பேதங்களின் பேதமை

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

ராபின்


ஆலயத்தின் அடிக்கல் சுமந்த
எளிய ஜாதியின் பின் தலைமுறையினர்
ஆலயம் புக அனுமதிக்கப்பட்டனர்
அன்னதானம் பெறும் பிச்சைக்காரர்களாய்

யாகங்கள் நடத்தி தங்கள் வெற்றியை
உறுதிப்படுத்திக் கொண்ட அரசியல் புனிதர்கள்
பறந்து சென்றனர் சேரி மக்களைத் தேடி
தம் தரிசனம் காட்டி ஆசிகள் தருவதற்கு

காவித் துணியில் துறவறம் காட்டி
நாவின் நுனியில் வேதங்கள் சமைத்து
புலனடக்கும் பாவனையில் தேர்ச்சிகளும்
பெற்ற பெரியோர் சிலர்
மாய சக்தியைத் தேடி, தாம் கற்ற தந்திரங்களை
விரக்தியின் விளிம்பில் எம்மிடம் காட்டினர்
எளியர் எம்மை அடிமை செய்ய

உங்களின் தேவ பாஷை மந்திரங்களும்
பால், நீர் அபிஷேகங்களும்
கற்களையும் புனிதப்படுத்துமெனில்
அவற்றை எளியன் என்மேல் சொரிந்து
தழுவிக்கொள்வதில் உமக்கிருந்த தயக்கமென்ன ?

கடவுளர் பெயரில் பிறருக்குத் திருமுகங்கள்
எழுதிய மாண்புகள் சிலர்
அக்கடவுளர் பெயரில் எமக்கு எழுதினர்
எம் அடிமை சாசனங்களை

வன்முறைகளின் மேல் எழுந்த ஆலயங்களில்
அகிம்சை தேடும் மகாத்மாக்களின் வழித்தோன்றல்களே
உங்களுக்கு ஐயோ!
மாயை நிரம்பிய உங்களின்
கீச்சுக்கிளித் தத்துவங்கள்
மாயை யன்றி வேறென்னவாக இருக்க முடியும் ?

காலம் கடந்த கேள்விகளும், ஞானமும்
வலியின் வடுக்களாய் வார்த்தைகளாகலாம்
பேதங்களின் நிறங்கள் சிலவும் மாறலாம்
மாறாத அவலமாய், ஊரெங்கும்
கழிவுகளென கழிக்கப்பட்ட மனிதர்கள்

சமூகங்கள் என்றும் மாறுவதில்லை
வகுப்புமுறை பிளவுகளில் பதுங்கியவன்
விரிந்து கிடக்கும் பெருவளியில்
தன் சுயத்தினை உணரும்வரையில்
amvrobin@yahoo.com

Series Navigation

author

ராபின்

ராபின்

Similar Posts