பேச்சு

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

கே. ராமப்ரசாத்


மொழிக்கும் மனதுக்கும் ஒரு முறை சண்டை வந்துவிட்டது தம்மில் யார் பெரியவர் என்று. மொழி சொன்னது நான் பேசப்படும்போது என் உதவியால் தான் சொல்லப்படுவது என்ன என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே, நான் தான் பெரியவன். மனம் சொன்னது மொழியாக நீ பேச முதலில் எண்ணமாக நான் மாறினால் தான் உன்னால் முடியும். எனவே நான் தான் பெரியவன் என்றது. இந்தச் சண்டை வலுவடைந்து கடவுளிடம் தீர்ப்புக்காக முறையிடப்பட்டது. அங்கே, மனமுடைந்த நிலையில் மொழி அரைகுறையாகத் தன் பக்க விவாத நியாயங்களை எடுத்துசொல்ல, கடவுள் தன் தீர்ப்பாக மனம் தான் பெரியது என்று தீர்ப்பெழுத, மொழி தற்கொலை செய்துகொள்ள வானிலிருந்து கீழே குதித்துவிட்டது. அப்போது அதைக் காப்பாற்றத் தாங்கிப் பிடித்தன உதடுகள்.
– யஜூர்வேதக் கதை

எனக்குப் பேசுவது என்பது பிடிக்கும். ஆனால், தொலைபேசியில் குறிப்பாகச் செல்போனில் உரையாடுவது என்பது தடுமாற்றமாகவே உள்ளது. இதற்குப் பல புத்தகங்கள் வழிகாட்ட உள்ளன என்றாலும், பேச என்று வரும்போது என்னால் இந்த வழிகாட்டுதல்களை மனப்பாடம் செய்து செயல்படுத்துவது என்பது இயலாமல் போகிறது. பொதுவாக, நான் வளவளவென்று பேசாமல் சுருக்கமாகத் தேர்ந்தெடுத்த சொற்களை மட்டும் பேசி முடிக்கும் இயல்புடையவன்.
இரவு ஒன்பது மணிக்கு மேல் பத்து பைசா (அ) இலவசம் என்றச் சலுகைக்காக மணிக்கணக்கில் என் நண்பர்கள் பேசுவதைச் சொல்லக் கேட்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். அப்படி என்னதான் பேச முடியும் ?
மொக்கை போடுவது, செடி வளர்ப்பது என இச்செயலுக்குப் பல வேறுவித பெயர்களும் புழக்கத்தில் உண்டு.

பேசுவது என்பது என் கையிலும், பேச வைப்பது என்பது எதிராளியின் கையிலும் உள்ள ஒரு சக்தி. இந்தச் சக்திகள் வளர்வதும், அழிவதும் எந்த புள்ளியில் என்பது நட்பைப் பொறுத்த விஷயம் எனலாம்.

போனில் பேசுவது ஒரு வகை என்றால் நேரில் பேசுவது என்பது வேறு வகை.

ஒருமுறை எனது நண்பன் என்னிடம் பேசும்போது என் விரலில் உள்ள காயத்திற்கான சிறிய கட்டைக் கண்டு என்னாச்சு? என்று வினவினான். நான் சொன்னேன், “வீட்டில் எலெக்ட்ரிகல் தொடர்பான ஒரு சிறிய வேலைக்கு பட்ட அடி இது.” உடனே, அவன் சொன்னான், ” உனக்குத் தேவையான எலெக்ட்ரிகல் பொருட்கள் எல்லாம் என்னிடம் சொல்லு. எனக்குக் கமிஷன் அடிப்படையில் அவற்றை வாங்க முடியும். நான் வாங்கித் தருகிறேன்” என்றான். நான் மெளனமானேன். பேச்சு அங்கேயே நின்றுபோனது. தவறு எங்கே ? யாரிடத்தில் ?

பேச்சு என்பது தம்மைவிட அதிகம் அறிந்தவரிடம் குறைவாகவும், குறைவாக அறிந்தவரிடம் மிகுதியாகவும் வெளிப்படும். இந்த விகிதாசாரம் மாறுவது, அதாவது, அதிகம் அறிந்தவரிடம் அதிகமாகப் பேசுவது விவாதம் எனவும், குறைவாக அறிந்தவரிடம் குறைவாகப் பேசுவது ஆணவம் எனவும் அடையாளம் காணப்படுவதுண்டு.

முக்கியமான ஒரு செய்தி அதைத் தெரிவிக்க வேண்டும் என்ற நிலை வரும்போது தடுமாற்றம் என்பது நிகழ்வதில்லை. ஆனால், ஒரு விஷயமும் இல்லாமல் ‘சும்மா டைம் பாஸ்’ என்று பேசுவது ஒரு கலை தான்.
எங்கு ஆரம்பிப்பது, எப்படி வளர்ப்பது, முடிக்கமுடியாமல் திணருவது என்று பல நிலைகள் இந்தச் செயலுக்கு உண்டு.

பேச்சு என்பது ஒரு செயல்திட்டத்தை முன்வைத்து என்று வரும்போது ஒருவர் பேசுவது அடுத்தவருக்குப் புரியாமல் போகும் என்ற வகையில் ஒரு பைபில் கதை உண்டு. நேரடியாகச் சொர்க்கத்துக்குபோக ஒரு நீண்ட கோபுரம் அமைக்கும் பணி – பெபில் டவர் – அனைத்து மக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டுத் துவங்கியபோது, திடீரெனெ அப்பணியில் ஈடுப்பட்டவர்கள் பேசும் மொழி ஒருவருக்கொருவர் புரியாமல் போய்விட்டது. அதனால், இன்றுவரை அந்த வேலை முடிக்கப்படாமல் உள்ளது.


Series Navigation