பேட்டி

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

எஸ் ஷங்கரநாராயணன்


ஒருமுறை எம்.ஃபில். ஆய்வுக்கென அளித்தவை

கேள்வி – ஹரணி

பதில் – எஸ். ஷங்கரநாராயணன்

1/ தங்கள் படைப்புகளின் நோக்கமாகக் கொண்டுள்ளது எது ?

படைப்புகளுக்குப் பொதுநோக்கம் என வரையறுத்துக் கொள்வது கடினம். படைப்பாளி என்கிற அளவில் வாழ்வின் சுவாரஸ்ய முடிகளை அவிழ்த்துணரப் பேராவல் கொண்ட குழந்தை நான். படைப்புகள் ஒவ்வொன்றும் அதன் யத்தனங்களே. எனினும் குறிக்கோள் சார்ந்த குவிமையங்கள் சிறப்பு கவனம் மாறும் அவ்வப்போது. அது அந்தப் படைப்பின் சிந்தனைத்தளம் பொறுத்த விஷயம்.

2/ தங்களின் படைப்புகளின் இலட்சியம் என்ன ?

மானுட விழுமியம் என்கிற பிரமை, எல்லா படைப்பாளர்களையும் போலவே எனக்கும் உண்டு. ஆனால் என் – அல்லது தனிமனித ஒழுக்கம், மனசுக்கு கறைபடா மகிழ்வளிக்கும் நேர்மை, அதன் அடிப்படையில் இலட்சியத்தின் சுவடுகள் – என்னால் அல்ல, எனக்குப் பின்னால் என்னைப் பற்றி அறியப் படக் கூடும். அல்லாது இலட்சிய வரையறையுடன் ஒரு படைப்பு கட்டமைக்கப் படுவது போலிக்கூத்தே. அதில் வளர்ச்சிநிலை இராது அல்லவா ? கணந்தொறும் புத்தொளிப் பொலிவு அமையாது அல்லவா ?

3/ தங்களின் படைப்பின் மூலமாகத் தங்களின் எதிர்பார்ப்பு என்ன ?

முதல் இரண்டு கேள்விகளின் பதிலுாடாக இதன் பதிலை வந்தடைந்து விட முடியும். எதிர்பார்த்து எழுதப் படுவது செய்தியறிக்கை நிலையே. பெரும்பாலான படைப்பாளிகள் முரண்பாடுகளின் சங்கமமாக மயக்கத்தோற்றம் தருகிறார்கள் அல்லவா… தக்கணத்து சிந்தனை வீச்சுகளைப் பதிவு செய்கிறான் படைப்பாளி. அவன் சொன்ன கருத்துகளை வேறு கோணத்தில் பிறிதொரு சமயம் மறுபரிசீலனை செய்ய அவன் வெட்கம் அடைவதில்லை. எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் என அவற்றை அணுகுதல் முறையல்ல. படைப்பாளியின் ஒரு படைப்பை வியக்கிற வாசகன் மற்றதை நிராகரிப்பதும் சகஜமாய் இருக்கிறது. எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டு படைப்பாளி இயங்குகிறான்.

4/ தங்களின் படைப்புகள் மூலமாக சமூகத்திற்கு வழங்கும் ஆலோசனைகள்/தீர்வுகள் என்ன ?

முன்பே சொன்னபடி, ஆலோசனைகள் தீர்வுகள் என்பதெல்லாம் வாசகன் மனங் கொள்ளும் விதத்தில் அமைகிறது. படைப்பில் மையம்பெறும் ஒரு பிரச்னைசார்ந்த சிந்தனைவியூகத்தைப் படைப்பாளி வழங்கி, தன்சார்ந்த கருத்துகளையும் ஊடும் பாவுமாக நெய்கிறான். வாசகனுக்கு அதை அணுகுவதில் பூரண சுதந்திரம் உண்டு. தன்போக்கில் தனக்கான வழி காணுதல் அதன் பயன். அவனை கவனஈர்ப்பு செய்கிற அளவில் படைப்பு அவனுக்குத் துணை செய்கிறது. வாசகனை மதிக்காமல் தீர்வுகளைத் திணிப்பதாக அதை அமைப்பது நல்லதல்ல – அது முடியாத காரியமும் கூட. தீர்வுகளுக்குக் கையேந்தி நிற்கிறவனாக வாசகனை மதிப்பிடுதல் நியாயமே அல்ல.

5/ வேறு ஏதேனும் தாங்கள் குறிப்பிட விழைவது….

வாழ்க்கை அழகானது. அதை உணர்ந்த சமயம் மனிதன் கலைஞனாகிறான். அனுபவங்கள் வாழ்வின் சுவாரஸ்ய முடிச்சுகள். அனுபவங்கள் மனசில் மதிப்புகளைக் குவிக்கின்றன. சேமிக்கின்றன. தீராத சேமிப்புகள் அவை. அவற்றை முன்னும் பின்னும் மனசில் மீட்டிக் கொண்டு மீதி வாழ்க்கையை மேலும் தீவிர ஆர்வத்துடன் அனுபவிக்க நற்படைப்புகள் ஒத்தாசை செய்கின்றன… நல்ல நண்பனாக. அப்படிப் படைப்புகளே நல்ல படைப்புகள். பார்த்த மனிதர்கள், சந்தித்த அனுபவங்களைப் புது விஷயம் போல புதுக்கித் தரும் சக்தி கேந்திரங்கள் படைப்புகள். ஆகவே அதனால் வாழ்க்கை மேலும் பொலிவு பெறுகிறது. எமாற்றங்கள் இல்லை கலைஞனுக்கு. ஆகவே ரசிகனுக்கும். ரசிகனின் ஏணிப்படிகள் படைப்புகள். படைப்பாளி அதில் இறங்கி வரக் கூடாது. வாசகன் எறி வர உதவி நல்க வேண்டும்.

—-

எஸ். ஷங்கரநாராயணன்

2/82 இரண்டாவது பிளாக் முகப்பேர் மேற்கு

சென்னை 600 037

தொலைபேசிகள்/ 26258289 2652194

Series Navigation