைக் கோடை விடுமுறையில் அது தான் “சீப் அண்டு பெஸ்ட் !”.

வீட்டில் கிடைத்த ஐம்பது காசுக்களை கால் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வெளியே கோலிக் குண்டுகளை விற்கும் கிழவனிடம் கொடுத்து பெரிதும், சிறிதுமாக பத்து குண்டுகளை வாங்கி பையை நிரப்பி விட்டால், காரில் பெட்ரோல் நிரப்பி வண்டியைக் கிளப்பும் சந்தோஷம் எனக்கு வரும்.

“கிலீர், சிலீர்” என்று ஒன்றுக்கொன்று மோதி என் பாக்கெட்டிலிருந்து வரும் சத்தம், கால் சலங்கையொலியாக ஒலிக்கும். அதற்குள் இருக்கும் வளைந்த நெளிந்த “தூர்தர்ஷன்” இழைகள் கண்ணாடி மூலமாக பிரகாசித்து தெரியும். ஆரஞ்சு, ஊதா, நீலம், கறுப்பு, மஜெந்தா, பச்சை என்றூ என் கண்களைக் கவரும் அந்நிறங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன். வீட்டு சுவரில் விட்டு எறிவேன். பட்டுத் தெறிக்கும்.

நூறு தடவை தூக்கிப் போடுவேன். தங்கையின் மீது விட்டெறிவேன். “வீல்” என்று கத்துவாள். பிடிக்காத சக மாணவனின் முதுகில் எறிந்து அவன் திரும்பிப் பார்க்கும் முன் வேறு பக்கம் பார்ப்பேன். பள்ளித் தேர்வுகள் முடிந்து கோடை கால விடுமுறை வந்தாயிற்று.

தினமும் விளையாட வேண்டும் என்று பிரார்த்தனை நிறைவேறியது. பள்ளியின் புத்தகங்களை வீசி எறிந்தேன். அம்மா, அப்பா நச்சரிப்பு கம்மியாயிற்று. இப்போது அன்புடன் நடந்து கொள்வதாகக் கூடப் பட்டது.

எடுத்தேன் கோலிக் குண்டுகளை ! எடுத்தேன் ஓட்டம் !

சிவாவைப் பார்க்க ஓடினேன். சிவா என் வயதுக் காரன். சிவாவின் அப்பா பேர் ஸ்கந்தன். (எப்படி இருக்கு ? தாயுமானவன் !). ஸ்கந்தன் ( கந்த மாமா என்று கந்தலாக்குவோம் !) பெரியவராயினும் சிறு பிள்ளைகளோடு கோலிக் குண்டு விளையாடுவதில் முன்னே இருப்பார். எங்களுக்கெல்லாம் “பேந்தா” சொல்லிக் கொடுத்தார்.

சிவாவின் வீட்டிற்கருகே இருக்கும் சந்தில் ஆள், சைக்கிள் தவிர எதுவும் நுழையாது. அச் சந்து முனையில் தான் “மூச்சா” (மூத்திரம் பெய்வோம்) மழை பெய்து தரையை நனைய விடுவோம். கோடை மழை பெய்தால் தானே ?.

கந்த மாமா கோலிக்குண்டினை எப்படி உட்கார்ந்து எப்படி அடிக்க வேண்டுமென்று “டெக்னிக்கலாக”ப் பேசுவார். அவரை வைத்த கண் வாங்காமல் பார்ப்போம்.

அச்சந்தில் ஒரு மாட்டுக் கொட்டகை இருந்தது. பாலன் என்று “டிராயர்” போட்ட ஒரு இளைஞன் சுமார் பத்து மாடுகளை வைத்து ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தான். அக்கம் பக்கம் இருந்த “அய்ய” மார்கள் எருமைப் பால் காபி குடித்து வளர்க்க மாடுகள் தேவையாயிருந்தது. பாலன் மாட்டு வேலைகளைப் பார்த்துவிட்டு சுமார் 11 மணிக்கு எங்களுடன் சேர்ந்து கொள்வான். மாட்டுச் சாணத்தால் சந்தைத் தெளித்து கோலம் போட்டு அலங்கரித்திருப்பார்கள் வீட்டு வேலைக்காரிகள். (வீட்டுக்காரம்மா எழுந்தால் தானே ?).

மணக்கும் மண் சற்று ஈரம் காய்ந்து வெயிலைத் தாங்கப் போகும் தருணம். சந்தின் மேலே அத்திக்காய் மரங்கள் படர்ந்து நிழலை அள்ளித் தெளித்திருந்தபடியால், வெயிலின் உக்கிரம் படாமல் அனைவரும் கோலிக் குண்டுகளை வைத்து ஆட முற்பட்டோம்.

சாணித் தரை கட்டை விரலை அழுக்காக்காமல் இருக்க ஒரு புத்திசாலி நண்பன் அனைவருக்கும் அழுக்குத்துணியால் (அதைக் கொண்டு வீட்டில் எதைத் துடைத்தார்களோ !) கையுறை செய்து கொடுப்பான். அதைக் கட்டை விரலில் போட்டுக் கொண்டு தரையில் வைத்து குறி பார்த்து ஒரு கோலிக் குண்டை மற்றொரு கோலிக் குண்டை “சர்ர்ர்ர்ர்” ரென்று நடு விரலால் காற்றில் பாய விட, அது ஏவுகணையெனத் ( MISSILE) தரையில் இருந்த குண்டினைப் பதம் பார்க்க “டக்” கென்று மற்ற குண்டு வேறு இடம் பார்க்க பறக்க ஆட்டம் ஆரம்பித்தது.

கந்த மாமா, சிவா, நான், மற்றும் சீதர் ( ஸ்ரீதர்) ஒரு பக்கத்திலும், முரளி, பாபு, பாலன், மூத்தி (மூர்த்தி) மற்றொரு அணியிலும் ஆட முற்பட்டோம்.

நடுச் சந்தில் செவ்வகமாக இருந்தக் கட்டத்தில் ஒரு அணியின் கோலிக் குண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டு இருக்கும். அதை நோக்கி மற்ற அணியினர் ஒருவர் பின் ஒருவராக தம் கோலிக் குண்டுகளை தரையில் உருட்டி விட வேண்டும். செவ்வகத்தில் உள்ள குண்டுகள் அனைத்தும் சிதறிய பின், ஒன்றன் பின் ஒன்றாகச் சிதறிய குண்டுகளை தாக்க வேண்டும். ஒரே தவணையில் அடிக்க வேண்டும். ஒரு முறை அடித்தால் அடித்துக் கொண்டே இருக்கலாம். சந்தின் வெளியே கூட சில சமயம் தொடர்ந்து தாக்கியிருக்கின்றோம். மூத்திரச் சந்தின் முனையில் கோலிகள் போனால் கூட வரும் மண் வாசனையை முகர்ந்து கொண்டே, எந்தக் “கேணப் பயல் போனானோ !” என்று முனகிக் கொண்டே கை வைத்து கோலியினைக் குறி பார்ப்போம்.

“மவனே ! விரட்டப் போறேன் உன்னை ! உன் கோலி கோகிலா வீட்டுக்குப் போய் விழும்.” என்று பயம் காட்டுவோம்.

கோகிலா அம்மாள் வீட்டிற்கருகே கோலிகள் விழுந்தால் பிடிக்காது. பையன்கள் கூச்சல் போட்டால் அவள் தூக்கம் கெட்டுப் போய் விடும். வெளியே வந்து ஒரு “வள்!!!”.

கந்த மாமா உற்சாகமாக வேட்டியை வழித்துக் கொண்டு உட்காருவார். பட்டா பட்டி டிராயர் அணிந்து கொண்டிருப்பார். அவர் மர்ம உறுப்புக்கள் வெளியே தெரிய வந்தாலும் கண்டு கொள்ள மாட்டார். ஒரு கோலியை அவர் கோலி தொட்டால் போதும் ! ஒரு அடி தள்ளி இருந்து அதை அடித்திருந்தால் கூட போதும். மிகவும் உற்சாகம் கொள்ளுவார். அவர் உற்சாகம் எங்களைத் தொற்றிக் கொள்ளும். இருப்பதிலேயே நான் தான் “தொசுக்கு பிளேயர்”. நாலு விரற்கிடை பக்கத்தில் ஒரு கோலி இருந்தாலும் நான் கைவைத்து கோலி அடித்தால் வழுக்கி “பழம் நழுவி பாலில் விழுந்து விடும்” போல என் கோலி அருகே எங்காவது பொத்தென்று விழும். என்னைக் காப்பாற்ற அணியின் டெண்டுல்கரான சீதர், (சீசர் இல்லை !) ஸ்டைலாக உட்கார்ந்து லாகவமாக கோலிக் குண்டினை விரலால் சொடக்கித் தட்டுவான்.

காற்றில் “விர்ர்ர்ர்ர்ரென்று” பறந்து, கண் இமைக்காமல் பத்தடி தள்ளியிருந்தாலும் அவன் ஏவுகணை மற்றக் கோலிகளைப் பதம் பார்க்கும். எனக்குத் தாழ்வு மனப்பான்மையாக இருக்கும். ஒரு கோலி அடிக்க முடியலையே !

எதிரணியில் பாலன் தான் லாரா மற்றூம் ரிக்கி பாண்டிங்க் !

பாலனுக்கு இடது கை பழக்கம். அவன் லாகவமாக குண்டினைச் சுழற்றி டிராயரில் வைத்து தேய்த்து சுழற்றி அடிப்பான். அவன் அடிக்கப் பல குண்டுகள் தெறிக்கும். ஒரு ரூபாய் குண்டு கெலட் பள்ளி வசலில் விற்கும். அதை வாங்கி வந்து எங்களை பயமுறுத்துவான். அதனால் நான் வீட்டில் அழுது இரண்டு ரூபாய்களுக்கு இரண்டு பெரிய குண்டு வாங்கினேன். அதையும் பாலன் ஒரு குண்டினால் தகர்த்தான். என் மனதே இரண்டாய்ப் பிளந்துவிடும் போலிருந்தது.

“ உனக்கு மண்ணெல்லாம் உன் பேச்சுபடி கேட்கிறது. கை வழுக்காமல் விளையாடுகின்றாய். சாணத் தரை சொற்படி கேட்கிறது “ என்று பாலனைக் கலாய்ப்பேன்.

“ஒரு நாள் வீட்டிலே வேலை செய்யக் குந்தியிருக்கியா நீ” அதனால் தான் உனக்கு கோலி “தொசுக்காப் போது!” என்று பாலன் கேலி பேசினான். தாம்புக் கயிறுகளை இழுத்துப் பிடித்து கை சிறு வயதிலேயேத் தழும்புகள் கொண்ட விரல்கள். அதனால் கோலியைச் சரியே பிடித்து “சட்டென்று” மனதினை ஒருமுகப் படுத்தி அடிப்பான். திறமையானவன்.

எல்லோரும் சேர்ந்து ஆடும் போது கோடை விடுமுறை ரம்மியமாகப் போகும். கோலி, கில்லியாகும். கில்லி, பட்டமாகும். பட்டம், கிரிக்கெட்டாகும். கிரிக்கெட் திருடன் போலீஸ் ஆகும். கேரம் போர்டு ஆகும். செஸ்ஸாகும். அனைவரும் ஒன்றாகப் மொட்டை மாடியில் படுத்தோம். மோகினிப் பிசாசு கதைகளைப் பாலனும், முரளியும் கட்டவிழ்ப்பார்கள். “என் அம்மா குளித்தலையில் காவேரிக் கரை ஓரத்தில் வெள்ளைப் புடவைக் காரி தலை விரிக்க அழுவதைப் பார்த்திருக்காங்க ” என்று சிவா சத்தியம் செய்வான். பிசாசு ஏன் வெள்ளைப் புடவை கட்டவேண்டும் ? ஏன் கறுப்புக் கவுன் போடக் கூடாது ? என்று இதுவரையில் தெரியவில்லை.

பாலன் தான் அமாவாசையன்று மாட்டுக் கொட்டையில் இரவு போனதாகவும், மாடுகள் அதிகமாகக் கத்துவதால் போய் பார்த்த போது ஒரு மாடு வாயில் ரத்தம் கக்கி செத்திருப்பதை பார்த்ததாகவும் பதைபதைப்போடு சொன்னான். அவன் அம்மா பள்ளியில் ஆயாவாக இருந்தார்கள். அவர் “மாடு சினை போடும் போது” ரத்தப் போக்கு அதிகமகியதால் இறந்ததென்று சொன்னாள். வெகு நாள் நான் அந்தப் பயங்கரத்தையே டெக்னிக் கலரில் பார்த்து பயந்திருக்கின்றேன்.

அத்திக்காய் மரத்தில் தேள் எறும்புகள் மொய்க்கும். கொட்டினால் உடம்பில் சுளுக்கெடுத்து விடும். கடுக்கும். அம்மரத்திலிருந்து காய்கள் பறித்து அனைவருக்கும் பாலன் கொடுப்பான். எங்களிலே அவன் தான் தைரியசாலி. துவர்க்கும் அத்திக்காயைப் புகையிலையைப் போன்று குதப்பிக் கொண்டே விளையாடுவோம். தேள் எறும்புகள் கொட்டி விட்டால் கடுக்கும் இடத்திற்கு எங்களிடையே சீனியரான முரளி ( அவரை நாற்பது வயதானாலும் முரளி மாமா எனக் கூறாமல் எங்களிடையே கோலி விளையாடுவதால் “முரளி” என்றே கூப்பிடுவோம்.) குதப்பும் வெத்திலை டப்பாவிலிருந்து சுண்ணாம்பு எடுத்து எறும்புகள் கடித்த இடத்தில் தடவுவோம்.

கோலிக்குண்டுகள், மற்றூம் கிரிக்கெட் பந்துகள் மாடுகள் அருகே சென்று விட்டால், பாலனுக்கும் பதில் நாங்கள் எருமைகளை ஓட்டிக் கட்டுவோம். அப்போது பயம் வந்து விடும். சில சமயம் கோலிக் குண்டுகள் மாடுகள் காலடியில் கிடக்கும். நீளக் குச்சி வைத்து தட்டி தட்டி எடுப்போம். அவன் சிரித்துக் கொண்டே “கொம்பு, குளம்புகள் கிட்டே பந்து மற்றும், கோலிகள் வந்தால் இப்படி பயப்படுகின்றீங்களே ?” என்று எடுத்துக் கொடுப்பான். ஒரு முறை குளம்பு சிதைத்து அவன் கால் பந்து போல் வீங்கி விட்டது.
“அடப் போடா ! எங்களுக்குச் சோறு போட்டு உங்களுக்கு பால் தயிர் கொடுப்பது இந்த மாடுகள் தான் ! நான் பயப்பட்டால், நீங்க வாழணுமே ?” என்றான். எங்களுக்கு பாலன் உயிர் நண்பன் ஆனான். தயிர் கொடுக்கிறான் இல்லையா ?
காலுக்கு, இங்க் மை போட்டுக் கொண்டு, விளக்கெண்ணெய் தடவிக் கொண்டு வந்தான். வலியோடு வந்து பேந்தாவில் அவன் அணி வெற்றி பெறச் செய்தான். அவன் அன்றைக்கு “பேந்தா ஹீரோ “!!!

கிரிகெட் விளையாடும்போது வீங்கினக் காலை காண்பித்து “பாலா ! LBW வாங்கினியா ?” என்று கிண்டல் செய்வோம். பதிலுக்குச் சாணி உருண்டையை பந்து போல் வீசி எறிவான். பொத்தென்று வீட்டு மஞ்சள் அடித்த சுண்ணாம்புச் சுவர்மீது சென்றடையும். அவனைச் சமாதானப்படுத்த அன்று மாலை அனைவரும் டீ சாப்பிடுவோம். “தம்” உழைப்பது (சிகரெட்டிற்குப்பணம் கொடுப்பது மூர்த்தி தான்.). அவன் தான் எங்கேயோ எடிபிடி வேலை மெக்கானிக்காகப் பார்த்து மாதம் ரூ 200 சம்பாதித்தான்.

பேந்தாவில் செவ்வகத்திலிருந்து அனைத்துக் குண்டுகளும் வெளியேற வேண்டும். அனைத்தும் தாக்கப் பட வேண்டும். ஒரு அணியின் அனைவரும் ஆட வேண்டும். முடிந்த பிறகு தோற்ற அணியினர் தங்கள் கட்டை விரல் முட்டிகளால் ரத்தம் வர கோலிகளைத் தள்ளி “பேந்தா செவ்வகத்திற்கு” கொண்டு வர வேண்டும்.

“ஆ பேந்தா !”

“ஓ பேந்தா!”

என்று கூச்சல் கிளப்புவோம்.

இவ்வாறு செய்தால் எங்களுக்கு ரத்தம் குடித்த மகிழ்ச்சி வரும்!

பேந்தாவில் விரல் முட்டி ரத்தம் கசிய மண்ணில் தேய்த்தவன் நானாகத் தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் எல்லாருக்கும் ரத்தம் குடித்த மகிழ்ச்சி வரும்!

பேந்தாவில் மிகவும் பிடித்தது ஆட்டம் முடிந்தவுடன் கடைத்தெருவில் சேர்ந்து போய் பன்னீர் சோடா (கோலிக் குண்டு போட்டது) குடிப்பது தான்.

இதுமாதிரி பல மாலைகள். காலைகள், நண்பகல்கள். ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்தோம். வயதேற உடம்பிலும் மனதிலும் சற்று முறுக்கேறியது. எருமை பாலில்லையா ?. ஒரு கோடை விடுமுறை மாலையில் சோர்ந்திருக்கும் போது பாலனும், சிவாவும் புதுமையான விளையாட்டு விளையாடினார்கள். சந்திலிருந்து போய் வரும் பெண்களைச் சீண்டுவது தான். கோலி, கில்லி, மாஞ்சாக் கயிறு, பட்டம் போரடித்துப் போக, மாட்டிக் கொண்டது எங்களைக் கேலி பேசும் பெண்கள் தான். எல்லாரும் அந்த வயதில் ஜோதிகாவாக ஜோதி மயமாகத் தெரிந்தார்கள். அந்த ஜோதியுனுள் ஐக்கியமாகிப் போகும் எண்ணத்தில் சந்தின் மண்ணை எங்கள் தலையில் வாரிப் போடும் நிகழ்ச்சி நடந்தது.

கோலிக் குண்டு ஆடுவதிலிருந்து விடுபட்டு ஜோதிகாவின் கோலிக் குண்டு கண்களுக்கு வந்தோம் ! சின்ன கோலிக் குண்டு ! பெரிய கோலிக் குண்டு ! என்று பட்ட பெயர் வைத்து நாங்கள் சிலரைக் கூப்பிடப் போக அச் சந்தில் உள்ள பெண்கள் பதிலுக்கு எங்களை சின்ன கில்லி ! பெரிய கில்லி ! எனக் காலை வாரி விட ஏக ரகளையாய் போனது.

“அடி செருப்பால “

“கண்களில் கொள்ளிக் கட்டைய வைக்க . . .”

என்று கோலித் தாக்குதல்கள் சரமாரியாக வந்த வண்ணம் இருந்தன.

கேள்விப்பட்ட பெரியவர்களுக்கிடையில் பெரிய சண்டை ஏற்பட்டு விட, வாண்டுகள் நாங்களனைவரும் “ அ பேந்தா ! அ பேந்தா!” என்றலறியவாறு மதிலேறிக் குதித்து அத்திக்காய் மரத்தின் மீது ஏறி தேள் எறும்பு, கொள்ளி எறும்பு என்று கடிபடத் துவங்கினோம்.

பாலனின் அம்மா தான் எங்களுக்கெல்லாம், பள்ளியில் ஆயா ! நாங்கள் வாந்தியெடுத்தால் எங்களை சபித்த வாறே மண் போட்டு மூடி தகரத்தட்டில் ஏந்தி அள்ளிக் கொட்டும் அம்மா ! அவள் நாங்கள் மரத்திலேறுவதைப் பார்த்து விட்டு, கையில் விளக்குமாறு கொண்டு எங்களை நையப் புடைக்க வந்தாள். “கோலிக் குண்டு கேலியாட இந்த வயசில … “ என்று மண்ணை இறைத்து அடிக்க ஓடி வந்தாள்.

“பாலா ! காப்பாற்று ! “ என்று நாங்கள் அலற பாலன் எங்களை மாட்டுக் கொட்டகை வழியே தப்பிக்க வைத்தான். மதிலேறி உள்ளே குதிக்க ஒரு மாட்டின் வளைந்த கொம்பில் காலை வைத்தேன். தடுமாறிக் கீழே விழுந்த என்னை சாணி அரவணைத்தது. “கோலி ஆடும்போது சாணித் தரை என்று கிண்டல் பண்ணினியே , மாட்டிகினியா ? நம்ம வீட்டுகு வந்து விழுந்தியா ?” என்று பாலன் எகத்தாளமாய் என்னைப் பார்த்து எள்ளி நகையாடினான்.

ஆனால், உடனே அருகே இருந்த டியூப் குழாயில் தண்ணீர் விட்டு என் உடையச் சரி படுத்தினான். அதற்குள் அருகே யாரோ கதவைத் தட்ட, பயந்து போய் கோலிக் குண்டுகளாய் சிதறினோம். அப்ப தான் பார்த்தேன், மதிலேறிக் குதித்ததில் கை விரல் முட்டியில் ரத்தம் ! பேந்தா போன்று எங்களைக் கோலிக் குண்டுகளாய் பந்தாடியிருக்கின்றார்கள் !

வீட்டுப் பெரியவர்கள் கந்தன் உள்பட ( கந்தனையும் சேர்த்து தான் ! கந்த மாமா இப்போது கந்தன் ஆகிவிட்டார் ! ) எங்களைப் பிடித்து போய் நடுச் சந்தினில் நிறுத்தி விட்டனர். இருப்பது ஒரே சந்தானதால், அனைவரும் நடுசந்தில் நிற்க நேரிட்டது.

கந்தன் “அப்பா” வாதலால் சிவாவையும் எங்களோடு சேர்த்து மற்ற அப்பாக்களைப் போன்று வைவது மாதிரி நடித்து வைத்தார். அவர் சொல்லிக் கொடுத்த பேந்தா அனைவரையும் பந்தாட வைத்திருந்தது.

“அப்பா ! நீங்க தானே பேந்தா சொல்லிக் கொடுத்தீர்கள் . . . “ சொல்லி முடிக்கு முன் அவர் கொடுத்த அறையில் கண் கலங்கி கண்ணுக்கு சோடா பாட்டில் போட்டவன் தான் கோலிக்குண்டு சோடாவை விரும்பிக் குடிக்கும் சிவா !

டெண்டுல்கரான சீதர் “சீத பேதி”க்கு உள்ளானார். பாலன் மேனியில் வண்ணக் கோலங்கள் போட்டு அவனுக்கு கொம்பு சீவினாள் அவள் அம்மா.

முரளிக்கு அரளியை அரைத்துக் கொடுக்கும் வரைக்கும் அவன் அப்பா அவனைத் தாளித்தார்.

மூர்த்தியின் தாத்தா, தனக்கு கீர்த்தி தேடிய பேரனை “பேந்தாவாக்கினார்!”. அவர் போட்ட அடியில் கை கம்பு பிய்ந்து, காலடியில் கம்புகளாய் சிதறியது. சிதறிய அணி மீண்டும் சேரவேயில்லை. மனதளவில் சேர்ந்து கனவில் “பேந்தா” ஆடிக்கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்!

அன்றிலிருந்து பேந்தா சந்தில் “பந்த்” ஆகிப் போனது. சந்தில் சிந்து பாட முயன்ற எம்மைப் போன்ற சிறார்களுக்குப் பின் கோலி ஆடுவது கனவாகிப் போனது.
எல்லாம் அந்த ஜோதிகாவினால் வந்த வினை !

கண்களைப் பார் ! கோலிக் குண்டு மாதிரி !

kkvshyam@yahoo.com

Series Navigation